Published : 10 Nov 2013 04:43 PM
Last Updated : 10 Nov 2013 04:43 PM
விக்கிபீடியாவை மேம்படுத்தும் வகையில் புதிய வசதிகள் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வசதிகளை விக்கிபீடியா ஆர்வலர்கள் முன்கூட்டியே பரிசோதித்து பார்க்கும் முனோட்ட வசதியும் அறிமுகமாகியுள்ளது.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவை நிர்வகித்து வரும் விக்கிமீடியா அமைப்பு இதை அறிவித்துள்ளது.
இணைய பயனாளிகளின் பங்களிப்போடு உலகின் மாபெரும் கலைக்களஞ்சியமாக உருவாகி இருக்கும் விக்கிபீடியாவை மேலும் பரவலாக அனைவரிடமும் கொண்டு செல்லும் முயற்சியில் விக்கிமீடியா அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதிய வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தப் புதிய வசதிகளை அறிமுகம் நிலையிலேயே பயனாளிகள் அறிந்துகொண்டு அவற்றை பயன்படுத்திப் பார்க்கும் முன்னோட்ட வசதியை விக்கிமீடியா அமைப்பு அறிமுகம் செய்துள்ளது. அதாவது அனைவருக்கும் முன்பாகவே புதிய வசதிககளை ஆர்வம் உள்ளவர்கள் பரிசோதித்து பார்க்கும் விஷேச வசதி.
இந்த வகையான முன்னோட்ட வசதி மென்பொருள் உலகில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இந்த முறை பீட்டா என்று அழைக்கப்படுகிறது. முழுவீச்சில் அறிமுகம் ஆகும் முன் மென்பொருளை குறிப்பிட்ட சிலருக்கு வழங்கி அவர்கள் பயன்பாட்டில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு ஏற்ப குறைகள் நீக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட நிலையில் புதிய மென்பொருள் அறிமுகமாக இந்த வசதி உதவுகிறது.
இப்போது விக்கிபீடியாவில் அறிமுகமாகும் புதிய வசதிகளையும் பயனாளிகள் இப்படி முன்கூட்டியே பயன்படுத்தி பார்த்து அதன் குறை நிறைகளை தெரிவிக்கலாம் என விக்கிமீடியா அமைப்பு அறிவித்துள்ளது.
விக்கிபீடியா மட்டும் அல்லாமல் அதன் மற்ற துனண சேவைகளுக்கும் இது பொருந்தும். விக்கி சமூகத்தினர் பங்கேற்கும் டிஜிட்டல் சோதனை கூடமாக இதை கருதலாம் என்றும் விக்கிமீடியா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
பீட்டா ஃபீச்சரஸ் எனும் பெயரில் இந்த முன்னோட்ட வசதி அறிமுகமாகியுள்ளது. விக்கி தளத்தில் உள்ள முன்னுரிமை பகுதிக்கு சென்று இந்த திட்டத்தில் பங்கேற்கலாம்.
மேலும் விவரங்களுக்கு: >https://www.mediawiki.org/wiki/About_Beta_Features
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT