Published : 05 Aug 2014 12:00 AM
Last Updated : 05 Aug 2014 12:00 AM
ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகை மர்லின் மன்றோ, 1926 ஜூன் 1-ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பிறந்தார். அவரது தாய் மனநிலை சரியில்லாதவராக இருந்ததால், ஆதரவற்றோர் இல்லங்களில் வளர்ந்தார் மன்றோ. தனது 16-வது வயதில், விமானக் கட்டுமானத் தொழிற்சாலையில் தன்னுடன் பணிபுரிந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். எனினும், சில ஆண்டுகளுக்குப் பின் அவரை விவாகரத்து செய்தார். 1944-க்குப் பின்னர் மாடலிங் துறையில் இறங்கினார். 1946-ல் ‘ட்வெண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ்’ திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
1950-களில் அவரது திரைவாழ்க்கையின் பொற்காலம். ‘தி ஆஸ் பால்ட் ஜங்கிள்’, ‘ஆல் அபவுட் ஈவ்’ போன்ற திரைப்படங்கள் அவருக்குப் புகழ் சேர்த்தன. 1954-ல் பேஸ்பால் வீரர் ஜோ டிமாக்கியோவைத் திருமணம் செய்துகொண்டார். எனினும், எட்டே மாதங்களில் அவரைப் பிரிந்தார். 1956-ல் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் ஆர்தர் மில்லரைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர், மில்லரையும் விவாகரத்து செய்தார். பின்னாட்களில் அமெரிக்க அதிபராக இருந்த ஜான் கென்னடி மற்றும் அவரது சகோதரர் ராபர்ட் கென்னடியுடன் அவருக்குத் தொடர்பு இருந்ததாக வதந்தி பரவியது.
இதன் உச்சகட்டமாக, 1962 ஆகஸ்ட் 5-ல் மர்மமான முறை யில் உயிரிழந்தார் மன்றோ. அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும் கொலை செய்யப்பட்டார் என்றும் பல்வேறு விதமான வதந்திகள் இன்று வரை உலவுகின்றன. எனினும், தனது அழகாலும் சிறந்த நடிப் பாலும் ரசிகர்களின் மனதில் இன்றும் வாழ்கிறார் மன்றோ. -சரித்திரன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT