Last Updated : 09 Aug, 2014 10:07 AM

 

Published : 09 Aug 2014 10:07 AM
Last Updated : 09 Aug 2014 10:07 AM

நம் சட்டம்...நம் உரிமை: மனவளர்ச்சி குன்றியவர்களை பராமரிக்க இல்லங்கள்

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் நலத்திட்ட உதவிகள், சலுகைகள், உதவித் தொகை குறித்து பார்த்து வருகிறோம். மூளை முடக்குவாதம், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்நாள் பாதுகாவலர் நியமனம் செய்தல், தசைச் சிதைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகள் உள்ளிட்டவை குறித்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.

மாற்றுத் திறனாளிகள் தங்களுக்காக பாதுகாவலரை நியமித்துக்கொள்ள சட்டத்தில் வழிவகை உண்டா?

தேசிய அறக்கட்டளைச் சட்டம் 1998-ன் கீழ் சிறப்பு மாற்றுத் திறனாளிகள், பாதுகாவலரை நியமித்துக்கொள்ளலாம். புற உலகு சிந்தனை இல்லாதவர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர், மனவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் பல்வகை பாதிப்புகள் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு பாதுகாவலர் நியமனம் செய்ய சட்டத்தில் வழிவகை உண்டு. அவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். தங்களது தனிப்பட்ட பணிகளை கவனித்துக்கொள்ள முடியாதவர்களுக்கு அவர்களது பெற்றோர்களே பாதுகாவலர் ஒருவரை நியமிக்கலாம்.

பாதுகாவலரை நியமிப்பதற்கு என்னென்ன சான்றுகள் இணைக்கப்பட வேண்டும்?

மாற்றுத் திறனாளியின் பாதிப்பு குறித்த மருத்துவச் சான்றிதழை இணைக்க வேண்டும். அது மட்டுமின்றி, மாற்றுத் திறனாளியின் காப்பாளராக நியமிக்கப்படுவதற்கு சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளி மற்றும் அந்த காப்பாளர் ஆகிய இருவரின் சம்மதமும் அவசியம். எனவே, அவர்கள் இருவரது சம்மதக் கடிதத்தையும் இணைக்க வேண்டும். பெற்றோர் போன்ற இயற்கை காப்பாளர்கள் இருந்தால், அவர்களது சம்மதமும் தேவை.

மனவளர்ச்சி குன்றியவர்களைப் பராமரிக்க பிரத்தியேகமாக இல்லங்கள் உள்ளனவா?

14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோரை பராமரிப்பதற்கென தொழிற்பயிற்சி வசதி மற்றும் தங்கும் வசதியுடன் கூடிய இல்லங்கள் உள்ளன. மதுரை, கோவை, திருச்சி, சேலம், திண்டுக்கல், திருநெல்வேலி, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 8 மாவட்டங்களில் இவை செயல்படுகின்றன. மனவளர்ச்சி பாதிப்பு மற்றும் அதனைச் சார்ந்த பாதிப்பு உள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட பராமரிப்பு இல்லங்களில் சேர்க்கப்படுகின்றனர்.

தசைச் சிதைவு (ஆட்டிசம்) நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவிகள் வழங்கப்படுகிறதா?

தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ.500 வழங்கப்பட்டு வந்தது. 2011-ம் ஆண்டு முதல் இத்தொகையை அரசு ரூ.1000 ஆக உயர்த்தியுள்ளது.

இந்த உதவித் தொகையைப் பெற எங்கு விண்ணப்பிக்க வேண்டும்? என்னென்ன ஆவணங்கள் இணைக்க வேண்டும்?

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த உதவித் தொகையைப் பெற தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டையின் நகல் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரோ, அந்த மாவட்டத் தலைநகரில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப் பிக்க வேண்டும்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x