Published : 01 Sep 2014 09:57 AM
Last Updated : 01 Sep 2014 09:57 AM

நலவாரியம் மூலம் கல்வி உதவித்தொகை எப்படி?

நலவாரியம் மூலம் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், அவற்றைப் பெறுவதற்கான வழிமுறை, தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை குறித்து ஈரோடு மாவட்ட தொழிலாளர் அலுவலர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பி.முனியன் விளக்குகிறார்.

நலவாரியத்தில் 60 வயது நிறைவடைந்த தொழிலாளிக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறதா?

ஆம். 60 வயது நிறைவடைந்த தொழிலாளி தனது பதிவை நலவாரியத்தில் புதுப்பிக்க இயலாது. அதே நேரம், 60 வயது நிறைவடைந்த தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பணிக்கு செல்ல இயலாமல் நோய்வாய்ப்பட்டு பாதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளிக்கு 60 வயது நிறைவடையாமல் இருந்தாலும் இந்த ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஓய்வூதியம் பெறும் தொழிலாளி இறக்க நேரிட்டால், அவரது கணவர் அல்லது மனைவிக்கு மாதம் ரூ.400 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

ஓய்வூதியம் பெற என்ன ஆவணங்கள் இணைக்க வேண்டும்?

தொழிலாளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், குடும்ப அடையாள அட்டை, 2 பாஸ்போர்ட் புகைப்படம், வேலை செய்ய இயலாத தொழிலாளர்களாக இருந்தால் அரசு சிவில் சர்ஜன் மட்டத்தில் பெறப்பட்ட மருத்துவச் சான்று, குடும்ப ஓய்வூதியம் பெற 2 பாஸ்போர்ட் அளவு போட்டோ, ஓய்வூதியரின் அசல் இறப்புச் சான்று, வாரிசு சான்றிதழ் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து தொழிலாளர் அலுவலகத்தில் (சமூக பாதுகாப்பு) வழங்கவேண்டும். அதை பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளியின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறதா?

நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளியின் மகள் 10, 11-ம் வகுப்பு படிக்க ரூ.1000, 12-ம் வகுப்பு படிக்க ரூ.1500 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறும் மகன், மகளுக்கு ரூ.1000ம், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் ரூ.1500 வீ்தமும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பு படிக்கும் மகன், மகளுக்கு ரூ.1500 வழங்கப்படுகிறது. விடுதியில் தங்கிப் படிப்பவர்களுக்கு ரூ.250 கூடுதலாக, அதாவது மொத்தம் ரூ.1750 வழங்கப்படுகிறது. பட்ட மேற்படிப்பு படித்தால் ரூ.4 ஆயிரம், விடுதியில் தங்கி பட்டமேற்படிப்பு படித்தால் ரூ.1000 கூடுதலாக, அதாவது மொத்தம் ரூ.5000 வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை அனைத்தும் ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.

பயிலும் நலவாரிய உறுப்பினர் குழந்தைகளுக்கு எவ்வளவு உதவித்தொகை வழங்கப்படுகிறது?

சட்டம், பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம் போன்ற தொழில்சார் பட்டப்படிப்பு படிக்கும் நலவாரிய உறுப்பினர் மகன், மகளுக்கு ஆண்டுக்கு ரூ.4000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. விடுதியில் தங்கி படிப்பவராக இருந்தால் ரூ.6000 வழங்கப்படுகிறது. தொழில்நுட்ப மேற்படிப்பு பயின்றால் ரூ.6000, விடுதியில் தங்கி பயின்றால் ரூ.8000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஐடிஐ, பாலிடெக்னிக் போன்ற தொழிற்கல்வி பயில்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய், விடுதியில் தங்கிப் பயின்றால் ரூ.1200 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x