Published : 27 Aug 2014 12:00 AM
Last Updated : 27 Aug 2014 12:00 AM
இரவு மணி பத்து. கடைசி பஸ்ஸை பிடிக்க விரைந்த மாணிக்கத்தின் கண்ணில் அந்த ஏடிஎம்மில் அமர்ந்திருந்த வாட்ச்மேன் தட்டுப்பட்டார். ‘இது நம்ம தங்கராசு மாதிரியில்ல இருக்குது?’ மனதில் கேட்டுக் கொண்டவர் ஏடிஎம்மை நெருங்கினார். அது அவர் நண்பர் தங்கராசுவேதான்.
“எலே தங்கராசு என்னாச்சு? வயசான காலத்துல எதுக்கு உனக்கு இந்த வேலை? இப்பத்தான் பையனுக்கு கல்யாணம் பண்ணிவச்சே, அதுக்குள்ள மருமக கொடுமைப்படுத்த ஆரம்பிச்சுட்டாளா?” கேட்ட நண்பனை கையமர்த்தினார் தங்கராசு.
“அந்த புள்ளையைப் பத்தி அப்படி எல்லாம் பேசாதே. என் மருமக தங்கம்.”
“அப்ப எதுக்கு உனக்கு இந்த வாட்ச்மேன் உத்யோகம்? கல்யாணத்துக்கு முந்தி உன்னை உக்கார வச்சு சோறு போட்ட பையன் இப்ப வேலைக்கு அனுப்பியிருக்கான்னா அப்படித்தானே நெனைக்கத் தோணுது?”
“அவங்க யாரும் என்னை வேலைக்கு அனுப்பலை. நானாத்தான் வந்தேன்.”
“ஏண்டா வயசான காலத்துல பணம் சம்பாதிக்கற ஆசை வந்திடுச்சா?”
“அதெல்லாம் இல்லடா. உனக்குத் தெரியும், எங்க வீட்ல மொத்தமே ஒரு ரூமும் ஒரு கிச்சனும்தான்னு. பையனுக்கு இப்பத்தான் புதுசா கல்யாணம் ஆகியிருக்கு. முன்னாடின்னா நானும் என் பையனும் மட்டும்தான் வீட்டுல இருப்போம். இப்ப புது மருமக வந்திட்டா. ஒரு ரூம் எப்படி பத்தும்? என்னை திண்ணையில படுக்க வைக்க என் பையன் மனசு இடங்கொடுக்க மாட்டேங்குது. அவனோட சந்தோஷத்த கெடுக்க என் மனசு இடங்கொடுக்க மாட்டேங்குது, அதான் அவன் சொல்லச் சொல்ல கேட்காம இந்த நைட் வாட்ச்மேன் வேலைக்கு வந்துட்டேன். சம்பளமும் கிடைக்குது, புள்ளைங்களோட சந்தோசமான வாழ்க்கைக்கு இடைஞ்சல் பண்ணாம இருக்கறோம்கற மன நிறைவும் கிடைக்குது. அதுக்குத்தான் கொஞ்ச காலத்துக்கு இந்த வாட்ச்மேன் வேஷம் புரியுதா?” என்றார் தங்கராசு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT