Published : 19 Aug 2014 12:00 AM
Last Updated : 19 Aug 2014 12:00 AM
சமூக நலத்துறை மூலம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், திருமண நிதியுதவித் திட்டம் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அவை குறித்து சமூக நலத்துறை அலுவலர்கள் விளக்குகின்றனர்.
சுய வேலைவாய்ப்புக்காக சமூக நலத்துறை மூலம் என்ன உதவி வழங்கப்படுகிறது?
சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆதரவற்றவர், கணவரால் கைவிடப்பட்டவர், விதவை, உடல் ஊனமுற்ற பெண் மற்றும் ஆண் ஆகியோர் பயன்பெறலாம். மேலும், தையல் தெரிந்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 12 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற யாரை அணுக வேண்டும்? என்ன ஆவணங்கள் தேவை?
அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலர் அல்லது ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலரை அணுகி விண்ணப்பம் பெறலாம். விண்ணப்பத்துடன், வருமானச் சான்று, வயதுச் சான்று, உடல் ஊனமுற்றோர் அல்லது விதவையாக இருந்தால் அதற்கான சான்று, கணவரால் கைவிடப்பட்ட பெண்ணாக இருந்தால் அதற்கான சான்று, சாதிச் சான்று, தையல் தெரியும் என்பதற்கான சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பதாரர் தனது புகைப்படத்தை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தில் சேருவதற்கான நிபந்தனைகள் என்ன?
சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் குழந்தைகள் காப்பகத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இருப்பிட வசதியுடன் கூடிய கல்வி, உணவு, உடை இலவசமாக அளிக்கப்படுகிறது. ஆதரவற்ற மற்றும் பெற்றோரால் கைவிடப்பட்ட 5 முதல் 18 வயதுவரை உள்ள பிள்ளைகள் இங்கு சேர்த்துக்கொள்ளப்படுவர். அதில் ஆண் குழந்தைகள் 5-ம் வகுப்புவரையும், பெற்றோர் இருவரும் இல்லாத பெண் குழந்தைகள் தங்களின் மேற்படிப்புக்காக 21 வயதுவரையும் தங்கி பயில அனுமதிக்கப்படுகின்றனர்.
காப்பகத்தில் சேருவதற்கான விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் என்ன?
கணவரால் கைவிடப்பட்டவர், கணவரை இழந்தோர் ஆகியோருக்கான ஆதரவற்றோர் சான்று, வட்டாட்சியர் மட்டத்தில் பெறப்பட்ட வருமானச் சான்று, பிறப்புச் சான்று, மருத்துவச் சான்று, இரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இதற்கு அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலர், அரசு குழந்தைகள் காப்பக கண்காணிப்பாளர், ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர், மகளிர் ஊர் நல அலுவலர் ஆகியோரில் ஒருவரை அணுகினால் அவர் வழிகாட்டுவர்.
(மீண்டும் நாளை சந்திப்போம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT