Published : 02 Aug 2014 08:21 PM
Last Updated : 02 Aug 2014 08:21 PM

ஆன்லைனில் கொட்டும் நண்பர்கள் தின வாழ்த்துகளும், தன்னந்தனியாக வாடும் உயிர்த் தோழனும்

ஒரு காலத்தில் 'நண்பர்கள் தினம்' என்பது நமக்கு எப்போதும் தோள் கொடுத்து உதவும் நண்பர்களுடன் காலையில், தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்லிவிட்டு, பின் அதே நண்பர்கள் கூட்டத்துடன் சினிமா, கடற்கரை என்று சுற்றிவிட்டு, இரவு தூங்க செல்லும்முன் கூட நாம் முதன்முதலாக எங்கு சந்தித்தோம், எப்படி நண்பர்களானோம் என்று சற்றும் சலிக்காமல் அரைத்த மாவையே அரைத்து அப்படியே உறங்கி போகும் அழகான நாட்களையும், ஆழமான நட்பையும் நாம் எல்லாரும் ஏதோ ஒரு கட்டத்தில் கொண்டாடியிருக்கிறோம்.

ஆனால், இன்றோ நண்பர்கள் தினம் என்பது ஃபேஸ்புக்கில் நெருங்கிய நண்பர்கள், தூரத்து நண்பர்கள், மிகவும் தூரமாக இருக்கும் நண்பர்கள் என்று மொத்தமாக ஒரு எல்லாருக்குமாய் சேர்த்து ஒரு குரூப் மெசேஜ், வாட்ஸ்ஆப்பில் பலவிதமாக ஸ்டிக்கர்களுடன் ஒரு வாழ்த்து. தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு மொத்தமாக தட்டிவிடப்படும் மெயில் என்று இதுவும் ஒருவிதமாக கடமையாக மாறிவிட்டது. இந்த சமூக வலைதளங்கள் மூலம், உலகம் சுருங்கிவிட்டதாலோ என்னவோ நம் உலகிலுள்ள உள்ள உற்ற நண்பர்களை நம்மால் அடையாளம் காணமுடியாமல் போய்விட்டது.

இதுகுறித்து வல்லுநர்கள் கூறுகையில், “இன்று ஒரு பைசா செலவில்லாமல், இணையத்தின் மூலம் பலரைத் தொடர்பு கொள்ள முடிவதால், நாம் அனைவரும் இத்தகைய வசதிகளை எல்லாவற்றுக்கும் பயன்படுத்திக்கொள்கிறோம். ஆனால் இது ஆழமற்ற ஒன்றாகவே இருக்கிறது”, என்று யதார்த்த நிலையைத் தெரிவிக்கின்றனர்.

"இப்போ ஃப்ரெண்ட்ஷிப் பாண்ட் கட்டும் காலம் எல்லாம் மலையேறிப் போச்சு. வாட்ஸ் ஆப், இன்ஸ்ட்டாகிராம் போன்றவற்றின் மூலம் நண்பர்களுடன் சேர்ந்து எடுக்கும் ஒளிப்படங்களை பதிவேற்றம் செய்துக்கொள்ளலாம். மேலும், தற்போது ‘வர்ச்சுவல்’ நண்பர்களுடனான நட்பு தான் அதிகம்,” என்று கூறுகிறார் நிதி ஷர்மா என்பவர்.

எனினும், இந்த தொழில்நுட்ப வளர்ச்சியினாலும், வர்ச்சுவல் நட்பு வட்டங்களாலும், நம் நிஜ வாழ்விலுள்ள நட்பு வட்டத்தை கவனிக்காமல் தவறவிடுகிறோம்.

இந்த புதுவிதமான நட்பு நடைமுறையை 'வெறும் மேலோட்டம்' என்று குறிக்கும் மனோதத்துவ நிபுணர் ராஜீவ் மேத்தா, “சமூக வலைதளங்களில் இருக்கும் சிலர் கண்மூடித்தனமாக பலரையும் தங்களது நட்பு வட்டத்தில் சேர்த்துக்கொண்டு, அதில் அவர்களைப் பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். மேலும், மக்களுக்கு போதிய நேரம் கிடைக்காததும் அவர்களை வர்ச்சுவல் நட்பு பாராட்டலுக்கு வழிவகுத்திருக்கிறது.

இதனால் நெருங்கிய நட்பு வட்டம் என்பது தற்போது காணாமல் போய்விட்டது. முன்பு, நாம் நம்முடைய நண்பர்களுக்கும், நட்பிற்கும் முக்கியத்துவம் அளித்தோம். நம் வாழ்வில் எந்தவொரு முக்கிய முடிவு எடுக்கவேண்டும் என்றாலும், அவர்களைக் கேட்டுதான் எடுப்போம். ஆனால், தற்போது நட்பு என்பது மிகவும் மேலோட்டமாகிவிட்டது”, என்று தெரிவிக்கிறார்.

தொழில்நுட்பம் என்பது நம் ஒருவரை சுலபமாக தொடர்புக்கொள்ளவும், அவர்களை தொடர்ந்து நமது நட்பு வட்டத்தில் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு அல்லவா? அதனால், இந்த நண்பர்கள் தினத்திலாவது, உங்களுடைய வர்ச்சுவல் நண்பர்களுக்கு ஒரு பொதுவான வாழ்த்தை சொல்லிவிட்டு, உங்கள் பள்ளி நண்பனுடனோ, கல்லூரி தோழனுடனோ சிறிது நேரம் செலவழிக்கலாம்தானே!

சொல்ல மறந்துவிட்டேன்! இந்த கட்டுரைப் பொறுமையாக படித்த என் ‘ஆன்லைன்’ நண்பர்கள் அனைவருக்கும், என் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x