Published : 07 Aug 2014 09:12 AM
Last Updated : 07 Aug 2014 09:12 AM
முதல் உலகப் போரின்போது பல உளவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் பெயரை மட்டும் தனித்துப் பதிவுசெய்திருக்கிறது வரலாறு. அவர்தான் மாத்தா ஹரி. நெதர்லாந்தில் 1876-ல் இதே நாளில் பிறந்தவர். பெற்றோர் வைத்த பெயர் மார்கரெத்தா கீட்ரூடா செல். தொழிலதிபரான அவரது தந்தை ஆடம் செல், மிகச் சிறந்த பள்ளிகளில் தன் மகளைப் படிக்க வைத்தார். எனினும், அவருடைய தொழில் திவாலாகிப் போனதால் குடும்பம் நிலைகுலைந்தது. பின்னர், ஆடம் தன் மனைவியை விவாகரத்துசெய்தார். மார்கரெத்தாவின் வாழ்வு சிதறுண்டது.
டச்சு ராணுவ கேப்டன் ருடால்ஃபைத் திருமணம் செய்து கொண்டார் மார்கரெத்தா. இந்தோனேஷியாவில் உள்ள ஜாவா தீவுக்குக் குடிபெயர்ந்தார்கள் அவர்கள். பிறகு, கசப்பான குடும்ப வாழ்வு காரணமாகக் கணவரைப் பிரிந்தார் மார்கரெத்தா. நடனம் கற்றுக்கொண்டார். தன் பெயரை மாத்தா ஹரி என்று மாற்றிக் கொண்டார். பாரிஸுக்குச் சென்ற அவர் சர்க்கஸில் குதிரை வீராங்கனையாகத் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்தார். பின்னர், முழுநேர நடனப் பெண்ணாக மாறினார். அவருடைய கவர்ச்சி, பல தலைகளை வீழ்த்தியது. முதல் உலகப் போரின்போது ஜெர்மனியை உளவுபார்க்க பிரான்ஸ் அவரைப் பயன்படுத்திக்கொண்டது. எனினும், போரின் இறுதிக் கட்டத்தில் அவர் ஜெர்மனியின் உளவாளியோ என்று சந்தேகித்த பிரான்ஸ், அவரைக் கைதுசெய்து, 1917 அக்டோபர் 15-ல் சுட்டுக்கொன்றது. ஒரு அழகிய ‘இரட்டை' உளவாளியின் சகாப்தம் இவ்வாறாக முடிவுற்றது.
- சரித்திரன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT