Published : 03 Sep 2014 12:00 AM
Last Updated : 03 Sep 2014 12:00 AM
தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்துக்கு தமிழக அரசு நிதியுதவி வழங்குகிறது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட தொழிலாளர் அலுவலர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பி.முனியன் விளக்குகிறார்..
விபத்தில் மரணமடையும் தொழிலாளரின் குடும்பத்துக்கு அரசு என்ன உதவிகள் வழங்குகிறது?
விபத்தில் இறக்கும் தொழிலாளர்களின் குடும்ப பாதுகாப்புக்காக அரசு விதிமுறைகளின்படி விபத்து நிவாரண உதவித்தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி, விபத்தில் உறுப்புகளை இழப்பது, உறுப்புகள் நிரந்தரமாக செயலிழப்பது போன்ற பாதிப்புகளுக்கும், விபத்தின் தன்மைக்கு ஏற்பவும் ரூ.1 லட்சம் வரை தொழிலாளர் அலுவலகம் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விபத்தில் தொழிலாளர்கள் இறக்கும்பட்சத்தில் அவரது குடும்பத்தினர் இந்த உதவித்தொகையை எப்படி பெறுவது? அதற்கான வழிமுறை என்ன? என்னென்ன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்?
தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் நலவாரியம் மூலம் வழங்கப்படும் அனைத்து விதமான உதவித்தொகைகளையும் பெறுவதற்கு தொழிலாளர் அலுவலகத்தை (சமூக பாதுகாப்பு திட்டம்) அணுகவேண்டும். அனைத்துவிதமான உதவித்தொகைகளைப் பெறவும் பொதுவான ஆவணங்களான அசல் அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், குடும்ப அடையாள அட்டை ஆகியவை தேவை. இவை மட்டுமின்றி, விபத்து மரண உதவித்தொகையைப் பெற அசல் இறப்புச் சான்றிதழ், காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, பிரேதப் பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து தொழிலாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விபத்தில் உறுப்புகளை இழப்பது போன்ற பாதிப்புகளை அடையும் தொழிலாளர்கள் உதவித்தொகையைப் பெற என்ன ஆவணங்கள் தேவை?
விபத்துகளில் உறுப்புகளை இழத்தல், உறுப்புகள் செயலிழத்தல் போன்ற பாதிப்படைவோருக்கு உதவித்தொகை நீங்கலாக அவர்களது பாதிப்பின் தன்மைக்கேற்ப இலவசமாக செயற்கை உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை பெறுவதற்கு, உதவி சிவில் சர்ஜன் அளவிலான மருத்துவரிடம் பெறப்பட்ட பணித்திறன் இழப்பு குறித்த மருத்துவச் சான்று, மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டதற்கான சான்று, காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து தொழிலாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இயற்கையாக மரணமடையும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நலவாரியம் மூலம் நிவாரண உதவிகள் எதுவும் வழங்கப்படுகிறதா?
இயற்கையாக மரணமடையும் தொழிலாளரின் வாரிசுதாரருக்கு உதவித்தொகையாக ரூ.15 ஆயிரமும், இறுதிச்சடங்கு செலவுக்கு ரூ.2 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
(மீண்டும் நாளை சந்திப்போம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT