Published : 26 Apr 2024 05:11 PM
Last Updated : 26 Apr 2024 05:11 PM

செங்கோட்டை முழக்கங்கள் 72 - ‘விண்ணைத் தாண்டி உயரும் நேரம்!’ | 2018

எப்போதுமே வலுவான கொள்கைகளுடன் வெற்றி பெற்று, ஒரு மாபெரும் தேசத்தை வழி நடத்த வரும் தலைமைக்கு, நாட்டின் எதிர்காலம் பற்றிய மகத்தான கனவு இருக்கவே செய்யும். அதிலும், செயல் வேகம் மிக்க தலைமை என்றால்… சொல்லவே தேவையில்லை.

72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு (2018) டெல்லி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் தமிழாக்கம் இது: எனதருமை நாட்டுமக்களே, இந்த புனிதமான சுதந்திர தினத்தன்று உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நம் நாட்டில் தன்னம்பிக்கை நிரம்பி உள்ளது. கனவுகளை மெய்யாக்கும் மனவுறுதியுடன் கடினமாக உழைத்து புதிய உயரங்களை நாடு எட்டி வருகிறது. இன்றைய காலைப் பொழுது, நமக்கு புதிய எழுச்சி, புதிய உற்சாகம், புதிய ஆர்வம், புதிய சக்தியைக் கொண்டு வந்துள்ளது.

எனது அருமை நாட்டுமக்களே, நமது நாட்டில் 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் நீலக் குறிஞ்சி மலர் உண்டு. நமது சுதந்திர தினமான இன்று, மூவண்ணத்தின் நடுவே அசோக சக்கரம் போல, தென் நீலகிரி மலைகளில் நீலக் குறிஞ்சி மலர் பூத்துக் குலுங்குகிறது. எனது அருமை நாட்டு மக்களே, உத்தராகண்ட், இமாச்சலபிரதேசம், மணிப்பூர், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த நம் மகள்கள் ஏழு கடல்களைச் சுற்றி வந்துள்ள நிலையில் இந்த சுதந்திர தினத்தை நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். அவர்கள் ஏழு கடல்களின் நிறத்தை நமது மூவண்ணத்துக்கு மாற்றி (ஏழு கடல்களிலும் மூவண்ணக்கொடியை ஏற்றி) நம்மிடையே வீரத்துடன் திரும்பி வந்துள்ளனர்.

எனது அருமை நாட்டு மக்களே, எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறும் சாதனை பலமுறை நிகழ்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த சுதந்திர தினத்தை நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். நமது துணிவு மிக்க பலரும், நமது புதல்விகளும் எவரெஸ்ட் சிகரத்தில் மூவண்ணக் கொடி ஏற்றியிருக்கிறார்கள். நமது வனப்பகுதிகளில் கடைக்கோடிப் பகுதிகளில் வாழும் பழங்குடி இனக் குழந்தைகள் நமது மூவண்ணக் கொடியை இமயமலை சிகரத்தில் ஏற்றியதன் மூலம் அவர்களின் புகழை விரிவுபடுத்தி உள்ளனர் என்பதை இந்த சுதந்திர தின விழாவில் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

எனது அருமை நாட்டு மக்களே, சமீபத்தில் நிறைவடைந்த மக்களவை மற்றும் மாநிலங்களவைக் கூட்டத் தொடர், சீரான முறையில் நடைபெற்றதைப் பார்த்திருப்பீர்கள். ஒரு வகையில் இந்தத் தொடர், முழுமையாக சமூக நீதி நோக்கத்துக்கு அர்ப்பணிக்கும் வகையில் அமைந்தது. அதிகபட்ச அக்கறை மற்றும் எச்சரிக்கை உணர்வுடன் நமது நாடாளுமன்றம், தலித் மக்கள், வஞ்சிக்கப்பட்டவர்கள், சுரண்டலுக்கு உள்ளானோர் மற்றும் மகளிர் என யாராக இருந்தாலும் அவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், சமூக நீதிக் கட்டமைப்பை வலுப்படுத்தி உள்ளது.

இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு சாசன அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வந்தது. இந்த முறை நமது நாடாளுமன்றம் அந்த ஆணையத்துக்கு சாசன அந்தஸ்து வழங்கியுள்ளது. இதனைச் செய்ததன் மூலம், பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்கள் பாதுகாக்கப் பட்டுள்ளன. சுதந்திர நாளைக் கொண்டாடும் இத்தருணத்தில், செய்தி அறிக்கைகள் நம் நாட்டில் புதிய விழிப்புணர்வைக் கொண்டு வந்துள்ளது. இன்று, உலகின் எந்த மூலையில் உள்ள இந்தியரும் தற்போது உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ந்துள்ளதைக் கண்டு பெருமை கொள்கிறார். இதுபோன்ற நேர்மறையான சம்பவங்களின் நடுவே இன்று நாம் சுதந்திர தின விழாவைக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம்.

நமது நாடு விடுதலை பெறுவதற்காக, நமது தேச தந்தையின் தலைமையில் பல லட்சம் பேர் தங்களின் இளமைக் காலத்தை சிறையில் கழித்தனர்; தம் வாழ்வையே அர்ப்பணித்தனர். துணிச்சல் மிக்க மாபெரும் புரட்சியாளர்கள் பலர், தூக்கு மேடையைத் தழுவியுள்ளனர். எனது நாட்டு மக்களின் சார்பில், துடிப்பு மிக்க சுதந்திரப் போராட்ட வீரர்களை, எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து வணங்குகிறேன். தேசியக் கொடியான மூவண்ணக் கொடியின் பெருமை, கண்ணியத்தைக் காக்கவும், மக்களுக்கு சேவை புரியவும் நாள்தோறும் நமது ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறை வீரர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து வருகின்றனர். எனது வாழ்த்துகள் என்றும் அவர்களோடு இருக்கும்.

நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடும் மழை மற்றும் வெள்ளம் குறித்த செய்திகளைக் கேட்டு வருகிறோம். வெள்ளம் காரணமாக தங்களது அன்புக்கு உரியவர்களை இழந்து, ஏராளமான துயரங்களைச் சந்தித்த மக்களுடன் இந்த நாடு இருக்கிறது; அவர்களுக்கு உதவும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் மறுபடியும் உறுதி செய்ய விரும்புகிறேன். தங்களது அன்புக்கு உரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இதயபூர்வமான இரங்கல்.

எனதருமை நாட்டு மக்களே, அடுத்த ஆண்டு - ஜாலியன்வாலா பாக் படுகொலையின் 100-வது ஆண்டைக் குறிப்பதாகும். நாட்டின் விடுதலைக்காக ஏராளமானோர் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். ஜாலியன்வாலா பாக் சம்பவத்தில் அந்த துடிப்பான இதயங்கள் செய்த தியாகங்கள் நமக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. அந்த துடிப்புமிக்க இதயங்களை எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து வணங்குகிறேன்.

அன்பார்ந்த நாட்டு மக்களே, நமது சுதந்திரத்துக்காக நாம் பெரும் விலை கொடுத்திருக்கிறோம். நமது தேசப்பிதா மற்றும் புரட்சியாளர்கள் தலைமையில் நடைபெற்ற சத்யாகிரகம் போன்ற பல்வேறு போராட்டத்தில் பல்வேறு மக்கள் துணிச்சலாகப் போராடியுள்ளனர். இந்தப் போராட்டங்களின் போது சிறை தண்டனை போன்ற பல்வேறு துயரங்களை சந்தித்து, மகத்தான இந்தியா எனும் கனவினை நனவாக்கினார்.

பல ஆண்டுகளுக்கு முன்பே தேசிய கவி சுப்பிரமணிய பாரதி, தனது தொலைநோக்குப் பார்வையை இவ்வாறு கூறினார்: “எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகுக்கு அளிக்கும்.” சுதந்திரத்துக்கு பிறகான இந்தியா குறித்த அவரது கனவு என்ன..? அடிமைத்தனத்தின் எல்லா வடிவங்களில் இருந்தும் விடுதலை பெறும் வழியை இந்தியா உலகுக்கு காட்டும். அனைத்து விதமான கட்டுப்பாடுகளில் இருந்தும் விடுதலை பெறுவதற்கான வழியை உலகத்திற்கு இந்தியா காண்பிக்கும் என்றார் மகாகவி சுப்பிரமணிய பாரதி.

அன்பார்ந்த நாட்டு மக்களே, சுதந்திரத்துக்குப் பின்னர், மாபெரும் தலைவர்களின் கனவுகளை மெய்யாக்கும் வகையில், விடுதலைப் போராட்ட வீரர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில், நாட்டு மக்களின் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், மரியாதைக்குரிய பாபா சாஹேப் அம்பேத்கர் தலைமையில், எல்லாவற்றையும் உள்ளடக்கிய சாசனம் வடிக்கப்பட்டது. இந்தச் சாசனம், புதிய இந்தியாவை நிர்மாணிக்கும் மனவுறுதியின் முன்னோடியாகும். இது நமக்கு, சில பொறுப்புகளையும், சில வரையறைகளையும் கொண்டு வந்தது. முன்னேற்றத்துக்கான நமது முயற்சியில், இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவும் சம வாய்ப்பு பெற வேண்டும் என்று கூறியதன் மூலம், நமது கனவுகளை மெய்யாக்குவதில் நமது சாசனம் நமக்கு வழி காட்டுகிறது.

சகோதர சகோதரிகளே, நமது மூவண்ணக் கொடியில் இருந்து நாம் உத்வேகம் பெற, சாசனம் நமக்கு வழி காட்டுகிறது. ஏழைகளுக்கு நீதி, முன்னேறுவதற்கு எல்லாருக்கும் சமவாய்ப்பு ,கீழ் நடுத்தர வர்க்கம், நடுத்தர வர்க்கம், மேல் நடுத்தர வர்க்கம் ஆகியோர் வளர்ச்சியில் தடைகள் இருத்தல் கூடாது, அவர்களின் வழியில் அரசு குறுக்கிடக் கூடாது, சமூக அமைப்புகள் அவர்களின் கனவுகளைத் தடுக்கக் கூடாது ஆகியவற்றை உறுதி செய்வதை சாசனம் குறிக்கிறது. அவர்கள் வளர்வதற்கு, மலர்வதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் நல்கும் சூழலை நாம் உருவாக்க வேண்டும்; அவர்கள் வரம்பின்றி வளம் பெற அனுமதிக்க வேண்டும்.

முதியோர், மாற்றுத்திறனாளிகள், மறுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்கள், காடுகளில் வாழும் ஆதிவாசி சகோதரர்கள் ஒவ்வொருவரும் அவரவர் நம்பிக்கைகள், விருப்பங்களுக்கு ஏற்ப, வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பெற வேண்டும். அன்பார்ந்த நாட்டு மக்களே, நான் ஏற்கனவே டீம் இந்தியாவின் நோக்கம் குறித்து பகிர்ந்துள்ளேன். 125 கோடி மக்களின் கனவுகள், கடின உழைப்பு மற்றும் விருப்பங்கள் ஒன்றாக வரும்போது, சாதிக்க முடியாதது எது?

எனது சகோதர சகோதரிகளே, 125 கோடி இந்தியர்கள் 2014-ம் ஆண்டு அரசை அமைத்ததுடன் மட்டும் நிற்காமல், இந்த நாட்டை சிறப்பானதாக ஆக்க அவர்கள் பாடுபட்டனர். இதுதான் இந்தியாவின் வலிமை. இன்று நாம் ஸ்ரீஅரவிந்தர் சுவாமிகளின் பிறந்த தினத்தைக் கொண்டாடி வருகிறோம். அவர் சில முக்கியமான கருத்துகளை முன்வைத்துள்ளார். நாடு என்றால் என்ன? நமது தாய்நாடு என்றால் என்ன? இது ஒரு சிறிய நிலப்பகுதியோ, ஓர் அடையாளமோ, அல்லது கற்பனையோ அல்ல. நாடு என்பது பல்வேறு அமைப்புகளின் மிகச் சிறந்த சக்தியினால் உறுதியான வடிவில் அமைக்கப்பட்ட களஞ்சியம். ஸ்ரீஅரவிந்தர் சுவாமிகளின் இந்த சிந்தனைதான் நமது நாட்டை ஒற்றுமைப்படுத்தி முன்னெடுத்துச் செல்கிறது.

நாம் எங்கிருந்து தொடங்கினோம் என்பதை அறிந்தால் அன்றி, நாம் முன்னேறிக் கொண்டுள்ளோம் என்பதைப் புரிந்து கொள்ள இயலாது. எங்கிருந்து தொடங்கினோம் என்பதைப்பாராமல், எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்பதைக் கணக்கிடுதல் சாத்தியம் இல்லை. 2013-ம் ஆண்டை அடித்தளமாகக் கொண்டு கடந்த நான்கு ஆண்டுகளில் என்னவெல்லாம் செய்யப்பட்டுள்ளது என்று பரிசீலித்துப் பார்த்தால், நாடு எத்தனை வேகமாக வளர்கிறது. எத்தனை விரைவாக வளர்ச்சி நிகழ்கிறது என்பதைக் கண்டு வியப்படைவீர்கள். கழிப்பறைகள் கட்டப்பட்டதைப் பருங்கள். 2013-ம் ஆண்டு வேகத்தில் செயல்பட்டிருந்தால், நூறு சதவீத இலக்கை எட்ட, பல பத்தாண்டுகள் பிடித்திருக்கும்.

ஒவ்வொரு பகுதியை மின்மயமாக்கவும், ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் அனைத்து மகளிருக்கும் இலவச சமையல் எரிவாயு இணைப்பு அளிக்கவும் நூற்றாண்டுகள் ஆகியிருக்கும். 2013ம் ஆண்டில் இருந்த வேகத்தில் நாம் செயல்பட்டிருந்தால் நாடு முழுவதும் கண்ணாடி இழை கேபிள் பதிக்க ஒட்டுமொத்தமாக ஒரு தலைமுறை தேவைப்பட்டிருக்கும். விரைந்த முன்னேற்றத்தைத் தக்க வைக்கப் பாடுபடுவோம்.

சகோதர சகோதரிகளே, நமது நாடு, மிகப் பெரும் எதிர்பார்ப்புகள், ஏராளமான தேவைகளைக் கொண்டுள்ளது. மத்திய அரசும் மாநில அரசுகளும் தொடர்ந்து நிலையாக சேர்ந்து பணியாற்றுவது அவசியமாகும். அதே நாடு, அதே மண், அதே காற்று, அதே வானம், அதே கடல், அதே அரசு அலுவலகங்கள், அதே கோப்புகள், முடிவெடுக்கும் நடைமுறையும் அதேதான். ஆனாலும் கடலளவு மாற்றத்தைக் காண்கிறோம்.

கடந்த நான்காண்டுகளாக நாடு ஒரு மாற்றத்தை அனுபவித்து வருகிறது. புது உற்சாகம், புது ஆற்றல், புது மனவுறுதி, புது உத்வேகம் நாட்டை முன்னெடுத்து வருகிறது. இன்றைய தினம் நமது நாட்டில் நெடுஞ்சாலைகள் இரண்டு மடங்கு கூடுதலாகவும், கிராமங்களில் வீடுகள் நான்கு மடங்கு கூடுதலலாகவும் கட்டப்பட்டு வருகின்றன. இந்த நாடு, சாதனை அளவு உணவு தானியங்களை உற்பத்தி செய்வதுடன் சாதனை அளவு கைப்பேசிகளைத் தயாரித்து வருகிறது. டிராக்டர் விற்பனை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சுதந்திரத்துக்குப் பின்னர் நாடு அதிக எண்ணிக்கையில் விமானங்களை வாங்கி வருகிறது. நாட்டில் புதிதாய் இந்திய மேலாண்மை நிறுவனங்கள், இந்திய தொழில்நுட்ப மையங்கள் மற்றும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சிறு இடங்களிலும் புதிய திறன் மையங்களை உருவாக்குவதன் மூலம் திறன்மேம்பாடு இயக்கத்திற்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் புதிய தொழில்கள் பெருமளவு தொடங்கப்பட்டுள்ளன.

சகோதர சகோதரிகளே, டிஜிட்டல் இந்தியா திட்டம் கிராமங்களிலும் தனது தடங்களைப் பதிக்க தொடங்கிவிட்டது. மக்களின் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்யும் நோக்கமுடைய அரசு, டிஜிட்டல் இந்தியா திட்டத்தை நனவாக்க வழிவகுத்து வருகிறது. அதேசமயம், மாற்றுத் திறனாளிகளுக்கான ‘பொதுவான குறியீடு’ கொண்ட அகராதியைத் தொகுக்கும் பணியை விரைவுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேளாண்துறையில் நவீனமயமாக்கல், புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நமது விவசாயிகள் நுண்ணீர்ப் பாசனம், சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்பாசன முறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். நமது ராணுவ வீரர்கள் பேரழிவில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அனுதாபத்துடனும் இரக்க உணர்வுடனும் உதவி செய்யும் வேளையில், மறுபுறம், எதிரிகளைக் குறிவைத்து துல்லியமான தாக்குதல் நடத்தும் வல்லமையும் பெற்றுள்ளனர்.

நீங்கள் கூர்ந்து கவனித்தால், நாம் புதிய குறிக்கோளுடன் செயல்பட்டு வளர்ச்சி அடைந்து வருவதை காணலாம். நான் குஜராத்தை சேர்ந்தவன். குஜராத்தியில் ஒரு வாசகம் உண்டு “நிஷான் சுக் மாஃப் லெக்னி நஹி மாஃப் நிச்சு நிஷான்” அதாவது ஒருவருக்குப் பெரிய நோக்கமும் கனவும் இருக்க வேண்டும் என்பதுதான் அதன் பொருள். அதேசமயம், நமது நோக்கம் தெளிவாக இல்லாவிட்டால், வளர்ச்சி அடைய முடியாது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் முடியாது. ஆகையினால் நம் நாட்டின் வளர்ச்சி தொடர, நமக்கு, பெரிய கனவுகளும், நோக்கங்களும் வேண்டும்.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய விலை கிடைக்கச் செய்ய உறுதி பூண்டுள்ளோம். பல்வேறு பயிர்களுக்கு, அவற்றின் இடுபொருள் செலவைக் காட்டிலும் 1.5 மடங்கு அளவுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப் பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. விவகாரத்தில் ஒருமித்த கருத்து இருந்தது. சிறு வணிகர்கள் உதவியுடன், அவர்களது வெளிப்படைத் தன்மை மற்றும் புதுமைகளை ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் காரணமாகவே ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நாட்டில் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது. இது வணிகர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கம்பெனி கலைப்பு மற்றும் திவால் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பினாமி சொத்து ஒழிப்புச் சட்டம் மிகுந்த துணிச்சலுடனும் நாட்டின் நலன் கருதியும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இராணுவ வீரர்களின் நீண்ட கால கோரிக்கையான ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அன்பார்ந்த சகோதர சகோதரிகளே கட்சி நலனுக்காக செயல்படுபவர்கள் அல்ல நாங்கள். தேச நலனே நமது முன்னுரிமை. எனவே, கடினமான முடிவுகளை எடுக்கும் ஆற்றல் கொண்டவர்களாய் இருக்கிறோம்.

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, இந்த உலகப் பொருளாதார யுகத்தில், இந்தியாவில் நிகழும் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் உலகம் முழுதும், மிகுந்த ஆர்வம், நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளுடன் பார்க்கிறது. சர்வதேச அமைப்புகள், உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள், இது விஷயத்தில் அதிகாரம் கொண்டவர்கள் ஆகியோர் 2014-க்கு முன்பாக, இந்தியாவைப் பற்றிப் பேசியதை நினைவுகூர்ந்து பாருங்கள். இந்தியப் பொருளாதாரம் அபாயகரமானது என்று நிபுணர்கள் கருதிய காலம் இருந்தது. ஆனால் அதே நிபுணர்களும் நிறுவனங்களும், நமது சீர்திருத்தங்கள், நமது பொருளாதார அடித்தளங்களை வலுப்படுத்தி உள்ளதாக நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர். எவ்வாறு மாறியது..? இந்தியாவின் ‘சிவப்பு நாடா’ (பாரபட்ச, தவறான செயல்போக்கு) குறித்து உலகம் பழி கூறிய காலம் இருந்தது. இப்போது ’சிவப்புக் கம்பளம்’ குறித்துப் பேசுகின்றனர்.

தொழில் தொடங்குவதை எளிமையாக்குவதில் இந்தியா 100-வது இடத்தை எட்டியுள்ளது. நமது சாதனையை உலகம் பெருமிதத்துடன் பார்க்கிறது. ‘கொள்கை முடக்கம்’,‘தாமதமான சீர்திருத்தங்கள்’ கொண்ட நாடாக இந்தியாவை உலகம் கருதிய காலம் இருந்தது. பழைய செய்தித்தாள்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. இன்று, இந்தியாவைப் பற்றிய உலகத்தின் அபிப்பிராயம் மாறி இருக்கிறது. இப்போது அவர்கள், சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் மீதான நமது கவனத்தைப் பற்றியே பேசுகிறார்கள். காலக்கெடுவுக்கு உட்பட்ட கொள்கை முடிவுகளில் இருந்து இது தொடர்கிறது.

ஒரு காலத்தில் ‘உடைந்து போகக் கூடிய’ ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியாவை உலகம் பார்த்தது. உலகப் பொருளாதாரத்தை இந்தியா கீழ் நோக்கி இழுப்பதாக அவர்கள் கவலைப்பட்டனர்; ஆனால் இப்போது, அவர்களின் குரல் மாறி விட்டது. பல்லாயிரம் கோடி டாலர் முதலீட்டுக்கான இடமாக இந்தியா மாறியுள்ளது.

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, இந்தியாவுடன் தொழில் உறவுமுறை வைத்துக் கொள்ளும் போது முதலீட்டாளர்கள், இங்கு நிலவிய கட்டுமான வசதி இன்மை, மின்வெட்டு, தடங்கல்கள் குறித்துப் புலம்புவார்கள். ‘தூங்கும் யானை’ என்று இந்தியாவைக் குறிப்பிட்ட அதே நிபுணர்கள் இன்று, தூங்கும் யானை விழித்துக் கொண்டு விட்டது; ஓடத் தொடங்கி விட்டது என்று கூறுகின்றனர். அடுத்த 30 ஆண்டுகளுக்கு உலகப் பொருளாதார வலிமைக்கு இந்தியா உத்வேகம் அளிக்கும் என்று உலகப் பொருளாதார நிபுணர்களும், அமைப்புகளும் கூறுகின்றனர்.

சர்வதேச அமைப்புகளில் இந்தியாவின் கெளரவம் உயர்ந்துள்ளது. தான் உறுபினராக இருக்கும் எல்லா அமைப்புகளீலும் இந்தியாவின் குரல் செவி மடுத்துக் கேட்கப் படுகிறது. செயல்பாடுகளை வடிவமைப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அமைப்புகளில் தலைமைத்துவப் பண்புகளை வழங்குகிறது. சர்வதேச அமைப்புகளில் நாம் குரல் எழுப்புகிறோம்.

அன்பார்ந்த நாட்டு மக்களே, முன்பெல்லாம், உலக அமைப்புகளில் உறுப்பினராக ஆவதற்கு இந்தியா பல ஆண்டுகள் காத்திருந்தோம். ஆனால் இன்று, இந்தியா பல்வேறு சர்வதேச அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் உலக வெப்பமயமாதல் குறித்து கவலை கொள்வோருக்கு இந்தியா நம்பிக்கை ரேகையாய்த் தெரிகிறது. இன்று, சர்வதேச சூரியமின்சக்திக் கூட்டணியில் இந்தியா முதன்மை இடத்தில் உள்ளது. உலகின் ஒவ்வொரு நாடும் தனது மண்ணில் இந்தியா காலடி பதிப்பதை ஆர்வத்துடன் வரவேற்கிறது.

இந்தியரைப் பார்க்கும் போது அவர்களின் விழிகளில் ஒரு புதிய விழிப்புணர்வு தெரிகிறது. இந்திய பாஸ்போர்ட்டின் வலிமை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இது, புது நம்பிக்கையுடன் முன்னேறுவதற்கு, ஒவ்வோர் இந்தியனுக்குள்ளும் புதிய தன்னம்பிக்கை, புது ஆற்றல் மற்றும் மனவுறுதியைச் செலுத்தியுள்ளது.

அன்பார்ந்த நாட்டு மக்களே, உலகின் எந்த பகுதியிலும் ஓர் இந்தியனுக்குப் பிரச்சினை என்றால், அவரைக் காக்க அவரது நாடு எல்லா முயற்சிகளும் எடுக்கும் என்று அவர் உறுதியோடு இருக்கலாம். இதற்கு, பல சமீபத்திய நிகழ்வுகள் சான்றாக உள்ளன. இந்தியா குறித்த உலகின் கருத்து மாறியுள்ளது போலவே, ‘தாம் அந்தப் பகுதியச் சேராதவராக இருந்திருக்கலாமே’ என்று ஒருவர் வருந்துகிறாற் போன்றே, வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வந்த செய்திகள் இருக்கும். ஆனால் இன்று சகோதர சகோதரிகளே, வட கிழக்கு மாநிலங்கள், நேர்மறையான உத்வேகம் தரும் கதைகளுடன் வருகின்றன. விளையாட்டுத் துறையில் வட கிழக்கு மாநிலங்கள் ஒளிர்கின்றன.

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, வடகிழக்கு மாநிலத்தில் உள்ள கடைசி கிராமமும் மின் இணைப்பு பெற்றுள்ளது; கிராமம் மொத்தமும் இரவு முழுதும் நடனம் ஆடி மகிழ்ந்தது. இதேபோன்று, நெடுஞ்சாலை, ரயில்வே, விமானப் போக்குவரத்து, நீர்வழி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளிலும் வடகிழக்கு மாநிலங்கள் முன்னேற்றம் அடைவதாக செய்திகளைக் கேட்கிறோம். வடகிழக்கு முழுதும் மின்சார ட்ரான்ஸ்மிஷன் லைன்கள் அமைக்கும் பணி வேகமாக வளர்ந்து வருகிறது.

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள், அவர்களது பகுதியில், பி.பி.ஓ.க்களை ஏற்படுத்தி வருகின்றனர். வடகிழக்கு மண்டலம், இயற்கை வேளாண் பகுதியாக மாறி வருகிறது. வடகிழக்கு மாநிலத்தில் விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் டெல்லி வெகு தொலைவில் இருப்பதாக வடகிழக்கு மாநிலங்கள் கருதி வந்தன. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில், தில்லியை வடகிழக்கு மாநிலங்களின் வாசற்படிக்குக் கொண்டு வந்துள்ளோம்.

சகோதர சகோதரிகளே, இன்று, நம் நாட்டின் மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்குக் குறைவானவர்கள். நம் நாட்டு இளைஞர்கள் குறித்து நாம் பெருமை கொள்ளலாம். பொருளாதாரத்தின் அத்தனை தகுதி நிலைகளையும் நம் நாட்டு இளைஞர்கள் முற்றிலுமாக மாற்றி விட்டனர். நாட்டின் வளர்ச்சிக்கு இவர்கள் புதுவண்ணம் பாய்ச்சி உள்ளார்கள். பெருநகரங்கள் மீது மட்டுமே வெளிச்சம்பட்ட காலம் இருந்தது. இன்று நம் நாடு, டயர் 2, டயர் 3 நிலை நகரங்கள் பற்றியும் பேசுகிறது.

கிராமப் பகுதிகளில் நவீன வேளாண்மையில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மீது கவனம் செலுத்துகிறோம். நம் நாட்டு இளைஞர்கள் வேலைகளின் தன்மையையே மாற்றி அமைத்து விட்டனர். ஸ்டார்ட் அப்ஸ், பி.பி.ஓ., மின்னணு வர்த்தகம், மொபிலிடி போன்ற புதிய துறைகளில் இளைஞர்கள் நாட்டைப் புதிய உயரத்துக்குக் கொண்டு செல்கின்றனர்.

அன்பார்ந்த நாட்டு மக்களே, 13 கோடி முத்ரா கடன்- பெருத்த சாதனையாகும். இவர்களில் நான்கு கோடி இளைஞர்கள் முதன்முறையாக கடன் உதவி பெற்று சுய வேலைவாய்ப்பு பெற்றிருப்பதுடன் சுயமாக முன்னேற்றம் அடைந்துள்ளனர். சூழ்நிலை மாறிவருவதற்கு இதுவே சிறந்த உதாரணம் ஆகும். நமது இளைஞர்கள், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 3 லட்சம் கிராமங்களில் பொது சேவை மையங்களை நிர்வகிப்பதுடன், அனைத்து கிராமங்கள் மற்றும் மக்களுக்கு உலகின் பிற பகுதிகளுடன் சில விநாடிகளிலேயே இணைப்பை ஏற்படுத்துகின்றனர்

சகோதர சகோதரிகளே, புதுமைகளைக் கண்டுபிடிக்கும் உத்வேகத்துடன் உள்ள நமது விஞ்ஞானிகளின் முயற்சியால், மீனவர்கள் மற்றும் இதர தரப்பினருக்கு பயனளிக்கக் கூடிய “நேவிக்” என்ற செயற்கைக் கோளை செலுத்தவிருக்கிறோம். நமது விஞ்ஞானிகள் ஒரே சமயத்தில் 100 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளனர். இது நம் அனைவருக்கும் பெரும் கவுரவத்தை அளித்துள்ளது. 2022ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்களுடன் கூடிய விண்கலத்தைச் செலுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்த சாதனையைப் புரியும் 4ஆவது நாடாக இந்தியா திகழும்.

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, நமது விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப உதவியாளர்களும் பெரும் சாதனையை படைத்துள்ளனர். நமது கிடங்குகள் அனைத்தும் உணவு தானியங்களால் நிரம்பியுள்ளன. இதற்காக நான் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். காலம் மாறிவிட்டது. தற்போது நமது விவசாயிகள் உலகளாவிய போட்டி மற்றும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். நமது வேளாண் முறைகளைத் தொழிநுட்ப உதவியுடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதற்காக நமது அரசு, வேளாண் துறையில் நவீன தொழில்நுட்ப முறைகளைப் புகுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது நாம் வேளாண்துறையை நவீனமயமாக்குவதில் கவனம் செலுத்திவருகிறோம். 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கத் தீர்மானித்துள்ளோம். அதனால், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க விவசாயிகளுடன் நாம் ஒன்றிணைந்து பணிபுரிந்து வருகிறோம். என்றும் நமது வாக்கைக் காப்பாற்றுவோம்.

நவீனமயமாக்கல் மூலம் வேளாண் துறையில் பங்களிப்பை அதிகரிக்க விரும்புகிறோம். விதை வழங்குதல் முதல் சந்தைப்படுத்துதல் வரை, மதிப்புக்கூட்டு நடைமுறையைப் பின்பற்ற விரும்புகிறோம். முதன்முறையாக, வேளாண் ஏற்றுமதி கொள்கைப் பாதையில் முன்னேற்றம் கண்டிருப்பதன் மூலம், உலக சந்தையில் நமது விவசாயிகள் வலுவான சக்தியாக திகழ்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

இயற்கை வேளாண்மை, நீலப் புரட்சி, இனிப்பு புரட்சி எனப்படும் தேனீ வளர்ப்பு, சூரிய சக்தி வேளாண்மை போன்ற புதிய துறைகளில், மேலும் முன்னோக்கிச் செல்ல முடிவு செய்துள்ளோம். நமக்கு மிகவும் பெருமை அளிப்பது என்னவென்றால், மீன்வளத்தைப் பொருத்தவரை இந்தியா, உலகின் இரண்டாவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது. தேன் ஏற்றுமதி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. எத்தனால் உற்பத்தி மூன்று மடங்கு அதிகரித்திருப்பது கரும்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கிராமப்புறப் பொருளாதாரத்தைப் பொருத்தவரை மற்ற துறைகளும் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. கிராமப் புறங்களுக்கான ஆதாரங்களை அதிகரிப்பதுடன், மகளிர் சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி, பல நூறு கோடி ரூபாய் கிடைக்கச் செய்துள்ளோம். கிராமங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். கதர் - நமது தேசத் தந்தையுடன் இணைந்திருப்பது. கதர்த் துணி விற்பனையும் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்பதை நான் பெருமையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இது ஏழைகளுக்கு வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சகோதர சகோதரிகளே, தற்போது நமது விவசாயிகள் சூரிய சக்தி விவசாயத்தில் கவனம் செலுத்துகின்றனர். இதன் காரணமாக விவசாயிகள் வேளாண்துறைக்கு உரிய பங்களிப்பை வழங்குவதுடன் சூரிய மின் சக்தியை விற்பனை செய்வதன் மூலம் வருவாய் ஈட்டவும் வகை செய்யப்பட்டுள்ளது. பொருளாதார முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியுடன், மனித வாழ்க்கை கண்ணியமானதாக அமைய வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறோம். எனவே, இதுபோன்ற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதன் மூலம், சாதாரண குடிமகனும் தனது வாழ்க்கையைப் பெருமிதம் கொண்டதாக, மரியாதை மற்றும் கண்ணியமான முறையில் மேற்கொள்ள முடியும்.

உஜ்வாலா திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு அளித்துள்ளோம். சௌபாக்யா திட்டம் மூலம் ஏழைகளுக்கு இலவச மின்சார இணைப்பு அளித்துள்ளோம். இப்போது, ‘ஷ்ராமவே ஜெயதே’ (பல்வேறு துறைகளின் பணிச் சூழலை மேம்படுத்துதல்) எனும் திசை நோக்கி நடை போடுகிறோம். சகோதர சகோதரிகளே, உலக சுகாதார அமைப்பு அறிக்கையின்படி, தூய்மை இயக்கம் மூலம், மூன்று லட்சம் குழந்தைகள் காப்பாற்றப் பட்டுள்ளனர். காந்தியடிகள் மேற்கொண்ட சத்தியாகிரகம் அளித்துள்ள உத்வேகத்தின் அடிப்படையில், தூய்மைப் பணியாளர்களை ஒன்று திரட்டுவதில் நாம் வெற்றியடைந்துள்ளோம். தூய்மை இந்தியா இயக்கத்தின் மூலம், காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாளின் போது, கோடிக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் அவருக்கு மரியாதை செலுத்த திட்டமிட்டுள்ளனர்.

சகோதர சகோதரிகளே, ஏழைகளுக்கு இலவச சுகாதார சேவைகளை வழங்குவதற்காக, மத்திய அரசு பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. தற்போது இந்தத் திட்டத்தின் மூலம், எந்த ஒரு நபரும் நல்ல மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெற வழிவகை ஏற்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 10 கோடி குடும்பங்கள் சுகாதாரக் காப்பீட்டுப் பலன்களைப் பெற முடியும். அதாவது, 50 கோடி மக்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும், ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை சுகாதார காப்பீடு கிடைக்கும்.

இதற்காக ஒரு தொழில்நுட்பம் உருவாக்கப் பட்டுள்ளது. அடுத்த ஐந்து, ஆறு வாரங்களில் இந்த தொழில்நுட்பம் நாடு முழதும் சோதித்துப் பார்க்கப்படும். இந்த திட்டத்தில் எந்தத் தவறும் ஏற்படாமல் இருப்பதை இது உறுதி செய்யும். பண்டித தீன் தயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு 2018 செப்டம்பர் 25 அன்று பிரதமரின் ஜன் ஆரோக்ய அபியான் திட்டம் தொடங்கப்படுவதன் மூலம், சாமானிய குடிமகனும் கொடிய நோய்கள் காரணமாக அவதிப்படுவது தவிர்க்கப்படும். நடுத்தரக் குடும்பத்தினர் மற்றும் இளைஞர்களுக்கு சுகாதாரத் துறையில் புதிய வாய்ப்புக்கள் உருவாகியுள்ளன. இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் புதிய மருத்துவமனைகள் கட்டப்படும். அதில், மருத்துவப் பணியாளர்கள் அதிக அளவில் நியமிக்கப்படுவார்கள். இதன் மூலம், வரும் ஆண்டுகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும்.

சகோதர, சகோதரிகளே, எந்த ஒரு ஏழையும், வறுமையான வாழ்க்கையை விரும்ப மாட்டார். எந்த ஒரு ஏழையும், ஏழையாகவே உயிரிழக்கவும் விரும்ப மாட்டார்.தங்களது குழந்தைகளுக்கும் ஏழ்மை தொடருவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.வறுமையிலிருந்து விடுபட வாழ்நாள் முழுவதும் போராடுவார்கள். ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.

கடந்த நான்காண்டுகளில் ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஐந்து கோடி ஏழை மக்கள் வறுமைக் கோட்டைத் தாண்டி விட்டதாக சர்வதேச அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் உள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், பத்து கோடி குடும்பங்கள் சுகாதார காப்பீட்டுப் பலன்களைப் பெற முடியும். அதாவது, 50 கோடி மக்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையவுள்ளனர். ஒவ்வொரு குடும்பத்துக்கும், ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை சுகாதாரக் காப்பீடு கிடைக்கும்.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாட்டின் மக்கள் தொகைக்கு இணையான நபர்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளனர். இது ஒட்டு மொத்த ஐரோப்பிய மக்கள் தொகைக்கும் இணையான எண்ணிக்கை உடையதாக இருக்கும்.
அரசிடமிருந்து பணம் செலவழிக்கப்படும் போதிலும் சில திட்டங்கள் ஏட்டளவிலேயே இருக்கும். ஆனால் அரசின் பணம் சுரண்டப்படும். இதைப் பார்த்த பிறகும், அரசால் கண்மூடிக் கொண்டு இருக்க முடியாது. குறைந்தபட்சம் என்னால் என் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது.

சகோதர, சகோதரிகளே, நமது நடைமுறையில் உள்ள குறைபாடுகளை ஒழிப்பதற்கு முன்பாக சாமானிய மக்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது அவசியம். மத்திய அரசாக இருந்தாலும், ம நில அரசாக இருந்தாலும் உள்ளாட்சி அமைப்பாக இருந்தாலும், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். ஊழல் முறைகேடுகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன்பு, ஆறு கோடி போலி பயனாளிகள், பலனடைந்து வந்தனர். இவர்களில் பலர், போலியான ரேஷன் கார்டுகள் மூலம், போலியான பெயர்களில் சமையல் எரிவாயு இணைப்பு பெற்று சலுகைகளை அனுபவித்து வந்தனர். சிலர் போலி பெயர்களில் கல்வி நிதியுதவி மற்றும் ஓய்வூதியங்களைப் பெற்று வந்தனர். பிறந்திராத எப்போதும் இருந்திராத பெயர்களில் போலி நபர்கள், சலுகை பெற்று வந்தனர்.

ஊழலுக்கான அனைத்து வழிகளையும் அடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. லஞ்ச ஊழலையும், கருப்புப் பணத்தையும் முற்றிலுமாக அகற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம் இந்தமுயற்சிகள் காரணமாக அரசின் கருவூலத்துக்கு ரூ 90,000 கோடி திரட்ட முடிந்தது. நாணயமானவர்கள் முறைப்படி வரியை செலுத்தி விடுகிறார்கள். அவர்களின் பங்களிப்பால் கிடைக்கும் வருவாய் மூலம், திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இந்த பெருமை வரிசெலுத்துவோரை சாருமே அன்றி அரசுக்கல்ல.

சகோதர, சகோதரிகளே, ஏழை மக்களுக்கு கவுரவத்தையும், பெருமையையும் ஏற்படுத்த அரசு பாடுபட்டு வரும் வேளையில், இடைத்தரகர்களுக்கு என்ன வேலை? வெளிச் சந்தையில் ஒரு கிலோ 24-25 ரூபாய்க்கு விற்கப்படும் கோதுமையை,ஏழைகளுக்கு அரசு 2 ரூபாய்க்கு ரேஷன் கார்டுகள் மூலம் விற்பனை செய்கிறது. ரூ. 30 - 32 விலையுள்ள அரிசி, 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. எனவே, போலி ரேஷன் கார்டுகள் மூலம், இந்த சலுகையை அனுபவிப்பவருக்கு ஒரு கிலோ கோதுமைக்கு ரூ.25 வரையிலும், ஒரு கிலோ அரிசிக்கு ரூ.35 வரையிலும் லாபம் கிடைத்தது.

அதே வேளையில் ஒரு ஏழை தமது ரேஷன் கார்டுடன் நியாய விலைக் கடைக்குச் சென்று பொருட்களைக் கேட்டால், அங்கிருக்கும் பணியாளர், பொருட்கள் இருப்பு தீர்ந்து விட்டதாகக் கூறுவார். அதன்பின் அந்த பொருட்கள் கடத்தப்பட்டு கடைகளில் விற்பனை செய்யப் படும்போது, நியாய விலைக் கடையில் பொருட்களை வாங்க முடியாத ஏழை, வெளிச் சந்தையில் அதிக விலைக் கொடுத்து வாங்க வேண்டியிருந்தது. எனவேதான், இதுபோன்ற கள்ளச்சந்தை முறை தற்போது ஒழிக்கப் பட்டுள்ளது. ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் உள்ளன. ஆனால்,இடைத்தரகர்கள் அந்த பலன்களை பறித்துச் செல்வதால், ஏழைகளால் அந்த பலன்களை அடையாத முடியாத நிலை உள்ளது.

சகோதர, சகோதரிகளே, நம் நாட்டில் உள்ள ஏழை மக்கள் ரூ.2 மற்றும் ரூ.3 விலையில் உணவுப் பொருட்களை பெற்று வருகின்றனர். இதற்காக அரசு பெருந்தன்மையுடன் செலவிட்டு வரும் வேளையில் அதற்குரிய அங்கீகாரம் அரசுக்குக் கிடைப்பதில்லை. நேர்மையாக வரி செலுத்துவோருக்கு நான் வணக்கம் தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் செலுத்தும் வரிப் பணத்தின் மூலம்தான் அரசின் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. எனவே, நீங்கள் நேர்மையாக வரி செலுத்துவதன் மூலம், நீங்கள் உங்கள் குடும்பத்தாருடன் சாப்பிடும் வேளையில், மூன்று ஏழை குடும்பங்களும் பசியாற சாப்பிட முடியும்.

நண்பர்களே, நேர்மையாக வரி செலுத்தும் ஒருவர், அவர் குளிரூட்டப்பட்ட அறையில் வசிப்பவராக இருந்தால் கூட, அவர் செலுத்தும் வரி மூலம் 3 ஏழைக் குடும்பங்கள் பயனடைகிறார்கள் என்பது அவரது மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். சகோதர,சகோதரிகளே, நாடு தற்போது நேர்மைத் திருவிழாவைக் கொண்டாடும் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 2013 ஆம் ஆண்டு வரை கடந்த 70 ஆண்டுகளில் நான்கு கோடி பேர் மட்டுமே நேரடி வரி செலுத்தி வந்தனர். ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 6.75 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த வித்தியாசத்தை நீங்கள் எண்ணிப்பாருங்கள்.

கடந்த 70 ஆண்டுகளில் 70 லட்சம் தொழில் நிறுவனங்கள் மட்டுமே மறைமுக வரி செலுத்தி வந்தன. ஆனால், ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு கடந்த ஓராண்டில் மட்டும் இந்த எண்ணிக்கை ஒரு கோடியே 16 லட்சமாக அதிகரித்துள்ளது. வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை ஏற்றுக் கொள்ளும் அனைவரையும் நான் வணங்குகிறேன். கருப்பு பணத்தையும், ஊழலையும் ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. தில்லி அதிகார வட்டத்தில் தற்போது, அதிகார தரகர்கள் யாரையும் நீங்கள் பார்க்க முடியாது.

அன்பார்ந்த நாட்டு மக்களே, காலம் மாறி விட்டது. மூடிய அறைக்குள் இருந்து கொண்டு, அரசின் கொள்கைகளை மாற்றப் போவதாக கூறி வந்தவர்கள் தற்போது ஓரம் கட்டப்பட்டுள்ளனர். வேண்டியவர்களுக்கு மட்டும் சலுகை அளிக்கும் நிலை ஒழிக்கப்பட்டு விட்டது. ஊழல் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படுகிறது. 3 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் மூடப்பட்டு, அவற்றின் நிர்வாகிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும் வருமானவரித் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப் படுகிறது. சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் பெருமளவு முறைகேடு நடைபெற்று வந்ததால், தற்போது அந்த நடைமுறைகள் வெளிப்படையாகவும், ஆன்லைன் மூலமாகவும் மேற்கொள்ளப்படுகின்றன.

நாட்டின் இயற்கை வளங்களை நியாயமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு பணியாற்றி வருகிறது.உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் 3 பெண் நீதிபதிகள் நாட்டுக்கு நீதி வழங்குவது, இந்தியப் பெண்களுக்கு கெளரவத்தை ஏற்படுத்தி உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மத்திய அமைச்சரவையிலும் தற்போதுதான் பெண் அமைச்சர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது.

அன்பார்ந்த நாட்டு மக்களே, ராணுவத்தில் குறுகிய காலப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட பெண் அதிகாரிகளுக்கு, ஆண்களுக்கு இணையாக நிரந்தர பணி வழங்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம், நாட்டுக்காகத் தங்களது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள பெண் வீராங்கனைகளுக்கு பரிசளிக்க விரும்புகிறேன். வலிமையான இந்தியாவை உருவாக்குவதில் நமது இளம் பெண்களும் சம பங்களிப்பை வழங்கி வருவது பெருமிதத்துக்கு உரியது.

வயல் வெளிகள் முதல் விளையாட்டு அரங்கு வரை நமது மகளிர் இந்திய மூவண்ணக் கொடியை உயர்த்திப் பிடிக்கிறார்கள். கிராமத் தலைவி முதல் நாடாளுமன்றம் வரை நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் பங்களிக்கிறார்கள். பள்ளிக் கூடங்கள் முதல் ஆயுதப் படைகள் வரை எல்லா இடத்திலும் அவர்கள் பீடு நடை போடுகிறார்கள் இப்படி எல்லாத் துறைகளிலும் பெருவாரியாக அவர்கள் முன்னேறிச் செல்லும் போது சில கொடூரமான சம்பவங்களையும் நாம் சந்திக்கிறோம். அரக்கத்தனமான சில சக்திகள் மகளிர் சக்திக்கு சவாலை உருவாக்குகின்றன. பாலின வன்கொடுமை வேதனைக்குரியது. அந்தக் கொடுமைக்கு உள்ளாகிறவர் அனுபவிக்கும் துன்பம் அதைவிடக் கொடுமையானது. இதனை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வேதனையின் தன்மையை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

சகோதர சகோதரிகளே, இந்த அரக்கத்தனமான மனப்போக்கிலிருந்து சமுதாயத்தை நாம் விடுவித்தாக வேண்டும். அண்மையில் மத்திய பிரதேசம் மாநிலம் காந்தினி நகரில், பாலின வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் ஐந்து நாள் நீதிமன்ற விசாரணைக்குப்பின் மரணதண்டனை விதிக்கப்பட்டார்கள். ராஜஸ்தானிலும் சிலர், இது போன்ற பாலின வன்கொடுமைக்காக சில நாள் விசாரணைக்குப் பின் மரணதண்டனை விதிக்கப்பட்டார்கள். இது போன்ற செய்திகள் மேலும் வரும் போது இத்தகைய அரக்கத்தனமான மனம் படைத்தவர்கள் அச்சம் கொள்வார்கள். இத்தகைய செய்திகளை நாம் வெளிப்படுத்த வேண்டும். பாலின வன்செயலில் ஈடுபடுவோர் தூக்குமேடைக்கு அனுப்பப்படுகிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியவேண்டும். இத்தகைய மனப்போக்கை முறியடிப்பது அவசியமாகிறது, அத்தகைய சிந்தனையையே களையெடுக்க வேண்டும், இது போன்ற சபலங்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

சகோதர சகோதரிகளே, இந்த அரக்கத்தனமான மனோநிலைதான் மன்னிக்க முடியாத குற்றங்களுக்கு இட்டுச்செல்கிறது. சட்டத்தின் ஆட்சிதான் நமக்கு பிரதானம். அதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை. சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். குடும்பத்தில் பள்ளிகளில், கல்லூரிகளில் புதிய தலைமுறையான நமது குழந்தைகள், மாசற்ற அந்த சின்னஞ்சிறுசுகள் நமது பண்புகளைக் கற்றுக் கொள்ளும் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். அத்தகைய சூழ்நிலை அவர்களுக்கு புதிய விழுமியங்களைக் கற்றுத் தரும். பெண்களை மதிப்பதற்கு அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே சரியான வாழ்க்கை நெறி என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நமது குடும்பங்களின் பண்பாடுகள் அவர்கள் மனதில் பதிய வைக்கப்பட வேண்டும்.

முத்தலாக் முறை முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையில் ஆபத்தை உருவாக்குகிறது. தலாக் பெறாதவர்களும் அதே சூழ்நிலையைத்தான் சந்திக்கிறார்கள். முஸ்லிம் பெண்களின் இந்த துயரத்தை போக்குவதற்காகத்தான் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் ஒரு சட்டத்தை கொண்டுவர முனைந்தோம். இப்போதுகூட இந்த மசோதா நிறைவேறக் கூடாது என்று கருதுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். எனது முஸ்லிம் சகோதரிகளுக்கு நான் உறுதி அளிக்க விரும்புகிறேன். நமது நாட்டு மகளிர் வாழ்வை முத்தலாக் சீரழித்துவிட்டது. தலாக் முறையை சந்திக்காதவர்களின் வாழ்க்கை துயரமாக மாறிவிடும். இந்த தீமையான பழக்கத்திலிருந்து முஸ்லிம் பெண்களை விடுவிப்பதற்காக நாடாளுமன்றத்தில் இந்தக் கூட்டத் தொடரிலேயே சட்டம் கொண்டுவர நாங்கள் விரும்பினோம். ஆனாலும், இந்தச் சட்டம் நிறைவேறவிடாமல் சிலர் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனதருமை முஸ்லிம் தாய்மார்கள். சகோதரிகள், மகள்கள் அனைவருக்கும் ஓர் உறுதி தர விரும்புகிறேன். அவர்களுக்கு நீதி கிடைக்கும்வரை நான் ஓயப்போவதில்லை. அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றியே தீருவேன்.

அன்பார்ந்த நாட்டு மக்களே, நமது ராணுவமும்,துணை ராணுவப் படைகளும், காவல் துறையும், புலனாய்வுப்பிரிவுகளும்தான் நமது உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அடிப்படை பலமாகும். நமக்குப் பாதுகாப்பு உணர்வைத் தருவது அவர்கள்தான். அமைதியான சூழ்நிலையை அவர்கள்தான் உறுதி செய்கிறார்கள். அவர்களின் தியாகமும், அர்ப்பணிப்பும் கடின உழைப்பும், புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

சகோதர சகோதரிகளே, வடகிழக்கு பகுதியிலிருந்து அவ்வப்போது வன்முறைச் செய்திகளை நாம் அறிகிறோம். உள்நாட்டுக் கிளர்ச்சிகள் பற்றிய தகவலும் வந்துகொண்டு இருக்கிறது. வெடிகுண்டு வீச்சு, துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் நடக்கின்றன. ஆனால் இன்று வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுராவில் கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக அமலில் இருந்த ஆயுதப்படைகள், பிரத்யேக அதிகார சட்டம். விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்புப்படைகளும், மாநில அரசுகளும் மேற்கொண்ட முயற்சிகள், மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றும் வளர்ச்சித் திட்டங்கள், மக்களின் ஈடுபாடு ஆகியவை காரணமாக திரிபுராவும், மேகாலயாவும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அருணாசலப் பிரதேசத்தின் பல மாவட்டங்களில் ‘ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம்’ விலக்கிக் கொள்ளப் பட்டுள்ளது. சில மாவட்டங்களில் மட்டுமே அது அமலில் இருக்கிறது.

இடதுசாரித் தீவிரவாதமும் மாவோயிசமும் நாட்டில் ரத்தக்களரியை ஏற்படுத்துகின்றன. வன்முறைச் சம்பவங்களும் மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி காடுகளில் ஒளிந்துகொள்வதும் அன்றாட நிகழ்ச்சிகளாக உள்ளன. என்றாலும் 126 மாவட்டங்களில் பரவியிருந்த இடதுசாரித் தீவிரவாதம், நமது பாதுகாப்புப் படை வீரர்கள் எடுத்துள்ள தொடர் முயற்சிகள் காரணமாகவும், அரசு தொடங்கியுள்ள வளர்ச்சித் திட்டங்கள் காரணமாகவும், அந்த மக்களை தேசிய நீரோட்டத்துடன் இணைக்கும் முயற்சி காரணமாகவும், 90 மாவட்டங்கள் அளவுக்கு சுருங்கிவிட்டது. இந்த மாவட்டங்களிலும் இடதுசாரித் தீவிரவாதத்துக்கு முடிவு கட்டித் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் வேகமாக முன்னேறி வருகின்றன.

ஜம்மு- காஷ்மீரைப் பொருத்தவரை, அடல் பிஹாரி வாஜ்பாய் காட்டிய வழிதான் சாலச்சிறந்தது. அதே பாதையில் நாமும் பயணிக்க விரும்புகிறோம். துப்பாக்கிக் குண்டுகள் மூலமாக அல்ல, காஷ்மீரின் தேசபக்த மக்களுடன் நேச உணர்வு கொண்டு இதில் நடைபோட விரும்புகிறோம். வரவிருக்கும் மாதங்களில் ஜம்மு காஷ்மீரின் ஊரகப் பகுதி மக்கள், தங்கள் உரிமையை அனுபவிக்க உள்ளார்கள். தங்களைத் தாங்களே பேணிக் கொள்ளும் நிலையை எய்துவார்கள். வளர்ச்சிக்குத் தேவைப்படும்போது மானநிதியை, இந்திய அரசு அங்குள்ள ஊராட்சி மன்றங்களுக்கு வழங்குகிறது. அங்கு ஊராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை நடத்த நாம் வழிவகுக்க வேண்டும். அதில் நாம் முன்னேறி வருகிறோம்.

சகோதர சகோதரிகளே, நீர்ப்பாசன திட்டங்கள் வேகமாக முன்னேறி வருகின்றன. ஐ ஐ டி, ஐ ஐ எம், ஏ ஐ எம் எஸ் ஆகிய உயர்கல்வி நிறுவனங்கள் வேகமாக உருவாகின்றன. தல் ஏரியை சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. கடந்த ஓராண்டுக் காலத்தில் ஜம்மு காஷ்மீர் கிராமத் தலைவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து என்னைச் சந்தித்து ஊராட்சித் தேர்தலை நடத்தும்படி கோருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஏதோ காரணத்தால் தேர்தல்கள் நடக்கவில்லை.

ஜம்மு காஷ்மீர் கிராம மக்களின் விருப்பம் அடுத்த சில மாதங்களில் நிறைவேறப் போகிறது. தங்கள் கிராமத்தை தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் ஆட்சிமுறை வரப்போகிறது. தற்போது இந்திய அரசு அளிக்கும் பெரும் தொகை நேரடியாக கிராமங்களுக்கே சென்றடைவதால் , கிராமத் தலைவர்கள் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடிகிறது. அதன் காரணமாகத்தான் ஊராட்சிகளுக்கும், நகராட்சிகளுக்கும் தேர்தல் நடத்துவதில் முனைப்பாக இருக்கிறோம்.

சகோதர சகோதரிகளே, நமது நாட்டை மேலும் மேலும் உச்சத்துக்கு நாம் கொண்டு செல்ல வேண்டி இருக்கிறது. அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்பதே நமது தாரக மந்திரம். உங்களுடையது, என்னுடையது என்ற பாரபட்சமோ, வேண்டியவர்களுக்கு சலுகை என்பதோ இல்லை. அதனால்தான் நமது இலட்சியங்களை நிறைவேற்ற, எந்தத் தியாகத்துக்கும் தயார் என்று இந்த மூவண்ணக் கொடியின் கீழ் மீண்டும் நாம் உறுதி எடுத்துக் கொள்கிறோம்.

ஒவ்வோர் இந்தியரின் கனவும் ஒரு சொந்த வீடு வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் அனைவருக்கும் வீடு திட்டத்தை அறிவித்திருக்கிறோம். வீடு வேண்டும் என்று விரும்புவோர் அந்த வீட்டில் மின் இணைப்பு வேண்டும் என்றும் விழைகிறார்கள். அதனால் கிராமம் தோறும் மின்மயமாக்கல் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். சமையலறையில், புகை மூட்டத்தை யாரும் விரும்புவதில்லை. அதற்காகத்தான் அனைவருக்கும் சமையல் எரிவாயு திட்டத்தை தொடங்கியுள்ளோம். பாதுகாக்கப் பட்ட குடிநீர் வேண்டும் என்பதே ஒவ்வோர் இந்தியனின் விருப்பம். அனைவரும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பெறச் செய்வதே நமது விருப்பம். கழிப்பறை வேண்டும் என்பது ஒவ்வொருவரின் விருப்பம். அதனை நிறைவேற்றி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.

ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் திறன் வளர்ப்பு நடவடிக்கையை நாம் மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம் அனைவருக்கும் உரிய திறன் கிடைக்கும். தரமான சுகாதாரச் சேவை வேண்டும் என்பதும் ஒவ்வோர் இந்தியரின் ஏக்கம் ஆகும். இதைப் பூர்த்தி செய்வதற்காக அனைவருக்கும் ஆரோக்கியம் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். இந்தியர்கள் விரும்பும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காப்பீடு திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இணையதள சேவை என்பது இன்று ஒவ்வொருவரின் ஏக்கமாகஉள்ளது. அதற்காகத்தான் அனைவரும் இணையதள இணைப்பு பெறும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். இணைப்பு என்ற தாரக மந்திரத்தைப் பின்பற்றி நமது நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்த விரும்புகிறோம்.

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, என்னைப் பற்றியும், நான் பேசுவதைப் பற்றியும் பலரும் பலவிதமாகப் பேசுகிறார்கள். அவர்கள் என்ன சொன்னாலும் நான் பகிரங்கமாக சிலவற்றை இன்று ஒப்புக்கொள்கிறேன். பல நாடுகள் நம்மைவிட முந்திக்கொண்டு செல்வதைப் பார்த்து நான் பொறுமை இழக்கிறேன், பதற்றம் அடைகிறேன். அன்பார்ந்த நாட்டு மக்களே, நமது நாட்டின் குழந்தைகள் உரிய ஊட்டச்சத்து இன்மையால் அவர்களின் வளர்ச்சி தடைபடுவது கண்டு நான் பதறுகிறேன். அது ஒரு மிகப்பெரிய தடையாக உள்ளது. அந்த சிக்கலில் இருந்து நாட்டை மீட்க வேண்டும் என்ற தாகம் எனக்கு இருக்கிறது.

அன்பார்ந்த நாட்டு மக்களே, நான் பதறமாய் இருக்கிறேன். ஏழை மக்களுக்கு, தகுந்த மருத்துவக் காப்பிடு கிடைக்க வேண்டும். ஒரு சாமானியனும், பிணிகளை வென்று ஆரோக்கியமாக வாழ்வதே எனக்கு நிம்மதி அளிக்கும். சகோதர சகோதரிகளே, நம்நாட்டுக் குடிமக்கள் தரமான வாழ்க்கை பெறவேண்டும் என்று என் மனம் தவிக்கிறது. தரமான வாழ்வு பெறுவதன் மூலம் தான் அவர்களுக்கு சுமுக வாழ்வும் முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்பு கிட்டும். அன்பார்ந்த நாட்டு மக்களே, நான் பதற்றத்துடன் இருக்கிறேன், நமது நாடு தகவல் தொழில்நுட்ப அறிவாற்றலைப் பயன்படுத்தி நான்காவது தொழில் புரட்சியில் பீடுநடை போட வேண்டும் என்று என் மனம் தவிக்கிறது.

அன்பார்ந்த நாட்டு மக்களே, நமது நாட்டின் ஆதார வளங்கள், அறிவாற்றல், திறனைப்பயன்படுத்தி உலக அரங்கில் பெருமை மிக்க நாடாக நாம் ஒளிரவேண்டும் என்று என் மனம் ஏங்குகிறது. அன்பார்ந்த நாட்டு மக்களே, நாம் முன்னேறிச் செல்ல விழைகிறோம், தேக்க நிலையை ஏற்க முடியாது. அப்படி ஏற்றுக் கொள்ளுதல் நமது இயற்கை குணமல்ல. ஒருபோதும் இந்த நாடு தேக்க நிலையை ஏற்றுக் கொள்ளாது. வளைந்து கொடுப்பதும், சோர்வடைவதும் நமது குணமல்ல.

சகோதர சகோதரிகளே, தொன்மையான வேதங்களின் பாரம்பரிய மரபுகளை நாம் பெற்றுள்ளோம். அந்த மரபு நமக்கு தன்னம்பிக்கையை ஊட்டுகிறது. அதனை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம். அன்பார்ந்த நாட்டு மக்களே, நாம் வெறுமனே கனவுகளில் மிதப்பதை நான் விரும்பவில்லை. எதிர்காலத்தில் புதிய உச்சத்தைத் தொடுவதே நமது லட்சியம். மிக உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்று நாம் கனவு காண்கிறோம். எனவேதான் நாட்டு மக்களே, ஒரு புதிய நம்பிக்கையை உங்கள் உள்ளத்தில் பதிக்க விரும்புகிறேன். உங்கள் உள்ளத்தில் கொழுந்து விட்டு எரியும் ஆர்வமும், நம்பிக்கையும் அந்தக் கனவை நிச்சயம் நிறைவேற்றும்.

நாட்டு மக்களே, நமது மனங்களில் ஒரு லட்சியம் இருக்கட்டும். இலக்கை எட்ட வேண்டி சிறைகளை உடைக்கிறோம். எண்ண ஓட்டங்களை சூழ் நிலைகளை மாற்றுகிறோம். இது புதிய யுகம்; இது புதிய பாரதம். நமது விதியை நாமே எழுதுவோம். நாம் பரிணமிக்கிறோம்; மாறுகிறோம். நாம் செயலில் இறங்குகிறோம்; வைராக்கியத்துடன் இறங்குகிறோம். நமது உடலையும் மனதையும் வழங்கி வைராக்கியத்துடன் செயலில் இறங்குகிறோம். ஞாயிறு உதிக்க இருக்கிறது. வானத்தைக் காட்டிலும் உயரமாக செல்ல இருக்கிறோம். புதிய இந்தியாவை நிர்மாணிக்க இருக்கிறோம்.

எனது அருமை சகோதர சகோதரிகளே, இந்தப் புனிதமான சுதந்திர நாளில் உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். வாருங்கள் நாம் ஒருங்கிணைந்து உரத்த குரலில் ஜெய்ஹிந்த் முழக்கத்தை எழுப்புவோம். ஜெய்ஹிந்த், ஜெய்ஹிந்த், ஜெய்ஹிந்த்.. பாரத் மாதா கி ஜே..
பாரத் மாதா கி ஜே.. பாரத் மாதா கி ஜே.. வந்தே மாதரம், வந்தே மாதரம், வந்தே மாதரம்!

(தொடர்வோம்...)

> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 71 - ‘ஒரு தவறு செய்தால்… அதைத் தெரிந்து செய்தால்...’ | 2017

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x