Published : 22 Aug 2025 01:53 PM
Last Updated : 22 Aug 2025 01:53 PM
சென்னையின் உணர்வினை இசை வடிவில் வெளியிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறது திஸ்ரம் (Thisram ) இசைக் குழு. இசை குறித்த பெரும் கனவுகளோடு இருந்த இளைஞர்களால் 2019இல் தொடங்கப்பட்டது திஸ்ரம் இசைக் குழு.
கர்னாடக சங்கீதத்தில் இடம்பெற்றுள்ள ஒருவகை தாள வகையே ’திஸ்ரம்’. எங்களின் இசை உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கடத்தக்கூடியது, அதற்காவே ’திஸ்ரம்’ என்கிற பெயரைத் தேர்ந்தெடுத்தோம் என்கிறார் இசைக் குழுவைச் சேர்ந்த பார்கவி.
திஸ்ரம் குழுவில் 7 பேர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவிலுள்ள அனைவருமே கர்னாடக இசையில் 10 வருடங்களுக்கும் மேலாகப் பயிற்சி பெற்றவர்கள். சென்னை, பெங்களூரு உள்பட தென்னிந்தியாவில் பல இடங்களுக்குப் பயணப்பட்டு இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். 2022 இல் நடைபெற்ற ’Chennai Got Talent’ நிகழ்வில் திஸ்ரம் குழு முதலிடம் பிடித்து பரிசினையும் பெற்றுள்ளது.
கர்னாடக இசைதான் எங்கள் அஸ்திவாரம்; எனினும் உலகத்தில் பிற இசை வடிவங்களை இணைத்துப் புதுவித இசை அனுபவத்தை அளிப்பதுதான் எங்கள் நோக்கம் என்கிறார் திஸ்ரம் இசைக் குழுவில் ஒருவரான ஆதித்யா.
சென்னையின் 386வது பிறந்த நாளையொட்டி திஸ்ரம் இசைக் குழு பாடல் ஒன்றை இன்று மாலை வெளியிடவுள்ளது. இந்தப் பாடல் குறித்து ஆதித்யா, “சென்னையைப் பற்றி நிறைய பாடல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை மேற்கத்திய இசையை வெளிப்படுத்தின. எங்களின் பாடல் மிருதங்கம், பறை, உருமி, தவில் என நம்ம ஊரின் இசையை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ’சென்னை நம்ம ஊரு’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் பாடல் மூலம் சென்னையின் புகழையும் சென்னைக்கும் அதன் மக்களுக்கும் இடையேயான பந்தத்தையும் வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறோம்.
’சென்னை நம்ம ஊரு’ பாடல் சென்னையின் பல்வேறு இடங்களையும் அதன் பண்பாட்டையும் பேசுகிறது. இந்தப் பாடலுக்காகச் சென்னையின் அனைத்துப் பகுதிகளுக்கும் பயணப்பட்டு, அங்குள்ள ஒலிகளைப் பதிவு செய்திருக்கிறோம். தென் சென்னை - வடசென்னை - மத்திய சென்னை என அனைத்துப் பகுதிகளையும் இந்தப் பாடலில் கொண்டு வந்துள்ளோம்” என்றார்.
ஒவ்வொரு முறை பாடலைக் கேட்கும்போதும் நிச்சயம் புது அனுபவத்தை அளிக்கும் என உற்சாகமாக கூறுகிறார்கள் திஸ்ரம் இசைக் குழுவினர்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT