Published : 02 Sep 2014 12:00 AM
Last Updated : 02 Sep 2014 12:00 AM
நலவாரியத் தொழிலாளர்களின் மகன், மகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிமுறை, திருமண நிதியுதவித் திட்டம் குறித்து ஈரோடு மாவட்ட தொழிலாளர் அலுவலர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பி.முனியன் விளக்குகிறார்.
நலவாரிய உறுப்பினர் மகன், மகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிமுறைகள் என்ன?
கல்வி பயிலும் ஆண்டிலேயே உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். பள்ளித் தலைமை ஆசிரியரிடம் இருந்து பெறும் படிப்புச் சான்றிதழில் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளியின் மகள் என்று கல்வி பயிலும் ஆண்டுடன் குறிப்பிட வேண்டும். பள்ளி மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச் சான்றிதழில் சான்றொப்பம் பெற்றிருக்க வேண்டும். கல்லூரியில் படிப்பவராக இருந்தால் முதல்வரிடம் இருந்து பெறப்பட்ட சான்று, விடுதியில் தங்கி பயின்றால் கல்லுாரி முதல்வர் அல்லது விடுதி காப்பாளரிடம் சான்று பெற்று தொழிலாளர் அலுவலகத்தில் (சமூக பாதுகாப்பு திட்டம்) விண்ணப்பம் செய்ய வேண்டும்.
நலவாரிய தொழிலாளியின் மகன், மகள் அரசின் வேறு திட்டத்தில் பயன் பெற்றிருந்தாலும், நலவாரியம் வழங்கும் கல்வி உதவித்தொகையை பெற முடியுமா?
முடியாது. அரசு பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் எந்தவொரு திட்டத்தின் கீழ் பயன் பெற்றிருந்தாலும், நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை பெற தகுதியில்லை.
தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் வேறு என்னென்ன அரசு திட்டங்கள் உள்ளன?
திருமண நிதியுதவி, மகப்பேறு நிதியுதவி, கண் கண்ணாடி, விபத்து மரணம், விபத்து நிவாரண உதவி, இயற்கை மரண நிதியுதவி, ஈமச்சடங்கு நிதியுதவி போன்ற திட்டங்கள் நலவாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
திருமண நிதியுதவி திட்டத்தில் வழங்கப்படும் உதவித்தொகை எவ்வளவு?
நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் இரு முறை திருமண நிதியுதவி பெறலாம். அதன்படி மகன், மகள் என இருவருக்கு திருமண உதவி வழங்கப்படுகிறது. அதன்படி ஆணாக இருந்தால் ரூ. மூவாயிரமும், பெண்ணாக இருந்தால் ரூ. ஐந்தாயிரமும் வழங்கப்படுகிறது.
திருமண நிதியுதவி பெற என்ன ஆவணங்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்?
நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட அசல் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு, குடும்ப அடையாள அட்டை, திருமண அழைப்பிதழ், திருமணம் நடந்ததற்கான சான்று, ஆணுக்கு 21 வயது; பெண்ணுக்கு 18 வயது என்பதற்குரிய வயதுச் சான்றிதழ் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து தொழிலாளர் அலுவலகத்தில் (சமூக பாதுகாப்பு திட்டம்) வழங்க வேண்டும். அந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
(மீண்டும் நாளை சந்திப்போம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT