Published : 18 Oct 2013 11:10 PM
Last Updated : 18 Oct 2013 11:10 PM
நீ எழுந்திரும்மா, கடைசில போய் உட்காரு, நீ இங்க உட்காரு; இனி இங்கே தான் உட்காரணும், உங்க கிளாஸ் டீச்சர் கேட்டாங்கன்னா சொல்லு சைன்ஸ் மேம் தான் இங்கே உட்கார சொன்னாங்கன்னு... மாறி உட்காரக்கூடாது சரியா? மாணவிகளுக்கு அறிவுறுத்திவிட்டு பாடத்தை தொடர்ந்த அந்த ஆசிரியைக்கு வயது இருபது. தன் ஒரு வருட பணிக்காலத்தை வேறொரு பள்ளியில் முடித்துவிட்டு இப்பள்ளிக்கு மாற்றலாகி வந்து மாதம் ஒன்றாகிறது.
காலாண்டுத் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருந்ததால் மும்முரமாக பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். 7ஆம் வகுப்பு அறிவியல்.. செல்லின் அமைப்பு கரும்பலகையில் உருவாகிக்கொண்டிருக்க, வகுப்பறையில் சலசலப்பு. திரும்பாமலேயே குரல்கொடுத்தார் ஆசிரியை “அமைதியா இருங்க!”
மீண்டும் முதல் வரிசையில் இருந்து சப்தம். “இப்ப தானே சொன்னேன்.. திரும்பவும் பேசறீங்க” என்று ஆசிரியை கோபத்துடன் திரும்ப ,மாணவிகள் தயக்கத்துடன் வெளிப்பக்கம் கை காட்டினர்.
அது கூரை வேயப்பட்ட வகுப்பு. சுற்று சுவர் 2 அடி உயரத்துக்கே எழுப்பப்பட்டிருந்தது. அருகிலேயே ஆண்கள் பள்ளி மைதானம். நீண்ட தூரத்துக்கு தன் வேர்க்கால்களை பரப்பி வியாபித்திருந்த அந்த ஆல மரத்தின் விழுதுகளிலும் வேர்களிலும் ஆசிரியர்கள் வராத வேளைகளில் மாணவர்கள் அமர்ந்து விளையாடிக்கொண்டிருப்பர்.
மாணவிகள் கைக்காட்டிய பக்கம் திரும்பிப் பார்த்தவர் கேட்டார் “இவங்க எப்பவுமே இப்படித்தான் கலாட்டா செய்வாங்களா?”. ஒரு மாணவி சொன்னாள் “சிலர் ராக்கெட் விடுவாங்க மேம், சில பேர் பக்கத்தில் இருக்கற குப்பை தொட்டி மேல சாய்ஞ்சு உக்காந்துக்கிட்டு கிண்டல் பண்ணுவாங்க. ஆனா, இந்த அண்ணாக்கள் இப்பதான் வராங்க” என்றபடி அவர்களைப் பார்த்தாள் அவள்.
அங்கே வகுப்பறையை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த மாணவர்களுக்கு சுமார் 19 வயது இருக்கலாம். ஒருவன் மொட்டை அடித்திருந்தான். மற்றொருவன் கண்ணாடி அணிந்திருந்தான். பதில் ஒன்றும் சொல்லாமல் முன் வரிசையில் அமர்ந்திருந்த மாணவிகளில் வளர்ந்த மாணவிகளாய்த் தெரிந்த இருவரை கடைசிக்கு அனுப்பிவிட்டு, குட்டிப் பெண்களை முன்வரிசையில் அமரவைத்தார். கைகாட்டிய மாணவியைப் பார்த்து, “அவங்கதான் தினமும் படிக்கிறத விட்டுட்டு வந்திடுறாங்கன்னா, நீங்க ஏன் அங்க பாக்கறீங்க” என்றபடி மீண்டும் பாடத்தை தொடர்ந்தார் .
மறுநாள் மீண்டும் முன் வரிசையில் சலசலப்பு. மாணவிகளின் பார்வை மைதானத்தில். மீண்டும் அதே மாணவர்கள் அதே இடத்தில் ஆஜர். ஆசிரியைக்கு வந்ததே கோபம், “நேத்துதானே மாத்தி உக்காரவச்சேன், இன்னைக்கும் என்ன பிரச்சினை? அவங்களுக்கு வேற வேலை இல்ல... இங்க வந்து பாத்துக்கிட்டிருக்காங்க, நீங்க ஏன் அங்க பாக்கிறீங்க, பாடத்தை கவனிங்க” என்று கடிந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே சலசலப்பு. ஆசிரியை கோபத்தின் உச்சத்துக்கு போய், “இப்பத்தானே சொன்னேன்...” என்று மேலும் தொடர வார்த்தை கிடைக்காமல் யோசிக்க, சற்றே தைரியமான மாணவி ஒருத்தி பட்டென சொன்னாள், “மிஸ், அவங்க உங்களைத்தான் பாக்கறாங்க”.
ஆடிப்போய்விட்டார் இன்னும் திருமணமாகாத அந்த இளம் ஆசிரியை. சட்டென வகுப்பை விட்டு வெளியேறினார். மறுநாள் அதே நேரம் அதே வகுப்பு.. அதே இருவர் அதே பார்வை. மாணவிகளின் பார்வையில் இன்று புதிதாய் ஒரு குறுகுறுப்பு. வகுப்பறையை கவனித்த ஆசிரியைக்கு மாணவிகளின் எண்ண ஓட்டம் புரிந்தது. இதை வளர விடக்கூடாது.! திரும்பிப் பார்த்தார். நின்றிருந்தவர்களைப் பார்த்து கையசைத்தார். இருவரும் சற்றே சந்தேகத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். “உங்களைத்தான் கூப்பிட்டேன். வாங்க” என்று கூறி மீண்டும் கையசைக்கவும் இருவரும் தயங்கியபடி வந்தனர்.
“கிளாஸ் டைம்ல இங்க என்ன பண்றீங்க?”
“டீச்சர் வரல... அதனால நாங்க வெளியில வந்துட்டோம்.” வெற்று மரியாதை நிமித்தம் கூட “மிஸ்” என்று அவர்கள் சொல்லவில்லை. ஆண் என்ற ஒரு தகுதி இருந்து விட்டால் போதும், யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று நினைக்கும் ரகத்தை சேர்ந்தவர்கள் போலிருக்கிறது என்று எண்ணியபடி, “டீச்சர் வரலைன்னா ஏதோ அவங்க வேலையை பார்க்க லீவ் போட்டிருப்பாங்க. அவங்க வேலையை அவங்க பொறுப்பா பார்க்கும் போது ஸ்டூடண்ட் உனக்கு வேலை என்ன, ஏற்கனவே நடத்தியிருக்கிற பாடங்களை படிச்சிக்கிட்டு இருக்கலாமே... எதுக்கு வெளிய அலையறீங்க... இதனால பாதிக்கப்பட போறது டீச்சர்ஸ் கிடையாது. உங்களோட வாழ்க்கைதான்... புரியுதா?”
அவர் சொல்வதை காதிலேயே வாங்காதவன் போல் “மேம்.. இவன் உங்களை காதலிக்கிறான்” என்றான் மொட்டைத் தலையைத் தடவியபடி.
இதுபோன்ற உளறலை எதிர்ப்பார்த்தே இருந்ததால் சட்டென சமாளித்துக்கொண்டவர், “உங்களுக்கு என்ன வயசாச்சு, 19, 20 வயசு இருக்கும் இல்லையா... பதினேழு வயசிலேயே +2 முடிச்சிருக்கணும். அதுக்கு மேல வயசாகியும் இன்னும் படிச்சிக்கிட்டு இருக்கீங்க. எனக்கு என்ன வயசு தெரியுமா, 20. ஒரு வருஷம் சர்வீஸ் ஆயிடுச்சு. பொறுப்பா படிச்சதாலதான் இவ்வளவு சீக்கிரம் வேலை கிடைச்சிருக்கு. வாழ்க்கைங்கறது பிரெண்ட்ஸ் கூட சுத்தறதிலேயும் சைட் அடிக்கிறதிலேயும் மட்டுமே முடிஞ்சு போறதில்ல. நீங்க ஏதாவது சொல்லனும்னா ரெண்டு பேரும் ஒழுங்கா படிச்சு +2 ல பாஸ் பண்ணிட்டு அப்புறம் வாங்க பேசலாம்” என்றபடி அவர்களைப் பேசவே விடாமல் முடித்துவிட்டு “நீங்க போகலாம்” என்றார்.
7 ஆண்டுகளுக்குப் பிறகு...
கண்ணாடியைக் கழட்டி துடைத்துக் கொண்டே, “ஐ.டி.ஐ. முடிச்சிட்டு ஒரு கம்பெனியில வேலைக்கு சேர்ந்திருக்கேன்” என்றவனின் குரலில் கண்ணியம் கூடியிருந்தது. கண்ணாடியை அணிந்து கொண்டு, ஒரு நிமிடம் அமைதியாய் அந்த ஆசிரியையை உற்றுப்பார்த்தவன், “சாரி மிஸ்” என்றான்.
கிளம்பி சற்று தூரம் சென்றவன் மீண்டும் வந்து, “நான் பெண் பார்க்க போகும்போது என் கூட வருவீங்களா மிஸ்?”
மெல்லச் சிரித்த ஆசிரியை சொன்னார் "நிச்சயமா!"
*****
| தி இந்து வலைத்தளத்தின் 'வலைஞர் பக்கம்' பகுதிக்காக கட்டுரைகளை அனுப்ப விரும்புவோர் webadmin@kslmedia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு படைப்புகளை அனுப்பலாம். உங்களின் முழுப் பெயர், தொடர்பு எண், வலைப்பதிவுத் தள முகவரி அவசியம். ஏற்கெனவே வெளியிடப்படாத கட்டுரைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT