Published : 23 Jan 2025 06:54 AM
Last Updated : 23 Jan 2025 06:54 AM
இந்திய விடுதலைப் போரின் முக்கியமான ஆளுமையும், ஆங்கிலேய அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போர் புரிந்த ராணுவப் படையை வழிநடத்தியவருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், 1897 ஜனவரி 23-ல் ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டக்கில் பிறந்தார்.
ஆங்கிலேயே அரசுக்கு எதிரான தேசியவாத செயல்பாடுகளில் பங்கேற்றதற்காக கொல்கத்தா மாநிலக் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார். அங்கு ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் பட்டப் படிப்பை நிறைவுசெய்த பின்னர் இங்கிலாந்து சென்று, ஐசிஎஸ் தேர்ச்சி பெற்றார். ஆனால், ஆங்கிலேய அரசின் கொடுமைகளை எதிர்த்து, பிரிட்டிஷ் அரசின் கீழ் பணியாற்ற மறுத்து, விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார்.
மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற போஸ், வங்கத்தில் சித்தரஞ்சன் தாஸின் கீழ் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் பணியாற்றத் தொடங்கினார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தால் 1921-ல் கைது செய்யப்பட்டார். புரட்சிக் குழுக்களுடன் தொடர்பில் இருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில், பிரிட்டிஷ் அரசு அவரை பர்மாவுக்கு நாடு கடத்தியது.
1927-ல் தாய்நாடு திரும்பிய அவர், வங்க காங்கிரஸ் கிளையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் காங்கிரஸ் பொதுச் செயலாளராகி, நேருவுடன் இணைந்துப் பணியாற்றினார். ஆங்கிலேய அரசுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களுக்கு ஆதரவாக இருந்ததற்காக பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார் போஸ்.
உடல் நலிவுற்றிருந்தபோதும் ஐரோப்பா சென்று அங்குள்ள தலைவர்களை சந்தித்து, இந்திய விடுதலைக்கு ஆதரவு திரட்டினார். மீண்டும் இந்தியா திரும்பி 1938-ல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருகட்டத்தில் காந்தி-போஸ் ஆகியோருக்கிடையே முரண்கள் அதிகரித்தன. 1939-ல் மீண்டும் காங்கிரஸ் தலைவராக போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தியின் ஆதரவைப் பெற்ற வேட்பாளர் தோற்றார். ஆனால், காந்தியின் ஆதரவின்றி பதவியில் தொடர விரும்பாமல், போஸ் பதவியைத் துறந்தார். விடுதலைக்குப் போரிட்ட புரட்சிகர சக்திகளை ஒன்றுதிரட்டும் நோக்கில் ஃபார்வர்டு பிளாக் கட்சியைத் தொடங்கினார்.
1940-ல் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அச்சமடைந்த பிரிட்டிஷ் அரசு, அவரை விடுவித்தது. பின்னர், கொல்கத்தாவிலிருந்து காபூல், மாஸ்கோ வழியாக ஜெர்மனியை அடைந்தார். இரண்டாம் உலகப் போர் நேரத்தில் இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சியை அகற்றுவதற்காக, ஜெர்மனியில் இருந்த இந்தியர்களை உள்ளடக்கிய ராணுவப் படையுடன் இணைந்து செயல்பட்டார். அங்குதான் அவருக்கு `நேதாஜி' (மரியாதைக்குரிய தலைவர்) என்ற அடைமொழி வழங்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் கூட்டாளியாக இருந்த ஜப்பான் தென்கிழக்கு ஆசியா மீது படையெடுத்தபோது, போஸ் ஜப்பானுக்குச் சென்றார். தென்கிழக்கு ஆசியாவில் அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு கலைக்கப்பட்டிருந்த இந்திய தேசிய ராணுவம் புத்துயிர்பெற்று, போஸின் தலைமையில் இயங்கத் தொடங்கியது.
“உங்கள் ரத்தத்தைக் கொடுங்கள், நான் விடுதலை பெற்றுக் கொடுக்கிறேன்” என்பது போன்ற அவரது புகழ்பெற்ற வாசகங்களாலும், களச் செயல்பாடுகளாலும் ஈர்க்கப்பட்டு பர்மா, மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்த இந்திய இளைஞர்கள் பலர், இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடத் தொடங்கினர்.
ஜப்பான் படைகளுடன் கோஹிமா, இம்பால் வழியாக `இந்திய தேசிய ராணுவம்' (ஐஎன்ஏ) இந்தியாவுக்குள் நுழைந்தது. ஜப்பான் அரசின் முழுமையான ஆதரவு கிடைக்காததால், பிரிட்டிஷ் இந்திய ராணுவத்திடம் தோல்வியுற்று ஐஎன்ஏ பின்வாங்கியது. இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனிடம் ஜப்பான் சரணடைந்ததை அடுத்து, இந்திய தேசிய ராணுவத்தில் எஞ்சியவர்களும் சரணடைய நேர்ந்தது.
1945 ஆகஸ்ட் 18 ஜப்பான் ஆக்கிரமிப்பிலிருந்த தைவானில் ஒரு விமான விபத்தில் போஸ் மரணமடைந்ததாக ஜப்பான் அரசு அறிவித்தது. போஸின் ஆதரவாளர்கள், அவரது மரணத்துக்கு சொல்லப்பட்ட காரணத்தை ஏற்க மறுத்தனர். அவரது மரணத்தில் இன்றுவரை மர்மம் நிலவுகிறது.
- மகி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT