Last Updated : 24 Jul, 2025 04:35 PM

4  

Published : 24 Jul 2025 04:35 PM
Last Updated : 24 Jul 2025 04:35 PM

சாமானியனுக்கான 'மாற்று மருத்துவம்' எப்போது செம்மை பெறும்?

“விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேன்டி - மேல்நாட்டாரை
விருந்துக்கழைத்து காட்டப் போறேன்டி
அஞ்ஞானத்தை அழிக்கப் போறேன்டி
அணுசக்தியாலே - ஆயுள் விருத்தி
பண்ணப்போறேன்டி..."

- பாடல்: உடுமலை நாராயணகவி (1949) | பாடியவர்: என்.எஸ்.கிருஷ்ணன்

சில நாட்களுக்கு முன்பு பொது சுகாதாரத் துறை மற்றும் நோய்த் தடுப்பு இயக்குநர், தனது வலைதளப் பக்கத்தில், தனது புகைப்படம், அந்தத் துறையின் இலட்சிணையுடன் ஒரு செய்தி வெளியிட்டு இருந்தார்.

அதற்கு, அறிவியல் சான்று மருத்துவர்கள், சங்கங்கள் கடும் எதிர்வினையாற்றி இருந்தார்கள் (‘ஆலோபதி’ வார்த்தை தவறானது). மருத்துவர் இரபிந்திர நாத், “போலி அறிவியலை வளர்க்க, அறிவியல் சான்று மருத்துவத்தை அதனுடன் சேர்த்து கலப்பட மருத்துவமுறையை உருவாக்கும் வழிமுறையில், தமிழ்நாட்டில் காலடிப் பதிப்பதற்கான முயற்சி” என்று பல ஆண்டு காலமாக போராடி வருகிறார்.

பொது சுகாதாரத் துறை இயக்குநரின் அறிக்கையில், “பொது சுகாதாரம், நோய்த் தடுப்புத் துறை, இந்திய மருந்துகளுக்கான சித்தா, ஹோமி யோபதி கழகங்கள் ஒருங்கிணைந்த மருத்துவச் சேவையினை தொடங்குகின்றது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒருங்கிணைந்த மருத்துவச் சேவை (Integrated health care) என்பது தமிழ்நாட்டில் பல் நெடுங்காலமாக, பல அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று வருகின்றது. ஒரே மருத்துவமனையில் அறிவியல் சான்று மருத்துவர்கள், பல் மருத்துவர், சித்த மருத்துவர் , ஹோமியோபதி மருத்துவர் அனைவரும் இடம்பெற்று இருக்கின்றனர்.

மேலும், அதே செய்தி அறிக்கையில், “இந்த செயல் திட்டதால் சுகாதார நோய்த் தடுப்புத் துறை முன்னேற்றப் பாதைக்கு அடி எடுகின்றது. இத்திட்டத்தால் பராம்பரியம் மற்றும் அறிவியலில் இருக்கும் பெறுமானத்தையும் சேர்த்து, புதிய வழிகாட்டுமுறையினை உண்டாக்குவோம்” என்ற வரிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள காரண, காரியங்களை நுட்பமாக பகுத்து அறிவோம்.

ஒரே இடத்தில் கிடைக்கக் கூடிய அனைத்து மருத்துவ முறைகளும், அவரவரின் நம்பிக்கைக்கு ஏற்ப நற்பயன் உருவாக்கலாம் அல்லது செயலில்லா ஆறுதல் மருந்தாக கற்பனை செய்து கொள்ளலாம்.

ஆனால், உயிரைக் காப்பாற்றுகின்ற மருந்துக்குப் பதிலாக செயலில்லா அல்லது செயல்பாடே கற்பனையால் உருவாக்கப்பட்ட, சான்றுகள் இல்லா மாற்று மருத்துவம் - சிலருக்கு கடைசி ஆறுதல் மருந்தாக அமைய வாய்ப்புண்டு.

உதாரணமாக, சிறுநீரக, கல்லீரல் நோய்கான அறிவியல் சான்று மருத்துவத்தில் சில பல காரணங்களுக்காக தவிர்த்து மாற்று மருத்துவத்தை நம்பி உயிர் இறந்தவர்களுள், சில அறிவுசால் நண்பர்களும் அடங்குவர்.

அறிவியல் சான்று இல்லாத மருத்துவத்தை ‘பாரம்பரியம்’ என்று கற்பனையை வளர்க்காமல், ஆராய்ச்சிகளின் முலம் சரியான சான்றுகள் இருக்கும் வேளையில், அறிவியல் மருத்துவத்துடன் இணைப்பது சரியான முறையாக இருக்கும்.

சமானியனுக்கு எளிதில் புரியும் வகையில் அறிவியலுக்கு அப்பாற்பட்டு மாற்று மருத்துவத்தை சந்தைப்படுத்துவதும், இதனைப் போற்றி வழிநடத்தும் கொள்கை முடிவு எடுப்பவர்களும், தங்களுக்கு உடல் நிலை பாதிக்கப்படும்போது அறிவியல் சான்று மருத்துவத்தையும், மருத்துவ கூட்டமைப்பு நிறுவனங்களின் மருத்துவமனை நாடுகின்றனர்.

சாமனியர்களுக்கு விலை குறைவுள்ள ஆறுதல் மருத்துவ முறையினைப் போதிக்கின்றனர்.

சிறு ஊர்களிலும் ,கிராமங்களிலும் மருத்துவக் கட்டமைப்பே இல்லாத காலங்களில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை கவனிப்பும் அளித்து வந்த துணை மருத்துவப் பெண்களையே சாமானிய மக்கள் பெரிதும் நம்பி இருந்த காலங்களில் தாய்-சேய் இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது .

மருத்துவக் கட்டமைப்பும், மருத்துவர்களும் பணியமர்த்தப்பட்ட நிலையில், அந்தந்த ஊரைச் சார்ந்த துணை மருத்துவ செவிலியர்களை பணியில் அமர்த்தி - சாமானிய மக்களை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு கவனிப்பில் அறிவியலையும் புகுத்தி, தாய் - சேய் நலனில் புதிய அடையாளத்தை தமிழ்நாடு அடைந்தது. தற்போதைய நிலையில் இவர்களை ஒப்பந்த அடிப்படையில் சொற்ப சம்பளத்தில் பணியமர்த்துவதால், இத்தகைய கிராமப்புற வேலைகளில் பெரிதும் நாட்டமில்லாமல் உள்ளனர்.

கோவிட் போன்ற பெரும் தொற்றின்போது பலர் நோய்வாய்ப்பட்ட நிலையில், மருத்துவத் துறையில், குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் அறிவியல் சான்று மருத்துவர்களாலும், முறையான ஆக்ஸிஜன் தட்டுப்பாடுன்றி, வைரஸ் எதிர்பபு மருந்துகளும், தடுப்பூசிகளையும் குறிப்பிடக்கூடிய உயிர்களை காப்பாற்றிய அதே வேளையில், சாமானியனின் அச்சத்தைப் போக்க ‘கபசுபநீர்’ ஆறுதல் மருந்தாக பருகி மகிழ்ந்தனர் .

பாரம்பரிய, கலாச்சார, யாருக்கும் தெரியாத அனுபவ மருத்துவ முறையை மேற்கத்திய நாடுகள் ஏன் ஏற்கவில்லை?

அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளின் நிலைப்பாடுகள்:

1. ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கப்படும் அனைத்து மருந்துகளும், மருத்துவ முறைகளும் அறிவியல் சார்ந்த, சான்றுகளின் அடிப்படையில் மட்டுமே அளிக்கப்படுகின்றன .

ஒவ்வொரு மருந்தின் பக்க விளைவுகளை அறிந்தும், அதற்கான மாற்று மருத்துவம், அதனை கண்டறியும் முறைகள் தரவுகள் இருந்தாலேயன்றி பயன்பாட்டிற்கு இடமளிப்பதில்லை .

உதாரணமாக - போலியோ தடுப்பூசி சுமார் 30 ஆண்டுக் காலம் பலகட்ட சோதனை முறைகளைத் தாண்டியே பயன்பாட்டிற்கு வந்தது .சில மாற்று மருத்துவ முறைகள் ஆரம்பக் கட்டத்தில் பலன் அளிப்பதாக இருந்தாலும், பலகட்ட சோதனையை தாண்டி வருவதில்லை .

2. மாற்று மருத்துவங்கள், உயிர் காக்கும் மருந்துகளுடன் சேரும்போது எதிர்வினை ஏற்படுத்தியதால், அனுமதி மறுத்துள்ளனர்.

3. புற்றுநோய் , முக்கிய உறுப்புகள் செயல் இழக்கும் நோய்களுக்கான அறிவியல் மருத்துவ முறையை அணுகாமல், மாற்று மருத்துவமுறைகளால் காலம் தாழ்த்தப்படுவதால், உயிரிழப்பை இந்த நாடுகளில் ஏற்பதில்லை .

4. ஒழுங்குமுறை, நெறிமுறை அமைப்புகள் மருத்துவ சேவையில் கடுமையான வழிமுறைகளை வகுத்துள்ளனர். அறிவியல், மருத்துவ ஆராய்ச்சிகளின் மூலமாகவும், சான்றுகள் , சிறு சிறு ஊறுவிளைவிக்காத மாற்று மருத்துவ முறைகளையும், அறிவியல் சான்று மருத்துவ முறைகளுடன் அனுமதித்துள்ளனர். உதாரணமாக, அக்குபஞ்சர் முறை சிறிய அளவில் அனுமதிக்கப்பட்டுள்ளன. மேற்கத்திய நாடுகளின் அறிவியல் சார்பு ஆராய்ச்சி முறைகள், மனிதகுலத்தைக் காக்கும் அரண்களாக அமைகின்றன.

நாம் கபசுபநீர் என்றும், தட்டுகளைத் தட்டி தீபத்தை ஏற்றியதும், அறிவியல் சான்று மருத்துவத்தை மற்ற மருத்துவ முறைகளோடு கலக்கும் முயற்சியில் இருந்தபோது, மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான நோபல் பரிசு பெற்றுத் தந்த ஆராய்ச்சிகளை அறிந்து கொள்வோம்.

2022 - ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வாண்டோ பாபோ, குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட அழிந்த ஹோமினின் இனங்களின் மரபணுக்கள் மற்றும் பரிணாமம் ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டது .

2023 - கட்டலின் கரிகோ, ட்ரூ வெய்ஸ்மேன் அவர்களின் கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராக எம்-ஆர்என்ஏ (mRNA) தடுப்பூசிகளை உருவாக்க வழிவகுத்த கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட்டது.

2024 - மைக்ரோ ஆர்என்ஏ (micro RNA) கண்டுபிடிப்புக்காக விக்டர் ஆம்ரோஸ், கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் மரபணு நோய்களுக்கான சிகிச்சை முறைகளை உருவாக்கலாம்.

மொத்த உள்நாட்டு உற்பத்தித் திறனில் (GDP) 0.6 - 0.7 சதவீதமே மருத்துவ ஆராய்ச்சிக்கு செலவிடும் வேளையில், மேற்கத்திய நாடுகள் 3-5 சதவீதம் இத்தகைய ஆராய்ச்சிகளுக்கு செலவிடுகின்றன. நமது மருத்துவத் துறைக்கான உள்நாட்டு உற்பத்தி திறனுக்கு அளிக்கப்படும் தொகை 3.5 சதவீதம்.

மாற்று மருத்துவத்தின் மகத்துவத்தை அறிந்த அல்லது கற்பனை செய்து வைத்துள்ள கொள்கை முடிவாளர்கள் - அதற்கான ஆராய்ச்சிக்கு செலவிடாமல் கலப்பட மருத்துவத் துறை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

சின்கோனா மரப்பட்டைகளில் மலேரியாவுக்கான கியுனின் மருத்துவக் குணம் கண்டறிந்த உடன், 100 கிராம் கியுனின் மருந்துக்கு பல கிலோ எடையுள்ள மரப்பட்டைகள் தேவைப்பட்டாதால், அவ்வகை மரங்களே அழித்தொழிக்கப்படும் என்பதால், அதுபோன்ற மருத்துவ ரசாயன கலவையான கிளோரோகியூன் கண்டறியப்பட்டு, உலகெங்கும் கோடிக்கணக்கான மனித உயிர்கள் காப்பற்றப்பட்டன .

பட்டமேற்படிப்பு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம், சண்டீகரில் 2022-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையில், எளிதாக விற்பனையாகும் மாற்று மருத்துவ மருந்துகளில் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி கன உலோகங்கள் உள்ளதை கண்டறிந்துள்ளனர்.

இதைப் போன்று கலவைகள் இல்லாமல் மாற்று மருந்துகளில் தரக்கட்டுப்பாட்டு, ஆராய்ந்து அதில் உள்ள மூலக்கூறுகள் என அறிவியல் சான்று மருத்துவத்துக்கு ஈடான ஒழுங்குமுறைப்படுத்தும் நிறுவனங்களை அரசு அமைக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்கு 3-ன் (SDG 3) முக்கிய குறிக்கோள்களும் நோய்களால் ஏற்படும் இறப்பினை தடுப்பதையும், அனைத்து வயதினருக்கான உடல் மற்றும் மனநல வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும், தரமான சுகாதார சேவைகளையும் இலக்காக கொண்டுள்ளது .

இதில் ஒரே ஒரு குறியீட்டாக தாய் - சேய் நலனினை கலப்பட மருத்துவம் எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.

3.1 பிரசவக்கால தாய் இறப்பு விகிதம் 100000 பிறப்பில், இறப்பு 70-க்கும் கீழே என்ற இலக்குh உள்ளது .

தற்போது இந்தியாவில் ஏற்படும் தாய் இறப்பு விகிதம் 97 / 100000 பிரசவங்கள் h

தமிழ்நாடு - 40 /100000 பிரசவங்கள்

குறிப்பு: மாற்று மருத்துவம்y - இயற்கை பிரசவம் , வீட்டிலே பிரசவம் அதுவே நம் பரம்பரியம் என்று பல்வேறு வலைதளங்களில் பதிவிடுகின்றனர் .

3.2: பச்சிளம் குழந்தை இறப்பை விகிதம்

இந்தியா - 12/1000

தமிழ்நாடு - 7.7 /1000
Yh
3.3 பெரும் தொற்று நோய்களான எச்ஐவி, காசநோய், மலேரியா, ஹேபடைட்டீஸ் வகையான கல்லீரல் நோய்கள் கண்டறிந்து தடுப்பது, இறப்பு விகிதத்தைக் குறைப்பது.

மாற்று மருத்துவம் கால தாமதமும், முற்றிய நிலையையே ஏற்படுத்தும்.

மேற்குறிப்பிட்டுள்ள அனைத்துமே அறிவியல் சான்று மருத்துவத்தால் தமிழ்நாடு சாதனை நிகழ்த்தியவை.

மாற்று மருத்துவத்தில் உள்ள உண்மைகளை அறிவியல் ஆராய்ச்சி மூலமாகவும் தர நிர்ணயம், இரட்டை குருட்டு ஆய்வுகள் மூலமாகவும், நடுநிலையான தரக்கட்டுப்பாட்டு அரசு நிலையங்கள் மூலமாக சான்றுகள் அடிப்படையில் அறிவியல் சான்று மருத்துவத்துடன் இணைத்தால் சாமானியனுக்கான மருத்துவ சேவை செம்மை பெறும்.

மருத்துவம் மனிதகுலத்தை எவ்வாறு பாதுகாக்கும் என்பதை கற்பனையில் அழகாக வெளிப்படுத்தாமல், பகுத்தறிவினால் அறிந்து கொள்ள வேண்டும்.

பெரியார் கூறியதை நினைவுகூர்வோம்:

“தோழர்களே 1926-ல் நமது சராசரி வயது 25. தற்போது (1973) நமது சராசரி வயது 52. இன்னும் 2000-ஆம் ஆண்டு வரும்போது 75 வருடம் இருப்போம். அந்த அளவு மருந்து வந்துவிட்டது. அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளான்.”

“தன்னுயிர்க்கு ஏன்னாமை தான்றிவான்” - குறள்.

தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அத்துன்பத்தைப்பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா? சாமானியனுக்கு ஒரு மருத்துவம், பெரும் செல்வந்தருக்கு ஒரு மருத்துவம் என்ற பாகுபாடு இல்லாத சமூதாயத்தை தமிழ்நாட்டுச் சிந்தனை வேர்களில் இருந்து நீக்க பல வேடங்களில் - கலப்பட மருத்துவமும், கலப்பட மருத்துவக் கல்வி கொள்கையும் ஒரு புதிய வேடமே.

அறிவியல் சான்று புத்தியல் மருத்துவமே மனிதகுலத்தை தலைத்தோங்க செய்யும்.

- மரு. அருமருந்து

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x