Published : 23 Jan 2024 08:05 PM
Last Updated : 23 Jan 2024 08:05 PM
இந்தியப் பிரதமராக உயர்ந்த ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பொருளாதார மேதை டாக்டர் மன்மோகன் சிங், ஒரு முழு நேர அரசியல்வாதி அல்ல. பிரதமர் பதவி தானாக அவரைத் தேடி வந்தது. நாட்டின் மிக உயரிய நிர்வாகப் பொறுப்பை ஏற்று 'எல்லார்க்கும் நல்லனாய்' இருந்து, நன்கு அரவணைத்துச் சென்று நல்ல திட்டங்களை நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார்.
2006 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் மூன்றாவது முறையாக தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஆற்றிய உரை: எனது அன்பார்ந்த நாட்டு மக்களே, சகோதர சகோதரிகளே, அன்பார்ந்த குழந்தைகளே, இந்த சுதந்திர தின நன்னாளில் உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். இந்த நாள், நமது நாட்டுக்கு ஒரு சுபதினம். இன்று நமது சுதந்திரத்தின் அறுபதாவது ஆண்டில் நுழைகிறோம். நமது நாட்டின் வளர்ச்சி மற்றும் வளமைக்கு, அனைத்து மக்களின் நல்வாழ்வுக்கு, நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்காக நம்மை நாம் மீண்டும் அர்ப்பணித்துக் கொள்கிறோம்.
நமது அன்பார்ந்த மூவண்ணக் கொடிக்கு வணக்கம் செலுத்துகிறோம். நமக்கு சுதந்திரம் கிடைக்கக் கடும் முயற்சிகளையும் தியாகங்களையும் வழங்கிய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு, மகாத்மா காந்திக்கு நாம் அஞ்சலி செலுத்துகிறோம். நமது கொடி உயரப் பறக்க, நமது நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் வைத்திருக்க கடின உழைப்பையும் முயற்சிகளையும் தந்த அனைவரையும் நினைவு கூர்கிறோம். ஆயுதப்படைகளின் துணிச்சல் மிக்க உறுப்பினர்கள், விவசாயிகள் ஆசிரியர்கள் விஞ்ஞானிகள் தொழிலாளர்கள் மற்றும் நமது நாட்டின் வளர்ச்சி மற்றும் வளமைக்காக தளராது உழைக்கும் பல லட்சக்கணக்கான நாட்டு மக்கள் அனைவருக்கும் வணக்கம் செலுத்துகிறோம்.
1947 ஆகஸ்ட் 15 - நமது நாடு சுதந்திரம் பெற்றபோது, நமது முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தேச மக்களுக்கு உரையாற்றினார். நாம் விடுதலை பெற்ற நாடாக ஆன முதல் நாளிலேயே அவர் நம் எல்லோரிடமும் ஒரு கேள்வி கேட்டார்: இந்த நல்ல வாய்ப்பைப் பற்றிக் கொள்ள, எதிர்காலத்தின் சவாலை ஏற்றுக் கொள்ள, போதுமான துணிச்சல், அறிவு கொண்டவர்களாக நாம் இருக்கிறோமா..?'
இன்று எனது அன்பார்ந்த குடிமக்களே மீண்டும் ஒருமுறை உங்கள் முன்னால் நின்று கொண்டு அதே கேள்வியை உங்களிடம் கேட்கிறேன் - எதிர்காலத்தின் சவால்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா..? இதற்குப் போதுமான துணிச்சல் போதுமான அறிவு கொண்டவர்களாக இருக்கிறோமா..? நமது விடுதலைப் போராட்டத்தை வடிவமைத்த எண்ணங்கள் மற்றும் கொள்கைகளை நாம் மீண்டும் கண்டெடுப்போமா..? அவற்றைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் நமது நாட்டை முன்னெடுத்துச் செல்வோமா ..? புதிய உலகத்தில் ஒரு புதிய இந்தியாவை நிர்மாணிக்கத் தேவையான துணிச்சல் மற்றும் அறிவுடைமை, பண்டித நேரு விரும்பியவாறு, நம்மிடம் உள்ளதா..?
எனது அன்பார்ந்த நாட்டுமக்களே, முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் தற்போது இந்தியாவுக்கு நல்ல காலம் வாய்த்து இருக்கிறது. நமது பொருளாதாரம் மிகவும் நன்றாக 8 சதவீதக்கு மேலான வேகத்தில் வளர்ந்து வருகிறது. தொடர்ந்து மூன்றாவதாக இத்தகைய வளர்ச்சி வேகம் இந்திய சரித்திரத்தில் இதற்கு முன் இருந்தது இல்லை. நான் எங்கு சென்றாலும் இந்தியா வளர்வதைக் காண்கிறேன். நமது தொழில் துறை, சேவைத் துறை - நல்ல வளர்ச்சியை காண்பித்து வருகிறது. உலகின் சவால்களை எதிர்கொள்ள ஆற்றல் கொண்டதாக நமது தொழில் துறை நம்பிக்கையுடன் செயல்படுவதைப் பார்க்கிறேன். கடந்த காலாண்டில் உற்பத்தித் துறை, 11 சதவீதம் வளர்ச்சியுடன் நமது இளைஞர்களுக்கு, தொழிலாளர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகின் மிகச் சிறந்தவர்களோடு போட்டியிட்டு நமது சேவைத்துறை, மதிப்புமிக்க அன்னிய செலாவணி ஈட்டித் தருகிறது.
சுற்றியும், புதிய சாலைகள் போடப்படுகின்றன. ரயில்வே தனது சேவையை விரிவாக்குகிறது. புதிய மின் உற்பத்தி நிலையங்கள் கட்டப்படுகின்றன. புதிய விமான நிலையங்கள் திட்டமிடப்படுகின்றன. அகன்ற தொழில் மையங்களும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் வந்து கொண்டு இருக்கின்றன. லட்சக்கணக்கான இந்தியர்களின் ஊக்கம் படைப்பாற்றல் மற்றும் கடின உழைப்பால் இந்த செயலாக்கம் விளைந்துள்ளது. இவர்கள், பல புதிய பாதைகளில் துணிச்சலுடன் நமது நாட்டை எதிர்காலத்துக்கு இட்டுச் செல்கிறார்கள். இது நமது மக்களுக்கு இன்னும் அதிக வளமையைக் கொண்டு வரும் என்பது உறுதி. வளர்ச்சியை மேம்படுத்தி அதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம். வறுமை ஒழிக்க இதுதான் மிகத் திறம் மிக்க வழி என்று நான் உண்மையாக நம்புகிறேன். ஆகவே, பொருளாதார வளர்ச்சி என்பது நமக்கு மிக முக்கியமானதாகும்.
சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகப் போகிறது. தொன்மையான நாகரிகம் கொண்ட ஒரு சரித்திரத்தில் இது மிகக் குறுகிய காலம்தான். ஆனால் ஒரு இளைய தேசத்தின் வாழ்க்கையில் இது, நீண்ட காலம். இந்த 60 ஆண்டுகளில் அடையாளம் காண முடியாத அளவுக்கு உலகம் மாறி உள்ளது. ஐரோப்பியப் பேரரசுகள் காலத்தில் கரைந்து விட்டன. ஆசியாவில் பல புதிய சக்திகள் தோன்றிவிட்டன. ஜப்பான், எப்படி இருந்தது.. எப்படி இருக்கிறது..! சீனா எப்படி இருந்தது.. இன்று எப்படி இருக்கிறது..! தென்கிழக்கு நாடுகள் எங்கு இருந்தன..! இப்போது எங்கே இருக்கின்றன..! இவற்றைக் காணும் போது நாம் உண்மையில் நமது முழுத் திறனுக்கு ஏற்ப செயல்பட்டு உள்ளோமா என்று பார்க்கிறேன்.
இந்தியா மிக நிச்சயமாக முன்னேற்றப் பாதையில் இருக்கிறது. ஆனாலும் நமது விதியை நாம் சரியாக நிர்ணயித்துக் கொண்டோம் என்று சொல்வதற்கு இன்னமும் நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பு பண்டித நேரு, சுதந்திர இந்தியாவின் முன்பு இருக்கும் இரண்டு சவால்களாக இவற்றைக் கூறினார்: நீண்டகால வறுமை அறியாமை மற்றும் நோய்களை முடிவுக்குக் கொண்டு வருதல்; மற்றும், வாய்ப்புகளில் சமமின்மையை நீக்குதல். இந்த 60 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சிப் பாதையில் நீண்ட தூரம் பயணித்து உள்ளது. ஆனால் வறுமை ஒழிப்பு சவால் இன்னமும் தொடர்கிறது. நமது நாட்டிலிருந்து இன்னமும் பசி ஒழிந்த பாடில்லை. கல்லாமை இன்னமும் ஒழிக்கப்படவில்லை. ஒவ்வோர் இந்தியரும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பதை இன்னும் நம்மால் உறுதி செய்ய முடியவில்லை.
கண்ணுக்குத் தெரிந்து சுற்றிலும் நல்ல வளர்ச்சி தென்படுகிறது. ஆனாலும் எனக்கு சில கவலைகள் உள்ளன. ஒவ்வோர் இந்தியருக்கும் இதுபோன்ற கவலைகள் உள்ளன என்பதை நான் அறிவேன். நாம் வெகு விரைவாக முன்னேறி உலக நாடுகள் மத்தியில் நமக்கான இடத்தை பெறுகிற போது, நமது மக்கள் தொகையில் பெரும் பகுதியை நவீனத்துவம் இன்னும் தொட்டுப் பார்க்கவில்லை; இவர்கள் இன்னமும் தொடர்ந்து முதுகு வலிக்க உழைக்கிறார்கள்; சமமற்ற சமூக அமைப்பில் இவர்கள் தொடர்ந்து இன்னல்படுகிறார்கள். தமது நிலத்தில், ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியாமல் நமது விவசாயிகள் நெருக்கடியில் தவிக்கிறார்கள். நான் விதார்பா சென்றபோது, (அங்கு நான் கண்ட) விவசாயிகளின் நிலைமை, இன்னமும் என்னுள் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்குத் தூண்டும் அளவுக்கு மிக மோசமாக உள்ள வேளாண் நெருக்கடி தீர்க்கப்பட வேண்டும். நமது விவசாயிகளுக்கு எவ்வாறு ஆரோக்கியமான வாழ்வு தர முடியும் என்று நாம் சிந்திக்க வேண்டும்.
மாபெரும் வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதைப் பார்க்கும் போது, இந்த வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடையும் போதே, தமது நிலத்தை, தமது வாழ்வாதாரத்தை தமது வசிப்பிடத்தை இழந்தவர்களை எண்ணி வருந்த வேண்டி உள்ளது. நமது மாநகரங்கள் வேகமாக வளர்ச்சி பெறுவதைப் பார்க்கிற போது, கண்ணெதிரே வளர்ச்சி தெரிகிறது. அதே சமயம், இங்கே குடிசைப் பகுதிகளில் வாழும் ஏராளமானோரை எண்ணி, கவலை எழுகிறது. உலக அளவில் நமது தொழிற்துறையும் சேவைத் துறையும் போட்டியிட்டு உலகச் சந்தைகளில் நமது வெற்றியைக் கொண்டாடும் அதே சமயம், நம்மால் கட்டுப்படுத்த இயலாத காரணிகளால் எண்ணெய் விலை உயர்கிற போது இதே உலக சக்திகளால் நாம் இடித்துத் தள்ளப்படுகிறோம். (We are buffeted by the same global forces when oil prices go up because of factors beyond control) உலகமயமாக்கல் நிச்சயமாக சில நன்மைகளைக் கொண்டுள்ளது. கூடவே அது, சாமானிய மக்களுக்கு ஊறு விளைவிக்கவும் செய்யும்.
இந்த இரட்டைத் தன்மையை எதிர்கொள்வது தான் ஒரு தேசமாக நமக்குள்ள சவால். வளர்ச்சி சக்கரம் வேகமாக நகர்வதை உறுதி செய்து செய்ய வேண்டும்; சமுதாயத்தின் எந்த பிரிவும், இந்த நாட்டின் எந்தப் பகுதியும் பின்தங்கி விடக்கூடாது; தேவையான சொத்துகளை உருவாக்குவதாக வளர்ச்சி இருக்க வேண்டும், இதைக் கொண்டு விளிம்பு நிலை மக்களின் நல்வாழ்த்துக்கள் முதலீடு செய்ய வேண்டும்; நமது வளர்ச்சி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக, நமது இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை நல்குவதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், இவற்றை எதிர்கொள்வது தான் நமது குறிக்கோளாக இருந்தது. வேலை வாய்ப்புகளை விரிவாக்குதல் மற்றும் கிராமப்புற நகர்ப்புற வாழ்க்கை தரத்தை மேம்படுத்துதல் தொடர்பாக நாம் பல நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறோம்.
கடுமையான வறுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வருமான பாதுகாப்பு வழங்குவதற்காக தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழுள்ளத் திட்டங்கள், இதற்காக ஏற்கனவே 2 கோடிக்கும் மேலான குடும்பங்கள் பதிவு செய்துள்ள நிலையில், தற்போது இருநூறு மாவட்டங்களில் இது செயல்பாட்டுக்கு வருகிறது; படிப்படியாக நாடு முழுமைக்கும் இது விரிவு படுத்தப்படும். புதிய பாதை வகுக்கும் இந்தச் சட்டம், ஏழைகளுக்கு சமூகப் பாதுகாப்பு நல்கும் முக்கியமான சட்டமாகும். வறுமை ஒழிப்பில் இந்தச் சட்டம் பெரிதும் உதவும் என்று நம்புகிறேன்.
பாரத் நிர்மாண் என்று மற்றொரு திட்டம். நமது கிராமங்களை நவீனப்படுத்தும். நமது கிராமங்கள் முழுமையாக மின்வசதி பெற்று, சாலைகளால் தொலைபேசியால் இணைக்கப்படும்போது கிராமப் பொருளாதாரம் வளம் பெறும். மேம்பட்ட நீர்ப்பாசன வசதிகளைப் பெறும்போது, வேளாண்மை வளரும். குடிநீர் மற்றும் வீட்டு வசதிகள் மேம்படும்போது அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும். நகர இந்தியாவில் (மட்டும்) தென்படும் வளர்ச்சியில் (இனி) கிராம மக்களும் பங்கு பெறுவார்கள். பாரத் நிர்மாண் திட்டத்தின் முதல் ஆண்டில் வளர்ச்சி நன்றாக இருக்கிறது என்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். 2009 ஆம் ஆண்டு வாக்கில் நாடெங்கிலும் இதன் நல் விளைவு தென்படும்.
இந்த திட்டங்கள் எல்லாம் வறுமை மீதான நமது போரில் ஆயுதங்களாகும். வறுமைக்கு எதிரான மிகத் திறன் வாய்ந்த ஆயுதம் - வேலைவாய்ப்பு. இன்னமும் மேலான பொருளாதார வளர்ச்சியே வேலை வாய்ப்புகளை உருவாக்க மிகச் சிறந்த வழியாகும். வணிகத்தைப் பெருக்க மேலும் பல வேலை வாய்ப்புகளை உருவாக்க குறிப்பாக உற்பத்தி துறையில் வேலை வாய்ப்புகள் உருவாக ஊக்குவிக்கும் சூழலை நாம் ஏற்படுத்த வேண்டும். தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி பெறுவதற்கு ஏதுவான சூழலை நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். இதன் பயன்களை நாம் தெளிவாகப் பார்க்கிறோம். மிகப்பெரும் தொழிற்சாலைகளுக்கு மட்டும் அல்ல; அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணிபுரியும் சிறுதொழில், கைத்தொழில்களுக்கும் சிறப்பு திட்டங்கள் மூலம் ஆதரவு அளித்து வருகிறோம். கைத்தறி மற்றும் நெசவு தொழில் 3.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. இந்தத் துறைக்கு குறைந்த வட்டியில் கடன் வாங்குகிறோம். கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் புத்துயிர் ஊட்டப்படுகின்றன. வரும் ஆண்டுகளில் இந்தத் துறைகளில் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று நம்புகிறேன்.
எனது அன்பார்ந்த நாட்டு மக்களே.. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செங்கோட்டையிலிருந்து பேசும் போது 'கிராமப்புற இந்தியாவுக்கு புதிய உடன்படிக்கை' (New Deal for Rural India) குறித்து உறுதி கூறினேன். இது தொடர்பாக நிறைய செய்து இருக்கிறோம்; இன்னும் நிறைய செய்ய வேண்டி உள்ளது என்பதையும் அறிவேன். நாங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்றி இருக்கிறோம்; மூன்றாண்டுகளுக்கு உள்ளாக விவசாயக் கடன் இரட்டிப்பு ஆகியுள்ளது. விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் குறைந்த கால கடன் வழங்குகிறோம். விதர்பா பகுதியில் கடன் பிடியில் சிக்கிய விவசாயிகளின் நீண்ட கால நிலுவைத்தொகை மீது வட்டியை ரத்து செய்துள்ளோம். தற்கொலை பாதிப்பு மிகுந்துள்ள பிறமாவட்டங்களுக்கும் இதனை நீட்டிப்போம். தனியார் கடன் பிடியில் இருந்து விடுவிக்க ஒவ்வொரு விவசாயிக்கும் நிறுவனக் கடன் (institutional lian) கிடைக்க முயற்சித்து வருகிறோம். இதற்காக கூட்டுறவு கடன் அமைப்பு முறையை சீரமைக்கிறோம்; 13,000 கோடி ரூபாயில் (புதிய) திட்டத்தை செயல்படுத்துகிறோம். தோட்டக்கலை கால்நடை வளர்ப்பு, பருத்தி, கரும்பு மற்றும் பிற பயிர்கள் மீதும் கவனம் செலுத்துகிறோம். மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தேசிய மீன்வள வளர்ச்சி வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. வேளாண் ஆராய்ச்சி மேம்படுத்தப் படுகிறது; இந்த ஆண்டு இறுதிவாக்கில் நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் அறிவியல் மையம் Krishi Vigyan Kendra செயல்படத் தொடங்கி விடும்.
ஆனாலும் விவசாயிகளின் வளமையைப் பெருக்குவதற்கு இன்னும் நாம் நிறைய செய்ய வேண்டி இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன். குறிப்பாக வானம் பார்த்த பூமியில், வறண்ட நில வேளாண்மையில் நிறைய செய்ய வேண்டி உள்ளது. நமது விவசாயிகளுக்கு மேலும் லாபகரமான கொள்முதல் விலை கிடைப்பதை உறுதி செய்ய பணியாற்ற வேண்டி உள்ளது. பெரும் கடன் சுமையைத் தாங்கும் நமது விவசாயிகளின் மோசமான நெருக்கடியை நான் அறிவேன். வேளாண் கடன் பிரச்சினையைக் கூர்ந்து நோக்கி பரிசீலிக்க ஒரு நிபுணர் குழுவை சமீபத்தில் அமைத்து இருக்கிறோம். இன்னும் சில மாதங்களில், அழுத்தும் கடன் சுமையில் இருந்து விவசாயிகள் வெளிவர உதவும் உறுதியான நடவடிக்கைகளை நாம் எடுப்போம். மிக முக்கியமாக, உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் இன்னும் பலருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். இதனால், நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு வேலை தருகிற விவசாயத்தின் மீதான சமமற்ற சுமை குறையும்.
விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்கிற நமது முயற்சியின் நல்விளைவுகள் சில இடங்களில் தென்படத் தொடங்கியுள்ளன. பல பயிர்களுக்கு விவசாயிகள் முன்னை விட சிறந்த விலை பெறுகின்றனர். இது அவர்களுக்கு, முன்னை விட மேலான வாழ்வாதாரம் ஈட்ட உதவுகிறது. மறுபக்கம் இதனால், சாமானியனுக்கு தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்கிறது. சமுதாயத்தின் மற்ற பிரிவினரின் வருமானம் உயர்கிற போது விவசாயிகளுக்கும் வருமானம் உயர வேண்டும். இதில் நாம் பொறாமைபடக் கூடாது. வறிய ஏழை மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய, அவர்களுக்கு ஏற்ற விலையில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய இந்த அரசு முனைப்புடன் உள்ளது.
சகோதரர்களே சகோதரிகளே, அத்தியாவசியப் பொருட்களின் விலை குறித்து ஒவ்வொரு குடும்பமும் கவலை கொண்டுள்ளது என்பதை அறிவேன். விலைவாசியை கட்டுப்படுத்த தேவையான அனைத்தையும் இந்த அரசு செய்யும் என்று உறுதி கூறுகிறேன். ஆனாலும் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன் - இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச எண்ணெய் விலை ஒரு பாரலுக்கு 30 டாலர் இருந்தது. இப்போது அது கிட்டத்தட்ட 75 டாலர்! உலக எண்ணெய் விலை இருமடங்கு அதிகரித்த போதும், நமது நுகர்வோருக்கு பெரிய அளவில் பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்வதில் வெற்றி பெற்றுள்ளோம். மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலையை ஏற்றவில்லை. ஆனால் அதிகரித்து வரும் இறக்குமதி விலையைக் கருத்தில் கொண்டால், பெட்ரோலிய பொருட்களுக்கு எந்த அளவு மானியம் வழங்கலாம் என்பதற்கும் ஒரு வரையறை இருக்கிறது. அரசுக் கருவூலம் எந்த அளவுக்கு சுமையை ஏற்றுக் கொள்ள முடியும்? ஏதேனும் ஒரு புள்ளியில் இது, முக்கியமான வளர்ச்சி திட்டங்களில் செலவு செய்யும் நமது திறனை பாதிக்கவே செய்யும். சாமானியருக்கு உணவுப்பொருட்கள் கிடைக்க வழி செய்யும் பொருட்டு, சந்தையில் பற்றாக்குறையை சமாளிக்க, சில பொருட்களை நாம் இறக்குமதியும் செய்கிறோம்.
சகோதரர்களே சகோதரிகளே, விவசாயம் வேலைவாய்ப்பு இரண்டும் நம்முடைய மிக முக்கிய அக்கறையாக இருந்தாலும், நமது குழந்தைகளின் எதிர்காலமே நமது நீண்ட கால அக்கறை. இவர்கள் ஆரோக்கியமாக நன்கு படித்தவர்களாக எதிர்காலம் குறித்த நம்பிக்கை உடையவர்களாக இருக்க வேண்டும். கிராம பகுதிகளில் மேலும் சிறப்பான சுகாதார வசதிகளை வழங்குவதற்காக தேசிய ஊரக சுகாதார இயக்கம் தொடங்கி இருக்கிறோம். இந்தத் திட்டத்தின் கீழ், கிராமப் பகுதிகளில் சுமார் 2 லட்சம் பெண்கள், சுகாதார உதவியாளர்களாய் (Health Assistants) உள்ளனர். விரைவில் மேலும் 4 லட்சம் பெண்கள் சேர்வார்கள். இவர்கள் மூலமாக, குழந்தைகளுக்கு உணவில் சத்துக்குறைபாடு மற்றும் மலேரியா காசநோய் எய்ட்ஸ் மற்றும் பிறநோய்களுக்கு எதிராகப் போரிடுவோம். இந்த நோய்கள் நமது மக்களின் மீது கடுமையான நிதிச்சுமையை ஏற்றி வைக்கிறது. விதார்பா பகுதியில், தமது அன்பார்ந்த குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ செலவை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட விவசாயக் குடும்பங்களைக் கண்டு மிகுந்த வலியுற்றேன். வறுமை, நோய்கள் ஆகிய சுமைகளில் இருந்து மக்கள் விடுபட, சாத்தியம் ஆகிற எல்லா நடவடிக்கைகளும் எடுப்போம்.
விரிவுபடுத்தப்பட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் நமது குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கு செல்வதை உறுதி செய்யும். பொது மதிய உணவு திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 12 கோடி குழந்தைகள் பள்ளிகளில் சத்துணவு பெறுகிறார்கள். இந்த இரண்டு திட்டங்களின் மூலம் நம் குழந்தைகள் அனைவருக்கும் தொடக்க நிலைக் கல்வியை உறுதிசெய்வோம். பள்ளி செல்லும் வயதில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் பள்ளியில் சேர்வதை உறுதி செய்யுமாறு ஒவ்வொரு குடிமகனையும் கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரின் குழந்தைகள் கல்வியின் மூலம் அதிகாரம் பெறுவதில் சிறப்பு கவனம் செலுத்துவோம். சிறப்பு தேவைகள் உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு நம்மால் இயன்ற அத்தனை உதவிகளும் வழங்குவோம். மாற்றுத்திறன் கொண்ட அத்தனை பேருக்கும் சமுதாயத்தில் கண்ணியமான வாழ்க்கை பெறுவதில் அக்கறை காட்டுவோம்.
கிராம முன்னேற்றம் மற்றும் விவசாயிகள் நலன் சார்ந்த நமது முயற்சிகள் அனைத்தையும் பஞ்சாயத்து அமைப்புகளின் தீவிர பங்களிப்பால் மட்டுமே நிறைவேற்ற முடியும். நமது மாநகரங்களில் நகரங்களில் மாவட்டங்களில் கிராமங்களில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படும் தரத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நமது நகராட்சிகளை ஊழல் என்னும் புற்று நோயிலிருந்து விடுவித்தாக வேண்டும். இதில் மாநில அரசுகள் ஆற்ற வேண்டிய பங்கு மிக முக்கியமானது.
சகோதரர்களே சகோதரிகளே, மாநகரங்களும் நகரங்களும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வளர்ச்சி மையங்கள். நமது மாநகரங்கள் புதுப்பொலிவு பெற வேண்டும். இதற்கு மிகப் பெரும் முதலீடு தேவைப்படுகிறது. இங்கே, சுகாதாரம் குடிநீர் மற்றும் ஏழைகளுக்கு முறையான வீட்டு வசதி ஆகிய அடிப்படைகள், பொதுப் போக்குவரத்து பூங்காக்கள் விளையாட்டு மைதானங்கள் தேவைப்படுகின்றன. மாநகரங்களில் நமது குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பாக உணர வேண்டும்; உழைக்கும் ஏழைகள் சுயமரியாதையுடன் கண்ணியத்தோடு வாழ வேண்டும். நமது மாநகரங்களில் இன்னமும் சிறப்பான கட்டமைப்பு வசதிகள் இன்னமும் மேலான வாழ்க்கை அமைவதை உறுதி செய்யும் பொருட்டு, ஜவஹர்லால் நேரு தேசிய நகர புதுப்பித்தல் இயக்கம் Jawaharlal Nehru National Urban Renewal Mission தொடங்கியுள்ளோம். பெங்களூரு மற்றும் மும்பையில் மெட்ரோ போக்குவரத்து பணிகள் தொடங்கி உள்ளன. அடுத்து வரும் 10 ஆண்டுகளில் மாநகரங்கள் அபார வளர்ச்சி பெறும்.
இந்த திட்டங்களை செயல்படுத்துவதே அரசின் முன் உள்ள சவால். நமது அரசுகள் செயல்படும் விதம், பொதுச் சேவையை முன்னெடுக்கும் முறை - மேம்படுத்தப்பட வேண்டும். இதை நாம் எப்படிச் செய்ய இருக்கிறோம்? கூடுதல் முதலீடுகளுக்கு ஏற்ப கூடுதல் நல்விளைவுகள் ஏற்படுத்துவதை எவ்வாறு உறுதி செய்யப் போகிறோம்? நமது அரசால் இயற்றப்பட்ட தகவல் உரிமைச் சட்டம் மக்களுக்கு தேவையான அதிகாரத்தை தந்து அரசாங்கத்தை மேலும் பொறுப்பு உள்ளதாக மாற்றும் என்று நான் உண்மையாக நம்புகிறேன். பொதுச் சேவைகளை வழங்குவது உட்பட வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் ஊழலை முற்றிலுமாக ஒழிக்க நாம் கடுமையாகப் போராட வேண்டும். நேர்மை தூய்மை மற்றும் திறமையைப் பாராட்டி ஊக்குவிக்கும் அமைப்பு முறையை நாம் உருவாக்க வேண்டும்.
சகோதரர்களே சகோதரிகளே, மனித அறிவு மேன்மைக்கு இந்தியா மிகப்பெரிய அளவில் பங்காற்றி உள்ளது. இன்று நாம் புதிய ஆயிரமாண்டு (மில்லினியம்) தொடக்கத்தில் உள்ளோம். இது, அறிவுப் பொருளாதாரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த உலகத்தில் நமது வளர்ச்சியை, உலகத்தில் நமக்கான இடத்தை அறிவுதான் தீர்மானிக்கிறது. புதிய ஆராய்ச்சி மற்றும் புதிய சிந்தனையில் குறிப்பாக அறிவியல் தொழில்நுட்பத்தில் நாம் தொடர்ந்து முன்னிலை வகிக்க வேண்டும். உலகத்தரம் வாய்ந்த (கல்வி) நிறுவனங்களை நாம் நிறுவ வேண்டும். கொல்கத்தா, புனே, பஞ்சாபில் மூன்று புதிய அறிவியல் கல்வி பயிற்சி நிறுவனங்களுக்கான பணிகள் தொடங்கி இருக்கிறோம்.
எய்ம்ஸ் மருத்துவமனை தரத்துக்கு இணையா 19 மருத்துவ நிறுவனங்கள் மீதும் பணிகள் தொடங்கி விட்டோம். உயர் கல்வி மட்டத்தில் மேலும் பல கல்வி வாய்ப்புகள் கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்; இதனால், வெறுமனே படித்தவர்களாக மட்டுமல்லாமல், ஆதாயமான வேலை வாய்ப்புகளைப் பெற திறன் படைத்தவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள். நமது பொருளாதாரம் பெருகும் போதே, நமது தொழில்துறை வளர்கிற போதே, திறன் வாய்ந்த பணியாளர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக புகாரும் கேள்விப்படுகிறேன். மிகுந்த மனித வளம் கொண்ட நாடாக நமக்கு இது ஒரு தடையாக இருக்க அனுமதிக்கலாகாது. நமது பொருளாதாரத்தில் திறனுக்கு பற்றாக்குறை இருப்பதை நிவர்த்தி செய்ய தொழில் வழங்கும் கல்வி மீதான இயக்கம் Mission on Vocational Education தொடங்க திட்டமிட்டு வருகிறோம்.
கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறபோது, இவை நமது சமுதாயத்தின் விளிம்பு நிலை, நலிந்த பிரிவு மக்கள் அனைவருக்கும் சென்று சேர்வதை நாம் உறுதி செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட பிரிவினைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கல்வி நிறுவனங்களில் ஒதுக்கீடு வழங்க இந்த அரசாங்கம் உறுதி கொண்டுள்ளது. இதைச் செய்வோம்; அதே சமயம் எல்லா இளைஞர்களுக்கும் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவோம். இது நமது உறுதியான கொள்கை. இந்த வகையில் எல்லாரையும் உள்ளடக்கிய சமுதாயத்துக்காக உழைக்கிற போதே, தனிநபர் திறமைகளை, கடின உழைப்பை அங்கீகரிப்போம், ஊக்குவிப்போம்.
நமது நாட்டின் ஒவ்வொரு மண்டலமும் வளர்ச்சி பெற விரைந்து செயலாற்றுகிற போதே, தமது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை இது பாதிக்காது என்பதையும் உறுதி செய்வோம். நாட்டின் எந்த மண்டலமும் பின்தங்கி விடக் கூடாது. விரைவில் நமது அரசாங்கம் முழுமையான மறுவாழ்வுக் கொள்கை Rehabilitation Policy கொண்டுவர இருக்கிறது. இதன் மூலம், வெளியேற்றம் காரணமாக யாரும் வறுமைக்குத் தள்ளப்பட மாட்டார்கள்; தமது நிலத்தை இழந்தவர்கள் பொருளாதார வளர்ச்சியில் நன்மை பெறுவார்கள். புலிகள் உட்பட வனவிலங்குகளைப் பாதுகாக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். பின்னடைந்த மண்டலங்கள் உதவி நிதியம் மூலம் 250 மாவட்டங்களில் ரூபாய் 5,000 கோடி செலவில் பிற்பட்ட மண்டலங்களை வளர்ச்சி பெறச் செய்ய உறுதியான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
எனது அன்பார்ந்த நாட்டு மக்களே, நமது அடுத்த கவலை - தேசப் பாதுகாப்பு. உள்நாட்டு பாதுகாப்பில் இந்தியா இரண்டு பெரிய அபாயங்களை எதிர் கொண்டுள்ளது - பயங்கரவாதம், நக்சல்வாதம். மிக சமீபத்தில், ஒரு மாதத்துக்கு முன்பு, மும்பை மாநகரம், மிக மோசமான, மனிதாபிமானமற்ற பயங்கர தாக்குதலை சந்தித்தது. நூற்றுக்கணக்கான அப்பாவிக் குடிமக்கள் உயிரிழந்தனர், காயமுற்றனர். இந்த துன்பகரமான நிகழ்வில் நாடு மொத்தமும் வலியை உணர்ந்தது. மும்பை துணிச்சலையும் பொறுமையையும் வெளிப்படுத்தி இத்தகைய சம்பவங்களால் துவண்டு விட மாட்டோம் என்கிற உறுதியை வெளிக் காட்டியது.
அப்போது நான் மும்பையில் கூறினேன் - நாம் யாருக்கும் இனி எப்போதும் போல இயல்பாக இருக்காது. நமது பொருளாதார வலிமையை பயங்கரவாதிகள் குலைக்கப் பார்க்கிறார்கள்; ஒற்றுமையை அழிக்கப் பார்க்கிறார்கள்; மதரீதியாக தூண்டிவிடப் பார்க்கிறார்கள். நமது ஒற்றுமையில் இருக்கிறது நமது வலிமை. நமது நாட்டின் சமய சார்பற்ற தன்மையை சேதப்படுத்த அனுமதிக்க மாட்டோம்.
நமது ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க, ஒவ்வொரு குடிமகனுக்கும் நமது நாடு பாதுகாப்பாகத் திகழ அனைத்தையும் செய்வோம் என்று ஒவ்வொரு குடிமகனுக்கும் நான் உறுதி தருகிறேன். நமது பாதுகாப்பு படைகள் மற்றும் உளவுத் துறைகளை நவீனப் படுத்துவோம், வலுவாக்குவோம். இந்தியாவில் பயங்கரவாத சக்திகளை நசுக்கி அடியோடு அழிப்பதில் எந்த முயற்சியையும் விட்டு வைக்க மாட்டோம். ஆயிரம் வெட்டுகளால் நம்மை துன்புறுத்த வேண்டும் என்று விரும்புகிறவர்கள் நினைவில் கொள்ளட்டும் - நமது மனஉறுதியை ஒற்றுமையை யாராலும் உடைக்க முடியாது. யாராலும் இந்தியாவை மண்டியிடச் செய்ய முடியாது.
மீண்டும் மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்கும் போதே, அமைதி - வெற்றிகளைப் பெறுவதையும் நாம் பார்க்கிறோம். ஜம்மு காஷ்மீர் மக்கள் தொடர்ந்து பயங்கரவாதத்தால் துன்பப்பட்டு வருகிறார்கள்.. ஆனால் அவர்கள் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான புதிய ஒளிக் கீற்றுகளையும் காண்கிறார்கள். புதிய தொடர்பு இணைப்புகள், ஸ்ரீநகர் - முசபராபாத், பூஞ்ச் - ராவல்கோட் ஆகிய கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் வாழும் இருதரப்பு மக்களையும் நெருங்கி வரச் செய்துள்ளன. வட்டமேசை மாநாடுகள் மூலம், ஜம்மு காஷ்மீரில் எல்லாக் கட்சிகள் மற்றும் குழுக்களோடும் பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறோம். இம்மாநிலா மக்களின் சிறந்த எதிர்காலத்துக்கான புதிய பாதைகளை நாம் இணைந்து கண்டறிந்து வருகிறோம். நாளை இவர்கள் அமைதியாய் கண்ணியத்துடன், அச்சம் தேவைகள் சுரண்டல்கள் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு வாழ முடியும்.
இன்று வடகிழக்கு மண்டல மக்கள், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில், சாலை வசதி ரயில் இணைப்பு முதன்முறையாக தெர்மல் மின் உற்பத்தி நிலையம், சிறந்த பல்கலைக்கழகங்கள்... என்று எல்லாத் துறைகளிலும் வடகிழக்கு மண்டலம் மாபெரும் வளர்ச்சியைக் கண்டு வருகிறது. வரும் ஆண்டுகளில் நாட்டின் பிற பகுதிகளுக்கு இணையாக வடகிழக்கு மண்டலம் வளர்ச்சி பெற்றிருக்கும் என்று நம்புகிறேன். ஆனாலும் இந்த மண்டலத்தில் சில மாநிலங்கள், வெவ்வேறு கிளர்ச்சிகளால் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த மண்டல மக்கள் அமைதிக்காக மிகவும் ஆசைப்படுகிறார்கள். கிளர்ச்சிகளை எதிர்கொள்ள நாம் உறுதியுடன் உள்ள அதே வேளையில், பல்வேறு குழுக்களுடன் நாம் தொடங்கியுள்ள பேச்சு வார்த்தை அமைதியை உருவாக்கும் என்று நம்புகிறோம். சுயமரியாதை மற்றும் கண்ணியத்துடன் கூடிய வளர்ச்சியும் வளமையும் கொண்ட வாழ்க்கை - இந்த மண்டலத்து மக்களின் உரிமை ஆகும். இதனை நல்குவதில் நாம் நம்பிக்கையுடன் உள்ளோம்.
தவறுதலாக நக்சல் பாதையைத் தேர்ந்தெடுத்தவர்கள், துப்பாக்கிமுனை மூலம் அதிகாரம் பெற முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வாக்குப்பெட்டிகளில் இருந்து தான் உண்மையான அதிகாரம் தோன்றுகிறது. அதே சமயம், நமது மாநில அரசுகளும் ஆதிவாசிகளின் மற்றும் விளிம்புநிலை விவசாயிகளின் நல்வாழ்வில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இவர்களின் துயர்களை நக்சலைட்டுகள் தங்களுக்கு ஆதரவாக சுரண்டுகின்றனர். வன்முறைப் பாதை ஒருபோதும் ஏழைகளின் பிரச்சினைகளைத் தீர்க்காது. நக்சலைட்டுகள் அவிழ்த்து விடும் வன்முறைக்கு நமது பாதுகாப்புப் படைகள் தக்க பதிலடி கொடுக்கும்.
கடந்த ஒரு மாதத்தில் நமது நாட்டின் பல பகுதிகள், குறிப்பாக ஆந்திரா, சூரத், மகாராஷ்டிரா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. பரவலாக உயிரிழப்புகள் சொத்து சேதங்கள் நிகழ்ந்தன. இந்த மண்டலத்தில் நிவாரணத்துக்கு தேவையான நம்மால் இயன்ற அனைத்து உதவிகளும் வழங்குவோம்.
சகோதரர்களே சகோதரிகளே, ஒவ்வோர் இந்தியருமே அமைதி நிலையான தன்மை மற்றும் வளமை பொருந்திய அண்டை நாட்டு உறவில் வாழவே விரும்புகின்றனர். நமது அண்டை நாட்டில் உள்ள மக்களும் இந்த ஆசையே கொண்டுள்ளனர். தெற்கு ஆசியா - ஒரு பொதுவான கலாச்சார பொருளாதார அலகு. நமது கடந்த காலமும் நாம் சேர வேண்டிய இலக்கும் ஒன்றோடு ஒன்று பிணைந்து இருப்பவை. இந்த மண்டலத்தின் மிகப் பெரிய நாடாக இந்தியா, நமது வளத்தின் பலனைத் தனது அண்டை நாடுகளுக்கு வழங்க, தனது வளர்ச்சியின் பயன்களை பங்கிட்டுக் கொள்ளத் தயாராக உள்ளது. ஆனாலும், பயங்கரவாத வன்முறை, வெறுப்பு அரசியல், கருநிழல் சூழ்ந்த சச்சரவுகள் தொடரும் வரை, எல்லைகள் இல்லாத, தடையின்றி மக்கள் சரக்குகள் நாகரிகம் மற்றும் சிந்தனைகள் சென்று வருகிற தெற்காசிய சமூகம் என்கிற கனவு நிறைவேற இயலாது.
நமது மக்களுக்கு அமைதி வளமையைத் தரும் புது யுகத்துக்கு அண்டை நாட்டார் அனைவரையும் அழைத்துச் செல்ல அவர்களோடு இணைந்து செயல்பட நாம் தயாராக உள்ளோம். இது தொடர்பாக நாம் பல நடவடிக்கைகளை, குறிப்பாக பாகிஸ்தானுடன், எடுத்துள்ளோம். இது வெற்றி அடைய வேண்டுமெனில் அமைதியான சூழல் நிலவ வேண்டும். தமது கட்டுப்பாட்டுக்குள் இருக்க கூடிய எந்த எல்லையில் இருந்தும் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுத்து நிறுத்துவதாக தான் தரும் உத்திரவாதத்தை நிறைவேற்றுவதில் பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுத்தால் ஒழிய, அமைதி நடவடிக்கைகளுக்கு ஆதரவாக உள்ள இந்தியாவின் பொதுக் கருத்து எடுபடாது. பயங்கரவாதம் எங்கே இருந்தாலும் அது எல்லா இடங்களிலும் அமைதி மற்றும் வளமைக்கு அச்சுறுத்தலாகவே இருக்கும் என்பதை இந்த மண்டலத்தில் உள்ள எல்லா நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும். நாம் அனைவரின் ஒன்றுபட்ட முயற்சிகளால் இதனை எதிர்க்க வேண்டும். அமைதி மற்றும் வளத்துக்கான மக்கள் ஆதரவு பரவி இருக்கிறது. இதன் மீது நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், நமது வளர்ச்சி விருப்பங்களுக்கு ஆதரவான சர்வதேச சூழலை உருவாக்குவதில் நாம் வெற்றி கண்டுள்ளோம். அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நமது உறவு முன் எப்போதையும் விட நன்றாக உள்ளது. ரஷ்யாவுடன் பல காலமாகத் தொடரும் நல்லுறவை நாம் மேலும் வலுவாக்கி உள்ளோம். தென்கிழக்கு ஆசியாவில், கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டுக்கு இந்தியா வரவேற்கப்பட்டுள்ளது. வளைகுடா மற்றும் அரபு நாடுகளுடன் நமது அரசியல் பொருளாதாரத் தொடர்புகள் குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்து உள்ளன. ஆப்பிரிக்க மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகள், நமது ராஜ்ய உறவுகளுக்கான புதிய பகுதிகள். இந்தியாவின் நடவடிக்கைகள் உண்மையிலேயே உலகளாவி உள்ளன. சுதந்திரத்தில் இருந்து நாம் ஆற்றி இருக்கும் சாதனைகளால் நாம் அங்கீகரிக்கப்படுகிறோம். இந்தியா மேலும் வளர வேண்டும் என்று உலகம் விரும்புகிறது.
எனது அன்பார்ந்த நாட்டு மக்களே, இந்தியா - ஓர் இளைய தேசம். இந்தியா இளைய வயது மக்களைக் கொண்ட நாடு. ஒளிமயமான எதிர்காலத்துக்காக கடுமையாக உழைக்க நமது இளைஞர்கள் தயாராக உள்ளனர். நம் இளைஞர்களின் வளமான எதிர்காலத்துக்காக மிகுந்த அக்கறையுடன் இருந்த நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இன்றும் கூட, நமது இளைஞர்கள் ஒளிமயமான எதிர்காலத்துக்கான தேடலில் இருக்கிறார்கள். புதிய வாய்ப்புகளை, புதிய சாத்தியங்களைத் தேடுகிறார்கள். புதிய வழிகளில் சிந்திக்க விரும்புகிறார்கள். பழைய எண்ணங்கள், பழைய சித்தாந்தங்களில் செலவிட அவர்களுக்கு நேரமில்லை. புதிய இந்தியாவை நிர்மாணிக்க விரும்புகிறார்கள். அவர்கள் கனவு காணும் புதிய இந்தியாவை நாம் கட்டமைக்க வேண்டும். ஒவ்வொரு இளைஞனும் தோளோடு சேர்ந்து நடக்க வேண்டும்; புதிய இந்தியாவை கட்டமைக்க நம்மோடு இணைந்து நடக்க வேண்டும். ஒவ்வொரு இளைஞனுக்கும் எதிர்காலம் குறித்த நம்பிக்கை வேண்டும். இவர்களின் முழுத் திறமையை வெளிப்படுத்த நல்வாய்ப்புகளை இந்த நாடு உருவாக்கித் தரும்.
ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாக அதிகாரம் உள்ளவராகத் திகழும் இந்தியாவே நமது கனவு. நமது அன்னையர் சகோதரிகள் புதல்விகளுக்கு, தனிநபர் பாதுகாப்பு மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்கிறோம். பெண் சிசுக் கரு சிதைப்பு குற்றத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். பாலினப் பாகுபாடுகளை ஒழிக்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் கற்றவராய் திறமை மிக்கவராய் இருந்து புதிய தலைமுறையை வழிநடத்தும் ஆற்றல் பெற்று விளங்குவதை உறுதி செய்வோம்.
சட்டத்துக்கு கட்டுப்படும் ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த மண்ணின் சட்டங்கள் பாதுகாப்பு நல்கும். நீதி வழங்கப்பட்டதாய் வெளிப்படையாகத் தெரிந்தால் மட்டுமே, சட்டத்துக்கு கட்டுப்பட்ட குடிமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, சட்டத்தின் ஆட்சி நிறைவேறும். மேலும் திறமையான மனித மனம் கொண்ட பொறுப்பான காவல்துறை வேண்டும். மேலும் திறமையான ஆற்றல் மிக்க நீதித்துறை வேண்டும். இதனை சாத்தியம் ஆக்க நமது அரசு பாடுபடும்.
புதிய இந்தியாவைக் கட்டமைக்க மீண்டும் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள, இன்று இந்த சரித்திரப் புகழ் மிக்க செங்கோட்டையில் இருந்து உங்கள் அனைவரையும் வேண்டுகிறேன்.
- எண்ணத்தால் ஒன்றுபட்ட, மதங்களால் மொழிகளால் பிளவுபடாத இந்தியா.
- இந்தியத் தன்மையால் ஒன்றுபட்ட, சாதிகளால்/ மண்டலங்களால் பிளவுபடாத இந்தியா.
- வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளில் ஒன்றுபட்ட, பாகுபாடுகளால் பிளவுபடாத இந்தியா.
- எல்லாரையும் உள்ளடக்கிய எல்லார் மீதும் அக்கறை கொண்ட இந்தியா.
(இந்த இந்தியாவை நிர்மாணிக்க உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள்.)
நமது மதங்கள் வேறாக இருக்கலாம். நமது சாதிகள் வேறாக இருக்கலாம். நமது மொழிகள் வேறாக இருக்கலாம். ஆனால் நாம் அனைவரும் இந்தியர்கள். நமது வளர்ச்சியில் இருக்கிறது நம் நாட்டின் வளர்ச்சி. நமது நல் எதிர்காலமும் நாட்டின் நல் எதிர்காலமும் ஒன்றுக்கொன்று பிணைந்து இருப்பவை. நாம் இணைந்து செயல்படுவதன் மூலம் நமது நல் எதிர்காலத்தை வளமாக ஆக்கலாம்.
நமது முழுத் திறமையின் பலனை நாம் அடைய வேண்டுமெனில், அதனைச் சாத்தியமாக்க உதவும் அரசியல் வேண்டும். நம்மை முன்னோக்கி உந்திச் செலுத்தும் அரசியல் வேண்டும். புதிய எல்லைகளை நோக்கி, புதிய உயரங்களைத் தொட வழிநடத்தும் அரசியல் வேண்டும். நமது நாட்டின் எதிர்காலம் குறித்து ஆழமாக சிந்திக்கும் படி நமது அரசியல் தலைவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். பிரிவுபடுத்தும் அரசியலைத் துறக்க வேண்டும். மாற்றம் மற்றும் வளர்ச்சிக்கான அரசியலைப் பின்பற்ற வேண்டும். தேசியப் பிரச்சினைகளில் கருத்தொற்றுமை ஏற்பட நமது அரசியல் கட்சிகளும் தலைவர்களும் இணைந்த பணியாற்ற கற்றுக் கொள்ள வேண்டும். இதை நாம் செய்து முடித்து விட்டால், பல லட்சக் கணக்கான நமது மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கும் பொன்னான எதிர்காலத்தை நாம் விரைவில் எட்டுவோம் என்று நம்புகிறேன்.
புதிய இந்தியாவைக் கட்டமைக்க, நாம் அனைவரும் கரம் கோர்த்து ஒன்றிணைவோம். ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!
(தொடரும்...)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT