Published : 24 Aug 2014 11:10 AM
Last Updated : 24 Aug 2014 11:10 AM
அரசின் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் நலத்திட்டங்கள், வழங்கப்படும் உதவித் தொகைகள், அவற்றைப் பெறுவதற்கான தகுதி, வயது வரம்பு, அவற்றைப் பெறும் வழிமுறை, அணுகவேண்டிய அதிகாரிகள் யார் என்பது போன்ற விவரங்களை துறைவாரியாகப் பார்த்து வருகிறோம். இதுதொடர்பாக எழும் பொதுவான சந்தேகங்களுக்கு அந்தந்த துறை உயரதிகாரிகள் விளக்கம் அளித்துவருகின்றனர்.
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வழங்கப்படும் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடியாக நியமனம் செய்யப்படும் பணியிடங்கள், அலுவலகத்தில் பதிவு செய்யும் முறை, அதில் அளிக்கப்படும் முன்னுரிமைகள் குறித்து நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் ம.மகேஸ்வரி விளக்குகிறார்...
வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடியாக எந்தெந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன?
அரசுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அவற்றில் ஒரு சில தொழிற்கல்வி சார்ந்த பணியிடங்கள், அலுவலக உதவியாளர், துப்புரவுப் பணியாளர், காவலர் போன்ற பணியிடங்கள் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு துறை மூலம் பதிவுமூப்பு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.
தொழிற்கல்வி சார்ந்த பணியிடங்களில் எவை எவை மாவட்ட வேலைவாய்ப்புத் துறை அலுவலகம் மூலம் நிரப்பப்படுகிறது?
ஆய்வக உதவியாளர், ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர், மருந்தாளுநர், நுண்கதிர் வீச்சாளர் (எக்ஸ்ரே) என பல்வேறு தொழிற்கல்வி சார்ந்த பணியாளர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு பட்டியல் மூலம் நிரப்பப்படுகின்றனர். அதுபோல போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள், கிராமப்புற நூலகங்களில் உள்ள நூலகர் பணியிடங்கள், கூட்டுறவுத் துறையில் விற்பனையாளர், கட்டுநர் பணியிடம் ஆகியவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்படும் பணியிடத்தில் முன்னுரிமை ஏதேனும் உள்ளதா?
ஆம். ஆதரவற்ற விதவை, மதம், சாதி மாறி கலப்புத் திருமணம் புரிந்தோர், முன்னாள் ராணுவத்தினர், அவர்களைச் சார்ந்தோர், பணியில் உள்ள ராணுவத்தினரைச் சார்ந்தோர், இலங்கை, பர்மா அகதிகள், பெற்றோரை இழந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்படும் பணியிடத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அழைக்கப்படும் 5 நபர்களில் ஒருவர் மாற்றுத் திறனாளி. அதுபோல, மாற்றுத் திறனாளிகள் வயது வரம்பில் 10 ஆண்டுகள் வரை சலுகை அளிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT