Last Updated : 30 Sep, 2013 05:53 PM

 

Published : 30 Sep 2013 05:53 PM
Last Updated : 30 Sep 2013 05:53 PM

இவர்கள் இப்படித்தான்!

சாலை ஓரங்களிலும், பெட்ரோல் பங்கிலும், சிக்னலுக்கு காத்துக்கொண்டிருக்கும் நேரங்களிலும் சிலர் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதையும், சிலர் ஏதாவது ஒரு பொருளை கையில் வைத்து வியாபாரம் செய்வதையும் நாம் கவனித்திருக்கலாம். அல்லது, கவனிக்காமலேயே கடந்தும் போயிருக்கலாம். இது அவர்களில் ஒருவரைப் பற்றிய ஒரு சிறிய பதிவுதான்.

சில நாட்களுக்கு முன், மலேசியாவிலிருந்து வந்திருந்த நண்பனை அனுப்புவதற்காக மீனம்பாக்கம் விமான நிலையம் செல்லும் வழியில், ஓரிடத்தில் டீசல் நிரப்ப பெட்ரோல் பங்கில் காரை நிறுத்தினோம். அங்கே வயதான பெண் ஒருவர் சேவிங் ரேசர் விற்பனை செய்துகொண்டிருந்தார். எங்களிடமும் வந்து கேட்டார். நமக்கோ சேவிங் செய்து பழக்கமில்லை. அதனால், நமக்கு ரேசர் தேவையில்லை. என் நண்பனும் வேண்டாம் என்று சொல்லிவிட்டான். ஆனால், அந்த பெண்மணி எங்களை விடுவதாக இல்லை.

மலேசியாவில் கண் பார்வை இல்லாதவர்கள், வயதானவர்கள் வழக்கமாக இப்படி ஏதாவது ஒரு பொருளை வியாபாரம் செய்வார்கள். அவர்களிடம் பொருட்களை வாங்காவிட்டாலும், நம்மிடம் இருக்கும் ஒரு ரிங்கிட், இரண்டு ரிங்கிட்களை தானமாக கொடுத்தால் அவர்கள் வாங்கிக்கொள்வார்கள். அதே நினைப்பில் இங்கே வியாபாரம் செய்யும் பெண்ணும் இருப்பாரோ என்று என்னிடம் இருந்த ஐந்து ரூபாயை எடுத்து நீட்டினேன். உடனே அந்தப் பெண்ணுக்கு கோபம் வந்துவிட்டது.

“நாங்க ஒரு கம்பெனி பொருளை விக்கறோம். உங்களுக்கு விருப்பம் இருந்தா வாங்கிக்கங்க. இல்லாவிட்டால் வேண்டாம்ன்னு சொல்லிடுங்க. அதை விட்டுவிட்டு இப்படி பிச்சை போட்டு எங்களை கேவலப்படுத்திடாதீங்க...” என்றார் தீர்க்கமாக.

எங்களுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

வாழ்க இவர்களின் தன்மானம். எப்போதும் எல்லோரையும் ஒரே மாதிரி நினைக்கக்கூடாது என்பது அப்போது எனக்கு விளங்கியது.

கட்டுரையாளரின் வலைத்தளம் www.rahimgazzali.com

*****

| தி இந்து வலைத்தளத்தின் 'வலைஞர் பக்கம்' பகுதிக்காக கட்டுரைகளை அனுப்ப விரும்புவோர் webadmin@kslmedia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு படைப்புகளை அனுப்பலாம். உங்களின் முழுப் பெயர், தொடர்பு எண், வலைப்பதிவுத் தள முகவரி அவசியம் |

*****

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x