Published : 16 Oct 2024 09:03 PM
Last Updated : 16 Oct 2024 09:03 PM
கடந்த வாரம் பெண்கள் டீமில் இருந்தபோது ஒரு முகம் காட்டிய முத்துகுமரன் இந்த வாரம் முற்றிலும் வித்தியாசமான ஆளாக மாறிப் போயிருந்ததை பார்த்து ஒட்டுமொத்த பிக்பாஸ் வீடும் சற்றே ஜெர்க் ஆனது என்றுதான் சொல்லவேண்டும்.
ஆரம்ப நாட்களில் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டிருந்த பெண்கள் அணி, இப்போதுதான் மெல்ல மெல்ல ஒரு புரிதலுக்கே வந்திருக்கிறார்கள். ஆளுக்கொரு பக்கமாக இஷ்டத்துக்கு முடிவெடுத்துக் கொண்டிருந்த அவர்களிடம் இந்த வாரம் தெரியும் பக்குவம் ஆச்சர்யம் அளிக்கிறது. முன்னரே பேசிவைத்தபடி ஆண்கள் அணியில் இருந்து கொண்டே பெண்கள் அணிக்கு சாதகமாக ஆடி தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து வருகிறார் தர்ஷா.
கடந்த வாரம் நிதானமாக முடிவுகளை எடுத்த ஆண்கள் அணியிடம் இந்த வாரம் பயங்கர சொதப்பல்கள் தெரிகின்றன. அவர்கள் சொதப்பும்போது தர்ஷா கொடுக்கும் டோஸ்கள் ரசிக்கும்படியே இருக்கின்றன. போன வாரம் முழுக்க எதற்கெடுத்தாலும் சிணுங்கிக் கொண்டே இருந்த அவர் இந்த வாரம் ஈர்க்கிறார்.
இதுவரை இந்த சீசனுக்கு அவ்வப்போது கன்டென்ட் கொடுக்கும் நபராக இருந்து வந்த ரவீந்தர் போனதும், அந்த இடத்தை பிடிக்க தற்போது ரஞ்சித்தும், முத்துக்குமரனும் போட்டி போடுகிறார்களோ என்று தோன்றுகிறது. குறிப்பாக நாமினேஷன் தொடங்கி, பனிஷ்மென்ட் கொடுப்பது வரை பல இடங்களில் புதிய முகத்தை காட்டினார் முத்து. இதனை சரியாக கணித்த அன்ஷிதா அதை நேரடியாகவே முத்துக்குமரனிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ’நான் நல்லவன்னு எங்கேயுமே சொல்லலயே’ என்று சினிமா டயலாக் போல விட்டு பின்பு அமைதியானார் முத்து.
ஆண்கள் அணியில் சொதப்பல் ஷாப்பிங் டாஸ்க்கிலும் தொடர்ந்தது. 8,500 ரூபாய் மதிப்புள்ள பாயிண்டுகளை வைத்து 12,000 ரூபாய்க்கு ஷாப்பிங் செய்ததை பிக்பாஸ் சொன்னதும் பெண்கள் அணி துள்ளிக் குதித்தது. ஆனால் அவர்களோ 7,500 ரூபாய் பாயிண்டுகளை வைத்து வெறும் 2000 ரூபாய்க்கு ஷாப்பிங் செய்தார்கள் என்பது வேறு விஷயம்.
ஷாப்பிங்கில் சொதப்பிய ஆண்கள் அணியிடம் ஹாலிலேயே வைத்து ‘இப்ப உங்களால நானும் சாப்பிடாம இருக்கணுமா? என்று தர்ஷா கேட்டதை பெண்கள் கைகொட்டி ஆரவாரம் செய்தனர். பின்னர் அங்கிருந்து எழுந்து சென்ற தர்ஷா அப்படியே போகாமல் ஒரு நமட்டு சிரிப்பு சிரித்துவிட்டு சென்றார். இதனை கண்ணாடியில் தெரியும் பிம்பத்தில் பார்த்துவிட்ட ஜெஃப்ரி, அதை வைத்து ’நீங்க உண்மையா கோபப்பட்டிருந்தீங்கன்னா சிரிச்சிருக்க மாட்டீங்க, பெண்கள் டீமை திருப்திப்படுத்தத்தான் அப்டி செஞ்சீங்க’ என்று நியாயமான கோபத்தை வெளிப்படுத்தினார். இந்த ஒரு வாரத்தில் ஜெஃப்ரியின் நடவடிக்கைகளில் நல்ல மாற்றம். பேச வேண்டிய இடங்களில் சரியான வாதங்களை முன்வைக்கிறார். இதே பாதையில் சென்றால் வலுவான போட்டியாளராக வரலாம்.
சமையலுக்கு டீம் பிரிக்கும்போது முத்துக்குமரனும் ரஞ்சித்தும் செய்தது நியாயமற்றதாக தோன்றுகிறது. பழிவாங்கும் நோக்கில் பெண்கள் அணியில் இருந்து வெறும் இருவரை மட்டுமே போட்டது மட்டுமின்றி, இன்னொரு ஆள் இல்லையென்றால் நாள் முழுக்க கிச்சனிலேயே இருக்க வேண்டும் என்ற பெண்களின் கோரிக்கையையும் நிராகரித்தனர். பின்னர் பெண்கள் அணியின் வற்புறுத்தலால் அந்த கோரிக்கையை வேறுவழியின்றி புதிய தலைவரான சத்யா ஏற்றுக் கொண்டார்.
நல்ல பேச்சாளர் என்பதற்காக தன்னுடன் இருப்பவர்களையெல்லாம் கூட பேசிப் பேசியே தான் செய்வதை நியாயமாக்க முயல்கிறார் முத்து. குறிப்பாக பெண்களிடம் அவர் காட்டிய தேவையற்ற கறார்த்தனம் முழுக்க முழுக்க பழிவாங்கும் நடவடிக்கையே என்று தோன்றியது. கட்டுமஸ்தான உடலுடன் முரட்டு ஆளாக தோற்றமளிக்கும் சத்யாவோ தலைவரான பின்பு சரியான முடிவுகளை எடுக்கமுடியாமல் எதற்கெடுத்தாலும் ரஞ்சித், முத்துக்குமரனிடம் சென்று நிற்பது ரசிக்கத்தக்கதாக இல்லை.
இப்படியாக விஜய் சேதுபதி வரும் எபிசோடுகள் தவிர்த்து பெரியளவில் உப்பு சப்பில்லாமல் சென்று கொண்டிருந்த சீசன் ஒருவழியாக கடந்த இரு தினங்களாக மட்டுமே ஓரளவு சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. அதற்கு காரணம் கடந்த வாரம் தங்களுக்கு இடையிலான பஞ்சாயத்துகளை தீர்க்கவே போராடிக் கொண்டிருந்த பெண்கள் அணி ஒருவழியாக ஆண்கள் vs பெண்கள் என்ற இந்த சீசனின் மைய நீரோட்டத்துக்குள் இப்போதுதான் வந்திருக்கிறது. இந்தப் போக்கு தொடருமா? இல்லை மீண்டும் மந்தநிலை திரும்புமா என்பதை போகப் போக தெரிந்து கொள்ளலாம்.
முந்தைய அத்தியாயம்: ஜாக்குலினின் ‘புதிய’ முகமும், எதிர்பார்க்காத ட்விஸ்ட்டும் | Bigg Boss 8 Analysis
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT