Published : 14 Sep 2024 04:37 AM
Last Updated : 14 Sep 2024 04:37 AM
மத்திய, மாநில அரசுகளால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச் சி மையங்கள், அரசு மற்றும் தனியாரிடம் இருந்து பெறும் ஆராய்ச்சி நிதிக்கு ஜிஎஸ்டிவரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி மத்திய நிதியமைச்சகம் அண்மையில் இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவை அறிவித்து உள்ளது.
இது இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கான மிகச் சிறந்த பரிசு ஆகும். இதன்மூலம் நாடு முழுவதும் பல்வேறு துறைகள் சார்ந்த ஆராய்ச்சிகள் கணிசமாக அதிகரிக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் கடந்த 11-ம் தேதிமுதல் 13-ம் தேதி வரை டெல்லிஅருகேயுள்ள கிரேட்டர் நொய்டாவில் ‘செமிகான் இந்தியா 2024’ மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த மாநாட்டின்போது, உலகின் செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற பிரதமர் நரேந்திர மோடி உறுதிபூண்டார். குறிப்பாக செமிகண்டக்டர் துறையின் வளர்ச்சி மற்றும்ஆராய்ச்சிக்காக அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் சார்பில் ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதியுதவியை பிரதமர் மோடி மாநாட்டில் அறிவித்தார். மின்னணு துறையில் 500 பில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டவும், இந்த துறையில் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்து உள்ளார். இதற்கான முன்னோடி திட்டங்களை 'செமிகான் இந்தியா 2024’ மாநாட்டில் அவர் வெளியிட்டார்.
இதேபோல பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் கடந்த 12-ம் தேதி தலைநகர் டெல்லியில் ‘குளோபல் பயோ இண்டியா 2024’ மாநாடு தொடங்கியது. இது இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய உயிரி மாநாடு ஆகும். இந்த மாநாட்டின்போது, வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் உயிரி பொருளாதாரம் 300 பில்லியன் டாலரை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. உயிரி தொழில்நுட்பம் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் சுற்றுச்சூழலைபாதுகாக்கவும் வேலைவாய்ப்புகளை பெருக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான முன்னோடி திட்டங்கள், ‘குளோபல் பயோ இண்டியா 2024’ மாநாட்டில் அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சிமையங்களில் புதிய ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க கடந்த 2023-ம்ஆண்டில் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ஏஎன்ஆர்எப்) தொடங்கப்பட்டது.
இந்த ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதல் ஆட்சி மன்ற குழுக்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் கடந்த 10-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன்படி இந்திய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், ஆய்வகங்கள் சர்வதேச தரத்துக்கு நிகராக ஆய்வுகளை மேற்கொள்ள தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட உள்ளன. ஆராய்ச்சி துறையில் உயர்நிலை, நடுத்தர, சிறிய ஆய்வு மையங்கள் ஒன்றிணைந்து செயல்பட புதிய திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. இந்தியாவின் ஆராய்ச்சி திட்டங்களை ஒருங்கிணைக்க சர்வதேச தரத்தில் தலைமை ஆய்வு மையத்தை அமைக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் மின்சார வாகனங்கள், சூரிய மின்கலன்கள், சுகாதாரம், மருத்துவ தொழில்நுட்பம், வேளாண்மை உள்ளிட்ட துறைகள் சார்ந்த ஆராய்ச்சி திட்டங்களை அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை தொடங்க உள்ளது. சர்வதேச அளவில் புதியஆராய்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புகளில் இந்தியா முன்னோடியாக விளங்குகிறது. ஆராய்ச்சி துறை சார்ந்த பாதையில் பிரதமர் நரேந்திர மோடி முன்வரிசையில் நின்று நாட்டை திறம்பட வழிநடத்தி செல்கிறார்.
- எஸ். வைத்யாசுப்ரமணியம்
கட்டுரையாளர் சாஸ்த்ரா பல்கலைக்கழக துணை வேந்தர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT