Published : 28 Jun 2017 10:23 AM
Last Updated : 28 Jun 2017 10:23 AM
(கொட்டை எழுத்து தலைப்பு செய்திகள் மட்டும் நிஜம். உள் செய்தி எல்லாம் மிஸ்டர் உல்டாவின் பீம் சர்வீஸ்)
பிரதமரின் வீட்டுக்கு உல்டா போனபோது ஹாலில் சூட்கேஸ்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பயணத்துக்கான ஏற்பாடுகளில் அதிகாரிகள் பிஸியாக இருந்தார்கள். பிரதமரின் உதவியாளரிடம், “பிரதமர் இப்போ எந்த நாட்டுக்கு போறார்?” என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே அவர் அறையில் இருந்து வெளியே வந்தார்.
“ஐயா ஒரு சந்தேகம். நீங்க இப்ப பிரதம மந்திரியா... இல்லே வெளியுறவுத் துறை அமைச்சரா? எப்ப பார்த்தாலும் பறந்துக்கிட்டே இருக்கீங்களே” என்று உல்டா விஷயத்துக்கு வந்தார்.
“என்னப்பா பண்றது? இங்க இருந்தா எதிர்கட்சி பிரச்சினை. அதுவும் இல்லேன்னா விவசாயிகள் பிரச்சினை. இப்படிப்பட்ட பிரச்சினைகள் ஏதும் இல்லாத நாடுகளுக்கு அடிக்கடி போனாத்தானே மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும். அதோட நான் ஆர்.எஸ்.எஸ். வழியில் வந்தவன்னு உனக்கே தெரியும்.
என் துணியைக்கூட நானேதான் துவைச்சுக்குவேன். கட்சிக்காரங்க பாவம்... ஆசைப்பட்டு லட்சக் கணக்கில் செலவு பண்ணி கோட் சூட் தச்சிக் கொடுத்திருக்காங்க. என்னோட காஸ்ட்யூம் டிசைனர், அந்தத் துணிகளை உள்ளூர் தண்ணியில துவைச்சா சாயம்போகும், சுருங்கும்ன்னு சொன்னாரு. வெளிநாட்டு தண்ணியில துவைச்சா பிரச்சினை இல்லையாம்” என்றார்.
“அதுக்கு..?” என்று உல்டா இழுக்க...
“இப்போகூட அமெரிக்கா போய் புது ஜனாதிபதியைப் பார்க்கிற சாக்குல நயாகரா நீர்வீழ்ச்சியில என் நாலு செட் துணியை தோய்ச்சு கொண்டு வரப் போறேன்.." என்று சொன்னபடியே தன் அழுக்குத் துணிகளை எடுத்து சூட்கேஸில் திணிக்கத் தொடங்கினார்.
“நீங்க பிரதமர் ஆகும்போதே அத்வானிக்கு ஜனாதிபதி பதவின்னு கமிட் பண்ணீங்க. ஆனா இப்போ சிபிஐ அவர் மேல குற்றப் பத்திரிகை தயார் பண்ணிடுச்சு. பாவம் அத்வானிஜி.. கோர்ட் படி ஏறி இறங்கறார்’ என்று உல்டா கவலையாக கூற, “கோர்ட்ன்னா படிக்கட்டு இருக்கத்தான் செய்யும். மிஸ்டர் உல்டா... குற்றப்பத்திரிகையில பேர் வர்றது அரசியல்வாதிக்கு ஒரு வகையில பெருமைதான்.. நேத்து அரசியலுக்கு வந்த உங்க ஊர் டிடிவி தினகரன் மேலயே ஏகப்பட்ட குற்றப்பத்திரிகை இருக்கு. அதை காரணம் காட்டித்தான் அவர் முதல்வர் பதவியை கேட்கிறார். அதனால அத்வானிஜிக்கு இதெல்லாம் இமேஜ் பில்ட் அப்தான்.
நான் ஏதோ அவரை ஜனாதிபதியாக்க விருப்பமில்லாமல் இருக்கறா மாதிரி பேசறே. அவர் ஜனாதிபதி ஆயிட்டா. அப்புறம் அயோத்தியில் ராமர் கோயில் யார் கட்டுவா. ஜனாதிபதி எல்லாம் ராமர் கோயில் கட்ட சட்டத்தில் இடம் இல்ல, தெரியும்தானே...” என்றார். அதற்குள் அவரது உதவியாளர் ஒரு துண்டுச் சீட்டை நீட்ட, “ஐயையோ... பார்லிமெண்ட்ல மறுபடி விவசாயிகள் பிரச்சினை கிளம்பிடுச்சாம்... நான் உடனே அமெரிக்கா புறப்பட்டாகணும். நீயும் கிளம்பு’ என்று பிரதமர் புறப்பட்டார்.
-------------------------
கருணாநிதி, ஜெயலலிதா இடத்தை ரஜினி நிரப்புவார் - திருமாவளவன் நம்பிக்கை
திருமாவளவனை சந்திக்க உல்டா சென்றபோது, அவரது அலுவலகத்தில் அம்பேத்கர் படத்துக்கு அருகில் மிகப்பெரிய ரஜினி படம் மாட்டப் பட்டிருந்தது.
திருமாவைப் பார்த்து “எப்படியோ ரஜினியோட கூட்டணிக்கு துண்டு போட்ட முதல் ஆள் நீங்கதான் போலிருக்கு” என்று பேச்சு கொடுத்தார் உல்டா.
“ரஜினியும் தமிழன்தான் உல்டா... அவர் எல்லா படத்துலேயும் சொந்தக் குரல்லேதான் பேசியிருக்கிறார். த்ரிஷா கூட டப்பிங் வாய்ஸ்தான் பல படங்கள்ல பேசியிருக்கு. இப்பத்தான் சொந்த குரல்ல பேசுது’ என்றார் திருமா.
“பரவாயில்லயே இவ்வளவு விவரங்களை சேகரிச்சு வெச்சிருக்கீங்களே. அப்போ இனிமே உங்களை அறிவாலயம் பக்கமோ... ராயப்பேட்டை அதிமுக ஆபீஸ் பக்கமோ பார்க்க முடியாதா?’’ என்று உல்டா சந்தேகத்துடன் கேட்க, “ராயப்பேட்டை அதிமுக ஆபீசுக்கு அவங்க கட்சிக்காரங்களே போகமாட்டேன்கிறாங்க அப்புறம் நான் எதுக்கு போகணும்? அறிவாலயம் இப்போ ஸ்டாலின் பெயரில் பட்டாவாயிடுச்சு. நமக்கு சரிப்படாது” என்றார் தீர்மானமாக.
“அதனாலே ராகவேந்திரா கல்யாண மண்டபம் பக்கம் போகப் போறீங்க. அப்படித்தானே?” என்று உல்டா கேட்க, “அதுல என்ன தப்பு..? எங்க கட்சி ஆபிஸ்லேர்ந்து அது ரொம்பப் பக்கம்... டிராபிக் ஜாம் கிடையாது. சீக்கிரம் போயிடலாம். இப்படி பல சவுகரியங்கள் இருக்கு” என்று சிரித்தார் திருமா.
-------------------------
ராகுல் காந்தி பிறந்த நாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிட்டு சும்மா பேசலாமே என்று உல்டா சென்றபோது “நீங்க எங்கிட்டச் சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை. கட்சி தலைவிக்கிட்ட பேசுங்க” என்று அவர் போனில் பேசிக்கொண்டிருந்தார்.
“என்ன விஷயம் ராகுல்ஜி? நீங்க கட்சியோட துணைத்தலைவர். அப்படி இருக்கும்போது என்கிட்டே சொன்னா வேலைக்கு ஆவாதுன்னு சொல்றிங்க” என்று கேட்டார் உல்டா.
“போன்ல பேசறவங்க பிறந்த நாள் வாழ்த்து சொல்றதோட விடக்கூடாதா? சீக்கிரம் கட்சித்தலைவர் பொறுப்புக்கு வாங்கன்னு சொல்றாங்க. நான் என்ன மாட்டேன்னா சொல்றேன். தரவேண்டியவங்க தந்தாத்தானே” என்று அலுத்துக்கொண்டார் ராகுல்ஜி,
“நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்க கூடாது. நீங்க தீவிர அரசியலில் ஈடுபடற மாதிரியே தெரியலயே”
“அதுக்குத்தான் தமிழ்நாட்டுக்கு வந்து 2 நாள் இருந்தேன். கலைஞர் பிறந்த நாள் விழாவிலே கலந்துக்கிட்டேன். சத்தியமூர்த்தி பவன் போனேன். கோபாலபுரம் போனேன். ஸ்டாலின் வீட்டில் டிபன் சாப்பிட்டேன். இதெல்லாம் தீவிர அரசியல் தானே?”
“சரி செயல்தலைவர் வீட்டில் சர்க் கரை பொங்கல், வடை எல்லாம் சாப்பிட் டீங்க. அங்கே என்ன பேசினீங்க?" என்று ஆர்வமாக கேட்டார் உல்டா.
“வடை நல்லா மொறு மொறுன்னு இருந்தது. இன்னொரு வடை கேட்டேன். அப்போ செயல்தலைவர் “ராகுல்ஜி ஒண்ணு என்ன... நாலு வடைகூட எக்ஸ்ட்ரா கேட்டு வாங்கிக்கோங்க. ஆனா இதே பழக்கத்தில் தொகுதி பங்கீடு சமயத்திலே இன்னொரு தொகுதி தாங்கன்னு கேட்கக்கூடாதுன்னு சொன்னார்.. நீ வேணா எலெக்ஷன் நேரத்துல எனக்காக அவர்கிட்டே வந்து பேசேன்” என்றார் ராகுல்ஜி.
“நான் சொன்னா அவரு கேப்பாரா? எந்த நம்பிக்கையில் சொல்றீங்க?” என்றார் உல்டா குழப்பமாக.
“வழுக்கைத் தலையா இருக்கறவங்க எப்பவுமே அதி புத்திசாலியாத்தான் இருப்பாங்கனு செயல் தலைவருக்குத் தெரியாதா?” என்று கூக்ளி போட்டார் ராகுல்.
“அடடா..! தொப்பி போட்டு மறைச்சாலும் நம்ம வழுக்கை முந்திரிக்கொட்டை மாதிரி முன்னே தெரியுதே” என்ற வருத்தத்துடன் எழுந்தார் உல்டா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT