Last Updated : 17 Apr, 2025 12:34 PM

7  

Published : 17 Apr 2025 12:34 PM
Last Updated : 17 Apr 2025 12:34 PM

வாழ்வா, சாவா நிலையில் தமிழ் வழிக் கல்வி: காப்பாற்றுமா தமிழக அரசு?

ஒரே பள்ளியில் ஒரே பணியிடத்தில் இருவேறு ஊதியம். ஒரு பிரிவுக்கு அரசின் உச்சபட்ச ஊதியம், மறுபிரிவுக்கு நிர்வாகத்தின் மிச்ச ஊதியம். சுருக்கமாக கூறுவதென்றால் ஒரே பந்தியில் ஒரு வரிசைக்கு பிரியாணி, எதிர்வரிசைக்கு பழையசோறு என்பது நியாயமா?

தமிழ் வழி பள்ளிகள் தோற்றம் ஏன்? - நாடு விடுதலை அடைந்தபின் அறியாமையிலிருந்து மக்களை விடுதலை செய்ய வேண்டியதன் அவசியத்தை அறிந்த தமிழக அரசு குறிப்பாக கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராசர், அரசிடம் போதிய நிதி இல்லை என்பதை உணர்ந்து அரசு மட்டுமல்லாது, சேவை மனப்பான்மை கொண்டவர்களும் கல்வி சேவையில் ஈடுபட்டு இடம், கட்டிடம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் சொந்த செலவில் செய்து தர கூறி அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் உள்ளிட்ட சலுகைகளை மட்டும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்தார். அத்தகைய காலகட்டத்தில் தான் தமிழ் வழி தனியார் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன.

தமிழகத்தில் இன்று கல்வித் தரம் இந்திய அளவில் உயர்ந்துள்ளது என்றால், அதில் பெரும் பங்கு பெருமை தனியார் தமிழ் வழிப் பள்ளிகளையே சேரும். இவ்வாறு தமிழ் வழிப் பள்ளிகளுக்கு ஆசிரியருக்கான ஊதியம் மட்டும் அரசால் வழங்கப்பட்டு வந்த நிலையில் அவ்வப்போது வட்டார மக்களின் தேவை மற்றும் கோரிக்கைகளுக்கு ஏற்ப தமிழ் வழிப் பள்ளிகள் புதிதாகவும் ஏற்கெனவே தொடங்கி நடத்தப்பட்டு வரும் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டும் தொண்டாற்றி வந்தன.

தமிழில் படிக்க தமிழகத்திலேயே கட்டணம்: இந்நிலையில்தான், 1991-ஆம் ஆண்டு கழக ஆட்சியில் 14-A என்ற சட்டத்தை இயற்றி அதன் மூலம் 1991-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட அல்லது தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு அரசு மானியம் (ஆசிரியர்களுக்கான ஊதியம்) இனி வழங்கப்படாது என முன்தேதியிட்டு அறிவித்தது. இவ்வாறான பள்ளிகள் இனி சுயநிதி பள்ளிகளாக செயல்பட வேண்டும், அதாவது இந்தத் தமிழ் வழி பள்ளிகளை தமிழகத்தில் தமிழர்களிடம் இருந்து கட்டணம் வசூலித்து நடத்திக் கொள்ள வேண்டும். இதற்கான கட்டண நிதியை தமிழக அரசே கட்டண நிர்ணய குழு மூலம் நிர்ணயிக்கும் என்ற அவல நிலை ஏற்பட்டது.

தமிழுக்கு அவமானம்: இந்தியாவில் பிற மாநிலங்களில் தமிழ் வழிப் பள்ளிகள் நடத்துவதில் சிரமம் என்றால், இரு கழக அரசுகளும் ஓடோடி சென்று நிதி உதவி செய்து தர தவறுவதில்லை. ஆனால், சொந்த தமிழ் மண்ணில் தமிழர்களின் பிள்ளைகள் தமிழ் வழியில் பயில வரும்பொழுது அவர்கள் தன் தாய்மொழி தமிழில் கற்க தமிழ்நாட்டிலேயே கட்டணம் செலுத்தி பயில வேண்டும். தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் அரசு செய்யும் உச்சகட்ட அவமானம் அல்லவா இது?

கட்டணம் கட்டும் அளவுக்கு பணம் இருந்தால் அவர்கள் ஆங்கில வழிக் கல்வியிலேயே சேர்ந்துவிட மாட்டார்களா? இந்நிலை மக்களுக்கு புரிய ஆரம்பித்தால் தமிழ் மொழிக்கும் அதன் வளர்ச்சிக்கும் உள்நாட்டிலேயே உள்ள இழிநிலை தெரிந்து கொதிப்படையமாட்டார்களா?

அரசு பள்ளிகள் இருக்க, சுயநிதி தமிழ்ப் பள்ளிகள் ஏன்? - இதே இடத்தில் இரண்டு முக்கிய கேள்விகள் எழும். அரசு பள்ளிகள் ஆங்காங்கே இருக்கும்பொழுது ஏன் தனியார் பள்ளியில் குழந்தைகளை சேர்க்கவேண்டும்?

முதலாவது அருகாமை அரசு பள்ளி இல்லாத பல்வேறு பகுதிகள் நிறைய தமிழகத்தில் இன்றும் உள்ளன. இப்பகுதிகளில் இன்றும் தனியார் தமிழ் வழி பள்ளிகளிலேயே பெற்றோர் சேர்க்கும் நிலை உள்ளது என்பதை முதலில் ஒப்புக்கொள்ளவேண்டும்.

அடுத்து அருகாமை அரசு பள்ளி இருந்தபோதும் அங்கே போக்குவரத்து வசதி அப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு, மாணவர்களின் பாதுகாப்பு இயற்கை தடை கல்வித் தரம் இவற்றை ஒப்பிட்டு பார்த்து தன் குழந்தையை எந்த பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று முழு உரிமையும் பெற்றோர்களுக்கு உண்டு. அதில் யாரும் தலையிட்டு கட்டாயப்படுத்த முடியாது.

சுயநிதி பள்ளிகள் ஏன் உறுதிமொழி பத்திரம் கொடுத்தன? - இரண்டாவது முக்கிய கேள்வி தமிழ் வழி பள்ளி நிர்வாகிகள் சுயநிதியில் பள்ளியை நடத்துகிறோம் என்று உறுதிமொழி பத்திரம் கொடுத்துதானே அங்கீகாரம் பெற்றார்கள் என்பதாகும். இது முற்றிலும் உண்மைக்கு மாறானது.

1989-ஆம் ஆண்டு கால கட்டத்தில் புதிதாக பள்ளிகள் தொடங்க அல்லது பள்ளியை தரம் உயர்த்தப்பட இருக்கும் நிலையில் நிர்வாகிகள் விண்ணப்பிக்கும்போது மூன்றாண்டுகளுக்கு மட்டும் அரசின் நிதி உதவி தரப்படாது என்றுதான் அரசு வலியுறுத்தி உள்ளது. அதனை நம்பித்தான் நிர்வாகிகள் அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்தனர்.

உரிய காலத்தில் அங்கீகாரம் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு பின் முன்தேதியிட்டு நிரந்தரமாக நிதி உதவி கேட்கமாட்டோம் என்று பத்திரம் கொடுத்தால் தான் அங்கீகாரம் என்று நிர்பந்தம் கொடுக்கப்பட்டது.

உதாரணமாக, 1991-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடுநிலை பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தி கோப்புகள் அனுப்பப்பட்டு ஒன்பதாம் வகுப்பு தொடங்கப்பட்டது. இரண்டு (2) ஆண்டுகள் கால தாமதம் செய்யப்பட்டு அம்மாணவர்கள் 1993-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுத வேண்டிய நிலையில், 1993-ஆம் ஆண்டு ஜனவரியில் நிதி உதவி நிரந்தரமாக கோரமாட்டோம்; சுயநிதியில் நடத்திக் கொள்கிறோம் என்று உறுதிமொழி பத்திரம் தந்தால்தான் அங்கீகாரம் வழங்கப்படும், அதன் பின்னரே மாணவர்கள் அரசு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்ற நிபந்தனை விதித்ததால்தான் வேறு வழியின்றி மாணவர்கள் அரசு பொது தேர்வு எழுதியாக வேண்டும் என்பதற்காக உறுதிமொழி பத்திரம் நிர்வாகிகளால் தரப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டது. எனவே, நிர்வாகிகள் தாமே முன்வந்து உறுதிமொழி பத்திரம் கொடுத்தார்கள் என்பது ஏற்கத்தக்கது அல்ல.

தமிழ் வழியில் பயில மாணவர்கள் முன்வராதபோது கட்டணக் கல்வி அவசியமா? - சரி, தற்போது நம்முன்னே சில கேள்விகள் எழுகின்றன. தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையால் தாய்மொழி தமிழுக்கும் தமிழ் கலாச்சாரத்துக்கும் அழிவு ஏற்படும் என்று தமிழக அரசு தீவிரமாக முழுமூச்சாக போராடி வருகின்ற இக்காக்கட்டத்தில் நம் தமிழ்நாட்டில் இப்போது தமிழ் வழிக் கல்வி வாழ்வா, சாவா என்ற நிலையில் உள்ளதை அரசு அதிகாரிகள் வேண்டுமென்றே மறைப்பதாக நாம் கருதுகிறோம்.

காரணம், ஏற்கெனவே ஆங்கில வழி கல்வி மீது பெற்றோர்களுக்கு இருக்கும் ஈர்ப்பினால் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழியிலேயே சேர்க்கின்றனர். அரசு பள்ளிகளில்கூட தமிழ் மொழி வழிப் பள்ளியில் சேரும் மாணவர்கள் 20% அளவுக்கு கூட இல்லை என்பதே உண்மை. மொத்தமாகவே அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது.

இந்நிலையில். இருக்கும் ஒரு சில தமிழ் வழிப் பள்ளிகளை சுயநிதி என்ற பெயரில் அரசு நடத்த சொன்னால், நிர்வாகம், கட்டணம் கட்டுங்கள் தமிழ் வழியில் பாடம் நடத்துகிறோம் என்று கூறினால், யார் தமிழ் வழியில் சேர்க்க முன்வருவார்? தமிழ் வழியில் படிக்க முன்வருவோர் குறைகின்றனர். மறுபக்கத்தில் தமிழ் வழியில் படிக்க கட்டணம் வாங்க சொல்லி அரசு கூறுகிறது. தமிழ் மொழிக் கல்வி நிலை என்னவாகும்? தமிழ்நாட்டில் தாய்மொழி தமிழில் படிக்க கட்டணம் செலுத்த வேண்டியிருந்தால் தமிழ் மொழி வளருமா, தேயுமா?

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அவல நிலை - இந்த இழிநிலையினை சுட்டிக்காட்டியும் இந்தப் பள்ளிகளில் ரூ.5000, ரூ.10,000-கும் பணிபுரியும் சுமார் 5,000 ஆசிரியர்கள் வாழ்க்கையில் வறுமை தாண்டவமாடுவதையும், அந்த ஆசிரியர்கள் வாழ்க்கை நடத்த இயலாமல் ஒவ்வொரு நாளும் வதைபடுவதையும் நாளுக்கு நாள் நம்பிக்கை தேய்ந்து செய்வதறியாது திகைத்து நிற்பதையும் காணமுடிகிறது.

ஒரே பள்ளியில் ஒரே பணியிடத்தில் இருவேறு ஊதியம். ஒரு பிரிவுக்கு அரசின் உச்சபட்ச ஊதியம், மறுபிரிவுக்கு நிர்வாகத்தின் மிச்ச ஊதியம். சுருக்கமாக கூறுவதென்றால் ஒரே பந்தியில் ஒரு வரிசைக்கு பிரியாணி. எதிர்வரிசைக்கு பழையசோறு என்பது நியாயமா? கடந்த அதிமுக ஆட்சியின் கவனத்திற்கு கோரிக்கை மனு அளித்தும் போராட்டங்கள் மூலம் தெரியப்படுத்தியும் எவ்விதப் பலனும் இல்லை. ஏமாற்றத்தையே பரிசாக அளித்தனர்.

தமிழ் கற்றுக் கொடுத்ததால் வளமையை விட்டுக் கொடுத்து வறுமையினை பரிசாக பெற்று அந்த சுயநிதி ஆசிரியர்கள் இன்று வதைபட்டு வருகின்றனர். தமிழை கற்றதும் தமிழை கற்றுக்கொடுக்க முன்வந்ததும் குற்றமா?

அதேபோன்று இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு வழங்கும் எவ்வித விலையில்லா பொருட்களும் மற்றும் உயர் கல்வியில் 7.5% இடஒதுக்கீடு, தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டம் இன்னும் பல வாய்ப்புகளும் முற்றிலும் அறவே மறுக்கப்படுகிறது. இச்செயல் மாணவர்கள் மத்தியில் சமூக நீதி மனநிலையை வளர்க்குமா?

முதல்வர் வாக்குறுதி: இந்நிலையில், விடிவு வருமா என ஏங்கி தவித்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 2011-இல் மீண்டும் அரியணை ஏறினார். அவரிடம் இந்த அவலத்தை முறைப்படி சங்கத்தின் மூலமும் ஆசிரியர்கள் மூலமும் எடுத்துரைத்து முறையிட்டோம்.

அதன் பலனாக பிரச்சனையின் தீவிரத்தை (தமிழ்நாட்டில் 14-A ஆணையின் மூலம் தமிழ் காசுக்கு விற்கப்படுவதை) உணர்ந்து 14-A ஆணையை ரத்து செய்து 1998 வரை தொடங்கப்பட்ட மற்றும் தரம் உயர்த்தப்பட்ட தமிழ் வழிப் பள்ளிகளுக்கு பணியிடம் வழங்கி 14-8 என்ற ஆணையை 28-2-2011-ல் பிறப்பித்தார்.

ஆனால், துரதிருஷ்டவசமாக அவர் இட்ட ஆணையை, அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு நிறைவேற்ற மறந்துவிட்டது. இந்நிலையில்தான் தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக தேர்தல் பிரச்சாரத்துக்காக கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழகத்தில் வலம் வந்தபோது மாவட்டம் தோறும் தமிழ்நாடு தமிழ் வழிப் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் சார்பிலும், சுயநிதி தமிழ் வழிப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பிலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதனை படித்துப் பார்த்துவிட்டு “தந்தையார் சுயநிதி தமிழ் வழிப் பள்ளிகளுக்கு நிதி வழங்கிய 14-B என்ற ஆணையை நான் முதல்வரானாதும் நிச்சயம் நிறைவேற்றுவேன்” என்று வாக்குறுதி வழங்கினார்.

என்னதான் தீர்வு? - ஆனால், 4 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை எவ்வித ஆணையும் பிறப்பிக்கவில்லை. இதற்கு அரசு அதிகாரிகள் காரணமோ என அஞ்சுகிறோம். தேவையில்லாமல் அதிக நிதி செலவாகும் என பயப்படுத்தி கோரிக்கையை நிறைவேற்ற விடாமல் தடுத்து வருகின்றனர். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இதற்காக அரசு ஒரு ரூபாய் கூட கூடுதலாக செலவழிக்க வேண்டிதில்லை.

இது தமிழுக்கு இழைக்கப்பட்ட அநீதி என அரசு உணர்ந்து ஆண்டுதோறும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதால் ஓய்வுபெற்ற ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப முடியாமல் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் ஆண்டுதோறும் அரசுக்கு ஒப்படைக்கப்படுகின்றன. (இந்தப் பணியிடங்களுக்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது). இதில் சுமார் 5,000 பணியிடங்களை சுயநிதி தமிழ் வழி பள்ளிகளுக்கு வழக்கினாலே “தமிழ் விற்பனைக்கு” என்ற அநீதி களையப்படும்.

ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும். கருணாநிதி இட்ட ஆணை கலங்கரை விளக்காக ஒளி வீசும். மாணவர்கள் ஆசிரியர்கள் மனத்துயர் நீங்கி இவர்கள் மட்டுமில்லாது இவர்களது குடும்பங்களும் தமிழக முதல்வருக்கு பக்க துணையாக நிற்பார்கள். ஆணை பிறப்பிக்கப்படுமா? அன்னைத் தமிழுக்கு ஏற்பட்ட களங்கம் துடைக்கப்படுமா?

- எஸ்.ஏ.செபாஸ்டியன், மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு தமிழ் வழிப் பள்ளி நிர்வாகிகள் சங்கம் | தொடர்புக்கு 1956sebastian@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x