Published : 11 Oct 2013 03:43 PM
Last Updated : 11 Oct 2013 03:43 PM
ஜெயமோகனின் 'நமக்குத் தேவை டான் ப்ரவுன்கள்' படித்தேன். நவீன தமிழிலக்கியத்தின் வரலாற்றைப் புதுமைப்பித்தனில் தொடங்கி, தற்போதைய தீவிர இலக்கியப் படைப்பாளிகள் வரை உற்று நோக்கியுள்ளார். ஆனால், இந்த வரலாற்றின் பெரும் பகுதியைத் தன் ஆளுமையால் ஆக்கிரமித்த ஜெயகாந்தனை ஏனோ விட்டுவிட்டார். ஜெயமோகனின் கட்டுரையில் தீவிர இலக்கியப் படைப்பாளிகளான லா.ச.ரா.,கு.அழகிரிசாமி, ப.சிங்காரம், சுந்தர ராமசாமி, தி.ஜானகிராமன், அசோகமித்திரன் ஆகியோர் வரிசையிலும் ஜெயகாந்தன் பெயர் இல்லை. நட்சத்திர அந்தஸ்து கொண்ட வணிகக் கேளிக்கை எழுத்தாளர்களாகிய சுஜாதா, பாலகுமாரன், இந்துமதி, வாசந்தி, சிவசங்கரி போன்ற எழுத்தாளர்கள் வரிசையிலேயும் ஜெயகாந்தன் இடம்பெறவில்லை.
ஆனால், ஜெயகாந்தனுடைய எழுத்தின் வீச்சு ஒரே நேரத்தில் பல்லாயிரக் கணக்கானோரை வணிக ரீதியிலும் ஈர்த்து, தங்களைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக்கொண்டிருந்த நடுத்தர வர்க்கத்தினரைச் சமூக அக்கறைகொள்ள வைத்தது என்பதை யாரும் மறந்துவிட முடியாது. 'வாசகர்களுக்கு எது பிடிக்குமோ அதை எழுதுவது என் வேலையல்ல, அவர்களுக்கு எது பிடிக்க வேண்டுமோ அதை எழுதுவதே எழுத்தாளர்களின் கடமை'என்று கூறி 'கண்டதைச் சொல்லுகிறேன், உங்கள் கதையைச் சொல்லுகிறேன், இதைக் காணவும் கண்டு நாணவும் உமக்குக் காரணம் உண்டென்றால் அவமானம் எனக்குண்டோ?' என்று முழங்கியவர் ஜெயகாந்தன்.
எழுத்துலகில் ஒரு வியக்கத் தக்க விதி என்னவென்றால், வணிக ரீதியாக வெற்றிபெறும் வரைதான் ஒரு எழுத்தாளனுக்கு முழுச் சுதந்திரம் என்பது உண்டு. வெற்றிபெற்ற பின், எழுத்தாளனும், அவன் எழுத்துக்களும் வாசகர்களின் ஆளுமைக்குள்ளும், அவர்களின் அதிகார வட்டத்துக்குள்ளும் வந்துவிடுகின்றன. அதன் பின்னர், வெற்றிபெற்ற எழுத்தாளனின் எண்ணங்களும் எழுத்துக்களும், அந்த வாசகர்களின் அதிகார வரம்புக்குள்ளேயும், அந்த எழுத்தாளனின் புகழ் எல்லைக்குள்ளேயுமே இயங்க வேண்டியிருக்கின்றன. 'அக்னிப் பிரவேசம்'சிறுகதை கடும் விமர்சனத்துக்குள்ளாகியதும், அதன் முடிவை மாற்றி யோசித்து, 'சில நேரங்களில் சில மனிதர்கள்'கதையை ஜெயகாந்தன் உருவாக்கினார்.
அடுக்குமாடிக் கட்டடங்களின் முதல் தளங்களில் இருந்தவாறே அண்ணாந்து நோக்கிக்கொண்டிருந்த வாசகர்களைக் கீழே குனிந்து, நடைபாதை அவலங்களைப் பார்க்கத் தூண்டி 'யாருக்காக அழுதான்', 'இருளைத்தேடி'போன்ற அற்புதமான படைப்புக்களைக் கொடுத்தார் ஜெயகாந்தன். அதே நேரத்தில், வாழ்க்கையை நுட்பமாக அணுகும் பாத்திரங்களையும் 'கோகிலா என்ன செய்துவிட்டாள்'போன்ற புதினங்களில் ஜெயகாந்தனால் படைத்துக்காட்ட முடிந்தது. எனவே, தீவிர இலக்கியத்துக்கும், வணிக வெற்றி இலக்கியத்துக்கும் (வணிகக் கேளிக்கை என்பதைவிட) ஒரு பாலம் அமைத்தவராக ஜெயகாந்தனை நாம் காணலாம். ஆகவே, டான் ப்ரவுன்களைவிட நமக்குத் தேவை ஜெயகாந்தன்கள் என்றே நான் எண்ணுகிறேன்.
| தொடர்புடைய கட்டுரை - >'நமக்குத் தேவை டான் ப்ரவுன்கள்' - ஜெயமோகன் |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT