Published : 03 Feb 2024 06:28 PM
Last Updated : 03 Feb 2024 06:28 PM

‘அன்பின் அடிப்படையிலான இந்து மதம்’ - விவேகானந்தரின் பன்முக சிந்தனை

இந்தியாவில் தோன்றிய தலைசிறந்த ஆளுமைகளில் சுவாமி விவேகானந்தர் ஒருவர். தாய்நாட்டை உண்மையாக நேசித்தவர். கடந்த ஜனவரி 12-ஆம் தேதி அவரது 160-ஆவது பிறந்த தினம். 1984-ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி தலைமையிலான மத்திய அரசு விவேகானந்தரின் பிறந்த தினத்தை தேசிய இளைஞர் தினமாக கொண்டாட வேண்டும் என அறிவித்தது. அன்றிலிருந்து பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் அந்நாள் இளைஞர் நலத்துறையின் அல்லது நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர் மூலமாக ஓரு சம்பிரதாய நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 12 அன்று தமிழகத்தில் பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்ததில் பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்கள் தேசிய இளைஞர் நாளை கடைபிடிக்க தவறின.

இந்து மதக் கோட்பாடு பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவரும் இன்றைய சூழலில் விவேகானந்தரின் போதனைகள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை கற்பிக்க அதுவொரு நல்ல வாய்ப்பாக இருந்திருக்கும். இந்துமதத்தின் அடிப்படைத் தத்துவத்தைப் பற்றிய விவேகானந்தரின் விளக்கத்தையும் அதன்மூலம் கோடிட்டு காட்டி இருக்கலாம்.

பன்முகத்தை விரும்பியவர்: விவேகானந்தர் நாட்டு மக்களின் பரிபூரண விடுதலைக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த முதன்மையான துறவி. இந்து மதம் அன்பின் அடிப்படையிலானது. ரத்தமும் கத்தியும் இந்து மதத்துக்கு ஏற்புடையதல்ல என உரக்க உரைத்தவர். வேதாந்தத்தின் மேன்மை, மதநல்லிணக்கம், உண்மையின் உயரிய ஆற்றல், மனிதரில் உள்ள தெய்வீகத்தன்மை பற்றிய சாராம்சங்களைத் தொகுத்து உலகுக்கு நல்கியவர். ‘ஆண்-பெண், ஒருவர் பிறப்பு, மேனியின் நிறம், குலம், கோத்திரம், கொள்கை, கோட்பாடு என வேறுபாடு கடைப்பிடிப்பவன் உண்மையான மனிதன் அல்ல. மாறாக மனிதனுள் உள்ள தெய்வீகத்தை கடைப்பிடிப்பவன்தான் உண்மையான மனிதன்’ என்று உரக்க சொன்னவர் அவ‌ர். பன்முக கலாச்சாரத்தையும் பன்மைத்துவ சமூகத்தின் முக்கியத்துவத்தையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர்.

புத்தரே முன்மாதிரி: விவேகானந்தர், கல்வியறிவின் மூலமே மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். வறுமையிலிருந்து அவர்களை விடுவிக்கவும் சமூக கேடுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் எதிர்த்து போராடும் வல்லமையையும் பெறவும் முடியும். அதன் மூலமே அவர்கள் நன்னடத்தையையும் மேம்படுத்த முடியும் என விவேகானந்தர் நம்பினார். அதற்கு அவர் புத்தரையே முன்மாதிரியாக சுட்டிக்காட்டினார். அதனாலே, ‘அனைவரையும் ஒழுக்க சீலரான கௌதம புத்தராக பார்க்க விரும்புகிறேன்’ என்றார். ‘புத்தர் தனிப்பட்ட கடவுள் மீதோ, ஆன்மா மீதோ நம்பிக்கையற்றவர். இருப்பினும் மானிட நலனுக்காக தன் உயிரையும் தர தயாராய் இருந்தார்’ எனவும் அழுத்தமாக சொன்னார்.

பாரம்பரிய முறையில் உலகைத் துறந்து முக்தியை நாம் தேடவேண்டியதில்லை, மாறாக மனிதனின் உள்ளிருக்கும் கடவுளுக்காக சேவை செய்வதே தலை சிறந்தது என எடுத்துரைத்தார். விவேகானந்தர் உருவாக்கிய துறவிகளை சுய முக்திக்காக மட்டுமில்லாமல் மானிட முன்னேற்றத்தற்காகவும் பணி செய்வதாக சபதம் ஏற்க செய்தார்.

அவரது சீடர்களில் சிலர் ராமகிருஷ்ணர் பக்தியை மட்டுமே வலியுறுத்தியதாக எதிர் குரல் எழுப்பியபோது சற்று கோபமாக, ‘யார் உன் பக்தி, முக்தி பற்றி கவலைப்படுகிறார்? யார் உன் வேதங்கள் கூறுவது பற்றி கவலைப்படுகிறார்? எனது நாட்டு மக்களை அறியாமையிலிருந்தும் ஆழ்ந்த நித்திரையிலிருந்தும் எழச்செய்து தங்களது சொந்த கால்களில் நிற்க வைப்பதற்காக, ஆயிரம் நரகங்களுக்கு நான் மகிழ்ச்சியுடன் செல்வேன்’ என பதிலுரைத்தார்.

கண்ணீர் வடித்த சுவாமி: ‘இந்தியாவின் துயரத்திற்கு முக்கிய காரணம் உயர் சாதியினருக்கும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் இடையே உள்ள விரிந்த இடைவெளியே. அதை சரி செய்யாவிட்டால் மக்களுக்கு விமோசனம் இல்லை. ஆனால் உயர் சாதியினர் பத்தாயிரம் ஆண்டு மம்மிகளாகவும் உயிரற்ற நடைபிணங்களாகவும் இருப்பதாக’ சாடினார். 1893-ல் அமெரிக்கா செல்ல பம்பாயில் கப்பல் ஏறுவதற்குமுன் அவர் எடுத்துரைத்த கருத்துக்கள் இவை: ‘இந்தியா முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்.

சகோதரர்களே! மக்களின் ஏழ்மையையும், படும் அல்லல்களையும் அப்போது கண்கூடாக கண்டேன். வேதனையில் என் கண்ணிலிருந்து வந்த கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் மத்தியில் மதத்தை போதிப்பது வீணான முயற்சி என்பது என் திண்ணமான எண்ணம். இந்த ஒரு காரணத்திற்காகவே அவர்கள் துயர் நீக்குவதற்கான வழிமுறைகளைக் காண நான் அமெரிக்க செல்கிறேன்’ என்றார்.

விவேகானந்தரின் தெளிவான‌ சிந்தனை: சிக்காக்கோ மாநாட்டில் விவேகானந்தர் செப்டம்பர் 11,15,19,20,29 ஆகிய ஐந்து நாட்கள் உரை நிகழ்த்தினார். ஆனால் செப்டம்பர் 19 அன்று அவர் ஆற்றிய உரையே வரலாற்று சிறப்பு மிக்கதாகும். வேதாந்த, கர்மா, ஆன்மா போன்ற கோட்பாடுகளை அப்போது விரிவாக விளக்கினார். உருவ வழிபாட்டை ஆதரிப்பதாக கூறிய விவேகானந்தர் அது ஒரு தாழ் நிலை என்றும், அந்நிலையிலிருந்து மக்கள் உயர்நிலை ஞானத்திற்கு செல்லவே தான் விரும்புவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய விவேகானந்தர் புனிதம், தூய்மை, தொண்டு எந்த ஒரு மதத்திற்கும் உரிய ஏகபோக உரிமை அல்ல. அனைத்து மதப் பிரிவுகளும் தலைசிறந்த நற்பண்பாளர்களை உருவாக்கியிருக்கின்றன; எவரேனும் தன்னுடைய மதம் மட்டுமே வாழ வேண்டும், பிற மதங்கள் ஒழிய வேண்டும் என கனவுகண்டால் அவர்களுக்காக நான் பரிதாபப் படுகிறேன்; ‘உள்வாங்கு, அழிக்காதே, பூசல் அல்ல நல்லிணக்கம், அமைதி, போன்ற வாசகங்கள் பொறித்த கொடிகள் அனைத்து மதங்களாலும் விரைவில் பறக்கவிடப்படும்’ எனவும் அறிவித்தார்.

அமெரிக்காவிலிருந்து திரும்பியபின் கல்கத்தாவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், ‘ஆங்கிலேயர் இந்தியாவிலிருந்து சில பிரிவினர் அனுபவித்த சலுகைளை முற்றிலும் ஒழித்தனர். முகமதியர்கள் ஆட்சிக்கூட ஒரு விதத்தில் ஆசீர்வாதமாக இருந்ததால்தான் ஒடுக்கப்ப‌ட்ட பிரிவினர் அதிக எண்ணிக்கையில் இஸ்லாமுக்கு சென்றனர்’ என்று அப்போது விவேகானந்தர் தெரிவித்த கருத்து கவனிக்கத்தக்கது.

இளைஞர்களுக்கு கூறிய அறிவுரை: விவேகானந்தர் இளைஞர்களுக்கு பல்வேறு வழிகளில் புத்துணர்வூட்டி எழுச்சியடையச் செய்தார். ‘வாழ்வில் வெற்றிபெற மனஉறுதியும் விடாமுயற்சியும் தேவை. நான் பெருங்கடலையும் அருந்திடுவேன், என் மன உறுதிக்கு முன் மலையும் நொறுங்கி விழும் என தீர்மானத்துடன் உழைத்திட்டால் எந்தவித இலக்கையும் இலகுவாக அடையமுடியும்’ என்றார்.

உண்மையை அறிய அறிவியல் சிந்தனையின் அவசியத்தை வலியுறுத்திய விவேகானந்தர் ‘ஒருவர் சொன்னார் என்பதற்காக எதையும் நம்பி விடாதே, உண்மையை நீயே கண்டறி.. அதுதான் உண்மையான உண்மை அறிதல் முறை. அறிவியல் சிந்தனையின் மூலமே மூட நம்பிக்கைகளை எதிர்த்து போராட முடியும். சிந்தித்தல் கடவுள் கொடுத்த ஆயுதம். அதை அதிகமாக பயன்படுத்த வேண்டும். பயமின்றி துணிவுடன் வாழ்’ என்பவை இளைஞர்களுக்கு அவர் வழங்கிய அரிய அறிவுரையாகும்.

வைதீக மதத்திற்கும் அரசியலாக்கப்பட்ட மதத்திற்கும் உள்ள வேறுபாட்டை தெளிவுப்படுத்தி இந்தியா மதசார்பற்ற, பன்முக கலாச்சார, ஜனநாயக நாடாக தொடர்ந்திட அனைத்து பிரிவு மக்களிடமும் விவேகானந்தரின் மனிதநேய மதக்கோட்பாட்டை எடுத்துரைப்பது நாட்டு நலனில் அக்கறை கொண்ட அனைவரது தலையாய கடமையாகும்.

- கா.அ.மணிக்குமார், பேராசிரியர் (ஒய்வு), வரலாற்றுத்துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தொடர்புக்கு: kamkumar1951@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x