Published : 30 Aug 2014 01:26 PM
Last Updated : 30 Aug 2014 01:26 PM
நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்து 100 நாட்கள் நெருங்கிவிட்டன. மோடி என்ன செய்தார் என பக்கம் பக்கமாக கட்டுரைகள் வரலாம். திட்டக் கமிஷனை ஏன் கலைக்க திட்டமிட்டார் என திட்டப்படலாம். 'ஜன் தன்' துவங்கியதற்கு பாராட்டப்படலாம். அது எல்லாம் இருக்கட்டும்.
நாம் இங்கே, மோடி நூறு நாளை வேறுவிதமாக அணுகுவோம். தேர்தல் வெற்றிக்கு முன், தேர்தல் வெற்றிக்குப் பின் என நரேந்திர மோடியின் தோற்றத்தை இரண்டாக பிரித்துக் கொள்வோம்.
பிரச்சார மேடையில் அரை மணி நேரம் உட்கார்ந்துவிட்டு எழும்போதே அவரது குர்ந்தா பின்னால் சுருக்கம் நிறைந்திருக்கும். இன்று, அப்படியில்லை. சிறிதும் மடிப்பு கலையாத உயர்தர பட்டு மற்றும் இத்யாதி, இத்யாதி துணி ரகங்களால் பார்த்து பார்த்து நெய்யப்பட்ட ஆடைகளிலேயே அவர் தோன்றுகிறார்.
மோடி - அமெரிக்கா விசா சர்ச்சையெல்லாம் மலை ஏறிவிட்டது. இப்போது அமெரிக்க ஊடகங்களில் மோடி அதிகம் பேசப்படுவது அவரது பிரத்யேக ஸ்டைல் குர்தா, விதவிதமான தலைப்பாகைகளுக்காக மட்டுமே. டைம்ஸ், நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் போன்ற மூன்று முக்கிய பத்திரிகைகள் மோடியை ஸ்டைல் ஐகான் என புகழ்ந்து தள்ளியிருக்கின்றன.
சமீபத்தில் நேபாளம் சென்ற பிரதமர் மோடி அணிந்திருந்த ஆடையை வடிவமைத்த பிபின் சவுஹான் மோடியின் ரசனையை விவரிக்கிறார்.
"மோடிக்கு கிரீம் நிறம் மிகவும் பிடிக்கும். லினன், பட்டு, இத்தாலிய கம்பளி ரக துணிகளே அவரது சாய்ஸ். குறிப்பாக அவரது ஆடைகள் இந்தியப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும். இதற்கு முன்னரும், இன்றும் பல தலைவர்கள் குர்தா - பைஜமா உடை அணிகின்றனர். ஆனால், மோடி அவற்றை தரித்துக்கொள்ளும் விதம். அவரது உடல்அசைவுகள் பேசும் மொழி, அவருக்கு கம்பீரம் அளிக்கிறது. கூட்டத்தில் அவரை தணித்துக் காட்டுகிறது. அதனாலேயே என்ன உடை அணிந்தாலும் அவர் ஒரு ஆண் சிங்கத்தைப் போல் கம்பீரமாக இருக்கிறார்" என்றார்.
பிரேசிலில் பிரிக்ஸ் மாநாட்டின்போது மோடி அணிந்திருந்த பிங்க் (இளம் சிவப்பு) குர்தா, ரஷ்ய அதிபர் புடினை சந்தித்தபோது அவர் உடுத்தியிருந்த பிரவுன் நிற குர்தாவும், சீனப் பிரதமருடனான சந்திப்பிற்கு அவர் அணிந்திருந்த சிவப்பு நிற குர்தா அனைத்துமே அபாரம் என்கிறார் ஹிண்டால் சென் குப்தா. பாலிடிக்ஸ் அண்ட் பேஷன் என்ற புத்தகத்தை எழுதியுள்ள இவர், மோடியின் ஆடைகள் உலகிற்கு ஒரு கருத்தை சொல்கின்றன என கூறுகிறார்.
அமெரிக்க பயணத்திற்காக, பாலிவுட்டின் பிரபல காஸ்ட்யூம் டிசைனர் டிராய் கோஸ்டாவை தனக்கு ஆடை வடிவமைப்பாளராக மோடி தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது குறித்து பாஜக, டிராய் கோஸ்டா என இருதரப்புமே மவுனம் சாதிக்கின்றன.
மோடி முதன்முதலில் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் உரையாற்றியது, பதவியேற்பு விழாவில் பேசியது, பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு பிரிக்ஸ் வங்கியை தொடங்கிவைத்தது, நேபாள நாடாளுமன்றத்தில் சிறப்புரையாற்றியது, 65 நிமிடங்கள் சுதந்திர தின உரையாற்றியது என அனைத்து தருணங்களிலும் ஹைலைட் அவரது ஆடைகள்தான். நூறு நாட்களில் கிட்டதட்ட 100 விதமான குர்தாக்கள், விதவிதமான தலைப்பாகைகள், பாரம்பரிய உடைகள் என நிறையவே பார்த்துவிட்டோம் நாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT