Published : 28 Aug 2014 11:04 AM
Last Updated : 28 Aug 2014 11:04 AM
சுதாவுக்கு கோபம் கோபமாய் வந்தது. வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டு இருக்கும் நான், மாங்கு மாங்கு என்று எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து கொண்டிருக்கிறேன். என் மாமியார் பக்கத்து வீட்டில் உட்கார்ந்து வெட்டிக் கதை பேசிக் கொண்டிருக்கிறாளே?
ச்சே.. ச்சே.. என்ன பொம்பளை இவங்க?... மருமகள் மீது கொஞ்சம் கூடவா ஈவு இரக்கம் இல்லாமல் போய்விடும்?
சுதா, கணவன் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தாள். அவன் வந்ததும் சொன்னாள்...
“என்னங்க... நான் உங்க வீட்டு முதல் வாரிசை சுமக்கிறேன். ஆனா, அதை உங்க அம்மா உணர்ந்த மாதிரி தெரியலையே? என்னை ஒரு வேலைக்காரியா நினைச்சு வேலை வாங்கிட்டு இருக்காங்க. என்னால முடியலைங்க. நீங்களாவது உங்க அம்மாகிட்ட என் நிலமையை பத்தி பேசக்கூடாதா?”
கதிர் அவள் சொல்வதை கேட்டு கொதித்து போனான். “நிச்சயம் அம்மாவிடம் இதுபற்றி கேட்பேன்” என்று ஆறுதல் கூறினான்.
அந்த நேரத்தில், பக்கத்து வீட்டு சரசுவிடம் கதிரின் அம்மா “கடவுள் புண்ணியத்துல...என் மருமகள் சுதாவுக்கு சுகப்பிரசவம் நடந்தா, திருப்பதிக்கு நான் நடைப்பயணமா வர்றதா வேண்டிக்கிட்டு இருக்கேன். அவளுக்கு சுகபிரசவம் நடக்கணும்னு நான் எந்த வேலையையும் செய்யாம அவளையே எல்லா வேலையையும் செய்யச் சொல்றேன். நல்லா வேலை செஞ்சாதானே சுகப்பிரசவம் நடக்கும்? நல்லபடியா அவளுக்கு சுகபிரசவம் ஆயிட்டா அதுக்கு அப்புறம் என் மருமகளை ஒரு வேலையும் செய்யவிடாம, என் உள்ளங்கையில் வைச்சு தாங்குவேன். இப்ப அவளை நான் இப்படி வேலை வாங்கறேன்னு அவளுக்கு என் மேல கண்டிப்பா கோபம் இருக்கும். இருந்துட்டு போகட்டும். நல்லது நடந்தா சரி!” என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.
அதை ஒட்டுக் கேட்டு கொண்டிருந்த சுதாவின் கண்கள் குளமாயின!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT