Published : 28 May 2015 09:32 AM
Last Updated : 28 May 2015 09:32 AM

இணையதளத்தில் இளைஞர்களை வசியப்படுத்தும் ஆவியுடன் பேசும் சார்லி சார்லி விளையாட்டு

பேய், பிசாசு, ஆவிகள் பற்றிய நம்பிக்கைகள், இயற் கைக்கும் அறிவியலுக்கும் புலப்படாத அதீத நம்பிக்கைகள் உலகில் பரவலாக உள்ளன. அந்த வகையில், இணையதளத்தில் இப்போது இளைஞர்களிடம் மிகவும் பிரபலமாக இருப்பது ‘சார்லி சார்லி’விளையாட்டு.

மெக்சிகோவை சேர்ந்த சிறுவன் பெயர்தான் சார்லி. இறந்துபோன சார்லி ஆவியுடன் பேசுவதுதான் ‘சார்லி சார்லி’ விளையாட்டு. இந்த விளையாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் மூழ்கியுள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் நிறைந்து கிடக்கின்றன. அதீத நம்பிக்கையை எடுத்துக்காட்டுவதாக இந்த வீடியோக்கள் உள்ளன.

ஒரு வெள்ளை தாளில் 4 கட்டங்கள் பிரிக்க வேண்டும். அதில் குறுக்கில் 2 கட்டங்களில் ‘ஆமாம்’ என்றும் 2 கட்டங்களில் ‘இல்லை’ என்றும் எழுதிவைக்க வேண்டும். தாளின் மேல் 2 பென்சில்களை வைக்க வேண்டும். இந்த விளையாட்டை இருவர் விளையாடுகின்றனர். தாளின் மீது 2 பென்சில்களை சிலுவைபோல் ஒன்றின் மீது ஒன்றை வைத்து விட்டு, விளையாட்டை ஆரம்பிக்க வேண்டும்.

ஆவியுடன் தொடர்புகொள்ள முதலில், ‘சார்லி சார்லி விளையாட்டை ஆரம்பிக்கலாமா?’ என்று கேட்க வேண்டும். பென்சில் அசையவில்லை என்றால், திரும்ப திரும்ப இப்படி அழைக்க வேண்டும்.

“சார்லி நீ இங்கிருக்கிறாயா?, என்னுடைய நண்பர்களில் ஒருவர் விரைவில் இறக்க போகிறாரா?”

இப்படி எல்லாம் சார்லி சார்லி சவால் விளையாட்டில் கேள்விகள் கேட்கின்றனர். சார்லி ஆவி அங்கிருந்தால், விளையாடலாமா வேண்டாமா என்பதற்கேற்ப பென்சில் அசைந்து ஆமாம் அல்லது இல்லை என்ற கட்டத்தைக் காட்டும். இப்படி விளையாட்டாக விளையாடும் பலர் பென்சில் அசைவதைப் பார்த்து அலறியடித்து ஓடுகின்றனர்.

இந்த விளையாட்டு பற்றி 16 லட்சம் முறை ட்வீட் செய்யப்பட்டுள்ளது. கூகுளில் மற்ற செய்திகளைவிட ‘சார்லி சார்லி’ பற்றி தேடியவர்கள்தான் ஒரு வாரத்தில் அதிகம் உள்ளனர்.

இந்த விளையாட்டு எந்த நாட்டில் முதலில் ஆரம்பித்தது என்று தெரியவில்லை. எனினும் ஸ்பானிஷ் மொழி பேசும் மக்களிடையே இது பிரபலமாக இருக்கிறது. ஸ்பெயினில் பல ஆண்டுகளாக தொடர்ந்து இந்த விளையாட்டை பள்ளி சிறுவர்கள் ஆடி வருவதாகக் கூறப்படுகிறது.

எங்கோ விளையாடப்படும் இந்த விளையாட்டு மீண்டும் ஏன் இந்தளவுக்குப் பரபரப்பாக பேசப்படுகிறது என்பதற்கான காரணத்தையும் சொல்ல இயலவில்லை. எனினும் டொமினிக்கன் ரிபப்ளிக்கின் ஹடோ மேயர் நகரில், உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அதில், ‘உள்ளூர் பள்ளிகளில் சாத்தான் விளையாட்டு சிறுவர்களிடம் அதிகளவில் பழக்கத்தில் இருக்கிறது’என்று தெரிவித்தது. அங்கிருந்து சமூக வலைதளங்களில் பலர் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பரப்பி விட்டுள்ளனர். இந்த மாத மத்தியில், ‘சார்லி சார்லி’ என்ற வார்த்தை டொமினிக்கன் ட்விட்டர்களை ஆக்கிரமித்தது.

அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இந்த கால கட்டத்தில், ஆவிகள் நம்பிக்கை இன்னும் பலரிடம் இருப்பது ஆச்சரியமாகவே உள்ளது. இறந்த பின் ஒருவர் என்ன ஆகிறார், ஆவி உள்ளதா, அப்படி இருந்தால் ஆவியை தொடர்பு கொள்ள முடியுமா, ஆவிகள் மனிதர்களுடன் பேசுமா என்பது போன்ற மர்ம கேள்விகளுக்கு எல்லாம் அறிவியல்தான் விடை தரவேண்டும். அது சாத்தியமா என்பதுதான் இப்போதைய கேள்வி.

சாத்தானுடன் விளையாடாதீர்கள்: கத்தோலிக்க பாதிரியார் எச்சரிக்கை

சார்லி சார்லி மூலம் சாத்தானுடன் விளையாடி அபாயத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து பாதிரியார் ஸ்டீபன் மெக்கார்த்தி என்பவர் தனது முகநூலில், "சார்லி சார்லி என்ற பெயரில் சாத்தானுடன் விளையாடுவது மிகவும் ஆபத்தானது" என்று கூறியிருக்கிறார். மேலும், கத்தோலிக்க பள்ளி மாணவர்களுக்கு பாதிரியார் ஸ்டீபன் கடிதம் எழுதி உள்ளார். அதில், பள்ளி மாணவர்கள் பேயுடன் விளையாடுவது நெருப்புடன் விளையாடுவது போலாகும் என்று எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள செயிண்ட்ஸ் ஜான் நியூமான் அண்ட் மரியா கோரெட்டி கேத்தலிக் ஹைஸ்கூல் மாணவர்கள், அந்த கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x