Published : 03 Aug 2014 10:00 AM
Last Updated : 03 Aug 2014 10:00 AM
மாற்றுத் திறன் மாணவர்களுக்கு அளிக்கப்படும் இலவச தொழில் பயிற்சிகள் குறித்து மாற்றுத் திறனாளிகள் துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.
# சென்னை, திருச்சி, மதுரை உட்பட தமிழகத்தில் 12 இடங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்ப பட்டயப் பயிற்சி அளிக்கப்படுவதாக நேற்று பார்த்தோம். இப்பயிற்சியில் சேர்வதற்கான நிபந்தனைகள் என்ன?
கை, கால் பாதிக்கப்பட்ட, காது கேளாத மாற்றுத் திறனாளிகள் பிளஸ்2 பொதுத் தேர்வில் அறிவியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆய்வுக் கூடத்தில் தன்னிச்சையாக ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்லும் திறன் இருக்க வேண்டும். இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கும்போது தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, மேல்நிலை வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
# கைபேசி பழுது பார்க்கும் பயிற்சி எந்தவிதமான மாற்றுத் திறனாளிகளுக்கு அளிக்கப்படுகிறது?
கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மூலம் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக் காலம் 3 மாதங்கள். அனைத்து மாவட்டங்களிலும் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ.300 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
# கைபேசி பழுது பார்க்கும் பயிற்சியில் சேர கல்வித் தகுதி என்ன?
10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் இதில் பயன் பெறலாம். பயிற்சி மையத்தின் உள்ளே ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு தன்னிச்சையாக செல்லும் திறன் வேண்டும். இதில் சேர விண்ணப்பிக்கும்போது தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, 10-ம் வகுப்பு கல்விச் சான்று நகல் இணைக்க வேண்டும்.
# இலவச கணினிப் பயிற்சி யாருக்கு அளிக்கப்படுகிறது?
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச கணினிப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி மையம் சென்னை பூவிருந்தவல்லியில் உள்ளது. இங்கு மாதம் ரூ.300 உதவித் தொகையுடன் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச கணினிப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு பிளஸ்2-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, பிளஸ்2 சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
# பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறதா?
சென்னையில் ஓராண்டு பைண்டிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. இலவச தங்கும் விடுதி, உணவு வசதி, சீருடை வழங்கப்படுகிறது. இதில் சேர 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
(மீண்டும் நாளை சந்திப்போம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT