Published : 14 Aug 2025 04:03 PM
Last Updated : 14 Aug 2025 04:03 PM
இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கக் காலத்தில் சமூகத்தின் மேல் அடுக்குப் பெண்கள் மட்டுமே போராட்டங்களில் பங்கேற்றனர். அவர்களால் ஈர்க்கப்பட்டு நடுத்தர வர்க்கப் பெண்களும் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றனர். காந்தியின் வருகைக்குப் பிறகு அனைத்துத் தரப்புப் பெண்களும் பெருந்திரளாகப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
சுதந்திரப் போராட்டத்தின் வடிவத்தை மாற்றியமைத்ததிலும் பெண்களின் பங்கு முக்கியமானது. காந்தியின் அறவழிப் போராட்டங்களுக்கு முதன்மைக் காரணம் பெண்களின் பங்கேற்பு. பெண்களின் சகிப்புத்தன்மை, உறுதி, எதையும் எதிர்கொள்ளும் துணிவு போன்றவைதான் ஒத்துழையாமை இயக்கத்தில் அவர்களை ஆண்களுக்கு நிகராகப் பங்குபெற வைத்தது. பெண்களை மையப்படுத்திய ‘பாரதமாதா’ பிரச்சாரம் மக்கள் மத்தியில் தீவிரமான விடுதலை வேட்கையைத் தூண்டியது.
பொதுக்கூட்டங்களுக்குப் பெண்களை ஒருங் கிணைப்பது, போராட்டங்களை முன்னின்று நடத்துவது, விடுதலை அமைப்புகளுக்கு உதவுவது எனப் பல வகைகளிலும் பெண்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. விடுதலைப் போராட்டங்களில் பெண்களின் பங்களிப்பு, இந்தியச் சுதந்திரத்தை நோக்கிய பயணத்தைத் துரிதப்படுத்தியதோடு சமூகத்தில் நிலவிய பாலினப் பாகுபாட்டையும் சமூக நிர்பந்தங்களையும் மறுவரையறை செய்தது.
சரோஜினி நாயுடு, விஜயலட்சுமி பண்டிட், கமலாபாய் சட்டோபாத்யாய, மிருதுளா சாராபாய், பிகாஜி காமா, மாதங்கினி ஹஸ்ரா, சுசேதா கிருபாளினி உள்ளிட்ட பலர் தேசிய அளவிலும் கேரளத்தில் ஆனி மாஸ்கரீன், ஏ.வி.குட்டிமாலு அம்மா, மதராஸ் மாகாணத்தில் துர்காபாய் தேஷ்முக், உத்தரப்பிரதேசத்தில் ராமேஷ்வரம் நேரு, ஆனி பெசன்ட் போன்ற வெளிநாட்டுப் பெண்கள் என ஏராளமான பெண்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றினர்.
தேச விடுதலையும் பெண் விடுதலையும்: கல்வியாளரும் சமூகச் சீர்த்திருத்த வாதியுமான பேகம் ரொகையா ஷகாவத் ஹுசைன், இஸ்லாமியப் பெண்கள் மத்தியில் விடுதலை எழுச்சியை ஏற்படுத்திய முன்னோடிகளில் ஒருவர். இவருடைய தந்தை, கல்வியிலும் பல மொழிகளிலும் சிறந்து விளங்கி னாலும் பெண் கல்வி குறித்து மிகவும் பிற்போக்குத்தனமான சிந்தனையைக் கொண்டிருந்தார். அதனால் ரொகையாவால் பள்ளிக்குச் செல்ல இயலவில்லை.
தன் சகோதரர்களின் உதவியோடு வங்க மொழியைக் கற்றறிந்தவர், பின்னாட்களில் கவிபுனையும் அளவுக்கு உயர்ந்தார். பெண்கள் கல்வி பெறுவதுதான் அவர்களது அடிமை நிலையை மாற்றும் என்று உறுதியாக நம்பியவர், பாகல்பூரில் இஸ்லாமியப் பெண்களுக்கான பள்ளியை 1907இல் நிறுவினார். பிறகு கல்கத்தாவுக்குக் குடியேறியவர், 1911இல் அங்கும் ஒரு பள்ளியை நிறுவினார்.
உடல், மன, சமூகரீதியான ஒடுக்குமுறைகளில் இருந்து பெண்கள் விடுதலை பெறுவதுதான் அவர்களது அரசியல் செயல்பாட்டை உறுதிசெய்யும் என்பதால் ‘இஸ்லாமியப் பெண்கள் சங்க’த்தைத் தொடங்கினார். நாட்டின் விடுதலையோடு பெண்கள் தங்களுக்கான விடுதலைக்கும் சேர்த்துப் போராட வேண்டியிருப்பதை உணர்ந்தவர், தன் படைப்புகளின் வாயிலாகப் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT