Published : 01 Oct 2013 02:34 PM
Last Updated : 01 Oct 2013 02:34 PM
சிவாஜி கணேசன் - சந்தேகமே இல்லாமல் ஒரு மகத்தான கலைஞன். தமிழ்நாட்டின் தமிழ் அவர் வருவதற்கு முன் சினிமாவில் எப்படி இருந்தது என்று நீங்கள் அன்றைய படங்களை பார்த்து இருந்தால் நொந்து போவீர்கள். அந்த சிம்மக்குரல் அதை புரட்டிப்போட்டது. உச்சரிப்பு என்பதையும்,வெளிப்படுத்தல் என்பதிலும் பலரும் அவரைத்தான் திருட்டுத்தனமாக பிரதி எடுத்தார்கள்.
பானர்மன் வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி நடந்தார் என்று விவரித்து இருந்தாரோ அப்படியே இருந்தது சிவாஜியின் நடை . சிவாஜியிடம் அதை தாங்கள் படித்து இருக்கிறீர்களா என்று பிற்காலத்தில் கேட்ட பொழுது ,"நானெங்கே அதெல்லாம் படிச்சேன். ஒரு வீரன் அப்படினா அப்படித்தான் நடப்பான் !" என்றாராம் கம்பீரமாக
அண்ணாவின் ‘சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம்’ நாடகத்தில் இவரின் நடிப்பை பார்த்து மெச்சிய பெரியார், ‘ சிவாஜி’ என்று பட்டம் தர வி.சி.கணேசன் ‘சிவாஜி’ கணேசன் ஆனார்.
திமுகவை விட்டு சிவாஜி விலகியதும்,"நம்மால் அடையாளம் காட்டப்பட்டவர் அவர்!" என்று கட்சியினர் சொல்ல ,"என்ன பேசறீங்க? அமெரிக்காவை கொலம்பஸ் அடையாளம் காட்டித்தான் அதுக்கு பெருமை அப்படிங்கற மாதிரி இருக்கே இது. " என்று அண்ணா வேகமாக மறுத்திருக்கிறார். சிவாஜி அவர்களுக்கு பெரியாராக நடிக்க வேண்டும் என்கிற ஆசை இறுதிக்காலம் வரை இருந்தது. நிறைவேறத்தான் இல்லை.
என்றைக்கும் அவர் படப்பிடிப்புக்கு தாமதமாக போக மாட்டார். ஒருமுறை மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் மற்றும் இவர் நடித்த ‘ஜல்லிக்கட்டு’ படத்தில் அதிகாலை மூன்று மணிக்கு சூட்டிங் என்றார்கள், இவர் மேக்கப் உடன் வந்து நின்றிருந்தார். யாரும் வந்திருக்கவில்லை. லேட்டாக வந்து தலை சொரிந்தவர்களை பார்த்து “நாளைக்கு மூன்று மணிக்கு சூட்டிங் வைத்துக்கொள்ளலாம்" என்றாராம் கூலாக.
ஒரு வசனத்தை ஒரு முறை அல்லது இருமுறை படித்து காட்டினால் போதும் அப்படியே சொல்லி நடித்து விடுவார் "நீயும் நானுமா.. கண்ணா நீயும் நானுமா ? " பாடலை டி.எம்.எஸ் அவர்களை பலமுறை பாடச்சொல்லி நடித்திருக்கிறார். "ஏன் ?" என்று கேட்டதற்கு "ஒவ்வொரு சரணத்துக்கும் ஒவ்வொரு உணர்ச்சி காட்டியிருக்கார் டி.எம்.எஸ். அவர் பாடின பாட்டுக்கு நான் நியாயம் பண்ணனும் இல்லையா ?" என்று கேட்டாராம்.
யாருக்கும் வாழ்த்து சொல்ல போகாத காமராஜர் கொட்டும் மழையில் இவரைத்தேடி வந்து மாலை போட்டுவிட்டு போகிற அளவுக்கு இருவரும் நெருக்கம். நயாகரா நகரத்தந்தையாக பண்டித நேருவுக்கு பின்னர் பொறுப்பேற்க வைக்கப்பட்ட இந்தியர் இவர் தான்.
திலீப் குமார் ஹிந்தி திரைப்பட விழாவில் சிவாஜியை அவரின் மகனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். "உங்க அளவுக்கு பெரிய நடிகரா ?" என்று அவரின் மகன் கேட்க அவர் அவசர அவசரமாக தலையசைத்து மறுத்து ,"எங்களுக்கெல்லாம் பல மடங்கு மேலே !" என்று சொல்லி கைகளை மேலே உயர்த்தி காண்பித்து இருக்கிறார்.
சிறந்த நடிகருக்கான விருது எப்பொழுதும் அவருக்கு வழங்கப்பட்டதில்லை. ‘தேவர் மகன்’ படத்துக்கு ஸ்பெஷல் ஜூரியின் விருது தரப்பட்ட பொழுது கம்பீரமாக அதை ஏற்க மறுத்துவிட்டார். ‘செவாலியே’ விருதுக்கு பிறகு, தமிழகத்துக்கான முதல் தாதா சாகேப் பால்கே விருது இந்த மகத்தான கலைஞனுக்கு வழங்கப்பட்டது. அறுபதில் கெய்ரோ நகருக்கு சிவாஜி ஆசிய ஆப்ரிக்க நடிகர்களின் விழாவுக்கு போயிருந்தார். இவரை ஏதோ தொழில்நுட்ப கலைஞர் என்று அனைவரும் எண்ணிக்கொண்டு இருந்தார்கள். சிறந்த நடிகருக்கான விருது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்காக சிவாஜி கணேசனுக்கு என்று அறிவிக்கப்பட்ட பொழுது உணர்ச்சிவேகத்தில் விழப்போன இவரை நடிகை பத்மினி தான் தாங்கிப்பிடித்தார்.
நடிப்பின் பால நூல்களில் ஒன்றான ஸ்டெனிஸ் லாவோஸ்கி தியரி நூலில் ‘அறுபத்தி நான்கு முகபாவங்களை காட்டும் கலைஞர்’ என்று குறிப்பிடப்படுவது சிவாஜி தான்.
"நடிப்பு என்பது புலி வேட்டைக்கு போகிற மாதிரி,நெத்தியில் குறி பார்த்து சுடணும். இல்லைனா புலி உன்னை சாப்பிட்டுடும். அந்த பயம் இந்த நாற்பது வருசமும் என் அடி வயித்தில் இருக்கு. அதான் இன்னமும் முன்னாடி ஒத்திகை பார்த்துட்டு போறேன். " என்ற அவரின் வரிகளை அவர் எப்படி தன் கலையை மதித்தார் என்பதற்கு சாட்சி.
சிவாஜியின் மரண ஊர்வலம் . மரத்தில் அமர்ந்திருந்த ஒரு ரசிகர் ஆவேசத்துடன் " இருந்தது ஒரே நடிகன். அவனையும் கொன்னுட்டீங்களேடா!" என்று கதறினார்.
நடிகர்களுக்கு நிறைய ரசிகர்கள் இருப்பார்கள். நிறைய நடிகர்கள் சிவாஜிக்கு ரசிகர்களாக இருந்தார்கள், இருக்கிறார்கள் என்பதே சிவாஜி என்னும் மகாக் கலைஞனின் பெருமைக்குச் சான்று.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT