Published : 30 Apr 2024 04:48 PM
Last Updated : 30 Apr 2024 04:48 PM

செங்கோட்டை முழக்கங்கள் 74 - ‘உலகத்துக்காக உழைப்போம்!’ | 2020

இந்திய அரசு 2020 ஆம் ஆண்டில் தனது சிறகுகளை அகல விரித்து உலக வானில் உயரப் பறந்தது. உலக நாடுகளைக் கலங்கடித்த கரோனா பெருந்தொற்று பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் கொத்துகொத்தாய்க் காவு கொண்ட போது, செய்வதறியாது உலகமே அஞ்சி நடுங்கிய போது, நேர்மறைச் சிந்தனையுடன் நன்கு திட்டமிட்டு மனித குலத்துக்கு எதிரான சவாலை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொண்டது இந்திய அரசு. ஆற்றல் மிக்க தலைமை வாய்க்கப் பெற்றால் எந்த நெருக்கடியில் இருந்தும் வெளிவந்து பழைய உற்சாகத்துடன் மீண்டும் செயல்படலாம் என்பதை இந்திய அரசு நிரூபித்துக் காட்டியது. உலகம் விக்கித்து நின்றபோது, சற்றும் மனம் தளராமல் தொடர்ந்து தனது கடமைகளைத் தொய்வின்றி செய்த ஒரே அரசாக இந்திய அரசு தனித்து நின்றது. சாதித்துக் காட்டியவர் – பிரதமர் நரேந்திர மோடி.

மிகவும் இக்கட்டான துயரமான பதட்டம் நிறைந்த ஒரு தருணத்தில், 2020 ஆகஸ்ட் 15, 74-வது சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்துப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் மொழியாக்கம் இதோ: அன்பார்ந்த நாட்டு மக்களே, இந்தப் புனிதமான சுதந்திர தினத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் பாராட்டுகள்; நல்வாழ்த்துகள். இன்று, நாம் சுதந்திர இந்தியாவில் வசிக்கிறோம். இதற்கு, அன்னை இந்தியாவின் லட்சக்கணக்கான புதல்வர்கள், புதல்விகளின் தியாகமே வழி கோலியது. விடுதலைப் போராட்ட வீரர்கள், தியாகிகள், தீரர்களுக்கு, அன்னை இந்தியா விடுதலை பெற அர்ப்பணிப்பு உணர்வுடன் போராடிய அவர்களது எழுச்சிக்கு மரியாதை செலுத்துகிறோம்.

நமது ஆயுதப் படைகளின் தீரமிக்க வீரர்கள், துணை ராணுவப் படையினர், காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர் என ஒவ்வொருவரும் நமது அன்னை இந்தியாவை, சாதாரண மனிதர்களை, பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது தியாகங்களை, தவத்தை முழுமனதுடன் நினைவு கூரும் நாளாகும் இது. மற்றொரு பெயரையும் நினைவு கூர்தல் வேண்டும் – அரபிந்தோ கோஷ். இன்று அவரின் பிறந்த நாள். அவர் புரட்சியாளராக இருந்து ஆன்மீகவாதியாக மாறினார். அவரது ஆசிகளைப் பெறப் பிரார்த்திப்போம், அப்போதுதான், அவரது, நமது நோக்கங்களை நிறைவேற்ற முடியும்.

நாம் ஓர் அசாதாரண சூழலைக் கடந்து கொண்டிருக்கிறோம். குழைந்தைகள் - இந்தியாவின் பிரகாசமான எதிர்காலம் – இன்று என் முன் இல்லை.. ஏன்? ஏனென்றால், கரோனா ஒவ்வொருவரையும் தடுத்து நிறுத்தி விட்டது. மருத்துவர், செவிலியர், சுகாதாரப்பணியாளர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்ளிட்ட லட்சக்கணக்கான கரோனா வீரர்கள் அனைவருக்கும் வணக்கம் செலுத்துகிறேன்.

சேவையே சிறந்த மதம் என்ற தாரக மந்திரத்துடன் பணியாற்றி வரும் கரோனா முன்களப் பணியாளர்களை நான் வணங்குகிறேன். முழுமையான அர்ப்பணிப்புடன் அவர்கள் அன்னை இந்தியாவின் குழந்தைகளுக்கு சேவை புரிகின்றனர். இந்தக் கரோனா காலத்தில், நமது ஏராளமான சகோதர, சகோதரிகள் இந்தக் கொடிய தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஏராளமானோர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 130 கோடி மக்களின் மனஉறுதி மற்றும் திடசிந்தனை நம்மைக் கரோனாவுக்கு எதிராக வெற்றி பெறச் செய்யும் என நான் திடமாக நம்புகிறேன். நாம் நிச்சயம் வெல்வோம்.

அண்மையில் நாம் பல்வேறு சிக்கல்களைக் கடந்து வந்திருக்கிறோம். இந்தியாவின் கிழக்கு, வடகிழக்கில் வெள்ளம், மேற்கு இந்தியாவில் பல இடங்களில் நிலச்சரிவு என மக்கள் பல பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது. பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். அவர்களது குடும்பத்தினருக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நெருக்கடியான காலத்தில், மாநில அரசுகளுடன் நாடு சேர்ந்து நிற்கிறது. தேவையானவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதில் மத்திய, மாநில அரசுகள் உறுதியுடன் செயல்படும்.

அன்பார்ந்த நாட்டு மக்களே, சுதந்திரதின விடுதலையைக் கொண்டாடும் விழாவாகும். நமது விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவு கூர்வதன் மூலம், புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் நாம் பெறும் தருணம் இது. புதிய உற்சாகம் மற்றும் உத்வேகத்தை வெளிப்படுத்துகிறது. இது போன்ற நேரத்தில், நாம் மேலும் உறுதியுடன் இருக்க வேண்டிய ,ஒரு புனிதமான நாள். ஏனெனில், அடுத்த ஆண்டு, இதே நாளில் நாம் மீண்டும் கூடும்போது, சுதந்திரமடைந்து 75-வது ஆண்டில் அடியெடுத்து வைப்போம். எனவே, இது முக்கியமான சந்தர்ப்பம். 130 கோடி இந்தியர்களாகிய நாம் இன்று அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான முக்கியமான உறுதிமொழியை எடுத்துக் கொள்ளவேண்டும். நாம் நமது சுதந்திரத்தின் 75-வதுஆண்டுகளை நிறைவு செய்யும் போது, நம்மால் இந்த உறுதிமொழியை நிறைவேற்ற முடியும்.

அன்பார்ந்த நாட்டு மக்களே, நமது முன்னோர்கள் அதீதமான உறுதிப்பாடு, மிகுந்த ஒருமைப்பாடு, உண்மையான ஈடுபாடு, ஆசாபாசங்களைத் துறந்த, தியாக மனப்பான்மையுடன் இந்த விடுதலைக்காகப் போராடினார்கள். தாய்நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை ஈந்ததை நாம் ஒருபோதும் மறத்தல் கூடாது. இருள் சூழ்ந்த அந்த நீண்ட அடிமை நாட்களை நாம் மறந்து விடலாகாது. ஒரு கணத்தைக் கூட வீணாக்காமல், அவர்கள் வேட்கையுடன் போராடினர். போராட்டத்தின் மூலம் நாட்டின் அடிமை விலங்கை முறிக்கப் பாடுபட்டிருக்கா விட்டால், தியாகம் செய்திராவிட்டால், இன்று இந்த நாளை நம்மால் கொண்டாடியிருக்க முடியாது. பலர் தங்கள் இளமைக் காலத்தை சிறையில் தியாகம் செய்தனர். பலர் தங்களது வாழ்க்கைக் கனவுகளை இழந்து தூக்குமேடையை முத்தமிட்டனர். தங்களையே நாட்டுக்குப் படையலாக அர்ப்பணித்த தியாகிகளை வணங்குகிறேன். உண்மையில் வியப்பாய் இருக்கிறது. ஒருபுறம், மாபெரும் மக்கள் இயக்கம்; மறுபுறம் – ஓங்கி ஒலித்த ஆயுதப் புரட்சியின் குரல்.

மகாத்மா காந்தி தலைமையின் கீழ், மக்கள் இயக்கங்கள் மூலம் தேசிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டது. இது விடுதலைப் போராட்டத்தில் புதிய உத்வேகத்தை அளித்தது. அதனால்தான் இன்று நாம் மிகுந்த உற்சாகத்துடன் நமது சுதந்திர தினத்தைக் கொண்டாடி மகிழ்கிறோம். இந்த விடுதலைப் போராட்டத்தின் போது, கிளர்ச்சித் தீயை அணைக்க, தாய்நாட்டின் எழுச்சியை அடக்க, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம், மரபுகள் மற்றும் தொன்மையை அழிக்க, பல முயற்சிகள் நடந்தன. பல நூற்றாண்டுகளைக் கடந்து இது நீடித்தது. சாம, தான, பேத, தண்டம் என எல்லா வழிமுறைகளும் உச்சத்தில் இருந்த காலம் அது. சூரிய , சந்திரர் இருக்கும் வரை இந்த உலகத்தை ஆளலாம் என்ற நம்பிக்கையுடன் பலர் இங்கு வந்தனர். ஆனால் விடுதலைக்கான உறுதிமிக்க வைராக்கியம், அதனைத் தூளாக்கி விட்டது.

பல்வேறு அடையாளங்கள், சமஸ்தானங்கள், மொழிகள், கிளை மொழிகள், உணவுகள், உடைகள், கலாச்சாரம் ஆகியவற்றால் இந்தியா பிளவுபட்டிருப்பதாக அவர்கள் நம்பினர். பல்வேறு பிரிவுகளைக் கொண்ட நாடு, ஒன்றுபட்டு ஒரே சக்தியாக நிற்க முடியாது என்ற தவறான எண்ணத்தை அவர்கள் கொண்டிருந்தனர். அவர்கள் நம்மை ஒன்றாக இணைக்கும் இந்த நாட்டின் ஆன்மாவையும், நாடியையும், ஆற்றலையும் புரிந்து கொள்ளத் தவறி விட்டனர். இந்த ஆற்றல் சுதந்திரப் போராட்டத்தில் முழுவேகத்துடன் வெடித்துக் கிளம்பிய போது, அடிமை விலங்கொடித்து இந்தியா வெற்றி பெற்றது.

தமது ஆட்சி அதிகாரத்தை விரிவாக்கும் எண்ணம் கொண்டவர்கள், பூகோள எல்லைகளைக் கடந்து மேலாதிக்கம் , அதிகாரம் பெற்றுத் திகழ்ந்த காலம் அது என்பதை நாம் அறிவோம். இந்தியாவின் விடுதலை இயக்கம், உலகின் பல பகுதிகளில் பலரை, இந்த ஆதிக்க சக்திகளை எதிர்த்து நிற்க உந்துதலாய் அமைந்தது. ஒரு தூண் போல உறுதியாய் நின்ற இந்தியா, உலகம் முழுதும் விடுதலைத் தீ மூட்டியது. கண்மூடித்தனமான நாடு பிடிக்கும் போட்டியில் ஈடுபட்டவர்கள், உலக மக்களின் மீது இரண்டு உலகப் போர்களைத் திணித்து, மனித நேயத்தை அழித்து, உயிர்களைப் போக்கி, தமது தீய நோக்கங்களுகாக உலகத்தையே சிதைத்தனர்.

அந்த நிலையிலும், அழிவுப் போருக்கு மத்தியிலும், விடுதலைக்கான தனது வேகையை இந்தியா கைவிடவில்லை; பின்வாங்கவில்லை; தனது தீரத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை. தேவை நேரும் போது தேசம், தியாகம் செய்கிறது; துயரங்களைத் தாங்கிக் கொள்கிறது; மக்களின் இயக்கங்களுக்கு வழி காட்டுகிறது. இந்தியாவின் போராட்டம் உலகில் சுதந்திரச் சூழலை ஏற்படுத்தியது. இந்திய ஆற்றல் உலகில் கொண்டு வந்த மாற்றம், நாடு பிடிக்கும் கொள்கைக்கு எதிராகப் பெரும் சவாலாக மாறியது. இந்த உண்மையை வரலாறு ஒருபோதும் மறுக்க முடியாது.

அன்பார்ந்த நாட்டு மக்களே, சுதந்திரப் போரில் இந்தியா, அதன் ஒற்றுமை, கூட்டுத்திறன், ஒளிமயமான எதிர்காலத்துக்கான தீர்மானம், அர்ப்பணிப்பு மற்றும் உத்வேகம் ஆகியவற்றைக் கொண்டு உலகம் முழுதிலும் தலை நிமிர்ந்து நடை போட்டது. அன்பார்ந்த நாட்டு மக்களே, கரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், 130 கோடி இந்தியர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க தமக்குள் உறுதிமொழி எடுத்தனர். இன்று ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் தன்னம்பிக்கை பொதிந்துள்ளது. சுயசார்பு இந்தியா கனவு மெய்யாகுவதை நாம் காண்கிறோம். “தற்சார்பு இந்தியா” என்பது வெறுமனே ஒரு சொல் மட்டுமல்ல; இந்த நாட்டின் 130 கோடி மக்களின் தாரக மந்திரம்.

நான் தற்சார்பு பற்றிப் பேசும் போது… இப்போது 25-30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும், தம்முடைய 20 – 21 வயதில், பெற்றோர்களும் பெரியவர்களும் எவ்வாறு தற்சார்பு அடைய வேண்டும் என்று தூண்டினார்கள் என்பதை நினைவில் கொள்கிறோம். ஒவ்வொரு குடும்பமும் 20-21 வயதுடைய குழந்தைகள் தற்சார்பு கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவில் இருந்து ஓரடி தூரத்தில் இருக்கும் போது, இந்தியா போன்ற ஒரு நாடு சொந்தமாக நின்று, தன்னம்பிக்கை அடைவது அவசியம். ஒரு குடும்பத்துக்கு எது அவசியமோ அதுவேதான் ஒரு நாட்டுக்கும் அவசியமாகும். இந்தக் கனவை இந்தியா நனவாக்கும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இதற்குக் காரணம், எனது நாட்டு மக்களின் வலிமை. அதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, அவர்களின் திறமை குறித்து நான் பெருமைப் படுகிறேன், நமது இளைஞர்கள் மற்றும் நாட்டின் இணையற்ற பெண்கள் சக்தி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்தியாவின் அணுகுமுறையில், சிந்தனையில் எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்தியா ஏதாவது செய்யத் தீர்மானிக்கும் போதெல்லாம் அதைச் செய்கிறது என்பதற்கு வரலாறு சாட்சியாய் உள்ளது.

நாம் தற்சார்பு பற்றிப் பேசும்போது, அது உலகம் முழுவதும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது; இந்தியாவுக்குள்ளும் எதிர்பார்ப்புகளைத் தூண்டுகிறது. இந்த எதிர்பார்ப்பை நனவாக்குவதற்கு நாம் நம்முடைய திறமைகளை அதிகரித்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும். நம்மைத் தயார்படுத்திக் கொள்ளுதல் மிக அவசியம். இந்தியா போன்ற ஒரு பெரிய நாடு இளைஞர் சக்தியின் ஆற்றல் நிறைந்தது. தற்சார்பு இந்தியாவுக்கான முதல் தேவை – தன்னம்பிக்கை; அதுதான் அடித்தளம். மேலும் இது, நமது வளர்ச்சிக்கு ஒரு புதிய தொலை நோக்குப் பார்வை, புதிய ஆற்றல் தருகிறது.

‘உலகம் முழுதும் ஒரே குடும்பம்’ என்கிற முதுமொழியை இந்தியா எப்போதும் பின்பற்றி வருகிறது. ‘வசுதேவ குடும்பகம்’ (உலகமே குடும்பம்) என்கிறது வேதம். ‘ஜெய் ஜகத்’ என்கிறார் வினோபாஜி. அதாவது, உலகைப் புகழுங்கள். உலகம் நமக்கு ஒரு குடும்பம். எனவே, பொருளாதாரத்துடன், மானுப் பண்பும் மனித குலமும் முக்கியத்துவம் பெற வேண்டும். இந்தக் கோட்பாட்டை நாம் பின்பற்றுகிறோம். இன்று உலகம், ஒன்றோடொன்று இணைந்து ஒன்றையொன்று சார்ந்து இருக்கிறது. இந்தியா போன்ற ஒரு பரந்த நாடு, உலகப் பொருளாதாரத்தில் தனது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்பது காலத்தின் தேவை. இது உலக நலனுக்கான இந்தியாவின் கடமையாகும். இந்தியா தனது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் எனில், தனக்குத் தானே அதிகாரம் வழங்க வேண்டும்; தன்னம்பிக்கை, சுயசார்பு மிக்கதாய் இருக்க வேண்டும். உலக நலனுக்காகப் பங்களிக்கும் திறன் கொண்டவர்களாய் நாம் இருக்க வேண்டும். நமது வேர்கள் வலுவாக இருந்தால்தான், நாம் போதுமான திறன் கொண்டவர்களாக இருந்தால் தான், உலக நலனை நோக்கி நாம் காலடி எடுத்து வைக்க முடியும்.

நம் நாட்டில் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. இந்த இயற்கை வளங்கள் மற்றும் மனித வளங்களின் மதிப்பை உணர்ந்து பயன்படுத்த தொடங்குவதுடன், நாட்டையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்வது காலத்தின் கட்டாயம். இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் கச்சாப் பொருளாகவே ஏற்றுமதி செய்து கொண்டு இருக்கப் போகிறோம்? கச்சாப் பொருளை ஏற்றுமதி செய்து, தயாரிக்க்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்யும் நடைமுறை எவ்வளவு காலம் தொடரும்? நாம் தற்சார்பு நிலையை எட்ட வேண்டும். உலகின் தேவைகளுக்கு ஏற்ப, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களுக்கு மாற வேண்டும். இது நமது பொறுப்பு.

உலக நலனில் பங்கெடுக்கும் வகையில் மதிப்புக் கூட்டல் துறையில் நாம் முன்செல்ல வெண்டும். இதேபோல, ஒரு காலம் இருந்தது - வெளிநாட்டிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்தோம். ஆனால் நமது விவசாயிகள் ஒரு அற்புதமான வேலையைச் செய்தனர். அதனால், இப்போது இந்தியா விவசாயத் துறையில் தன்னிறைவு அடைந்துள்ளது. இன்று இந்தியாவின் விவசாயிகள் இந்திய மக்களுக்கு உணவு தானியங்களை வழங்குவது மட்டுமல்லாமல், தேவைப்படும் நாடுகளுக்கு உணவு தானியங்களை வழங்கும் நிலையில் உள்ளது.

விவசாயத்தில் தற்சார்பு நமது வலிமை. என்றாலும், மதிப்புக் கூட்டலும் இந்தத் துறையில் அவசியமாகும். நமது விவசாயத் துறை உலகின் தேவைகளுக்கு ஏற்ப பரிமாணம் பெற வெண்டும். மதிப்புக் கூட்டல், நமது வேளாண் துறைக்குத் தேவை. இன்று, நாடு பல புதிய முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. விண்வெளித் துறையைத் திறந்து விட்டோம். நம் நாட்டு இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. வேளாண் துறையைச் சட்டத்தின் பிடியில் இருந்து விடுவித்தோம். அதைத் தற்சார்பு கொண்டதாய் மாற்ற முயற்சித்தோம்.

விண்வெளித் துறையில் இந்தியா சக்தி வாய்ந்ததாக மாறும்போது, அண்டை நாடுகளும் அதன் நன்மைகளைப் பெறுகின்றன. எரிசக்தித் துறையில் நாம் சக்தி வாய்ந்தவர்களாக மாறினால், இருளை விரட்ட விரும்பும் பிற நாடுகளுக்கு இந்தியா உதவ முடியும். நாட்டின் சுகாதார உட்கட்டமைப்பு தற்சார்பாக மாறும்போது, சுகாதாரச் சுற்றுலாவுக்கு விருப்பத்தக்க நாடாக இந்தியா மாறிவிடும். எனவே, ‘மேக் இன் இந்தியா’ தயாரிப்புகள் உலகளவில் பாராட்டுகளைப் பெற வேண்டியது அவசியம். நமது திறமையான மனித வளத்தால் நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களை ஒரு காலத்தில் உலகம் பாராட்டியது; இதற்கு, வரலாறே சாட்சி.

தற்சார்பு அடைதல் என்பது, இறக்குமதித் தேவைகளைக் குறைப்பதை மட்டுமே குறிப்பதல்ல; நமது திறன்கள் மற்றும் மனித வளங்களைப் பற்றியது அது. நாம் வெளிநாட்டிலிருந்து பொருள்களை பெறத் தொடங்கும் போது, நமது திறன்கள் குறையத் தொடங்கிப் பின் சில தலைமுறைகள் கடந்ததும் அது முற்றிலும் மறைந்து விடுகிறது. நாம் அதிலிருந்து நம்மைப் பாதுகாத்து, நம்முடைய திறனை மேம்படுத்த வேண்டும். நம்முடைய திறன்களையும், படைப்பாற்றலையும் வலியுறுத்துவதோடு, அதனைக் கொண்டு புதிய உயரங்களை எட்ட வேண்டும். நமது போட்டித் திறனை மேம்படுத்த, தற்சார்பு இந்தியாவை உருவாக்க, நமது திறன் மேம்பாட்டை வலுப்படுத்த வேண்டும்.

அன்பார்ந்த குடிமக்களே, நான் தற்சார்பு பற்றிப் பேசும் போது மக்கள் பல சந்தேகங்களை எழுப்புகிறார்கள் என்பதை நான் அறிவேன். தற்சார்பு நிலையை எட்டுவதற்கான பயணத்தில், லட்சக் கணக்கான சவால்கள் இருக்கின்றன. ஒப்புக்கொள்கிறேன். போட்டி நிறைந்த உலகில் இந்த சவால்கள் மேலும் அதிகரிக்கின்றன. நாம் எதிர்கொள்ளும் லட்சக் கணக்கான சவால்களுக்கு, கோடிக் கணக்கான தீர்வுகளை வழங்கும் திறன் நம் தேசத்துக்கு உள்ளது என்பதை நாம் உணர வேண்டும். நமது நாட்டு மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனுடன் உள்ளனர்.

கரோனாவின் சவாலான காலங்களில், இறக்குமதிப் பொருள்கள் பல, நமக்குத் தேவையாய் இருந்தது. ஆனால் அவற்றை உலகத்தால் வழங்க முடியவில்லை. நமது தேசத்தின் இளைஞர்கள், தொழில் முனைவோர், நிறுவனங்கள், இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டனர். N95-ஐ ஒரு போதும் தயாரிக்காத நாடு, அவ்வாறு செய்யத் தொடங்கியது. நாம் முன்னர் தயாரிக்காத தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை, நாமே தயாரிக்கத் தொடங்கினோம், இதேபோல், இந்தியாவில் இதற்கு முன்னர் தயாரிக்கப்படாத வென்டிலேட்டர்களையும் நாமே தயாரிக்கத் தொடங்கினோம். நம் சொந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ததோடு மட்டுமல்லாமல், இப்போது உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிற அளவுக்கு வலிமையாக இருக்கிறோம். தற்சார்பு இந்தியா உலக நாடுகளுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதை நன்றாகக் காண முடிகிறது. எனவே, உலக நலனுக்காகவும் பணியாற்றுவது இந்தியாவின் கடமையாகும்.

நடந்த வரை போதும். இனி சுதந்திர இந்தியாவின் மனநிலை என்னவாக இருக்க வேண்டும்? சுதந்திர இந்தியாவின் மனநிலையானது ‘உள்ளூர்த் தயாரிப்புக்கான குரல்’ஆக இருக்க வேண்டும். நமது உள்ளூர்த் தயாரிப்புகளில் நாம் பெருமை கொள்ள வேண்டும். உள்நாட்டுத் தயாரிப்புகளை நாம் புகழ்ந்து ஆதரிக்கவில்லை என்றால், வளரவும் மேம்படவும் அவை எவ்வாறு வாய்ப்பு பெறும்? எவ்வாறு வலிமை பெறும்? வாருங்கள், நமது சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டை நோக்கிச் செல்லும்போது, ‘உள்ளூர் தயாரிப்புகளுக்கு குரல்’ என்ற பெருமையை ஏற்றுக்கொண்டு, ஒன்றாக இணைந்து நம்மை நாமே வலுப்படுத்திக் கொள்வோம்.

அன்பார்ந்த நாட்டு மக்களே, நம் தேசம் எவ்வாறு அதிசயங்களை நிகழ்த்த செய்ய முடியும்.. எவ்வாறு முன்னேறுகிறது.. என்று தெளிவாகக் கண்டோம். ஏழைகளின் ‘ஜன்-தன்’ கணக்குகளுக்கு லட்சக் கணக்கான, கோடிக் கணக்கான பணம் நேரடியாக மாற்றலாகும் என்று யார் கற்பனை செய்திருக்க முடியும்? விவசாயிகளின் நலனுக்காக வேளாண் உற்பத்தி சந்தைக் குழு சட்டத்தில் இவ்வளவு மாற்றங்கள் செய்யப்படும் என்று யார் கற்பனை செய்திருக்க முடியும்? அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் என்கிற தலைமேல் தொங்கும் கத்தியில் இருந்து விவசாயிகள், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்படுவார்கள் என்று யார் நினைத்திருக்க முடியும்? நம் தேசத்து இளைஞர்களுக்கு விண்வெளித் துறையில் வாய்ப்புகள் கிட்டும் என்று நாம் கற்பனை செய்திருக்க முடியுமா? தேசியக் கல்விக் கொள்கை, ஒரு தேசம்-ஒரு ரேஷன் கார்டு, ஒரு தேசம்-ஒரு ‘க்ரிட்’ (கிடங்கு), ஒரு தேசம்-ஒரு வரி, நொடித்துப்போதல் மற்றும் வங்கி திவால்நிலைக் குறியீடு மற்றும் வங்கிகளை இணைப்பதற்கான முயற்சி - இவை அனைத்தும் தேசத்தின் உண்மையில் நிகழ்ந்து விட்டதை இன்று நாம் காண்கிறோம்.

இந்தியாவில் நடைபெற்று வரும் சீர்திருத்தங்களின் விளைவுகளை உலகம் கவனித்து வருகிறது. நாம் ஒன்றன் பின் ஒன்றாக கொண்டு வரும், ஒன்றோடொன்று இணைந்த சீர்திருத்தங்களை உலகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதன் விளைவாக இந்தியாவில் கடந்த ஆண்டு அந்நிய நேரடி முதலீடு (FDI) முந்தைய சாதனைகளை எல்லாம் முறியடித்தது. கடந்த ஆண்டு, இந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு, 18 சதவீதம் அதிகரித்துள்ளது. கரோனா பெருந்தொற்றின் போது கூட, உலகின் சிறந்த நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி வருகின்றன. இந்த நம்பிக்கை, போகிற போக்கில் உருவாக்கப்பட்டதல்ல. ஒரு காரணமும் இல்லாமல் உலகத்தை இந்தியா ஈர்த்து விடவில்லை. அதன் கொள்கைகள், ஜனநாயகம் மற்றும் அதன் பொருளாதாரத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துவதில் இந்தியா மேற்கொண்ட கடின உழைப்பால் இந்த நம்பிக்கை வளர்ந்துள்ளது.

இன்று உலகின் பல வணிகங்கள் இந்தியாவை விநியோகச் சங்கிலியின் மையமாகப் பார்க்கின்றன. எனவே இப்போது, ‘இந்தியாவுக்காகத் தயாரியுங்கள்’ உடன் இணைந்து. ‘உலகத்துக்காகத் தயாரியுங்கள் என்ற மந்திரத்துடன் முன்னேற வேண்டும். சமீபத்தில் என்ன நடந்தது என்று நினைவு கூர்ந்து பாருங்கள். 130 கோடி நாட்டு மக்களின் திறன்களைப் பற்றிப் பெருமிதம் கொள்ளுங்கள். இந்த கரோனா பெருந்தொற்றின் போது, இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரைகளில் சூறாவளிகள் இருந்தன, மின்னல் மற்றும் நிலச்சரிவுகளால் ஏராளமான மக்கள் இறந்தனர், மேலும் சிறிய பூகம்பத்தின் தீவிரங்கள் மீண்டும் மீண்டும் உணரப்பட்டன. இவை போதாது என்பது போல, கூட்டம் கூட்டமாக வெட்டுக்கிளிகள் வந்து நம் விவசாயிகளுக்கு அழிவை ஏற்படுத்தின. தொடர்ச்சியான துன்பங்கள் ஒன்றின் பின் ஒன்றாகத் தாக்கின. ஆயினும்கூட, நாடு நம்பிக்கையை இழக்கவில்லை, தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் முன்னேறியது.

இன்று, கரோனாவின் பிடியிலிருந்து நம் நாட்டின் மக்களையும் பொருளாதாரத்தையும் ஒரு சேர மீட்டெடுப்பது நமது முன்னுரிமை. இந்த முயற்சியில் தேசிய உள்கட்டமைப்புகளின் ஒன்றான குழாய்த் திட்டம் முக்கிய பங்கு வகிக்கும். இந்த திட்டத்துக்கு ரூ.1.10 லட்சம் கோடி செலவிடப்படும். இதற்காக, பல்வேறு துறைகளில் சுமார் ஏழாயிரம் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது நாட்டின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கும் ஒரு புதிய திசையையும் புதிய வேகத்தையும் தரும். நெருக்கடிகளின் போது, உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும், இதனால் பொருளாதார நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது, மேலும் இது ஒரு தொடர்ச்சியான சுழற்சியை உருவாக்குகிறது. இதனால் சிறு மற்றும் பெரிய நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெருமளவில் பயனடைகிறார்கள்.

இன்று ஒரு சம்பவத்தை நினைவுகூர விரும்புகிறேன். அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, தங்கநாற்கரச் சாலை என்ற நெடுஞ்சாலைத் திட்டத்தை தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கினார். சாலைகளின் உள்கட்டமைப்பை அடுத்த தலைமுறை நிலைக்கு எடுத்துச் சென்றார். இன்றும், நாடு ‘தங்க நாற்கரச் சாலை’யைப் பெருமையுடன் பார்க்கிறது; ஆம் நம்நாடு, நல்ல வகையில் மாற்றமடைகிறது என்று உணர்கிறது, அன்பார்ந்த நாட்டு மக்களே, அடல் பிகாரி வாஜ்பாய் இப்பணியை அவரது காலத்தில் செய்தார். இப்போது நாம் இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்லவேண்டும். இதற்கு நாம் புதிய உத்வேகம் அளிக்க வேண்டும். நாம் சிறு துண்டுகளாய்ச் செயல்பட முடியாது.

சாலைத்துறை, சாலைப்பணிகளை மட்டுமே மேற்கொள்ளும்; இரயில்வே துறை, இரயில்வே பணிகளை மட்டும்தான் மேற்கொள்ளும் என்னும் நிலைமை வேண்டாம். இரயில்வே - சாலைப் பிரிவுகள் இடையே; விமான நிலையங்கள் - துறைமுகங்கள் இடையே; ரயில் நிலையங்கள் - பேருந்து நிறுத்தங்கள் இடையே; ஒருங்கிணைப்பே இல்லை. இது, விரும்பத் தக்கதல்ல. கட்டமைப்புத் துறைஎன்பது முழுமையானதாக, ஒருங்கிணைந்ததாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவை ஒன்றுக்கொன்று துணை புரிவதாய் இருக்க வேண்டும். இரயில்வே, சாலைத் துறைக்கு துணையாய் இருக்க வேண்டும். சாலைத் துறை, துறைமுகங்களுக்குத் துணையாய் இருக்க வேண்டும். துறைமுகம் - விமான நிலையங்கள், ஒன்றுக்கொன்று உதவும் வகையில் இருக்கவேண்டும்.

புதிய நூற்றாண்டில், பன்மாதிரி (‘மல்டி மாடல்’) கட்டமைப்பை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இது ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கும். நாம் மிகப்பெரிய கனவோடு இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். நாம் சிறு சிறு துண்டுகளாகப் பணி செய்வதை ஒழித்து விட்டால், இந்த அமைப்பு முறைகள் அனைத்துக்கும் ஒரு புதிய வலிமையை நம்மால் வழங்க முடியும். உலக வர்த்தகத்தில் நமது கடலோரப் பகுதிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. துறைமுகம் மூலமான வளர்ச்சியை நோக்கிச் செல்கையில், இனிவரும் நாட்களில், நமது கவனம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய வசதிகளைக் கொண்ட, நவீனக் கட்டமைப்பை உருவாக்குவதில் இருக்க வேண்டும். அனைத்து கடலோரப் பகுதிகளையும் இணைக்கும் வகையிலான நான்கு வழிப்பாதை அமைப்பதற்கும் கவனம் செலுத்துவோம்.

அன்பார்ந்த நாட்டு மக்களே, நமது வேதங்கள் ஆழமான ஒரு விஷயத்தைக் கூறுகின்றன. “சமர்த்ய மூலம் ஸ்வதந்தரியம்; ஷ்ரம் மூலம் வைபவம்” இதன் பொருள் என்னவென்றால் ‘விடுதலைக்கான அடிநாதம் திறமையே; வளமைக்கும், செழிப்புக்கும், நாட்டு முன்னேற்றத்துக்கும் மூலக்கூறு உழைப்பேயாகும்’ என்பதாகும். சாதாரண மனிதனின் கடின உழைப்புடன் எதையுமே ஒப்பிட முடியாது. நகர்ப்புறத்தில் இருந்தாலும் சரி கிராமங்களில் இருந்தாலும் சரி. இன்னலுறும் சமுதாயத்துக்கு வசதிகள் கிடைக்கும் போது, வாழ்க்கைக்கான போராட்டம் எளிதாகிறது. அன்றாடத் தொல்லைகள் குறைகின்றன. இதனால் அவர்களுடைய சக்தி அதிகரிக்கிறது. மிக நல்ல பலன்கள் கிடைக்கின்றன.

கடந்த ஆறு ஆண்டுகளில் நாட்டில் இன்னல்படும் குடிமக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக பல்வேறு இயக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஒவ்வொருவரும் சொந்தமாக வங்கிக் கணக்கு வைத்திருத்தல்; முறையான வீடு, சொந்தமாகக் கட்டிக் கொள்ளுதல்; ஏராளமான எண்ணிக்கையில் கழிப்பறைகள் கட்டுதல்; ஒவ்வொரு வீட்டுக்கும் மின் வசதி வழங்குதல்; புகை மூட்டத்தில் இருந்து நமது அன்னையரையும், சகோதரிகளையும் விடுபடச் செய்யும் வகையில் சமையல் எரிவாயு இணைப்பு வழங்குதல்; வறியவருள் வறியவரான மக்களுக்கும் காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல்; நாட்டிலுள்ள மிகச்சிறந்த மருத்துவமனைகளில் ஐந்து லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தை செயல்படுத்துதல்; ரேஷன் கடைகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமாக இணைத்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன. அனைத்து வசதிகளும், ஒவ்வொரு ஏழை மனிதரையும் சென்றடைவதற்காக, திட்ட நடைமுறைகளில் இருந்த ஏற்றத்தாழ்வுகளை நீக்கவும், திட்டங்களில் வெளிப்படைத் தன்மையை மீண்டும் நிலைநாட்டவும், கடந்த ஆறு ஆண்டு காலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, கணிசமான முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

கரோனா நெருக்கடிக் காலத்தின் போதும், இந்தச் சேவைகள் தங்குதடையின்றி வழங்கப்படுவதற்கு இவை உதவியாக இருந்தன. கரோனா காலத்தின்போதும் கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டன. குடும்ப அட்டை இருந்தாலும், இல்லாவிட்டாலும், 80 கோடி மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கியதன் மூலம், 80 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் வீடுகளில் சமையல் அறையில் அடுப்பு எரிந்தது. சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய், வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டது. டெல்லியில் இருந்து விநியோகிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயின் 100 காசுகளும் நேரடியாக ஏழை மக்களின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்பட்டது. இது சில ஆண்டுகளுக்கு முன் வரை கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாதது. ஆமாம். இதுவரை அது கற்பனைக்கு எட்டாததாகவே இருந்தது.

கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான் திட்டம், அவர்களின் கிராமங்களிலேயே வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் ஆகும். நமது உழைப்பாளி நண்பர்கள் தங்களது திறன்களைப் புதுப்பித்துக் கொள்ளவும், மேலும் வளர்த்துக் கொள்ளவும் செய்வார்கள் என்று நம்பலாம். அவர்களது முயற்சிகளில் முழு நம்பிக்கை வைத்து, கிராமப்புற உள்நாட்டு ஆதாரங்களைச் சார்ந்து, திறனுள்ள உழைக்கும் பணியாளர்கள் மீது நம்பிக்கை கொண்டு ‘உள்ளூர் என்று உரக்கச் சொல்வோம்’ என்று ‘திறனைப் புதுப்பித்தல் திறனை வளர்த்தல்’ ஆகியவற்றுக்கும் அறைகூவல் விடுத்தோம். நமது ஏழை மக்களுக்கும், நம் நாட்டின் உழைக்கும் தொழிலாளர்களுக்கும் அதிகாரம் வழங்கும் முயற்சி இது.

நகரங்களே பொருளாதாரச் செயல்பாடுகளின் மையமாகத் திகழ்கின்றன. எனவே தங்களது வாழ்வாதாரத்திற்காக கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்ந்த தெரு வியாபாரிகள் போன்ற உழைப்பாளிகளுக்கு, வங்கிகளில் நேரடியாக கடனுதவி செய்வதற்கான திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. கரோனா நெருக்கடி காலத்தின் போதும் மிகக்குறுகிய காலத்திலேயே லட்சக்கணக்கான மக்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பலனடைந்தனர். இப்போது, அவர்கள் மிக அதிக வட்டியில் கடன் வாங்கத் தேவையில்லை. உழைப்பாளிகள் கண்ணியத்துடனும், அதிகாரத்துடனும் கடன் பெற முடியும்.

இதேபோல் நமது தொழிலாளர்கள் நகரத்துக்குப் புலம் பெயர்கையில், தங்குவதற்கு நல்ல இடம் மட்டும் கிடைத்தால், அவர்களது திறன் அதிகரிக்கும். இந்த விஷயத்தைக் கருத்தில் கொண்டு, நகரத்திலேயே அவர்களுக்கு, அவர்களால் பணம் செலுத்தக் கூடிய அளவுக்கான வீட்டுவசதி கிடைக்க மிகப்பெரிய திட்டமொன்றை வடிவமைத்துள்ளோம். இதனால் தொழிலாளர்கள், நகரங்களுக்கு வரும்போது முழு நம்பிக்கையோடு, உறுதியோடு கவனத்துடன் பணியாற்றி முன்னேற்றமடைய முடியும்.

அன்பார்ந்த நாட்டு மக்களே, சமுதாயத்தின் சில பிரிவுகள் பின்தங்கிய நிலையில் இருப்பதும், வளர்ச்சியை நோக்கிய நாட்டின் பயணத்தில் இணைய முடியாமல் ஏழ்மையில் இருப்பதும் உண்மைதான். அதே போல், சில பகுதிகள், இடங்கள், நிலப்பரப்புகள் பின்தங்கியே இருக்கின்றன. இந்தியாவை தற்சார்புடையதாக்க சீரான வளர்ச்சி மிகவும் அவசியமாகும். சராசரி மாவட்டங்களோடு ஒப்பிடும் போது பின்தங்கி இருக்கிற, அதே சமயம் வளரத் துடிக்கும் 110 மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில், அளவுகோல்கள் ஒவ்வொன்றையும், நாட்டின் சராசரிக்கு இணையாகக் கொண்டு வருவோம். பின்தங்கியுள்ள இந்த 110 மாவட்டங்களின் மக்கள் சிறந்த கல்வி, சிறப்பான சுகாதார வசதிகள் மற்றும் உள்ளூர் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றைப் பெற, அனைத்து முயற்சிகளும் எடுத்து வருகிறோம்.

அன்பார்ந்த நாட்டு மக்களே, தற்சார்பு வேளாண்துறை மற்றும் தற்சார்பு விவசாயிகளே தற்சார்பு இந்தியாவின் முன்னுரிமையாகும். நாம் இதைப் புறந்தள்ள முடியாது. விவசாயிகளின் நிலையை நாம் பார்க்கிறோம். சுதந்திரம் கிடைத்ததில் இருந்து பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தடைகளில் இருந்து அவர்களை மீட்க வேண்டும், நாம் அதை செய்திருக்கிறோம். நீங்கள் இதை கற்பனை கூட செய்ய முடியாது. நாட்டின் ஒரு மூலையில் நீங்கள் சோப்பு, துணி அல்லது சர்க்கரையை உற்பத்தி செய்தால், இன்னொரு மூலையில் நீங்கள் அவற்றை விற்கலாம். ஆனால் நமது விவசாயிகள் தங்கள் விருப்பப்படி தங்களது பொருள்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் விற்க முடியது என்பது பலருக்கு தெரியாது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் அவர் தனது பொருளை விற்க வேண்டும். இந்தத் தடைகளை நாம் தகர்த்திருக்கிறோம்.

தற்போது, இந்திய விவசாயி, சுதந்திரமாக சுவாசித்து நாட்டின் அல்லது உலகின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் தன்னுடைய பொருள்களை தன்னுடைய விருப்பப்படி விற்க முடியும். விவசாயியின் வருமானத்தை அதிகரிக்க பல்வேறு மாற்று நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறோம். விவசாயத்தின் உள்ளீட்டுச் செலவைக் குறைக்கத் தொடர்ந்து முயன்று வருகிறோம். டீசல் பம்ப்புக்கு பதிலாக சூரிய சக்தி பம்ப்பை விவசாயிக்கு எவ்வாறு வழங்கலாம், உணவு உற்பத்தியாளர் எவ்வாறு மின் உற்பத்தியாளராக ஆகலாம்? தேனீ வளர்ப்பு, மீன்வளம், கோழி வளர்ப்பு போன்ற வாய்ப்புகளை எவ்வாறு அவருக்குக் கிடைக்கச் செய்து அவரது வருமானத்தை இரட்டிப்பாக்கலாம் என்னும் திசையில் நாம் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். நமது வேளாண் துறை நவீனமாக மாறி, மதிப்புக் கூட்டல்கள், உணவுப் பதப்படுத்துதல், உணவுப் பொருள்களைப் பொதியாக்கம் செய்தல் போன்றவை நடைபெற வேண்டும் என்று காலம் கோருகிறது. சிறப்பான உள்கட்டமைப்பு இதற்குத் தேவை.

கரோனா பெருந்தொற்றின் போது கூட வேளாண் உள்கட்டமைப்புக்காக ரூ 1,00,000 கோடியை இந்திய அரசு ஒதுக்கியிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். விவசாயிகளின் நலனுக்கான இந்த உள்கட்டமைப்பின் மூலம் அவர்கள் தங்களது பொருள்களுக்கான சிறந்த விலையைப் பெற முடியும், தங்களது பொருள்களை வெளிநாட்டுச் சந்தைகளில் விற்க முடியும். வெளிநாட்டுச் சந்தைகளுக்கு இன்னும் சிறப்பான வகையில் அவர்கள் சென்றடைவார்கள். கிராமத் தொழில்களை வலுப்படுத்தும் தேவை இருக்கிறது. ஊரகப் பகுதிகளில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படும். வேளாண் மற்றும் வேளாண் - சாராத தொழில்களின் வலைப்பின்னல் தோற்றுவிக்கப்படும். அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றுவதற்காக விவசாயி உற்பத்தி சங்கத்தைத் தொடங்க முயற்சி செய்கிறோம்.

சகோதர, சகோதரிகளே, ஜல் ஜீவன் இயக்கத்தைப் பற்றிய அறிவிப்பை கடந்த முறை நான் வெளியிட்டிருந்தேன். அது, ஓராண்டை நிறைவு செய்கிறது. தூய்மையான குடிநீர் அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்யும் நமது கனவு நிறைவேறி வருகிறது. பல்வேறு சுகாதார சிக்கல்களுக்கான தீர்வுகள் தூய்மையான குடிநீருடன் நேரடியாக இணைந்துள்ளன. நாட்டின் பொருளாதாரத்துக்கும் அது பங்களிக்கிறது. அதனால் தான் ஜல் ஜீவன் இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறோம்.

தற்போது ஒவ்வொரு நாளும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகளுக்குக் குழாய் மூலம் தண்ணீர் விநியோகித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு கோடி குடும்பங்களுக்கு, குறிப்பாக காடுகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் தொலைதூர இடங்களில் வாழ்பவர்களுக்கு, கடந்த ஒரு வருடத்தில் நாம் தண்ணீரை வழங்கியிருக்கிறோம். ஒரு மிகப்பெரிய பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் இயக்கம் ஓர் ஆரோக்கியமான போட்டியை நாட்டில் உருவாக்கி இருக்கிறது. மாவட்டங்களுக்கு இடையே, மாநகரங்களுக்கு இடையே மற்றும் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. பிரதமரின் கனவான ‘ஜல் ஜீவன் இயக்கம்’ தமது பகுதிகளில் விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். கூட்டுறவு மற்றும் போட்டித் திறன் கொண்ட கூட்டாட்சியின் புதிய வலிமை ‘ஜல் ஜீவன்’ இயக்கத்துடன் இணைந்திருக்கிறது, நாம் அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

அன்பார்ந்த நாட்டு மக்களே, வேளாண் துறை, சிறுதொழில் துறை, சேவைத் துறை போன்ற எந்தத் துறை மக்களாக இருந்தாலும், அநேகமாக அனைவருமே இந்தியாவின் மிகப்பெரிய, நடுத்தர வர்க்கத்தின் பகுதிகளாக இருக்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தின் பணியாளர்கள் தற்போது உலகம் முழுக்க நற்பெயரை ஈட்டியுள்ளார்கள். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நமது மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், விஞ்ஞானிகள் உலகம் முழுக்க தங்களது தடத்தைப் பதித்து வருகிறார்கள். எங்கெல்லாம் வாய்ப்புகள் கிடைக்கின்றனவோ, அங்கெல்லாம் நடுத்தர வர்க்கத்தினர் அவற்றை சரியாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது உண்மை. அரசின் குறுக்கீடுகளில் இருந்து அவர்களுக்கு சுதந்திரம் தேவை.

புதிய வாய்ப்புகளையும், திறந்த சூழலையும் நடுத்தர வர்க்கத்தினர் பெற வேண்டும். அவர்களது இந்தக் கனவை நனவாக்க, அரசு தொடர்ந்து பணியாற்றுகிறது. அதிசயங்களைச் செய்யும் சக்தி நடுத்தர வர்க்கத்துக்கு இருக்கிறது. எனவே வாழ்க்கையை எளிமையாக்குவதின் சிறந்த பலன்களை நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் பெற வேண்டும். குறைந்த செலவில் இணைய வசதி, கட்டுப்படியாகக் கூடிய விலையில் திறன்பேசிகள், உடான் திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் விமானப் பயணச்சீட்டுகள், நமது நெடுஞ்சாலைகள் அல்லது தகவல் தொழில்நுட்ப சாலைகள்– இவை அனைத்துமே நடுத்தர வர்க்கத்தின் வலிமையை அதிகரிக்கப் போகின்றன. ஏழ்மையில் இருந்து வெளியில் வந்த நடுத்தர வர்க்க நபரின் முக்கிய கனவாக சொந்த வீடு இருப்பதை நீங்கள் காணலாம். சமமான வாழ்க்கை முறை அவருக்குத் தேவை. நாட்டின் மாதத் தவணைகள் துறையில் நிறைய பணிகளை நாம் செய்திருப்பதன் விளைவாக வீட்டுக் கடன் விகிதங்கள் குறைந்துள்ளன.

வீட்டுக் கடனை ஒருவர் வாங்கினால், அதை திருப்பிச் செலுத்துவதற்குள் சுமார் ரூ 6 லட்சம் தள்ளுபடியை அவர் பெறலாம். நிறைய மத்திய வர்க்க குடும்பங்கள் வீட்டை வாங்குவதற்காகத் தங்கள் பணத்தை முதலீடு செய்திருப்பதாகவும், ஆனால் பணிகள் முடியாததால் வீட்டைப் பெற முடியாமல் வாடகை வீடுகளில் வாழ்ந்து வருவதாகவும் சமீபத்தில் கண்டறியப் பட்டது. மத்திய வர்க்கக் குடும்பங்கள் வீடு பெறுவதை உறுதி செய்ய, பணி முடிக்கப் படாமல் உள்ள வீடுகளில் பணிகளை முடிப்பதற்காக ரூ 25,000 கோடி சிறப்பு நிதியத்தை இந்திய அரசு உருவாக்கியுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் வருமான வரி விகிதங்கள் தற்போது குறைந்துள்ளன. இத்தகைய குறைந்தபட்ச நிறுவன வசதிகளுடன் நாட்டை முன்னேற்றி செல்ல முயற்சி செய்து வருகிறோம். கூட்டுறவு வங்கிகளை இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்பார்வைக்குள் கொண்டு வந்து, நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் பணத்தின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தோம். குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை மற்றும் வேளாண் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் கடுமையாக உழைக்கும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்கு நேரடி பலனை அளிக்கும். அதைத் தொடர்ந்து, பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய சிறப்பு நிதியத்தின் பலன்களை நமது வியாபாரிகளும், தொழில் முனைவோர்களும் பெறுவார்கள். சாதாரண இந்தியனின் வலிமையும், சக்தியுமே தற்சார்பு இந்தியாவின் மிகப்பெரிய அடித்தளம். இந்த வலிமையைப் பராமரிக்க ஒவ்வொரு மட்டத்திலும் தொய்வில்லா பணிகள் நடைபெற்று வருகின்றன.

அன்புக்குரிய என் நாட்டு மக்களே, தற்சார்பான, நவீன, புதிய இந்தியாவை, வளமையும் மகிழ்ச்சியும் நிறைந்த இந்தியாவை உருவாக்குவதில் நாட்டின் கல்வி மிகவும் முக்கியமானது. இதை மனதில் கொண்டு, மூன்று பதாண்டுகளுக்குப் பிறகு இன்று, புதிய தேசிய கல்விக் கொள்கையை வெற்றிகரமாக வழங்கியுள்ளோம். நாடெங்கும் வாழ்பவர்கள் புதிய உற்சாகத்துடன் இதற்கு வரவேற்பு தெரிவிக்கிறார்கள். நமது மாணவர்களை, வேர்களுடன் இணைக்கும் வகையில் இந்த தேசிய கல்விக் கொள்கை உள்ளது. அத்துடன், உலகளாவிய குடிமக்களாக உருவாக அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். இந்தியாவை வேராகக் கொண்டு, புதிய உச்சங்களைத் தொடுபவர்களாக அவர்கள் வளர்வார்கள்.

முன்னேறுவதற்கு புதுமை சிந்தனை அவசியம் என்பதால் புதிய ஆராய்ச்சி அமைப்புக்கு தேசிய கல்விக் கொள்கையில் சிறப்பு முக்கியத்துவம் தரப் பட்டுள்ளது. புதுமை மற்றும் ஆராய்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் தரும்போது, போட்டிகள் நிறைந்த உலகில் இந்தியாவை முன்னெடுத்துச் செல்வதற்கான வலிமை பெருகும். கிராமப் பகுதிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும், அதற்கான வசதிகள் இவ்வளவு வேகமாக உருவாகும் என்று யாரால் யோசித்திருக்க முடியும்? சிலநேரங்களில், எதிர்மறைச் சூழ்நிலைகளில், புதிய புரட்சிகரமான எண்ணங்கள் புதிய வேகத்துடன் உருவாகும். அதனால் தான் இந்தப் பெருந்தொற்று சூழ்நிலையில், ஆன்லைன் வகுப்புகள் என்கிற வழிமுறை உருவாகி இருக்கிறது.

ஆன்லைன் பரிவர்த்தனைகள் எவ்வளவு வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன…! BHIM UPI செயலியின் பயன்பாட்டைப் பாருங்கள். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்தச் செயலியின் மூலம் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இணையவழிப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இதில் யாருமே பெருமைப்படத்தான் செய்வார்கள். மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நம்மை எவ்வாறு தகவமைப்பு செய்து கொள்கிறோம் என்பதற்கு அருமையான எடுத்துக்காட்டாக இது உள்ளது.

2014 ஆம் ஆண்டுக்கு முந்தைய நிலையைப் பார்த்தால், சுமார் 60 பஞ்சாயத்துகளில் மட்டுமே ‘ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க்’ இருந்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில், 1.5 லட்சம் பஞ்சாயத்துகள் ‘ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க்’ இணைக்கப்பட்டுள்ளது. இன்று இது, நமக்கு மிகவும் உதவியாய் இருக்கிறது. அனைத்துப் பஞ்சாயத்துகளுக்கும் இந்த வசதியைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். மீதியிருக்கும் ஒரு லட்சம் பஞ்சாயத்துகளுக்கும் இந்த வசதியை உருவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாறிவரும் இக்காலத்தில், கிராமப்புற இந்தியாவையும் டிஜிட்டல் இந்தியா என்ற குடையின் கீழ் கொண்டு வருதல் அவசியம். இதை மனதில் கொண்டு, அனைத்துப் பஞ்சாயத்துகளுக்கும் இந்த வசதியை நீட்டிக்க திட்டமிட்டோம். இப்போது, அனைத்து ஆறு லட்சம் கிராமங்களுக்கும் ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் வசதி உருவாக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கிறேன். தேவைகள் மாறும் போது, முன்னுரிமைகளும் மாறுகின்றன. ஆறு லட்சம் கிராமங்களுக்கு, பல்லாயிரம், லட்சம் கி.மீ. நீளத்துக்கு ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் பதிக்கப்படும். ஆறு லட்சம் கிராமங்களையும் ஆப்டிகல் ஃபைபர் கட்டமைப்பில் இணைக்கும் பணியை 1000 நாட்களுக்குள் செய்து முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

இந்தத் தொழில்நுட்ப யுகத்தில், இணையவெளியை சார்ந்திருக்கும் நிலை, பல மடங்கு அதிகரிக்க இருக்கிறது. இணையவெளியில் ஆபத்துகளும், அச்சுறுத்தல்களும் இணைந்தே இருக்கின்றன. இதை உலகம் நன்கு அறிந்துள்ளது. நமது நாட்டின் சமூகக் கட்டமைப்புக்கு, பொருளாதாரத்துக்கு, வளர்ச்சிக்கு இது அச்சுறுத்தலாக இருக்கலாம்; நாம் நன்கு அறிந்திருக்கிறோம். இந்தியா மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கிறது. இதுபோன்ற ஆபத்துகளை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி, புதிய நடைமுறைகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. விரைவில், புதிய இணையவெளிப் பாதுகாப்பு (சைபர் செக்யூரிடி) தொடர்பான கொள்கை வெளியிடப்படும். வரும் காலங்களில், இவை அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும்; சைபர் செக்யூரிடி வரம்புக்குள் வரம்புக்குள் செயல்பட வேண்டும். இதற்கான யுக்திகளை வடிவமைப்போம்.

அன்பார்ந்த நாட்டு மக்களே, இந்தியாவில் மகளிர் அதிகாரத்துக்கு எப்போது வாய்ப்பு கொடுத்தாலும், அவர்கள் நாட்டுக்குப் பெருமை சேர்த்து, நாட்டை வலுப்படுத்தியுள்ளனர். இப்போது நாட்டில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பு ஆகியவற்றில் சம வாய்ப்பு அளிப்பதில் உறுதியாக இருக்கிறோம். இப்போது, நிலக்கரிச் சுரங்கங்களில் பெண்கள் பணி புரிகிறார்கள். நம் நாட்டுப் புதல்விகள், போர் விமானங்களை இயக்கி விண்ணைத் தொடுகிறார்கள். கடற்படை மற்றும் விமானப் படையில் தாக்குதல் பிரிவில் பெண்களைச் சேர்க்கும் சில நாடுகளின் பட்டியலில் இப்போது இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. கர்ப்பிணிகளுக்கு 6 மாத காலம் ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு அளிக்க முடிவு செய்தோம். நமது முஸ்லிம் சகோதரிகளை, நம் நாட்டுப் பெண்களை முத்தலாக் முறையில் இருந்து விடுவித்தோம், பெண்களுக்குப் பொருளாதார அதிகாரம் கிடைக்கச் செய்துள்ளோம்.

மொத்தம் உள்ள 40 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகளில் 22 கோடி கணக்குகள் நமது சகோதரிகளின் பெயர்களில் உள்ளன. கொரோனா காலத்தில் சுமார் 30,000 கோடி ரூபாய் அளவுக்கு இந்தச் சகோதரிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது. முத்ரா கடன் திட்டத்தில் 25 கோடி கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் 70 சதவீதக் கடன்கள் நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன. பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தில், அதிக அளவில் பெண்களின் பெயரில் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

அன்பார்ந்த நாட்டு மக்களே, ஏழைச் சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு இன்னமும் மேலான சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதில் இந்த அரசு தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது. மக்கள் மருந்தகங்களின் மூலம் ஒரு ரூபாய் விலையில் அவர்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்குகிறோம். குறுகிய காலத்தில், 6000 மக்கள் மருந்தகங்கள் மூலம் ஏழைப் பெண்களுக்கு 5 கோடிக்கும் அதிகமான சானிட்டரி நாப்கின்கள் வழங்கி இருக்கிறோம். நம் புதல்விகள் சத்துக் குறைபாடால் பாதிக்கப்படாமல் இருக்க, ஏற்ற வயதில் திருமணம் செய்து கொள்வதை உறுதி செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், நமது புதல்விகளின் திருமண வயது பற்றி உரிய முடிவு எடுக்கப்படும்.

அன்பார்ந்த நாட்டு மக்களே, கரோனா பெருந்தொற்று காலத்தில் சுகாதாரத் துறை, மிகுந்த கவனம் பெறுவது இயல்புதான். உண்மையில், சுகாதாரத் துறையில் தற்சார்பு அவசியம் என்ற மிகப் பெரிய பாடத்தை இந்த நெருக்கடி நமக்குக் கற்பித்துள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு நாம், இன்னமும் முன் நோக்கிப் பயணிக்க வேண்டும்.

கரோனா நோய் பாதிப்பைக் கண்டறிய முன்பு ஒரே ஒரு பரிசோதனை நிலையம் மட்டுமே இந்தியாவில் இருந்தது. இப்போது நாடு முழுக்க, அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக 1,400 பரிசோதனை நிலையங்கள் உள்ளன. கரோனா பிரச்சினை தொடங்கியபோது ஒரு நாளில் 300 பரிசோதனைகள் மட்டுமே செய்ய முடிந்தது. இப்போது மிகக் குறுகிய காலத்தில் ஒரு நாளில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யக் கூடிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்கியிருக்கிறோம். 300-இல் தொடங்கித் தற்போது 7 லட்சத்தைத் தொட்டிருக்கிறோம்!

நவீனமயமாக்கல், புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்றும் புதிய மருத்துவக் கல்லூரிகள் உருவாக்குதலை நாம் தொடர்ந்து செய்து வருகிறோம். ஐந்தாண்டு காலத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் எம்.டி. படிப்புகளில் 45,000-க்கு மேற்பட்ட இடங்கள் அதிகரிக்கப் பட்டுள்ளன. கிராமங்களில் 1.5 லட்சத்துக்கு மேற்பட்ட ஆரோக்கிய மையங்கள் உள்ளன. அவற்றில் மூன்றில் ஒரு பகுதி மையங்கள் ஏற்கெனவே செயல்படத் தொடங்கி, கரோனா பெருந்தொற்று சூழலில் பலருக்கும் உதவிகரமாக உள்ளன. கரோனா காலத்தில் இந்த சுகாதார மையங்கள் கிராமங்களில் மகத்தான சேவை செய்து வருகின்றன.இன்று, சுகாதாரத் துறையில் மகத்தான ஒரு திட்டம் தொடங்க இருக்கிறது. அதில், தொழில்நுட்பம் மிகப் பெரிய பங்காற்ற இருக்கிறது.

இன்று, தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் தொடங்கப்படுகிறது. இந்தியாவின் சுகாதாரத்துறையில் இது ஒரு புதிய புரட்சியை உருவாக்கும். சிகிச்சையில் உள்ள சவால்களைக் குறைக்க உதவும் வகையில் அறிவுபூர்வமாகத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். ஒவ்வோர் இந்தியருக்கும் ஆரோக்கிய அடையாள அட்டை அளிக்கப்படும். இந்த அட்டையில், ஒவ்வொரு இந்தியரின் ஆரோக்கியம் குறித்த அனைத்துத் தகவல்களும் இடம் பெற்றிருக்கும். நீங்கள் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனைகள் குறித்த தகவல்கள். பாதித்த நோய்கள், சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் குறித்த விவரங்கள், உட்கொண்ட மருந்துகள் பற்றிய தகவல்கள், கண்டறியப்பட்ட பரிசோதனை முடிவுகள் என அனைத்துத் தகவல்களும் அதில் இருக்கும். எப்போது, என்ன சிகிச்சை பெற்றீர்கள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் ஆரோக்கிய அடையாள அட்டையில் இடம் பெற்றிருக்கும்.

மருத்துவரை சந்திக்க நேரம் பெறுதல், சிகிச்சைக்குப் பணம் செலுத்துதல், மருத்துவமனையில் சீட்டு வாங்குதல் உள்ளிட்ட நடைமுறை சிக்கல்கள் அனைத்தையும் தேசிய ‘டிஜிட்டல் ஹெல்த் மிஷன்’நீக்கிவிடும். விவரம் அறிந்து நல்ல முடிவு எடுக்க நாட்டு மக்களுக்கு உதவக் கூடிய வகையில் இந்த செயல்முறையை உருவாக்கி வருகிறோம்.

அன்பார்ந்த நாட்டு மக்களே, கரோனா தடுப்பூசி மருந்து எப்போது தயாராகும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. இது இயல்பானது தான். இந்த ஆர்வம் உலகம் முழுக்க எல்லோருக்கும் இருக்கிறது. இதற்காக நமது விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நிலையங்களில் கடமை உணர்வுடன் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். பெருமுயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இப்போதைக்கு நாட்டில் மூன்று தடுப்பூசி மருந்துகளுக்கான பரிசோதனைகள் வெவ்வேறு நிலைகளில் நடந்து கொண்டு இருக்கின்றன. நமது விஞ்ஞானிகள் பச்சைக் கொடி காட்டியதும், பெருமளவில் தடுப்பூசி மருந்துகளை நாம் உற்பத்தி செய்யத் தொடங்கி விடுவோம். அதற்கான ஆயத்தங்கள் அனைத்தையும் செய்துவிட்டோம். தடுப்பூசி மருந்து உற்பத்தியை வேகப்படுத்தி, முடிந்த அளவுக்கு குறுகிய காலத்துக்குள் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்.

அன்பார்ந்த நாட்டு மக்களே, நாட்டின் வெவ்வேறு மண்டலங்களில், வெவ்வேறு வகையான வளர்ச்சி சூழ்நிலைகள் உள்ளன. சில மண்டலங்கள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன. சில பகுதிகள் பின்தங்கியுள்ளன. இந்தியாவைத் தற்சார்பு நாடாக மாற்றுவதில், இந்த சமனற்ற தன்மை பெரிய சவாலாக இருக்கலாம். முன்பு கூறியதுபோல, வளர்ச்சியில் உயர்விருப்பம் கொண்ட 110 மாவட்டங்கள் மீது கவனம் செலுத்தி வருகிறோம். இந்த மாவட்டங்களை, வளர்ச்சி அடைந்த மாவட்டங்களுக்கு இணையாக வளர்க்க வேண்டும் என்று விரும்புகிறோம். வளர்ச்சிக்கான சூழலை உருவாக்குதல் மற்றும் இணைப்பு வசதிகளை மேம்படுத்துதலுக்கு முன்னுரிமை தருகிறோம்.

இப்போது பாருங்கள். நாட்டின் மேற்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகள் – கிழக்கு உத்தரப்பிரதேசம், பிகார், வடகிழக்கு அல்லது ஒடிசா ஆகிய பகுதிகளில் – இயற்கை வளங்கள் அபரிமிதமாக இருக்கின்றன. அந்தப் பகுதி மக்கள் மிகவும் திறமையானவர்களாய், உடல்வலு கொண்டவர்களாய், செயல்திறன் மிக்கவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சமச்சீரற்ற நிலை இருக்கிறது. இதனைச் சரி செய்ய, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். கிழக்குப் பகுதியில் சரக்குப் போக்குவரத்துக்காக தனி வழித்தடம் உருவாக்கும் பணியைத் தொடங்கி இருக்கிறோம். கிழக்குப் மண்டலப் பகுதிகளுக்கு, குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வசதி, புதிய ரயில்வே கட்டமைப்புகள், புதிய துறைமுகங்கள்.. உருவாக்கப்படும். வளர்ச்சிக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை முழுமையாக உருவாக்குகிறோம்.

அதேபோல லே-லடாக், ஜம்மு காஷ்மீர் ஆகியவை அரசியல்சட்டத்தின் 370-வது பிரிவில் இருந்து விடுவிக்கப்பட்டு ஓராண்டு ஆகிவிட்டது. ஜம்மு காஷ்மீரின் புதிய வளர்ச்சிப் பயணத்தில் இந்த ஓராண்டுக் காலம், முக்கிய மைல்கல்லாக உள்ளது. பெண்களுக்கும், தலித்களுக்கும் அடிப்படை உரிமையை அளிக்கும் காலக்கட்டமாக இது இருந்துள்ளது. நமது அகதிகள் கண்ணியமான வாழ்க்கை வாழ வழி ஏற்படுத்தப் பட்டுள்ளது. கிராமங்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்களைத் தொடங்கி இருக்கிறோம். இப்போது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் முடிந்த வரையில் அதிகமாக ‘ஆயுஷ்மான்’ திட்டம் செயல்படுத்தப் படுகிறது.

அன்பார்ந்த நாட்டு மக்களே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் தான் நமது ஜனநாயகத்தின் உண்மையான வலிமை இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் புதிய காலக்கட்டத்துக்கான வளர்ச்சிப் பணிகளில் உணர்வுபபூர்வமாக, தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதற்கா, அந்த கிராமங்களின் தலைமை நிர்வாகிகளைப் பாராட்டுகிறேன். உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியின் தலைமையில் ஜம்மு காஷ்மீர் எல்லை மறுவரையறைப் பணிகள் நடந்து வருகின்றன. சீக்கிரத்தில் இப்பணிகளை முடித்து, தேர்தல் நடத்த விரும்புகிறோம். ஜம்மு காஷ்மீரில் அதற்கான எம்.எல்.ஏ.க்கள் தேற்வு செய்யப்பட்டு, முதல்வர், அமைச்சரவை உருவாகி, புதிய துடிப்புடன் வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறோம். இதில் இந்தியா முழுமையாக உறுதி பூண்டுள்ளது. இதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

லடாக் மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்து, துணிச்சலான நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இமயமலையின் உயரமான பகுதியில் இருக்கும் லடாக், புதிய உச்சங்களைத் தொடும் பயணத்தில் முன்னேறி வருகிறது. மத்திய பல்கலைக்கழகம் அமைக்கவும், புதிய ஆராய்ச்சி மையங்கள் அமைக்கவும், ஓட்டல் மேலாண்மையில் புதிய படிப்புகள் தொடங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 7,500 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையம் உருவாக்கும் திட்டமும் இருக்கிறது. அன்பார்ந்த நாட்டு மக்களே, லடாக்கில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. நாம் அதைப் பாதுகாப்பது மட்டுமின்றி, பேணி வளர்க்கவும் வேண்டும். வடகிழக்கில் ஆர்கானிக் மாநிலம் என சிக்கிம் முத்திரை பதித்திருப்பதைப் போல, லடாக், லே மற்றும் கார்கில் பகுதிகள் கார்பன் உற்பத்தி இல்லாத பகுதிகளாக உருவாக வாய்ப்புகள் உள்ளன. உள்ளூர் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப, வளர்ச்சிக்கான புதிய முன்மாதிரியை உருவாக்கு இந்திய அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது.

அன்பார்ந்த நாட்டு மக்களே, சுற்றுச்சூழலை சமன் செய்வதன் மூலம்தான் வளர்ச்சி நோக்கிய பயணம் சாத்தியமாகும் என்பதை இந்தியா காட்டியுள்ளது. இப்போது, ஒரே உலகம், ஒரே சூரியன், ஒரே தொகுப்பு, குறிப்பாக சூரியமின் சக்தியில் ஒரே தொகுப்பு என்ற தொலைநோக்குச் சிந்தனையில் ஒட்டுமொத்த உலகுக்கும் இந்தியா உத்வேகம் தந்துள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் மூலம் மின் உற்பத்தி செய்வதில் முதல்நிலையில் உள்ள ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. சுற்றுச்சூழல் பிரச்சினைகளை இந்தியா அறிந்துள்ளது. அதற்கான தீர்வுகளை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. தூய்மை பாரதம் திட்டம், புகையில்லா சமையல் எரிவாயு திட்டம், எல்.இ.டி. மின்விளக்கு திட்டம், சி.என்.ஜி. அடிப்படையிலான போக்குவரத்து, மின்சார வாகனம் என சாத்தியமான அனைத்து வழிகளையும் இந்தியா கையாண்டு வருகிறது.

பெட்ரோல் பயன்பாடு காரணமாக ஏற்படும் மாசுபாட்டைக் குறைப்பதற்கு, எத்தனால் பயன்பாட்டை ஊக்குவிக்க முக்கியத்துவம் அளித்து வருகிறோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எத்தனால் பயன்பாட்டில் நமது நாட்டின் நிலைமை என்ன? ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 40 கோடி லிட்டர் எத்தனால் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. இப்போது, கடந்த ஐந்தாண்டுகளில், இதன் உற்பத்தி ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. இப்போது நமது நாடு 200 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்கிறது. நமது சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இது உதவிகரமாக உள்ளது.

அன்பார்ந்த நாட்டு மக்களே, தேர்ந்தெடுக்கப்பட்ட 100 நகரங்களில் ஒருங்கிணைந்த அணுகுமுறை, நவீனத் தொழில்நுட்பத்துடன், மக்கள் பங்கேற்புடன், மாசுபாட்டைக் குறைக்க முழுமையான அணுகுமுறைகளை உருவாக்கி வருகிறோம். அன்பார்ந்த நாட்டு மக்களே காட்டுப் பகுதிகள் விரிவடைந்து கொண்டே வருகிறது என்று பெருமையுடன் சொல்லக்கூடிய வெகு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பல்லுயிர்ச் சூழலைப் பெருக்க, பாதுகாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது. புலிகள் பாதுகாப்பு திட்டம், யானைகள் பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றை நாம் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம்.

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இனிவரும் நாட்களில் ஆசிய சிங்கங்களைப் பாதுகாப்பதற்காக சிங்கங்கள் பாதுகாப்பு திட்டம் ஒன்றையும் தொடங்க உள்ளோம். சிங்கங்கள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், இந்தியச் சிங்கங்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பணிகள், குறிப்பாக சிறப்பு சுகாதாரக் கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். சிங்கங்கள் பாதுகாப்புத் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

மேலும் ஒரு பணியை மேற்கொள்ள இருக்கிறோம். அதுதான் - டால்பின்கள் பாதுகாப்புத் திட்டம். ஆறுகளில் வாழும் டால்ஃபின்; கடல்களில் வாழும் டால்ஃபின்; ஆகிய இருவகை டால்பின்களைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தப்படும். இதனால் பல்லுயிர் பன்முகச் சூழல் மேம்பாடு அடையும். வேலைவாய்ப்புகள் உருவாகும். இதனால் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தலங்கள் உருவாகும். இந்தத் திசையிலும் நாம் முன்னேறிச் செல்கிறோம்.

அன்பார்ந்த நாட்டு மக்களே, ஓர் அசாதாரண இலக்கை நோக்கி, அசாதாரணப் பயணம் மேற்கொள்ளும் போது, பாதை முழுதும் சவால்கள் நிறைந்ததாக, அந்த சவால்களும் அசாதாரணமாக இருக்கத்தான் செய்யும். சமீப காலத்தில், பல துன்பங்கள் ஏற்பட்ட போதிலும், எல்லையில் ஏற்பட்ட விபத்துக்கள் நாட்டுக்குச் சவாலாக அமைந்தன. நமது நாட்டின் இறையாண்மையை அச்சுறுத்த முயற்சிப்பவர் யாராக இருந்தாலும், அது எல்லைக் கட்டுப்பாடுக் கோடான ‘லைன் ஆஃப் கன்ட்ரோல்’ முதல் ‘லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல்’ வரை நம் நாட்டு ராணுவம், நமது துணிவுமிக்க இராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.

இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாக்க, நிலை தடுமாறா அர்ப்பணிப்பு உணர்வுடன் முழு நாடும், உறுதிய்டன் தொடர்ந்து முன் செல்கிறது. நம் நாடு தனது உறுதியைப் பாதுகாத்துக் கொள்வதற்காக என்ன செய்யும் என்பதை லடாக்கில் நம் துணிச்சல் மிக்க ஜவான்கள் செய்த செயல்களில் இருந்து உலகம் தெரிந்து கொண்டது. நம் தாய் நாட்டுக்காக தமது இன்னுயிரைத் தியாகம் செய்த துணிவு மிக்க அனைவருக்கும், இராணுவ வீரர்களுக்கும் இன்று இந்த செங்கோட்டையில் இருந்து மரியாதை செலுத்துகிறேன்.

தீவிரவாதம் அல்லது எல்லை ஆக்கிரமிப்பு (தனது நாட்டை விரிவுபடுத்தும் நோக்கம்) என்று எதுவாக இருந்தாலும், அதை எதிர்த்து, இந்தியா துணிச்சலுடன் போராடும். இன்று இந்தியா மீது உலகம் வைத்திருக்கும் நம்பிக்கை மேலும் வலுப்பெற்றுள்ளது. சமீபத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்படுவதற்கு, 192 நாடுகளில் 184 நாடுகள் ஆதரவளித்தன. இது, ஒவ்வோர் இந்தியனும் பெருமைப்பட வேண்டிய செய்தியாகும். உலகில் நம்முடைய இடத்தை நாம் எவ்வாறு நிலைநிறுத்திக் கொண்டுள்ளோம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். இந்தியா வலிமையாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம். இந்தியா சக்தி வாய்ந்ததாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும். இந்த எண்ணங்களுடன், பல தரப்புகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அன்பார்ந்த நாட்டுமக்களே, பாதுகாப்பு, வளர்ச்சி, நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், நம் அண்டை நாடுகள் நிலம் வழியாகத் தொடர்புள்ளவையாக இருந்தாலும், கடல் வழித் தொடர்புள்ளவையாக இருந்தாலும் — நம் அண்டை நாடுகளுடன் — ஆழ்ந்த உறவுகளை ஏற்படுத்தி வருகிறோம். இந்தியா தனது அண்டை நாடுகளுடன் காலங்காலமாகக் கொண்டுள்ள பழைய கலாச்சார, பொருளாதார, சமூக உறவுகளை மேலும் வலுப்படுத்த, தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

உலகில் உள்ள மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் தெற்காசியாவில் வாழ்கின்றனர். ஒத்துழைப்பு, இணைந்து செயல்படுதல் ஆகியவற்றின் மூலமாக இது போன்ற மிகப்பெரிய எண்ணிக்கை கொண்ட மக்களின் நலனுக்காக, எண்ணற்ற வாய்ப்புகளை நம்மால் உருவாக்க முடியும். ஏராளமான எண்ணிக்கை கொண்ட மக்களின் முன்னேற்றம், வளர்ச்சிக்கு இந்த மண்டலத்தில் உள்ள நாடுகளின் தலைவர்களுக்குக் கணிசமான பொறுப்பு உள்ளது. இந்த பொறுப்பைப் பூர்த்தி செய்யுமாறு தெற்காசியாவில் உள்ள அனைத்து மக்களையும், அரசியல் தலைவர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அறிவுஜீவிகளையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த மண்டலம் முழுதிலும் நிலவும் அமைதி, இசைவு -, மனித குலத்தின் நலனுக்கு உதவும். உலகம் முழுமைக்குமான நலன்கள் இதனுடன் பின்னிப் பிணைந்துள்ளன.

நம்முடைய புவியியல் எல்லைகளை நம் அண்டை நாடுகளுடன் மட்டுமல்லாமல், நம்மோடு மிக நெருங்கிய இசைவான உறவுகள் கொண்டவர்களோடும் பகிர்ந்து வருகிறோம். விரிவடைந்துள்ள அண்டைப் பகுதிகளிலுள்ள அனைத்து நாடுகளோடும் இந்தியா கடந்த சில ஆண்டுகளில், தனது உறவை மேலும் வலுவாக்கி உள்ளது. மேற்கு ஆசியாவில் உள்ள நாடுகளுடன் அரசியல், பொருளாதார, மனித உறவுகள், பன்மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளன; நம்பிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நாடுகளுடன் பொருளாதார உறவுகள், குறிப்பாக, எரிசக்தித் துறையில் உறவுகள் மிக முக்கியமானவை. இந்த நாடுகள் பலவற்றில் பெரும் எண்ணிக்கையிலான இந்திய மக்கள் பணிபுரிகின்றனர். கொரோனா நெருக்கடி காலத்தின் போது இந்தியாவின் கோரிக்கைக்கு மதிப்பளித்து, அந்நாடுகளில் இருந்த இந்திய சமுதாயத்தினருக்கு உதவியமைக்காக இந்த நாடுகள் அனைத்துக்கும் இந்தியா நன்றிக்கடன் பட்டுள்ளது. அவர்களுக்கு நான் தனிப்பட்ட முறையிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல் ASEAN நாடுகள், கிழக்கு மண்டலத்தில் நம்முடைய கடல்வழி அண்டை நாடுகள், சிறப்பு முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த நாடுகளோடு இந்தியாவுக்கு பல்லாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மத ரீதியான, கலாச்சார ரீதியான உறவுகள் உள்ளன. புத்தமதப் பாரம்பரியங்கள் நம்மை அவர்களுடன் இணைக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியா இந்த நாடுகளுடன் பாதுகாப்புத் துறையில் மட்டுமன்றி, கடல் செல்வங்கள் துறையிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளது.

அன்பார்ந்த மக்களே அமைதியை, ஒற்றுமையை நிலைநாட்டுவதில் இந்தியா வலுவாக உள்ளது. அதே போல பாதுகாப்புக் கருவிகளையும் இராணுவத்தையும் வலுப்படுத்துவதிலும் இந்தியா உறுதி பூண்டுள்ளது. பாதுகாப்பு உற்பத்தித்துறையில் சுயசார்பு இந்தியாவை உருவாக்க, மகத்தான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. நூற்றுக்கு மேற்பட்ட ராணுவக் கருவிகளை இறக்குமதி செய்வதற்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏவுகணைகள் முதல் இராணுவ ஹெலிகாப்டர்கள் வரை; தாக்குதல் ரைபிள்கள் முதல் போக்குவரத்து விமானங்கள் வரை; அனைத்துமே இந்தியாவில் தயாரிக்கப்படும்.

நம்முடைய தேஜஸ் , நவீன தேவைகளுக்கு ஏற்ப மேலும் கம்பீரமாக, விரைவானதாக, வலுவுள்ளதாகத் தயார்ப்படுத்தப் படுகிறது. நமது எல்லைகளிலும், கடலோரப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு வசதிகள், தேசியப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் எல்லா திசைகளிலும் தொடர்புகளை ஏற்படுத்த அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இமயமலைச் சிகரமாக இருந்தாலும், இந்துமாக் கடலில் உள்ள தீவுகள் ஆனாலும், எல்லா இடங்களிலும் தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு லடாக் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரை சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அன்பார்ந்த மக்களே, மிகப்பெரிய கடற்கரைப் பகுதி நம்மிடம் இருக்கிறது. 1,300க்கும் அதிகமான தீவுகள் நம்மிடம் இருக்கின்றன. சில குறிப்பிட்ட தீவுகளின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, துரித கதியில் அவற்றை மேம்படுத்தி வருகிறோம். கடந்த வாரம், ஐந்து நாட்களுக்கு முன்னர், அந்தமான் - நிகோபார் தீவுகளில் கடலுக்கடியில் ஆப்டிகல் ஃபைபர் கம்பிவடத் திட்டம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப் பட்டது. நீங்கள் பார்த்திருப்பீர்கள். தில்லி மற்றும் சென்னையைப் போலவே அந்தமான் - நிகோபார் தீவுகளுக்கும் தற்போது இணைய வசதி கிடைக்கும். லட்சத்தீவுகளும் இதே முறையில் இணைக்கப்படுவதை நோக்கி விரைந்து முன்னேறுகிறோம். அடுத்த 1000 நாட்களில் லட்சத்தீவுகளுக்கு அதிவேக இணைய இணைப்பை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியுடன், கடற்கரைப் பகுதிகள், எல்லையோரத்தில் வாழ்ந்து வரும் இளைஞர்களை மனதில் கொண்டு, வளர்ச்சித் திட்டங்கள், நடவடிக்கைகளை முன்னெடுத்து, பெரிய இயக்கத்தைத் தொடங்குகிறோம்.

நமது எல்லைப் புறங்களில் மற்றும் கடற்கரை ஓரங்களில் உள்ள 173 மாவட்டங்கள் இன்னொரு நாட்டின் எல்லையுடனோ அல்லது கடற்கைரையுடனோ தங்களது எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. வரும் நாட்களில், இந்த எல்லையோர மாவட்டங்களில் உள்ள இளைஞர்களுக்காக தேசிய மாணவர் படை விரிவுபடுத்தப்படும். எல்லையோரப் பகுதிகளில் இருக்கும் சுமார் ஒரு லட்சம் தேசிய மாணவர் படை உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளிப்போம். அதில் மூன்றில் ஒரு பங்கு, நமது மகள்களாக இருக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் செயல்படுகிறோம். இந்த

எல்லையோர உறுப்பினர்களுக்கு ராணுவம் பயிற்சி அளிக்கும். கடற்கையோர மாணவர்களுக்கு கடற்படை பயிற்சி அளிக்கும், மற்றும் எங்கெல்லாம் விமானப்படைத் தளம் இருக்கிறதோ, அங்கு மாணவர்களுக்கு விமானப்படைப் பயிற்சி அளிக்கும். எல்லைப்புற மற்றும் கடற்கையோர மாவட்டங்களுக்கு, பேரிடர் மேலாண்மையில் பயிற்சி பெற்ற மனித சக்தி கிடைப்பதோடு, பாதுகாப்புப் படைகளில் பணி புரியவும் இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி கிடைக்கும்.

அன்பார்ந்த மக்களே, செங்கோட்டையில் கடந்த ஆண்டு நான் ஆற்றிய உரையின் போது, ஏற்கனவே சொல்லப்பட்ட சிலவற்றை நிறைவேற்ற, சில லட்சியங்களை நிறைவேற்ற, அடுத்த ஐந்து ஆண்டுகள் செலவிடப்படும் என்று தெரிவித்திருந்தேன். கடந்த ஓர் ஆண்டிலேயே, பல்வேறு முக்கிய மைல்கற்களை நாடு எட்டியுள்ளது. காந்தியடிகளின் 150-வது பிறந்த ஆண்டில், திறந்தவெளிக் கழிப்பிடங்களில் இருந்து இந்திய கிராமங்கள் விடுதலை பெற்றது. தமது நம்பிக்கைகளின் காரணமாக அவதியுறும் அகதிகளுக்கான குடியுரிமை திருத்தச் சட்டமாக இருக்கட்டும், தலித்துகள்/ பிற்படுத்தப்பட்டோர்/ பட்டியல் வகுப்பினர்/ பழங்குடியினர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு உரிமைகளாக இருக்கட்டும், அசாம் - திரிபுரா உடனான வரலாற்று சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தமாக இருக்கட்டும், பாதுகாப்புப் படைகளின் ஒருங்கிணைந்த சக்தியை இன்னும் செயல்திறன் மிக்கதாய் ஆக்க முப்படைகளின் தலைமைத் தளபதி நியமனமாகட்டும், மிகக் குறுகிய காலத்தில் கர்தார்பூர் சாகிப் நெடுஞ்சாலையைக் கட்டமைத்தது ஆகட்டும், வரலாறுகள் எழுதப்படுவதை, செயற்கரிய சாதனைகள் செய்யப்படுவதைக் கடந்ஓராண்டில் பார்த்தோம்.

பத்து நாட்களுக்கு முன்னர், பகவான் ராமருக்கு அற்புதமான ஆலயம் கட்டும் பணி தொடங்கியது. பல காலமாக நீடித்த ராம ஜென்மபூமி பிரச்சினைக்கு சுமூக முடிவு எட்டப்பட்டது. இந்திய மக்கள் முன்மாதிரியான கட்டுப்பாடையும், ஞானத்தையும் பொறுப்பான முறையில் வெளிப்படுத்தினர். இது முன்னெப்போதும் நடந்திராத, வருங்காலத்துக்கான உத்வேகக் காரணி ஆகும். அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம்- தற்சார்பு இந்தியாவின் வலிமைகளாக இருக்கும். இந்த நல்லிணக்கம் மற்றும் நன்மதிப்பு, வளமிக்க எதிர்கால இந்தியாவுக்கான உத்தரவாதம் ஆகும். இதே நல்லிணக்கத்தோடு நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். வளர்ச்சிக்கான இந்த மாபெரும் வேள்விக்காக ஒவ்வொரு இந்தியரும் ஏதாவது ஒன்றைத் தியாகம் செய்ய வேண்டும்.

புதிய கொள்கை, புதிய செயல்முறையுடன் இந்தப் பத்தாண்டில் இந்தியா பயணிக்கும். சாதாரண விஷயங்கள் இனி உதவாது. சராசரி எண்ணம் போதுமானதாக இருந்த காலம் கடந்துவிட்டது. உலகில் உள்ள யாருக்கும் நாம் சளைத்தவரில்லை. நாம் சிறந்தவர்களாகத் திகழப் பாடுபடுவோம். உற்பத்திகளில் சிறந்தவர்களாய்த் திகழ, மனித வளத்தில் சிறந்தவர்களாகத் திகழ, ஆளுகையில் சிறப்பானவர்களாய் இருக்க நாம் பணியாற்ற வேண்டும். இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்துக்குள் அனைத்துத் துறைகளிலும் சிறந்ததை சாதிக்கும் லட்சியத்துடன் முன்னேற வேண்டும்.

நமது கொள்கைகள், செயல்முறைகள், பொருள்கள்- அனைத்துமே தரம் வாய்ந்ததாக, சிறந்தவையாக இருந்தால் தான் ‘ஒரே இந்தியா, சிறந்த இந்தியா’ லட்சியத்தை நாம் அடைய முடியும். நமது சுதந்திரத்துக்காகத் தமது இன்னுயிரைத் தியாகம் செய்தவர்களின் கனவுகளை நனவாக்க, இன்று நாம் மீண்டும் ஒருமுறை சபதம் எடுத்துக் கொள்வோம். நமது வருங்கால சந்ததியினருக்காக, அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்துக்காக, தற்சார்பு இந்தியாவுக்காக இந்த உறுதிமொழியை 130 கோடி மக்களும் இந்த உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். இறக்குமதிகளைச் சார்ந்திருப்பதை குறைத்துக் கொள்வோம், சிறு தொழில்களை முன்னேற்றுவோம்; உள்ளூர்ப் பொருள்களை ஆதரிப்போம் என்றும் நாம் உறுதி எடுத்துக் கொள்வோம். புதுமைகளை அதிக அளவில் புகுத்தி, நமது இளைஞர்கள், பெண்கள், பழங்குடியினர், பட்டியல் பிரிவினர், குறிப்பாக மாற்றுத் திறனாளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளோர், கிராமங்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அனைவருக்கும் அதிகாரம் அளிப்போம்.

இந்தியா இன்று, சாத்தியமற்றதை, அசாத்திய வேகத்தில் சாத்தியமாக்கி உள்ளது. இதே மனவலிமை, அர்ப்பணிப்பு, வேட்கையோடு ஒவ்வோர் இந்தியரும் முன்னேறிச் செல்ல வேண்டும். விரைவில், நமது விடுதலையின் 75-வது ஆண்டை 2022-இல் கொண்டாட இருக்கிறோம். அதற்கு வெகு அருகில் இருக்கிறோம். நாம் கடுமையாக உழைக்க வேண்டும். 21-ஆம் நூற்றாண்டின் இந்த மூன்றாவது பத்தாண்டுக் காலம், நமது கனவுகளை நனவாக்கும் பத்தாண்டாக இருக்க வேண்டும். கொரோனா, பெரும் தடை தான்; ஆனால் தற்சார்பு இந்தியாவுக்கான வெற்றிப் பாதையில் நாம் முன்னேறி செல்வதைத் தடுக்கும் அளவுக்கு அது ஒன்றும் அத்தனை பெரிதல்ல.

இந்தியாவுக்கான புதுயுகத்தின் விடியல், புதிய தன்னம்பிக்கையின் உதயம், தற்சார்பு இந்தியாவின் நல்விளைவுகள் – கண்ணெதிரே தெரிகின்றன. எனது மனமார்ந்த சுதந்திரதின நல்வாழ்த்துகளை அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நமது கைகளை உயர்த்தி, நமது சக்தியை ஒன்று திரட்டிச் சொல்லுவோம்:- பாரத் மாதாகி ஜே! பாரத் மாதா கி ஜே! பாரத் மாதா கி ஜே! வந்தே மாதரம், வந்தே மாதரம், வந்தே மாதரம்.. ஜெய்ஹிந்த், ஜெய்ஹிந்த்!

(தொடருவோம்...)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x