Published : 11 Aug 2014 09:46 AM
Last Updated : 11 Aug 2014 09:46 AM
மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் தாட்கோ போன்ற துறைகள் மூலமும் சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. அவற்றை பெறும் வழிமுறை குறித்து மாற்றத்திறனாளிகள் துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் அரசின் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் கடனுதவி பெற வாய்ப்புள்ளதா?
ஆம். பாரத பிரதமரின் வேலை உருவாக்கும் திட்டத்தின் கீழ் மாற்றத்திறனாளிகள் சுய தொழில் தொடங்க வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது. பின், திருப்பி செலுத்த வேண்டிய தொகையில் 5 சதவீதம் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும். இதற்கு வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடனுதவி அனுமதிக் கடிதம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பரிந்துரைக் கடிதம் ஆகியவற்றை இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
அரசின் வேறு துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்படுகிறதா?
ஆம். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மாற்றுத்திறனாளிகள், சுய உதவிக்குழு தொடங்கினால் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. அதன்படி ரூ. 50 ஆயிரம்முதல் ரூ. 1.50 லட்சம்வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. அதுபோல் தனிநபர் தொழில் தொடங்க தேசிய வங்கிகளில் கடன் பெற்றால், மொத்த கடன் தொகையில் 30 சதவீதம்வரை மானியம் வழங்கப்படுகிறது. அதில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாற்றுத்திறனாளிகளுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேறு என்ன சலுகைகள் வழங்கப்படுகிறது?
இந்திரா குடியிருப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் வீடு கட்டிக் கொள்ள ரூ. 60 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும், வங்கிக் கடனாக ரூ. 10 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பெயரில் காலி வீட்டுமனை இருக்க வேண்டும். அதுபோல் மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை அமைத்துக் கொள்ள ரூ. 1,500 மானியம் வழங்கப்படுகிறது.
தாட்கோ திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறதா?
ஆம். 18-55 வயதுடைய தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 75 ஆயிரம்வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. அதில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 25 ஆயிரம்வரை மானியம் ஆகும். இக்கடனுதவி கேட்டு தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதுபோல் சிறு தொழில் தொடங்க மாவட்ட ஆட்சியர் மூலம் ரூ. 10 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
(மீண்டும் நாளை சந்திப்போம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT