Published : 14 Aug 2025 03:25 PM
Last Updated : 14 Aug 2025 03:25 PM
இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழக சுதந்திரப் போராட்டம் 18ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. சிவகங்கை ராணி வேலுநாச்சியார் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடினார்.
1751ஆம் ஆண்டில் நெல்கட்டும் செவலை ஆண்ட பூலித்தேவன், ஆங்கிலேயர்களை வெளியேறச் சொல்லி வீரமுழக்கமிட்டார். பாஞ்சாலங் குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய பொம்மன் ஆங்கிலேயரை எதிர்த்துத் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தார். 1799இல் ஆங்கிலேயரால் பாஞ்சாலங் குறிச்சி முற்றுகையிடப்பட்டு, கயத்தாற்றில் கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்டார்.
இவரைப் போலவே தீரன்சின்னமலை காவிரிக்கரையிலும் ஓடாநிலையிலும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வென்றார். இவரை வெல்ல முடியாது என்று நினைத்த ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம் கைது செய்து, 1805ஆம் ஆண்டு சங்ககிரிக் கோட்டையில் தூக்கில் இட்டனர்.
1806ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் சிப்பாய்கள் போராட்டங்களை நடத்தினர். தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆடைக் கட்டுப்பாடும் மதச் சின்னங்களை அணிந்துகொள்வதற்கான தடையும் 1,500 வீரர்களைச் சீற்றம்கொள்ள வைத்தது. இதில் சுமார் நூறு ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர். இந்த வேலூர் சிப்பாய் எழுச்சி, இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்டது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ராபர்ட் ஆஷ், சுதந்திரப் போராட்டத்தை நசுக்குவதற்காகப் பல வழிகளைக் கையாண்டார். அதனால்,1911ஆம் ஆண்டு மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் அவரைச் சுட்டுக் கொன்றார். இந்த நிகழ்வு சுதந்திரப் போராட்டத்தில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.
20ஆம் நூற்றாண்டில் வ.உ.சிதம்பரனார், பாரதியார், சுப்ரமணிய சிவா, சங்கரலிங்கனார், வ.வே.சுப்பிரமணிய ஐயர், ம.பொ.சிவஞானம், பி.ராமமூர்த்தி, ஜீவானந்தம், பி.கக்கன், திரு.வி.கல்யாண சுந்தரனார், காயிதே மில்லத், ராஜாஜி, காமராஜர், அம்புஜத்தம்மாள், கே.பி.ஜானகி அம்மாள், மு. பக்தவத்சலம் போன்ற ஏராளமான தலைவர்கள் சுதந்திரப் போராட்டத்துக்கு மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளனர்.
பாரதியாரின் ‘சுதேசமித்திரன்’, ‘இந்தியா’ போன்ற பத்திரிகைகள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தின.. 1932ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் தேசியக் கொடியை ஏந்திச் சென்ற திருப்பூர் குமரன், ஆங்கிலேயக் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். கொடி காத்த குமரனின் உயிர்த் தியாகம் போராட்டத்தை இன்னும் தீவிரமாக்கியது. மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், கலைஞர்கள், பெண்கள் என அனைவரும் ஒன்றிணைந்து ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிப் பெற்ற சுதந்திரத்தைப் போற்றுவோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT