Last Updated : 25 Aug, 2014 12:00 AM

 

Published : 25 Aug 2014 12:00 AM
Last Updated : 25 Aug 2014 12:00 AM

நம் சட்டம்... நம் உரிமை: வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் உதவித் தொகை பெறுவது எப்படி?

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை, அதில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகை, அதற்கு விண்ணப்பிக்கும் வழிமுறை ஆகியவை குறித்து நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் ம.மகேஸ்வரி விளக்கம் அளிக்கிறார்..

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை யாருக்கு வழங்கப் படுகிறது?

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும்வரை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டதாரிகள் என 3 பிரிவுகளில் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதை பெற, குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். உதவித்தொகை பெறுபவர் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் பயில்பவராக இருக்கக்கூடாது. பணிபுரிபவராகவும் இருக்கக்கூடாது.

எவ்வளவு உதவித்தொகை வழங்கப்படுகிறது?

10-ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு மாதம் ரூ.100, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.150, 12-ம் வகுப்பு மற்றும் பட்டயம் (டிப்ளமோ) படித்தவர்களுக்கு மாதம் ரூ.200, பட்டதாரிகளுக்கு ரூ.300 வழங்கப்படுகிறது. இது 3 மாதங்களுக்கு ஒருமுறை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். பொதுப் பதிவுதாரர்களாக இருந்தால் இந்த உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கும், மாற்றுத் திறனாளியாக இருந்தால் 10 ஆண்டுகளுக்கும் வழங்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதில் சலுகைகள் உண்டா?

உண்டு. உதவித்தொகை வழங்கும் கால அளவு மட்டுமின்றி, உதவித்தொகையிலும் சலுகை உண்டு. அதன்படி, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை. மாற்றுத் திறனாளிகளில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.300, 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.375, பட்டதாரிகளுக்கு ரூ.400 வழங்கப்படுகிறது.

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்துடன் வருவாய் அலுவலரிடம் பெறப்பட்ட வருவாய்ச் சான்றிதழ், அனைத்து கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல்கள், குடும்ப அட்டை நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட சேமிப்புக் கணக்கு விவரம் ஆகியவற்றை இணைக்க வேண்டும். மேலும், தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை பெற ஏப்ரல் மாத இறுதியில் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x