Published : 27 Jun 2017 09:57 AM
Last Updated : 27 Jun 2017 09:57 AM
இலங்கை தமிழ் அறிஞர், சொற்பொழிவாளர்
இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞரும் சொற்பொழிவாளருமான சி.கணபதி பிள்ளை (C.Ganapathi pillai) பிறந்த தினம் இன்று (ஜுன் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம், மட்டுவில் என்ற ஊரில் பிறந்தார் (1899). மூன்று வயதிலேயே தாயை இழந்தார். அதே ஊரில் சந்திரமவுலீச பாடசாலையில் ஆரம்பக்கல்வி கற்றார். 13 வயதில் தந்தையுடன் தனங்களப்பு என்ற ஊருக்கு இடம் பெயர்ந்தார்.
* சாவகச்சேரி பொன்னையா உபாத்தியாயர், பொன்னம்பலப் புலவர், பொன்னப்பா பிள்ளை உள்ளிட்ட பெரிய தமிழறிஞர்களிடம் கற்றார். 1917-ல் நாவலர் காவியப் பாடசாலையில் சேர்ந்து சுன்னாகம் அ.குமாரசாமி புலவர், வித்தகம் ச.கந்தையா பிள்ளை, வித்வான் ச. சுப்பையா பிள்ளை, சுவாமி விபுலானந்தர் போன்ற பேரறிஞர்களிடம் கல்வி கற்கும் வாய்ப்பு பெற்றார்.
* அறிஞர்கள் கூடி, ஆங்கிலம், அறிவியல், கணிதம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கும் இடங்களைத் தேடிப் பிடித்து இவரும் கலந்துகொள்வார். பேச்சாற்றலும் வாய்க்கப் பெற்றார். 1926-ல் முதன்முதலாக ‘கண்ணகி அம்மை தோத்திரம்’ என்ற பாடலை இயற்றினார்.
* அதே ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கத் தேர்வில் வெற்றி பெற்று பண்டிதர் பட்டமும் பெற்றார். தான் பிறந்த ஊரில் உள்ள பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1929-ல் யாழ்ப்பாணம், திருநெல்வேலி சைவாசிரியக் கலாசாலையில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்.
* நாவலர், நாவலருங் கோயிலும், இருவர் யாத்திரிகர், இலக்கிய வழி, பாரத நவமணிகள், கம்பராமாயணக் காட்டி, சைவ நற்சிந்தனைகள், சிந்தனைச் செல்வம், சிந்தனைக் களஞ்சியம், கோயில், செந்தமிழ்க் களஞ்சியம் உள்ளிட்ட நூல்களைப் படைத்தார்.
* ‘மவுனத் தவமுனிவர்’ எனப் போற்றப்பட்ட பொ.கைலாயபதியின் தொடர்பால் சைவ சமயம், சைவ சித்தாந்தம் குறித்த பல விஷயங்களை அறிந்துகொண்டார். தமிழிலக்கியம், மெய்யியல், தமிழர் பண்பாடு குறித்து பல இடங்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.
* இலங்கை முழுவதும் மட்டுமல்லாமல், தமிழகத்திலும் பல இடங்களில் இவரைப் பேச அழைத்தனர். 1951-ம் ஆண்டு யாழ்ப்பாணம் பரமேஸ்வரா கல்லூரியில் நடைபெற்ற தமிழ் விழாவில், ‘தமிழ் நுதலியது களவு’, ‘களவியல் நுதலியது தமிழ்’ என்ற தலைப்பில் இவர் பேசிய பேச்சு பலரையும் கவர்ந்தது. இவரது உரை இவருக்கு ‘பண்டிதமணி’ என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது.
* இவரது உரைகளும் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு பல நூல்களாக வெளியிடப்பட்டன. கவிதை எழுதுவதிலும் சிறந்து விளங்கினார். இவர் எழுதிய கந்தபுராணம் தக்ஷகாண்ட உரைக்கு இலங்கை சாகித்திய மண்டலத்தின் பரிசு கிடைத்தது.
* இந்த நூல், இவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. சாகித்திய மண்டலத்தின் உறுப்பினர் என்ற கவுரவமும் கிடைத்தது. கலாநிலையம், கலாநிதி இதழ், யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் உள்ளிட்ட பல இதழ்களில் தமிழ் இலக்கண, இலக்கியம், சைவ சமயம் குறித்து பல கட்டுரைகள் எழுதினார்.
* இலங்கைப் பல்கலைக்கழகம், ‘இலக்கியக் கலாநிதி’ என்ற பட்டம் வழங்கி இவரைப் பெருமைப்படுத்தியது. முதுபெரும் புலவர், மகாவித்துவான், சைவசித்தாந்த சாகரம், பண்டிதமணி என்றெல்லாம் போற்றப்பட்ட சி.கணபதி பிள்ளை 1986-ம் ஆண்டு 87-ம் வயதில் மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT