Published : 27 Aug 2014 08:04 PM
Last Updated : 27 Aug 2014 08:04 PM
வெகு நாட்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு சென்றிருந்தபோது நேர்ந்த அனுபவம் இது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இறங்கியபோது பளபளவென விடிந்திருந்தது. பேருந்தில் இருந்து இறங்கியவுடனேயே சுவாசத்தில் நிரம்பியது மல்லிப்பூ வாசனை. திண்டாரமாகக் கட்டப்பட்டிருந்த மல்லிகையை பார்த்துக்கொண்டே வெளியே வந்தால் ஆட்டோ அண்ணேமார்கள் பையை பிடித்து இழுக்காத குறையாக ச
வாரி கூப்பிட்டுக் கொண்டிருந்தனர். சரி ஏறிவிடலாமா என்று நினைத்த போது கேட்டது அந்தப் பாடல்.
'புத்தும் புது காலை... பொன்னிற வேளை...' எஸ்.ஜானகியின் குரல் காற்றில் மிதந்துவர, கால்கள் அந்த திசைக்கு திரும்பின. மினி பஸ் ஒன்றில் அந்தப் பாடல் பாடிக்கொண்டிருந்தது. அது நான் செல்ல வேண்டிய ஏரியாவுக்கு செல்லும் பேருந்தே என்பது மகிழ்ச்சியளித்தது.
அம்மா வீட்டுக்குச் செல்ல மாநகரப் பேருந்தில் சென்றால் 20 நிமிடங்களே ஆகும். ஆட்டோ அண்ணே 15 நிமிடத்தில் இறக்கிவிட்டு விடுவார். ஆனால், மினி பஸ் செல்ல 45 முதல் 50 நிமிடங்கள் ஆகும். தெரிந்தே ஏறினேன், மினிபஸ் பாடல்களுக்காக.
'குயிலோசையின் பரிபாஷைகள்... அதிகாலையின் வரவேற்புகள்' வரிகள் இசைத்தபோது இடம் பார்த்து அமர்ந்து கொண்டேன். அந்தப் பாடல் இனிதே நிறைவு பெற்றது. மனதை வருடும் மெட்டுக்களுக்காகவே என் மனம் மினி பஸ்ஸில் ஏறச் சொல்லியிருந்தது என்பதை உணர்ந்தேன்.
அதற்குள் ஸ்கூல், காலேஜ், பூ மார்கெட்டில் இருந்து திரும்பிய பூக்கார அக்கா, பழ வியாபாரி, இன்னும் பலர் பஸ்சில் ஏறினர். பஸ் புறப்பட்டது. பாட்டுகள் தொடர்ந்தன. 'அடி ஆத்தாடி இள மனசொன்னு' என்ற ராகம் பாடியபோது மனது கடற்கரைக்கு நொடிப்பொழுதில் சென்றுவிட்டது.
மலை உச்சியில் ரேகாவும், கடற்கரையில் சத்யராஜும் நிற்க பாரதிராஜாவின் கேமரா அவர்கள் இருவருக்கும் மாறி, மாறி ஷாட் வைத்திருந்ததும், அலை ஏற்றத்திற்கும், சறுக்கிற்கும் ஏற்றவாறு அந்தப் பாடலை இசையமைத்த ராஜாவின் ஞானத்தையும் மனம் சிலாகித்தது. ஆஹா...எத்தனை சுகம் அது.
பஸ் வளைவில் திரும்பும்போது மரக்கிளைகள் சில ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கும். ஜன்னல் ஓரத்தில் இருந்தால் சற்று நகர்ந்து கொள்ள வேண்டும். வளைவில் திரும்பியபோது ஒலிக்கத் துவங்கியது "பூ மாலை ஒரு பாவையானது". அந்தப் பாடலில், சாமிகூட ஆடத்தான், சக்தி போட்டிபோடத்தான்.. அம்பாள் பாடு என்ன ஆனது அந்தரத்தில் நின்றே போனது என்ற வரிக்கு மட்டும் ஆண்கள் சிலர் அவ்வளவு மகிழ்ச்சியோடு பின்பாட்டு பாடினர். அவர்கள் அப்படித்தான் என நினைத்துக் கொண்டேன். முழுப்பாடலை நானும் என் மனதுக்குள் முணுமுணுத்தேன். ஆனால், அவர்கள் அந்த வரிக்கும் பின்பாட்டு பாடியது உருத்தியது.
பயணம் முழுவதும், யாரும் யாருடனும் வெட்டியாக முறைத்துக் கொள்ளாமல், கன்டெக்டர் சில்லறைக்காக சளைத்துக் கொள்ளாமல், போனில் வெட்டிப்பேச்சு பேசுவதைகூட சற்று நேரத்திற்கு ஒத்திவைக்கக் கூடிய அளவிற்கு 'வளையோசை கல கலகலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது'; பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம், என் கண்மணி..என் காதலி... எனை பார்க்கிறாள், சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா, பருவமே புதிய பாடல் பாடு இளமையின் பூந்தென்றல் ராகம், மலேசியா வாசுதேவனின் குரலில் பூவே இளைய பூவே..வரம் தரும் வசந்தமே... மலர் மீது தேங்கும் தேனே..எனக்கு தானே... எனக்கு தானே.. என பாடல்கள் அடுத்தடுத்து விருந்து படைக்க வீடும் வந்துவிட்டது.
இறங்கி தெருவில் நடந்தபோதும், பாடல்கள் ரீங்காரம் இட்டுக் கொண்டே இருந்தன. பொதுவாக மதுரை மினி பஸ்களின் ஸ்பெஷாலிட்டியே இந்தப் பாடல்கள்தான். பெரும்பாலும் கன்டெக்டர்கள்தான் டி.வி.டி.க்களை போடுகின்றனர். அவர்களுக்கு இருக்கும் ரசனை, காலத்திற்கும் நேரத்திற்கும் ஏற்ற மாதிரி பாடல்களை இசைப்பது இவர்கள்தான் நவீன ஆர்.ஜெ.க்களுக்கு முன்னோடியோ என நினைக்கத் தோன்றுகிறது.
அலுங்கி, குலுங்கி வரும் மினி பஸ் உடலில் சிறு வலியை தந்தாலும் கூடவே நிவாரணியாக வருகிறது பாடல்கள். இசையின் சக்தி அது. இரவு 7 மணிக்கு மேல் மினி பஸ் பயணம் இன்னும் சுகமாக இருக்கும் அவற்றில் இசைக்கப்படும் சுகராகங்களால். இன்றும் சென்னையில் காலை கே.கே.நகரில் இருந்து பனகல் பார்க் வரை ஷேர் ஆட்டோவில் அதே பாடல்கள் இசைப்பதை கேட்டிருக்கிறேன். ஆனால் நகரத்தின் பரபரப்பு, வாகன் நச்சரிப்பு, திடீரென் முளைக்கும் டிராபிக் ஜாம் பாடல்களை காது மடலில் மட்டும் தெறித்து ஓடச் செய்கிறது.
"சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா?"
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT