Published : 14 Mar 2024 04:59 PM
Last Updated : 14 Mar 2024 04:59 PM
இந்திய பிரதமராக மன்மோகன் சிங் 2012 ஆகஸ்ட் 15 சுதந்திர நாள் அன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து ஆற்றிய உரையின் முழு விவரம் இதோ:
அன்பார்ந்த நாட்டு மக்களே சகோதரர்களே சகோதரிகளே அன்பான குழந்தைகளே, இந்த சுதந்திர தின நன்னாளில் உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். நம்முடைய விடுதலை இயக்கத் தலைவர்கள், மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ், சுதந்திரமான வளமான இந்தியாவைக் கனவு கண்டார்கள். இந்த கனவை நினைவாக்கும் வகையில் 1947-ல் இந்த நாளில் செங்கோட்டையில் மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்து பண்டிதர் ஜவஹர்லால் நேரு முதல் அடி எடுத்து வைத்தார். 1947 ஆகஸ்ட் 15 நாம் தொடங்கிய பயணம்.. இப்போது 65 ஆண்டுகள் ஆயிற்று. இந்த 65 ஆண்டுகளில் நாம் நிறைய சாதித்து இருக்கிறோம்.
இன்று நிச்சயமாக நமது ஜனநாயகத்தின் வெற்றியைக் கொண்டாட கூடிய நாள். இந்தத் தருணத்தில், இன்னும் செய்ய வேண்டியது என்ன இருக்கிறது என்பதையும் நமக்குள் ஆராய வேண்டும். நமது நாட்டில் இருந்து வறுமை, அறியாமை, பசி மற்றும் பின்தங்கிய நிலையை அகற்ற முடியும் போதுதான் உண்மையான அர்த்தத்தில் நாம் சுதந்திரம் சாதித்ததாய் இருக்கும். நமது தோல்விகளை எழுத கற்றுக் கொண்டு வெற்றியைக் கட்டமைக்கும் போதுதான் இது சாத்தியம் ஆகும்.
தற்போது உலகப் பொருளாதாரம் கடினமான கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். உலகின் எல்லா நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது. சேர்த்துப் பார்க்கும் போது, ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு ஜீரோ சதவீதமாய் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. நமது நாடும் மோசமான வெளிச்சூழல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நமது பொருளாதார வளர்ச்சிக்குத் தடங்கல் செய்யும் சம்பவங்கள் உள்நாட்டிலும் நிகழ்ந்தன. கடந்த ஆண்டு ஜிடிபி 6.5 சதவீதம் அளவுக்கு வளர்ந்தது. இந்த ஆண்டு இதைவிட சற்று கூடுதலாக இருக்கும் என்று நம்புகிறோம்.
நமது நாட்டுக்கு வெளியில் நிலவும் சூழல்கள் மீது நாம் அதிகம் செய்வதற்கு இல்லை. ஆனால் உள்நாட்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எல்லா முயற்சிகளும் எடுத்தாக வேண்டும். இதனால் நமது பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மீண்டும் விரைவு பெறும்.
இதைச் செய்யும் போது, பணவீக்கத்தையும் நாம் கட்டுப் படுத்த வேண்டும். இந்த ஆண்டின் மோசமான பருவ காலம் காரணமாக இந்த முயற்சி கடினமாக இருக்கலாம். ஆனாலும் சூழ்நிலையை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து உள்ளோம். மழைப்பொழிவில் 50 சதவீதத்துக்கு அதிகமான பற்றாக்குறை உள்ள மாவட்டங்களில் விவசாயிகளுக்கு டீசல் மானியம் அரசால் வழங்கப் படுகிறது. விதை மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கால்நடை தீவனத்துக்கான மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் எந்தபாகத்திலும் விதை தீவனம் அல்லது தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மக்கள் இன்னல் ப மாட்டார்கள் என்பதை உறுதி செய்வதே நமது முயற்சியாகும். நமது விவசாய சகோதர சகோதரிகளின் கடும் முயற்சி காரணமாக உணவுப் பொருட்கள் வெகுவாக இருப்பு வைத்திருக்கிறோம். எனவே உணவுப் பொருட்கள் கிடைப்பதில் பிரச்சினை இல்லை என்பது நல்ல செய்தி.
விரைந்த பொருளாதார வளர்ச்சிக்கான சூழலை நமது நாட்டில் உருவாக்குவதைப் பொருத்த மட்டில், பல பிரச்சினைகளில் நம்மால் அரசியல் கருத்தொற்றுமை ஏற்படுத்த முடியவில்லை என்பதால் இதை நம்மால் சாதிக்க முடியவில்லை. இந்த பிரச்சினைகளை, தேசப்பாதுகாப்பு, வளர்ச்சி நடவடிக்கைகளை பாதிப்பவைகளாகப் பார்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை அதிகரிக்கவில்லை என்றால், பொருளாதாரத்தில் புதிய முதலீடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், அரசாங்கத்தின் நிதி நிர்வாகத்தை மேம்படுத்தவில்லை என்றால், சாமானியனின் வாழ்வாதார பாதுகாப்புக்கு மற்றும் நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்கு உழைக்கவில்லை என்றால், மிக நிச்சயமாக அது தேசப்பாதுகாப்பை பாதிக்கும்.
உலகப் பொருளாதார மந்த நிலையின் பாதிப்புகளில் இருந்து காத்து, இந்தியாவின் விரைந்த பொருளாதார வளர்ச்சிக்கு நமது அரசு கடுமையாக உழைக்கும் என்று உங்களுக்கு இன்று உறுதி கூறுகிறேன். நகரங்களில் கிராமங்களில் வசிக்கும் நமது இளைய பெண்கள், ஆண்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கக் கடினமாக உழைப்போம் என்று உறுதி கூறுகிறேன். நமது விவசாயிகள் தொழிலாளர்கள், ஏழை சகோதர சகோதரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.
இந்த இன்னல் நிறைந்த காலம் நீண்டநாள் நீடிக்காது என்று நான் நம்புகிறேன். இந்தப் பிரச்சினைகளை நாம் சந்திக்கும் போதே, கடந்த எட்டு ஆண்டுகளில் நாம் பல துறைகளில் அசாதாரண வெற்றிகளை சாதித்து இருக்கிறோம் என்கிற உண்மையால் நாம் ஊக்கம் பெற வேண்டும். இப்போது இதுபோன்ற வெற்றிகளை மேலும் பல புதிய துறைகளில் சாதிக்க வேண்டும்.
தேசத்தைக் கட்டமைக்கும் புனிதமான பணியில் அவர்களும் பங்களிக்கும் வகையில், நமது குடிமக்கள் சமூகப் பொருளாதார அதிகாரம் பெறச் செய்வதே கடந்த எட்டு ஆண்டுகளாக நமது லட்சியமாக இருந்து வருகிறது. இன்று நாட்டில் ஐந்து குடும்பங்களில் ஒன்று, பணி அட்டை மூலம் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதி பெற்றுள்ளார்கள். கடந்த ஓராண்டில் இந்தத் திட்டத்தின் கீழ் எட்டு கோடிக்கு மேலான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி உள்ளோம்.
2004-ல் யு.பி.ஏ. அரசு அதிகாரத்துக்கு வந்த போது, எல்லா கிராமங்களுக்கும் மின்வசதி வழங்குவோம் என்று உறுதி அளித்தோம். இந்த உறுதியை நிறைவேற்றுவதற்காக, ராஜீவ் காந்தி ஊரக மின்வசதி திட்டம் தொடங்கினோம். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்துக்கும் மேலான கிராமங்கள் மின் இணைப்பு பெற்றன; இப்போது இந்தியாவில் அநேகமாக எல்லா கிராமங்களுக்கும் மின்வசதி கிடைத்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நமது நாட்டில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மின்வசதி தருவதும் மின்சார சப்ளையை மேம்படுத்துவதும் நமது அடுத்த இலக்காகும்.
கடுமையாக உழைக்கும் நமது விவசாயிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக இவர்களின் பயிர் உற்பத்தி சாதனை அளவை எட்டியுள்ளது. விவசாய வளர்ச்சிக்கு மற்றும் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கு நமது அரசு எடுத்து வரும் முயற்சிகளால், 11-வது திட்டத்தில் விவசாயம் சராசரியாக 3.3 சதவீதம் அதிகரித்து உள்ளது. இது பத்தாவது திட்டத்தை விடக் கணிசமாக 2.4 சதவீதம் அதிகமாகும். கடந்த எட்டு ஆண்டுகளில் பயிர்களின் ஆதரவு விலையை இரண்டு மடங்கு அதிகரித்து உள்ளோம். லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள் வழங்கி வருகிறோம்.
நமது குழந்தைகளே நமது நாட்டின் மிகப் பெரும் சொத்து. நமது குழந்தைகளுக்கு நல்ல கல்வி வழங்கி அவர்கள் ஆரோக்கியமாக இருந்தால், நமது எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும். இதன் காரணமாகத்தான் நமது கொள்கைகள் மற்றும் திட்டங்களில் குழந்தைகளின் தேவைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறோம். குழந்தைகளின் கல்வி சட்டத்தின் மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2006-07ல், 6-14 வயதுப் பிள்ளைகளில் 93 சதவீதம் மட்டுமே பள்ளிகளில் சேர்க்கப் பட்டார்கள். இன்று இந்த வயது பிள்ளைகள் அநேகமாக அனைவருமே பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், 51,000-க்கு மேற்பட்ட புதிய பள்ளிகள் தொடங்கப்பட்டன; இவற்றில் சுமார் 7 லட்சம் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அடுத்த சில மாதங்களில், பயிற்றுவித்தல் மூலம் நமது குழந்தைகள் பெற்று வரும் நன்மைகளை தொடர்ந்து மதிப்பிட ஓர் அமைப்பு முறை ஏற்படுத்தப்படும். பயிற்றுவித்தலில் மனநிறைவு ஏற்படும் வகையில் சமுதாயம் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்பு உறுதி செய்யப்படும்.
ஒவ்வொரு நாளும் சுமார் 12 கோடி குழந்தைகளுக்கு பள்ளிகளில் சத்தான உணவு மதிய உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப் படுகிறது. இது வகையான திட்டம் உலகிலேயே இதுதான் மிகப் பெரியது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், புதிதாக போலியோ தாக்கப்பட்டவர் யாருமில்லை; இன்று இந்த நோயால் தாக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை.
குழந்தைகளிடையே சத்துக் குறைபாடு நமக்கு ஒரு பெரிய சவாலாகும். இந்தப் பிரச்சினையைக் கையாள பல பரிணாமங்களில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த எட்டு ஆண்டுகளில், ஐ.சி.டி.எஸ். மூலம் பயன்பெற்ற தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது. ஐ.சி.டி.எஸ். முறையை மேலும் திறன் உள்ளதாய் ஆக்கும் நடவடிக்கை இறுதிக் கட்டங்களில் உள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில் இது நிறைவடையும்.
2005-ல் தேசிய ஊரக சுகாதார இயக்கம் தொடங்கினோம். இதனால் நாட்டின் ஒவ்வொரு கிராமத்துக்கும் சுகாதார வசதிகள் நீட்டிக்கப்பட்டன. இன்று இந்த இயக்கம், 8.5 லட்சம் ஆஷா பணியாளர்கள் உட்பட 10 லட்சம் சுகாதாரப் பணியாளர்களைக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. தேசிய ஊடக சுகாதார இயக்கத்தின் வெற்றிக்குப் பிறகு, நமது நகரங்களிலும் சுகாதார சேவைகளை விரிவுபடுத்த விரும்புகிறோம். தேசிய ஊரக சுகாதார இயக்கம் இனி, நாட்டின் எல்லா கிராமங்கள் மற்றும் நகரங்களையும் உள்ளடக்கி, தேசிய சுகாதார இயக்கம் என்று மாற்றப்படும். அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் மூலம் இலவச மருந்துகள் விநியோகிக்கும் ஒரு திட்டத்தை வடிவமைத்து வருகிறோம்.
வரும் ஆண்டுகளில் நமது இளைஞர்களுக்காக புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க விரும்புகிறோம். இதனை சாதிக்க, நமது பொருளாதாரத்துக்கு தேவையான திறன்களில் அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது அவசியமாகும். பல புதிய திறன்களில் பயிற்சி வசதிகளை வழங்கும் ஓர் அமைப்புக்கு முயற்சிக்கிறோம். நமது இளைய சகோதர சகோதரிகளுக்காக ஆறு வாரத்தில் இருந்து ஆறு மாதங்களுக்கான பயிற்சி வகுப்புகள் வழங்கவும் விரும்புகிறோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் எட்டு கோடி மக்களுக்கு திறன்வளர்ச்சிக்கான பெரிய திட்டம் ஒன்றை தேசிய திறன் வளர்ச்சிக் குழு வடிவமைத்து உள்ளது.
மத்திய அரசின் சிறப்பு பெற்ற முகமை மூலமே இந்த லட்சிய திட்டத்தை செயல்படுத்த முடியும். ஆகவே தேசிய திறன் வளர்ப்பு அத்தாரிட்டி நிறுவ பரிசீலித்து வருகிறோம். இதன் மூலம் நாடு முழுதும் திறன் வளர்ச்சி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைந்த முறையில் நடத்த முடியும். இந்தப் பணியில் தனியார் துறை மற்றும் அரசு சாரா அமைப்புகளின் பங்களிப்பும் நமக்குத் தேவை.
தொழில்துறை மற்றும் வணிகத்தை ஊக்குவிக்கும் போதுதான் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் சாத்தியம். இதற்கு நமது உட்கட்டமைப்பை விரைந்து மேம்படுத்த வேண்டும். உட்கட்டமைப்பு வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக சமீபத்தில் புதிய நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம். சாலைகள், விமான நிலையங்கள், ரயில்வே, மின் உற்பத்தி மற்றும் நிலக்கரி உற்பத்தியில் லட்சிய இலக்குகள் நிர்ணையிக்கப்பட்டுள்ளன. தனியார்துறை உதவியுடன் கட்டமைப்பு வளர்ச்சிக்கான முதலீட்டை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்கும். அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்கு, இந்தியாவில் முதலீடு செய்ய தடைகள் ஏதும் இல்லை என்பதில் சர்வதேச அளவில் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.
10 ஆண்டுகளுக்கு முன்புதான் நாட்டில் பத்து குடும்பங்களில் மூன்று, வங்கிகளைப் பயன்படுத்தினர் என்ற நிலையை அடைந்தோம். இன்று பாதிக்கும் மேற்பட்ட கிராம குடும்பங்கள் வங்கிக் கணக்குகளால் பயன்பெறுகிறார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் எல்லாக் குடும்பங்களும் வங்கிக் கணக்குகளில் பயன் பெறுவார்கள் என்பதை உறுதி செய்வதே நமது லட்சியம்.
முதியோர் ஓய்வூதியம், மாணவர்களுக்கு நிதியுதவி, தொழிலாளர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட அரசு திட்டங்களில் இருந்து பணம், மக்களில் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கும் முறையை உருவாக்க விரும்புகிறோம். இதனால் பயனாளர்களின் அசவுகரியம் குறையும், பணத்தைப் பெறுவது எளிதாகும், வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும். 20 கோடி மக்களைப் பதிவு செய்து வைத்திருக்கும் ஆதார் திட்டத்தின் உதவியை இந்தப் பணிக்குக் கோருவோம்.
நமது நாட்டின் நகரப் பகுதிகளில் வசிக்கும் நமது ஏழை சகோதர சகோதரிகளுக்கு வீடு வழங்க, விரைவில் ராஜீவ் வீட்டுக் கடன் திட்டம் தொடங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு ஐந்து லட்சத்துக்கும் குறைவான வீட்டுக் கடன் மீதான வட்டியில் நிவாரணம் வழங்கப்படும்.
இந்த ஆண்டு 12-வது ஐந்தாண்டு திட்டத்தை தேசிய வளர்ச்சி குழுவின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்க இருக்கிறோம். நாட்டின் வளர்ச்சி தொடர்பான அத்தனை முக்கிய விஷயங்களிலும் எதிர்கால செயல்பாடுகளை இந்த திட்டம் நிர்ணயிக்கும். திட்டத்தின் கடைசி ஆண்டில் தற்போதுள்ள பொருளாதார வளர்ச்சி விகிதமான 6.5 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை முன்வைக்கும். வளர்ச்சியின் பயன்கள் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், குறிப்பாக சமுதாயத்தின் நலிந்த பிரிவினருக்கு சென்று சேருவதற்கான முக்கிய துறைகளில் திட்டம் கவனம் செலுத்தும். 12-வது திட்டத்தை திறன்பட செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படும் என்று முழுமையாக நம்புகிறேன்.
சமீபத்தில் அசாமில் நடந்த வன்முறை சம்பவங்கள் மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்த சம்பவங்களால் பல மக்களின் வாழ்வில் இடையூறு ஏற்பட்டு இருக்கிறது என்பதை அறிவேன். வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எமது அனுதாபங்கள். இவர்களுக்கு நிவாரணம் வழங்க எம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோம். இந்த வன்முறையின் பின்னால் உள்ள காரணத்தைப் புரிந்து கொள்ள, நாட்டின் எந்தப் பகுதியிலும் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழா வண்ணம் உறுதி செய்ய அரசு எல்லாம் முயற்சிகளையும் எடுக்கும் என்று உறுதி கூறுகிறேன்.
உள்நாட்டு பாதுகாப்பில் பல முனைகளில் நாம் வெற்றி கண்டுள்ளோம். ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்துத் தேர்தல்களில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கு பெற்றுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை குறைந்துள்ளது. அங்குள்ள பல குழுக்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதனால் வளர்ச்சியின் முக்கிய நீரோட்டத்தில் அவர்களும் கலந்து கொள்ளலாம். நக்சலிசம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின், குறிப்பாக பட்டியலின, மலைவாழ் மக்களின், துன்பங்களை நீக்க அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்த, புதிய பல நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். ஆனாலும் உள்நாட்டுப் பாதுகாப்பைப் பொருத்த மட்டில் நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். எந்த விலை கொடுத்தேனும் சமூக ஒற்றுமை பராமரிக்கப் பட வேண்டும். நக்சலிசம், தீவிர பிரச்சினையாகும். இம்மாத தொடக்கத்தில் பூனாவில் நிகழ்ந்த சம்பவங்கள், பாதுகாப்பு தொடர்பாக இன்னும் நிறைய செய்ய வேண்டி உள்ளது என்பதை உணர்த்துகின்றன.
இந்த ஆண்டு விண்வெளியில் அக்னி 5 ஏவுகணையைப் பரிசோதித்து, RISAT - I செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவி நமது பெருமையை உயர்த்திய நமது விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைப் பாராட்டுகிறேன். சமீபத்தில் மத்திய அமைச்சரவை, செவ்வாய் செல்லும் திட்டத்துக்கு (Mars Orbiter Mission) ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் நமது விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு அருகில் சென்று முக்கியமான அறிவியல் தகவல்களை சேகரிக்கும். செவ்வாய் கிரகத்துக்கான இந்த விண்கலம் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் மிகப் பெரிய முன்னேற்றமாக இருக்கும்.
நமது ஆயுதப்படைகள் மற்றும் அவர்களின் தயார்நிலை குறித்து சமீப மாதங்களில் ஏராளமான விவாதங்களைக் கண்டிருக்கிறோம். போரின் போதும் அமைதியின் போதும் நமது ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் துணிச்சல் மற்றும் பெருமிதத்துடன் நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். எங்கே தேவைப்பட்டாலும் நமது வீரர்கள் மிகப் பெரும் தியாகங்களை செய்துள்ளனர். நமது ஆயுதப்படைகள் மற்றும் துணை ராணுவப் படைகள் எந்த சவாலையும் எதிர்கொள்ளத்தயாராக இருக்கிறார்கள் என்பதை நமது நாட்டு மக்களுக்கு மீண்டும் உறுதிபடக் கூறுகிறேன். துணிச்சலுடன் நமது எல்லைகளைப் பாதுகாத்து வரும் பாதுகாப்புப் படைகளுக்கு இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றி தெரிவிக்கிறேன். இவர்களின் நல்வாழ்வுக்காக நாம் தொடர்ந்து முயற்சிகள் எடுப்போம்.
பாதுகாப்பு படை பணியாளர்களின் சம்பளம் மற்றும் ஓர் ஊதியம் தொடர்பான பிரச்சினைகளை ஆராய அரசாங்கம் ஒரு குழுவை நியமித்து உள்ளது. ஓய்வு பெற்ற பணியாளர்கள் அலுவலர்களின் ஓய்வூதியம் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளையும் இந்தக் குழு ஆராயும். இந்தக் குழுவின் பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றவுடன் அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
எஸ்சி எஸ்டி, சிறுபான்மையர் பெண்கள் மற்றும் நலிந்த பிரிவினரின் நல்வாழ்வுக்கு நமது அரசு சிறப்பு கவனம் செலுத்தும். மலை மாவட்டங்கள் மற்றும் பின்தங்கிய மாவட்டங்களின் சிறப்புத் தேவைகள், ஒருங்கிணைந்த செயல் திட்டம் (Integrated Action Plan) பின்தங்கிய மண்டல உதவி நிதியம் (Backward Regions Grant Fund) பழங்குடி துணைத் திட்டம் (Tribal sub-plan) ஆகியவற்றின் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
வன உரிமைச் சட்டம் மூலமாக, பல தலைமுறைகளாக அவர்கள் வசித்து வரும் நிலங்களின் மீது பழங்குடி வகுப்பைச் சேர்ந்த லட்சக்கணக்கான சகோதர சகோதரிகளுக்கு சொத்துரிமை வழங்கி உள்ளோம். அவர்கள் சேகரிக்கும் வனப்பொருட்களுக்கு லாபகரமான விலையை உறுதி செய்ய ஒரு திட்டத்தை வடிவமைத்து வருகிறோம்.
சுரங்கம் மற்றும் தாது பொருட்கள் வளர்ச்சியை மற்றும் முறைப்படுத்தல் மசோதாவை விரைவில் சட்டமாக்க அரசு விரும்புகிறது. இந்த சட்டத்தின் மூலம், சுரங்கப் பகுதிகளில் உள்ள நமது பழங்குடி சகோதர சகோதரிகளின் நன்மைக்காக நிதி வழங்க விரும்புகிறோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT