Published : 08 Sep 2014 11:25 AM
Last Updated : 08 Sep 2014 11:25 AM
வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் எடைக் கருவிகள் தொடர்பான விதிமுறைகள் குறித்து தொழிலாளர் துறையினர் விளக்கம் அளிக்கின்றனர்.
நுகர்வோர் பாதுகாப்பில் தொழிலாளர் துறையினர் பங்கு என்ன?
நகைக் கடை, மளிகை கடை, பெட்ரோல் பங்க் போன்ற வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் எடைக் கருவிகள், எடைக் கற்கள் ஆகியவை சரியான எடையில் பயன்படுத்தப்படுகிறதா என தொழிலாளர் துறையினர் ஆய்வு செய்வார்கள். சரியான எடையில் இருந்தால், அவற்றில் தொழிலாளர் முத்திரை ஆய்வாளர் நிலையிலான அதிகாரிகள் முத்திரை இடுவார்கள். பொட்டலப் பொருட்கள் சரியான எடையில் விற்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
முத்திரையிடாத எடைக் கருவி, எடைக் கற்களைப் பயன்படுத்தக் கூடாதா?
முத்திரையிடாதவற்றைப் பயன்படுத்தக்கூடாது. அவை சரியான எடையில் உள்ளது என்பதை உறுதி செய்யவே முத்திரையிடப்படுகிறது. அதில் மின்னணு எடை இயந்திரம், மேடை தராசு ஆகியவற்றை ஆண்டுக்கு ஒருமுறை அந்தந்த மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்று முத்திரையிட வேண்டும். விட்டத் தராசு (பீம் ஸ்கேல்), கவுன்டர் ஸ்கேல், எடைக் கற்கள், மண்ணெண்ணெய் ஊற்றப் பயன்படுத்தப்படும் கூம்பு அளவை, பால் ஊற்றப் பயன்படுத்தப்படும் ஊற்றல் அளவி ஆகியவற்றை 2 ஆண்டுக்கு ஒருமுறை தொழிலாளர் முத்திரை ஆய்வாளரிடம் காட்டி, முத்திரையிட்டுக்கொள்ள வேண்டும். எடைக் கற்களின் பின்புறம் இந்த முத்திரை இருக்கும். தேதி, மாதம், ஆண்டு ஆகியவை முத்திரையில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
முத்திரையிடாமல் எடைக் கருவிகளைப் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?
வணிக நிறுவனத்தினர் பயன்படுத்தும் எடைக் கருவியில் கட்டாயம் முத்திரை பதிக்கப்பட்டிருக்க வேண்டும். இதுதொடர்பாக அந்தந்த மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆய்வாளர் நிலையிலான அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். எடைக் கருவியில் முத்திரை இல்லாதது கண்டறியப்பட்டால் கருவிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்திய பின்னர் எடைக் கருவிகள் திருப்பி வழங்கப்படும்.
வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் எடைக் கருவிகள் சரியான எடையில் இருப்பதை நுகர்வோர் அறிய வழிவகை உள்ளதா?
உள்ளது. வணிக நிறுவனங்களில் முத்திரையிடப்பட்ட சோதனை எடைக்கற்களை நுகர்வோரின் பார்வையில் படும்படி வைத்திருக்க வேண்டும். நுகர்வோர் கேட்டால் சோதனை எடைக் கற்களில் பொருள் அளவீடு செய்து காண்பிக்க வேண்டும். தராசின் மொத்த எடையில் 10 சதவீதம் எடையளவு கொண்ட சோதனை எடைக்கற்களை வணிக நிறுவனத்தினர் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். பெட்ரோல் பங்க் என்றால் 5 லிட்டர் அளவு கொண்ட கேன், நுகர்வோர் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும். வழங்கப்படும் பெட்ரோல் அளவில் நுகர்வோருக்கு சந்தேகம் ஏற்பட்டு, அதுதொடர்பாக விசாரித்தால், அந்த கேனில் கட்டாயம் பெட்ரோல் நிரப்பிக் காட்டவேண்டும்.
(மீண்டும் நாளை சந்திப்போம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT