Published : 07 Jul 2024 06:52 AM
Last Updated : 07 Jul 2024 06:52 AM

எழுத்தாளர் சிவசங்கரிக்கு இரு விருதுகள்

எழுத்தாளர் சிவசங்கரி தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். 36 நாவல்கள், 48 குறுநாவல்கள், 150 சிறுகதைகள், பயணக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், தொகுப்பு நூல்கள் என அவர் தமிழுக்குச் செய்த பங்களிப்புகளின் பட்டியல் நீண்டது. சமூகக் கருத்துகள் நிறைந்த கதைகளைப் பெண்கள் பக்கம் நின்று எழுதியவர். சரஸ்வதி சம்மான் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றவர். இலங்கையில் 44 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் அகில இலங்கைக் கம்பன் கழகம் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் அறிஞர்களை, எழுத்தாளர்களை, கலைஞர்களைக் கெளரவித்துவருகிறது. அவர்களுக்குக் கம்பன் புகழ் விருதும் இந்திய மதிப்பில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் கொடுத்து சிறப்பித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது தமிழ்நாட்டு எழுத்தாளர் சிவசங்கரிக்கு வழங்கப்பட்டுள்ளது. சிவசங்கரிக்குத் தலைப்பாகை சூட்டியும் அழகு பார்த்துள்ளது இலங்கைக் கம்பன் கழகம்.

கழகத்தினுடைய தலைவர் நீதிபதி விஸ்வநாதன், பாரதி கிருஷ்ணகுமார், பர்வீன் சுல்தானா, கம்பவாரி இலங்கை ஜெயராஜ் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்திய அளவில் வழங்கப்படும் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான விஸ்வம்பரா சி.நாராயண ரெட்டி விருதும் சிவசங்கரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 29ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்கவுள்ள விருது விழாவில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கையால் விருதுபெறவுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x