Published : 15 Dec 2023 05:56 PM
Last Updated : 15 Dec 2023 05:56 PM
ஒரு கவிஞர், சுதந்திர இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்ற போது, நாடெங்கும் ஒரு புதிய நம்பிக்கை துளிர் விட்டது. பொதுவாக கவிஞன் என்றாலே மனிதப் பற்றாளன் தானே? பல போராட்டங்களைச் சந்தித்த, அரசியல் வாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட, வாதத்திறமை கொண்ட, நகைச்சுவை உணர்வால் பலரை இழுக்கும் வல்லமை படைத்த - வாஜ்பாய், இந்திய அரசியல் போக்கை, அது செல்லும் திசையை மாற்றி அமைத்தார்.
அரசியல் நாகரிகத்தின் அடையாளம் அடல் பிகாரி வாஜ்பாய், 1998 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து ஆற்றிய சுதந்திர தின உரை - இதோ: அன்பான சகோதரிகளே.. சகோதரர்களே.. குழந்தைகளே... நம் நாட்டின் 51 ஆவது சுதந்திர நாளான இந்தத் தருணத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். அரை நூற்றாண்டு கடந்து விட்டது; இருந்தும், இப்போதுதான் நிகழ்ந்தது போல் தோன்றுகிறது. இதே இடத்தில் முதன் முறையாக பண்டித ஜவஹர்லால் நேரு, நீல வானில் நமது நேசத்துக்குரிய மூவண்ணக் கொடியைப் பறக்க விட்டார். அப்போது இருந்து சரித்திர புகழ் மிக்க இந்த செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்று வைப்பது ஒரு மரபு ஆகி விட்டது. இப்படி ஒரு நல்ல வாய்ப்பு எனக்குக் கிட்டும் என்று நான் கற்பனை கூட செய்ததில்லை. இந்த மகிழ்ச்சியான சுதந்திர நாளில் செங்கோட்டைக் கொத்தளத்தில் இருந்து நமது நாட்டு மூவண்ணக் கொடியை ஏற்றி வைக்கும் வாய்ப்பு, தூசியும் புகையும் நிறைந்த ஒரு சிறிய கிராம சூழலில் வாழ்ந்த ஒரு பள்ளி ஆசிரியரின் மகனுக்கு வாய்ப்பு இருக்கிறது. இதுவே இந்திய ஜனநாயகத்தின் வலிமைக்கு, திறனுக்கு ஓர் அடையாளம்.
சுதந்திரம் அத்தனை எளிதில் நமக்குக் கிடைத்து விடவில்லை. ஒருபுறம் - மகாத்மா காந்தி தலைமையில் அகிம்சை வழி விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் சிறைகளில் துன்பப்பட்டனர். மறுபுறம், ஆயிரக்கணக்கான புரட்சிப் போராளிகள் தமது இன்னுயிரை ஈந்தனர். நாம் அனைவரும் சேர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்; நமது விடுதலையைப் பாதுகாப்போம் என்று உறுதி கொள்வோம்; தேவைப்பட்டால் இந்த விடுதலைக்காக நாம் எதையும் தியாகம் செய்வோம்.
நமது நாடு (அடிக்கடி) அன்னிய ஆக்கிரமிப்புத் தாக்குதல்களுக்கு உள்ளாகிறது. 50 ஆண்டுகள் என்னும் குறுகிய காலத்தில், நான்கு தாக்குதல்களை நாம் எதிர்கொண்டோம். ஆனாலும் நமது சுதந்திரம் மற்றும் ஒருமைப்பாட்டை நாம் பாதுகாத்து இருக்கிறோம். இதற்கான பெருமை அனைத்தும் நமது வீரர்களையே சேரும். நமது வீடுகளில் இருந்து அன்பானவர்களிடம் இருந்து தொலைவில், எல்லா நேரமும் ஆபத்துகளை சந்தித்தபடி, இரவும் பகலும் நமது எல்லைகளைப் பாதுகாத்து வருகின்றனர். இப்படித்தான் நமது பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. 32 டிகிரி மைனஸ் செல்சியஸ் உள்ள சியாச்சென் மலை முகடுகளாக இருக்கட்டும்; வடகிழக்கில் உள்ள அடர்ந்த காடுகள் ஆகட்டும்; இந்தியப் பெருங்கடலின் ஆழ்நீராக இருக்கட்டும்.. நமது படை, எல்லா இடத்திலும் எல்லா நேரத்திலும் விழிப்புடன் இருக்கிறது. நம் அனைவரின் சார்பாக ராணுவம் விமானப்படை கடற்படை மற்றும் உள்ள பாதுகாப்புப் பணியாளர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களைப் பாராட்டும் போதே இதையும் நாம் சொல்லியாக வேண்டும் - துணிச்சல் மிக்க வீரர்களே.. உங்களை நினைத்து நாங்கள் பெருமைப் படுகிறோம்!
நமது படைகளுக்கு நாம் ஆதரவு தர வேண்டும். வயல்களிலும் தொழிற்சாலைகளிலும் நம் விவசாயிகள், தொழிலாளர்களால் நாட்டின் இரண்டாவது பாதுகாப்பு அடுக்கு வலுவாக இருக்கிறது. இதை நாம் என்றுமே மறக்க முடியாது. லால்பகதி பகதூர் சாஸ்திரி கூறினார் - ஜெய் ஜவான்! ஜெய் கிசான்! ஒன்று இல்லாமல் மற்றது நிறைவு அடையாது. இதனுடன் சேர்க்க ஒரு புதிய அம்சம் இருக்கிறது - ஜெய் விக்ஞான்!
சென்ற நூற்றாண்டின் வளங்களைக் கொண்டு 21 ஆம் நூற்றாண்டில் நாட்டைக் காப்பாற்றவோ முன்னேற்றவோ முடியாது. நம்ம நாட்டின் சுதந்திரம் மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க, எந்த ஆபத்தையும் எதிர்கொள்ள, நமது படைகளை நவீனப்படுத்த வேண்டும். இந்த இலக்குடன் தான், இந்த ஆண்டு மே மாதம் 11 மற்றும் 13 தேதிகளில் அணு (குண்டு) சோதனை நடத்தினோம். பொக்ரான் சோதனை, ஓர் இரவில் எடுக்கப்பட்ட முயற்சி அல்ல. நமது விஞ்ஞானிகள் பொறியாளர்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் பல ஆண்டு கடின உழைப்பால் விளைந்தது இது. இந்திரா காந்தி அடித்தளம் இட்ட பெருமைக்குரிய பணியில் மேலும் சற்றும் கூட்டுவதை மட்டுமே நான் முயற்சித்து உள்ளேன். நான் ஒரு, பாதை (கருவி) மட்டுமே. இந்த மாபெரும் சாதனையின் பெருமை அனைத்தும் திறன் மிக்க நமது விஞ்ஞானிகளையும் கடின உழைப்பு தந்த பாதுகாப்புப் படைகளையுமே சாரும். இந்த சுதந்திர தின நன்னாளில் இவர்கள் அனைவரையும் மனமார வாழ்த்துகிறேன்.
இந்த சோதனையான காலத்தில் நீங்கள் நல்கும் முழு ஒத்துழைப்புக்கு உங்கள் அனைவருக்கும் நான் நன்றிக் கடன் பட்டவன். சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, ஒவ்வொரு இந்தியரும், எங்கே வாழ்ந்தாலும், இந்த நடவடிக்கையை வரவேற்கிறார்கள். அன்றைய தினம், தலையை நிமிர்த்தி நாங்கள் இந்தியர்கள் என்று பெருமையுடன் பிரகடனம் செய்தோம். அன்று பொக்ரானில், அணு சக்தியோடு சேர்ந்து இந்த தேசத்தின் வலிமையும் வெளிப்பட்டது. (On that day in Pokhran, along with nuclear energy, the might of the Nation manifested itself.)
இந்த சமயத்தில் ஒன்றை தெளிவு படுத்துகிறேன் - இந்தியா எப்போதும் அமைதிக்காகத் தீவிரமாக வாதாடி வருகிறது; எப்போதும் இந்த நிலைப்பாடு தொடரும். தற்காப்புக்காக மட்டுமே ஆயுதங்கள் என்பதை நாம் அறிவோம். யாரையும் தாக்குவதற்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம். ஆகவே அணு சோதனைகளுக்கு நாமே கட்டுப்பாடுகள் விதித்துள்ளோம். நாங்கள் அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்று நாமாக முன்வந்து உலகத்துக்குப் பிரகடனம் செய்தோம். (We ourselves proclaimed to the world that we shall never be the first user of atomic weapons.) யாருடைய அழுத்தம் அல்லது அச்சம் காரணமாகவும் இதை நாம் செய்யவில்லை. உலக அமைதி மற்றும் ஆயுதக் குறைப்பில் நமக்கு திடமான நம்பிக்கை இருப்பதால் நாமாக தன்னிச்சையாக இதைச் செய்கிறோம். அணு ஆயுதம் இல்லாத உலகம் என்பதே நமது கனவு. இந்தக் கனவு, நினைவாக வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். தொடக்கத்தில் சில நாடுகள், நமது நாட்டின் பாதுகாப்பு தேவைகள் குறித்து அதிகம் அறியாமல் நமது எண்ணத்தை சந்தேகித்தனர். இவர்களில் சிலர் நம் மீது பொருளாதாரத் தடைகள் விதித்தனர். ஆனால் இப்போது நிலைமை மாறிக் கொண்டு வருகிறது. இந்தியாவின் பார்வையை இப்போது உலகம் படிப்படியாக உணர்ந்து பாராட்டுகிறது. நம்மால் அவர்களுக்குப் புரிய வைக்க முடிந்தது. இதன் விளைவாக சில தடைகள் தளர்த்தப்பட்டுள்ளன. மாறிவரும் இந்த உலகப்போக்கை நாம் வரவேற்கிறோம்.
ஆனாலும் ஒன்றை தெளிவுபடுத்த வேண்டும். இந்தியா ஒரு மாபெரும் நாடு; இதன் மக்கள் வலிமை பொருந்தியவர்கள். இந்த நாட்டின் பெருமையைப் பாதுகாக்க எந்த அபாயத்தையும் எதிர்கொள்ள எப்போதும் துணிச்சல் மிக்க நமது மக்கள் தயாராக இருக்கிறார்கள். நாம் தேர்ந்தெடுத்த பாதையில் இருந்து உலகில் எந்த சக்தியாலும் நம்மை திசை திருப்ப முடியாது. இதை நான் ஆணவத்தில் அல்ல; அடக்கத்துடன் தன்னம்பிக்கையுடன் கூறுகிறேன். நமது நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாடு இறையாண்மையை உயர்த்திப் பிடிக்க எந்த தியாகத்தையும் செய்ய விருப்பம் உள்ளவர்கள் நாம். நமது அண்டை நாடுகளுடன் நல்லுறவை மேம்படுத்த விரும்புகிறோம். ஒரு போரை வெல்வதற்கான மிக எளிய வழி - அது நிகழாமல் பார்த்துக் கொள்வது தான். ("the easiest way to win a war is - not to let it happen.") எந்தப் பொருள் குறித்தும் எந்த மட்டத்திலும் எந்த நேரத்திலும் பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த நாம் தயாராக இருக்கிறோம். கொழும்புவில் நடந்த சார்க் மாநாட்டில் இதற்கான முயற்சியைத் தொடங்கினேன். எதிர்பார்த்த பதில் அங்கிருந்து வரவில்லை என்பதில் எனக்கு ஏமாற்றம்தான். இன்னமும், நான் (நம்பிக்கையை) விடவில்லை. இந்த மாத இறுதியில் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் அணிசேரா நாடுகளின் மாநாட்டில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தீவிர முயற்சியை முன்னெடுப்பேன்.
உலகில் உள்ள எல்லா பிரச்சினைகளையும், பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்று நம்புகிறேன். ஆகவே பாகிஸ்தான் ஆக இருந்தாலும் சீனாவாக இருந்தாலும், நட்பு ரீதியான பேச்சு மூலம் பரஸ்பர பிரச்சினைகளைத் தீர்ப்பதே நமது லட்சியம். கடந்த சில நாட்களில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து உள்ளன. இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த படுகொலைகள், மாபெரும் சதியின் ஒரு பாகம் என்று தோன்றுகிறது. எல்லைக்கு அப்பால் இருந்து தூண்டப்படும் அன்றாட பயங்கரவாத நடவடிக்கைகள் - நம் மீது தொடுக்கப்படும் மறைமுகப் போர். இந்த நிகழ்வுகளை அரசு, (அதற்குரிய) தீவிரத்துடன் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது. முழு வலிமையுடன் இவற்றை எதிர்கொள்கிறோம்; இவர்களை (முழுமையாக) தோற்கடிக்காமல் ஓய மாட்டோம்.
தேசத்தின் அல்லது தனிநபரின் வாழ்க்கையில் 51-வது ஆண்டு தினம் - கடந்த காலத்தை மதிப்பீடு செய்ய ஒரு பொன்னான வாய்ப்பு. 21-ம் நூற்றாண்டை எதிர்கொள்வதற்கான தயாரிப்பு நேரமும் இது. மதிப்பீடு செய்யும் போது (பொதுவாக) சாதனைகளை குறைத்து வேதனைகளைப் பெரிதாக்கிப் பார்க்கிற தவறு அடிக்கடி நிகழ்ந்து விடுகிறது. சில சமயங்களில் நமது நாட்டில் எதிர்மறை எண்ணம் வளர்ந்து விட்டதாய்த் தோன்றுகிறது. அங்குமிங்கும் சில அச்சங்கள் (தவறுகள்) இருக்கலாம்; ஆனால் தீர்வு காண முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக மாறிவிடவில்லை. முட்டாள்கள் தான் தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வார்கள் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. அதே சமயம், 'சுய கண்டனம்' (self condemnation) தற்கொலைக்கு சமமானது. எனவே கடந்த 50 ஆண்டுகள் பற்றிய மதிப்பீடு, யதார்த்தமாக இருத்தல் வேண்டும்.
நாம் சுதந்திரம் பெற்ற போது, நமக்கு ஜனநாயகம் சரிவராது; விடுதலைக்கு நாம் தகுதியற்றவர்கள் என்று சில மேற்கத்திய நிபுணர்கள் ஆருடம் கூறினார்கள். விரைவில் இந்த நாடு சிதறுண்டு போகும் என்று கூறினார்கள். ஆனால் இன்று, நமது சுதந்திரத்தையும் ஒருமைப்பாட்டையும் நன்கு பாதுகாத்துள்ளோம் என்பது மட்டுமல்ல; ஒரு மிகப்பெரிய ஜனநாயகத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பதையும் உலகத்துக்குக் காட்டி உள்ளோம். அனேகமாக நம்முடன் சுதந்திரம் பெற்ற எல்லா நாடுகளுமே ஜனநாயக மரபுகளை உயிருடன் வைத்து இருக்கின்றன.
இப்போது இருப்பது 12-வது மக்களவை; நான் 11-வது இந்தியப் பிரதமர். கடந்த ஆண்டுகளில், மிகச் சிறிய பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை மாற்றங்கள் (இயல்பாக) நடந்துள்ளன. இந்தப் பெருமை அனைத்தும் உங்களையே (மக்களையே) சேரும். உங்களின் அரசியல் பக்குவம், அரசியல் மேதைகளையே வியக்க வைத்துள்ளது. இதற்காக உங்களைப் பாராட்டுகிறேன். நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கும் வரை ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்கும்.
நமது சுதந்திரத்தின் பொன்விழாவைக் கொண்டாடும் இந்த தருணத்தில், நாம் நினைவில் கொள்ள வேண்டும் - சுதந்திரம் தேசிய ஒருமைப்பாடு ஜனநாயகம் மற்றும் சமயசார்பின்மை - ஒன்றோடு ஒன்று துணையாக செல்லக் கூடியது.
எல்லா சூழ்நிலைகளிலும் நீங்கள் சுதந்திரமாக இருத்தல் வேண்டும். இதற்கு, தேச ஒற்றுமை மிக அவசியம். தேச ஒற்றுமைக்கு ஜனநாயகம் மிக அவசியம். ஜனநாயகமும் சமய சார்பின்மையும் தேச ஒற்றுமையின் பிரிக்கப்பட முடியாத அங்கங்கள். நானும் எனது அரசும் இந்த நான்கு அம்சங்களிலும் உறுதியாய் துணை நிற்போம்.
மதவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்க்கிறோம். சிறுபான்மையினருக்கு முழு பாதுகாப்பை உறுதி செய்கிறோம். நாட்டு வளர்ச்சியில் இவர்களின் பங்களிப்பை உறுதி செய்வோம். நாம் அனைவரும் ஒரே தேசத்தின் குடிமகன்கள் என்பதை எப்போதும் மறக்கவே கூடாது. நமது எல்லை, லடாக்கில் இருந்து நிகோபர் வரை, காரோ (Garo) குன்றுகளில் இருந்து கில்ஜித் (Giljit) வரை நீண்டு உள்ளது. நமது நாட்டின் நாகரிகம் கலாச்சாரம், ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. வெவ்வேறு மொழி, நம்பிக்கை, வாழ்க்கை முறை, உணவு பழக்கங்களைக் கொண்ட இத்தனை பெரிய நாடு, ஜனநாயக நடைமுறைகளுக்கு உட்பட்டு, சமூக பொருளாதார நீதியை சாதித்துக் காட்ட உறுதி பூண்டுள்ளது.
இந்த ஜனநாயகத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. சட்டமன்றங்களில் சுதந்திரமான விவாதங்களில் நமது உறுப்பினர்கள் நடந்து கொள்ளும் விதம் - ஒரு பள்ளி ஆசிரியர் கூட இந்த அரச முறையை சகித்துக் கொள்ள மாட்டார். குறை கூறி எதிர்க்க எதிர்க்கட்சிகளுக்கு உரிமை இருக்கிறது; பதில் கூற அரசுக்கும் உரிமை இருக்கிறது. எதிர்க்கட்சிகளும் அரசும் - எதிரிகள் அல்லர்; ஒருவருக்கு ஒருவர் துணை போக வேண்டியவர்கள்.
அச்சமற்ற பாரபட்சம் இல்லாத வாக்களிப்பு முறையை வலுப்படுத்த வேண்டும். சாதியம் வன்முறை பணபலம் மற்றும் பிற தீமைகளில் இருந்து விடுவித்து, நமது தேர்தல் முறையை சீர்திருத்த வேண்டும். அப்போதுதான் நமது அரசு நிர்வாகம் அடுத்த நூற்றாண்டில் மேலும் பண்பட்டதாய் இருக்கும்.
ஒரு காலத்தில் நமது நாடு வளமானதாய் விளங்கியது. காலப் போக்கில் நிலைமை மோசமானது. உலகின் வறிய நாடுகளில் ஒன்றாக கணக்கிடப்பட்டோம். கடந்த சில ஆண்டுகளில் நமது விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும், உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெற கடுமையாக உழைத்தார்கள். காலியான வயிற்றுடன் ராணுவம் போரிட முடியாது; பசியால் வருந்தும் தேசம் நிம்மதியாக உறங்க முடியாது. நமது விவசாயிகள் கடுமையாக உழைத்து இந்த நாட்டை, தன்னிறைவு கொண்டதாக மாற்றி உள்ளார்கள். நமக்கு உணவு வழங்கும் இவர்கள் மீது மகிழ்ச்சியைப் பொழியுமாறு இறைவனை வேண்டுகிறேன்.
இந்த மகிழ்ச்சியில் வேதனையின் நிழலும் உண்டு. நமக்கு உணவு வழங்குவோர், இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர். இந்த ஆண்டு சில மாநிலங்களில், கடன் சுமையைத் தாங்க முடியாமல் சில விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்பது எனக்கு பெருத்த வலியை உண்டாக்குகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள். இந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நான் ஒரு முடிவு எடுத்து இருக்கிறேன். பயிர்க் காப்பீடு விரிவுபடுத்தப்படும்; மேலும் பல பயிர்கள் இந்த திட்டத்தின் கீழ்க் கொண்டு வரப் படும்; இந்த திட்டத்தின் எல்லைகளும் நீட்டிக்கப்படும். விவசாயிகளின் உண்மையான பொருளாதார நிலைமையைக் கணிக்க, இவர்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்த, உயர் மட்ட ஆணையம் அமைக்கப்படும். இந்த நாட்டின் முதுகெலும்பான நமது விவசாய சகோதரர்கள் இனியும் துன்பப்படமாட்டார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.
ஒரிசாவில் பலாங்கீர், காலகண்டி, கோரபுட் போன்ற இடங்களில் இன்னமும் மக்கள் பசியால் துன்புறுகிறார்கள். சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் மக்களை பசி வாட்டுகிறது என்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இந்தப் பகுதிகளில், வேலை உறுதி திட்டத்தில் முதலீட்டை இரட்டிப்பு ஆக்கும்படி திட்டக் குழுவிடம் சொல்லி இருக்கிறேன். எந்த ஒரு நபரும் பசியால் உயிரிழக்கமாட்டார் என்பதை உறுதி செய்வோம். இதற்கான நடவடிக்கைகளை (உடனே) எடுப்போம்.
வணிகத்தில் தொழில்துறையில் சேவைத்துறையில் நமது நாடு பாராட்டத்தக்க அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. நமது நாட்டில் சில தொழிற்சாலைகள் உலகச்சந்தையில் நன்கு தடம் பதிக்கின்றன. இந்த சாதனைக்காக எல்லா தொழிலாளர்கள் பணியாளர்கள் மேலாளர்கள் தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்களைப் பாராட்டுகிறேன்.
இந்தச் சாதனை நாம் மேலே செல்வதற்கான ஒரு படிதான். இந்தியா - ஒரு பொருளாதார வல்லரசு என்கிற இறுதி இலக்கை எட்டி விடவில்லை. இதைச் சொல்வது எளிது; சாதிப்பது மிகக் கடினம். இதற்கு நாம், கடின உழைப்பு, உயர் தரத்தைப் பராமரித்தல், தற்சார்பு அடைதல் என்கிற பாதையைப் பின்பற்ற வேண்டும். உலகச் சந்தையில் போட்டியிடும் திறன் கொண்ட உலகத் தரம் வாய்ந்த பொருட்களைத் தயாரிக்க வேண்டும்.
பொருளாதார சீர்திருத்தங்கள் விரைவு படுத்தப்படும். ஆனால் நமது தாராளமயமாக்கல் மூலம் அளவுக்கு மீறிய பயன்களைப் பெற, பிறரை அனுமதிக்க மாட்டோம். கட்டுமான திட்டங்களை நிறைவேற்றுவதில் வேகம் காட்டுவோம்.
சுதேசி என்றால் உள்நோக்கிப் பார்க்கிற கொள்கை என்று பொருள் அல்ல. உலகமே ஒரு கிராமம் (global village) என்கிற சொல் தோன்றியுள்ளது. ஒவ்வொருவரும் மற்றவரைச் சார்ந்தே இருக்கிறோம். இந்த வெளிச்சந்தை முறையில், நமது உள் வலிமையைக் கொண்டு சர்வதேச போட்டியில் நம்மால் எதிர்த்து நிற்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
இன்று 51-வது சுதந்திர தினம் இந்தியாவில் மட்டும் அல்ல, உலகம் முழுதும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்திய வம்சாவளியும் மகிழ்ச்சி உற்சாகத்துடன் இந்தப் புனித நாளை கொண்டாடி வருகின்றனர்.
இந்த தருணத்தில் உலகம் முழுதும் உள்ள இந்திய வம்சாவளி மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.
அயல்நாடு வாழ் இந்திய அனைவருமே, தாங்கள் தற்போது வசிக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கு வலிமை சேர்க்கிறார்கள். இப்போது இந்திய பொருளாதாரத்தை வலிமையாக்கவும். அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. புத்தாக்க இந்தியா பத்திரம் (Resurgent India Bond) வெளியிட்டுள்ளோம். உலகம் எங்கும் உள்ள அயல்நாடு வாழ் இந்தியர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுவரை இந்த திட்டத்தின் கீழ் ரூ. 5,000 கோடி வந்துள்ளது. இந்தத் திட்டத்தை இன்னும் அதிகமாக அயல்நாடு இந்தியர் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
சில பிரச்சினைகளை நாம் தீர்க்க வேண்டி உள்ளது. சில பொருட்களின் விலை உயர்வில் நீங்கள், குறிப்பாக சகோதரிகள் சிரமப்படுகிறீர்கள் என்பதை அறிவேன். உங்கள் பிரச்சினையைப் புரிந்து கொள்கிறேன். இதற்கு அரசை விடவும் இயற்கையைத் தான் நாம் அதிகம் குறை சொல்ல வேண்டி உள்ளது. இப்படிச் சொல்வதால் உங்களது சுமை குறைந்து விடாது என்பது எனக்குத் தெரியும். மத்திய நிதி அமைச்சகமும் மாநில அரசுகளும் இணைந்து விலைவாசி உயர்வுக்கு எதிராகப் பணியாற்ற வேண்டும். வணிகர்களின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன். பதுக்கலில், அதிக லாபம் ஈட்டுவதில் அவர்கள் ஈடுபடக்கூடாது. இத்தகைய சக்திகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம். அடுத்த சில நாட்களில் நிறைய பண்டிகைகள் வருகின்றன. விலைவாசி உயர்வால் விழாக்கால உற்சாகம் குன்றிப் போகாது என்பதை எனது நடவடிக்கைகள் உறுதி செய்யும்.
நம் நாடு எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சினை - ஊழல். இது ஒரு புற்றுநோயைப் போல நாட்டின் முக்கிய ஆதாரங்களை அரித்து வருகிறது. இதனை முழுவதுமாக எதிர்ப்பது என்று தீர்மானித்து இருக்கிறோம். மேலிருந்து இந்தப் போரை நாம் தொடங்கியுள்ளோம். சமீபத்தில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட லோக்பால் மசோதாவின் அதிகார வரம்பில், பிரதம மந்திரியைக் கூட நாம் விட்டு வைக்கவில்லை. மிக உயரிய மட்டத்திலும் ஊழலுக்கு எதிரான நமது போர் தொடரும் என்கிற நமது விருப்பத்தை இது வெளிக் காட்டுகிறது.
இத்துடன் அரசு நிர்வாகத்தில் உள்ள ஊழலுக்கு எதிராகவும் போராட வேண்டி உள்ளது. அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் வழக்குகளைக் கையாளும் பிரதம மந்திரி அலுவலகப் பிரிவை, விரைந்து செயல்படுமாறு முடுக்கி விட்டுள்ளேன்.
வேலை இன்மையை நீக்குதலை, நமது செயல்பாடுகளில் முக்கியமானதாக இருக்கும் என்று உறுதி கூறியுள்ளோம். வேலையின்மை ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கான ஒரே வழி வேலை வாய்ப்பு தான். எல்லாருக்கும் (வேலை தருகிற) முழு வேலை வாய்ப்பு திட்டங்களை உருவாக்குதல் கடினம்தான். ஆனால் சாத்தியம் அற்றது அல்ல. அடிப்படைத் தேவைகள், சேவைகள் - பொதுமக்களால் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும். இதற்கு அறிவியல் - தொழில்நுட்பம் மிகவும் உதவியாக இருக்கும்.
அடுத்த 10 ஆண்டுகளில் 10 கோடி பேர் வேலை வாய்ப்பு பெற வேண்டும் என்று அரசு தீர்மானித்து இருக்கிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். இந்த நோக்கத்துக்காக ஒரு செயற்படை (task force) ஏற்படுத்தப்படும். இது தனது அறிக்கையை விரைந்து சமர்ப்பிக்கும்.
நாகரிக சமுதாயத்தின் வளர்ச்சியை மதிப்பிட, பெண்களின் நிலைமையே மிக நல்ல குறியீடு. நாடாளுமன்றத்தில், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு தருவதாய் உறுதி அளித்தோம். மன்னிக்கவும், இதுவரை எங்களால் இதனை நிறைவேற்ற முடியவில்லை. பட்டப் படிப்பு வரை பெண்களுக்கு இலவசக் கல்வி வழங்க ஏற்கனவே தீர்மானித்து இருக்கிறோம். அடுத்ததாக இப்போது மற்றொரு பெரிய நடவடிக்கை எடுக்க உள்ளோம். தொடக்கக் கல்வியில், ரூ.550 கோடி செலவில், எல்லா மாணவிகளுக்கும் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்.
பெண்களுக்கு பொருளாதாரப் பாதுகாப்பு நல்கும் ராஜராஜேஸ்வரி காப்பீடு திட்டம் விரைவில் தொடங்கப்படும். இளம் பிராய பெண்களுக்காக பாக்யஸ்ரீ திட்டம் தொடங்கப்படும். இந்த இரண்டு திட்டங்களும் இவ்வாண்டு தீபாவளி அன்று தொடங்கும். இந்த காப்பீட்டு திட்டத்துக்கான பிரிமியம் தொகை மாதம் 1 ரூபாய் மட்டுமே. அவசர காலத்தில் காப்பீட்டுக்காரருக்கு, ரூ.25,000 கிடைக்கும். (இது தொடர்பான) முழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
பணி நியமனங்களில் பட்டியல் இனத்தவர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த விதிமுறைகள் விரைவாக செயல்படவில்லை. எனது அரசு இந்த நடைமுறையை விரைவுபடுத்தும். ஒதுக்கீட்டு இடங்கள் விரைவில் முழுமையாக நிரப்பப்படும். இவர்களின் பிரச்சினைகளை உடனடியாக அணுகி, பொறுப்பு ஏற்கிற விதத்தில், (அரசு) நிர்வாகம் செய்யப்படும். (The administration will be made more sensitive and accountable to these classes.)
இளைஞர் சக்தியே இந்த நாட்டின் வலிமை. அதுவே இந்த நாட்டின் எதிர்காலம். பல ஆண்டுகளுக்கு முன்பு, பாபா ஆம்தே கூறியதைப் படித்தேன் - 'haath lage nirman mey, nahin mangne, marne' - உங்கள் கரங்களை நிர்மாணிக்கப் பயன்படுத்துங்கள்; யாசிக்கவும், தாக்குதலுக்கும் வேண்டாம். (use your hands to create, not to ask or hit) இதுதான் நமது விருப்பமும் கூட. இந்தியாவின் இளைய தலைமுறை யாரிடமும் கை ஏந்த வேண்டாம்; யாருக்கு எதிராகவும் கை நீட்ட வேண்டாம். இவர்கள், தேசத்தின் மறு நிர்மாணப் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளட்டும்.
இந்த நோக்கத்துக்காக நாம் National Reconstruction Force தேசிய புனரமைப்புப் படை (Rashtriya Punarnirman Vahini) அமைக்கத் தீர்மானித்து உள்ளோம். இதில் 18 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் ஈடுபடலாம். இந்தப் படை - கிராமப்புற வேளாண்துறைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்கள் தொகைப் பெருக்கம் தொடர்பான விழிப்புணர்வு, போதை மருந்து எதிர்ப்பு, கல்விப் பரவல், தலித் மற்றும் பழங்குடிப் பெண்களை விளையாட்டு/கலைகளில் உயர்த்துதல் போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தும். இந்தப் பணிக்காக இளைஞர்களுக்கு கவுரவ ஊதியம் வழங்கப்படும். தொடக்கத்தில் இது சில மாவட்டங்களில் மட்டும் செயல்பாட்டுக்கு வரும்; நாளடைவில் நாடு முழுதும் விரிவு படுத்தப்படும். இந்தத் திட்டம், சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 (1999) அன்று தொடங்கப் படும். இந்த தேசத்துக்குப் புத்துணர்ச்சி தரும் இப்பணிக்கு ஓராண்டு அர்ப்பணிக்குமாறு நாட்டின் இளைய ஆண்கள் பெண்களை அழைக்கிறேன்.
அடுத்த ஆயிரமாண்டு (மில்லனியம்) மலர இருக்கிறது. அது தகவல் தொழில்நுட்ப நூற்றாண்டாக இருக்கும். இந்தியாவின் மிகப்பெரிய வலிமை - அதன் அறிவுக் கூர்மை. அறிவியல் தொழில்நுட்பத்தில் உயர் பயிற்சி பெற்ற நபர்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா, உலகின் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த வலிமையை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்த அரசு பல புதிய திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இந்தத் துறையில் நமது நாடு ஒரு வல்லரசாக வேண்டும் என்பதே நமது லட்சியம். இதனை மனதில் கொண்டு ஒரு புதிய திட்டத்தை அறிவிக்கிறேன். வரும் ஆண்டில் விண்வெளி - எண்ணற்ற வாய்ப்புகளைக் கொண்டதாக இருக்கும். விண்வெளி தொழில்நுட்பத்தில் பல ஆதாயங்கள் உள்ளன. இந்தியாவின் இளம் தலைமுறை ஆசைகளை நிறைவேற்ற (இத்துறை) பெரிதும் பயன்படும். 'ஜெய் விக்யான்' என்கிற முழக்கத்தின் அடிப்படையில், நமது இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்ற எனது அரசாங்கம் விரும்புகிறது. இந்தத் திசையில் நாம் தொடங்க இருக்கும் புதிய திட்டம் - Swaran Jayanti Vidya Vikas Antariksh Upagraha Yojana. ( Golden Jubilee Education Development Space Satellite Scheme)
இந்தத் திட்டத்தின் முதல் செயற்கைக்கோள் இன்சாட் 3B - 1999 ஆகஸ்டு 15-க்குள் ஏவப்படும். 12 மாதங்கள் என்னும் குறுகிய சாதனைக் காலத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் இது செய்து முடிக்கப்படும். இந்த செயற்கைக்கோளின் ஆறு டிரான்ஸ்பாண்டர்கள், இந்த நாட்டில் உள்ள மாணவ சமுதாயத்துக்கு கணினிசார் கல்வி வழங்குகிற 'Operation Knowledge' திட்டத்தை செயல்படுத்த உதவும். அடுத்த ஆண்டு சுதந்திர தினத்துக்குள் நாட்டில் உள்ள எல்லா பல்கலைக்கழகங்கள், பொறியியல் மருத்துவக் கல்லூரிகள், ஆராய்ச்சிக்கான சோதனை நிலையங்கள், தகவல் தொழில்நுட்ப 'நெட்வொர்க்' உடன் இணைக்கப்படும். இந்தத் திட்டம், முன்னேற்றம் சார்ந்த தகவல் தேவைகளை நிறைவேற்றும்.
மகரிஷி அரவிந்தரின் 125-வது பிறந்ததினக் கொண்டாட்டங்கள் இன்றுடன் முடிவுக்கு வருகின்றன. நமது நாட்டின் ஆன்மீக பண்பாட்டு கலாச்சார மறுமலர்ச்சிக்கு வழி காட்டியவர் அவர். அவரது கனவுகளை நினைவாக்க நாம் இன்று உறுதி ஏற்போம்.
பாரத ரத்னா பாபாசாஹேப் அம்பேத்கர் ஒருமுறை சொன்னார் - பொருளாதார சமூக விடுதலை இல்லாமல் அரசியல் விடுதலை முழுமை பெறாது. இன்று, அரசியல் சுதந்திர நாளில், இந்த அம்சத்தை நாம் மறந்திடலாகாது. கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் அரசியல் சுதந்திரத்தை பாதுகாக்க வைத்துள்ளோம். ஆனால் சமூகப் பொருளாதார சுதந்திரத்துக்கான போரில் நம்மால் வெற்றி பெற முடியவில்லை. வறுமை, வேலையின்மையின் பிடியில் இருந்து நாட்டை மீட்க முடியவில்லை. கல்லாமை என்னும் களங்கத்தை அகற்ற முடியவில்லை. சாதிய மதவாத சக்திகள் தலை தூக்குகின்றன. இன்று இந்த 51-வது சுதந்திர நாளில் பொருளாதார சமூக சுதந்திரத்துக்கு உறுதி ஏற்போம்.
பிரதமர் ஆன இந்தக் குறுகிய காலத்தில், எல்லோரோடும் இணைந்து செல்ல முயற்சிகள் எடுத்துள்ளேன். சமரச அரசியலையே நான் முன்னெடுத்து வருகிறேன். உதாரணத்துக்கு - காவிரி பிரச்சினை. காவிரி நீரைப் பங்கிட்டு கொள்வதில் தமிழ்நாடு,கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. சில சமயங்களில் இந்த பிரச்சினை தீவிரம் அடைகிறது. தீயை அணைக்க தண்ணீரைப் பயன்படுத்துகிறோம். தண்ணீரே தீ பிடித்தால்? என்ன செய்ய முடியும்! (Water is used to extinguish fire but if water itself is on fire, what could be done!) ஒரு தீர்வு இருக்கிறது. ஒற்றுமை சகிப்புத்தன்மை பக்குவம் நாட்டுப்பற்று கூடவே மற்றவரின் நலனையும் விரும்புதல் இதில் அடங்கி உள்ளது தீர்வு. சமீபத்தில் எட்டப்பட்ட காவேரி ஒப்பந்தம் இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியது.
நதி நீரைப் பங்கிடுவதில் நாம் சண்டை இட்டுக் கொள்ளும் போது, நமது ஆறுகளில் இருந்து ஏராளமான தண்ணீர் கடலுக்குச் செல்கிறது. இந்த சச்சரவு பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். நாட்டின் பல மாநிலங்களை இணைக்கும் ஆறுகள், நாட்டு மக்களின் இதயங்களையும் இணைக்க வேண்டும். தேசிய தண்ணீர் கொள்கை வகுக்கப்பட வேண்டும். ஒவ்வொருவரின் ஒத்துழைப்பு மற்றும் பொறுமையால் மட்டுமே இதனை சாதிக்க இயலும்.
அரசுக்கான தேசியப் பணிகள் இரண்டு நாம் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற எனது அரசு தீவிரமாக முயன்று வருகிறது. என்னுடையது - கூட்டு அரசாங்கம். இத்தகைய அரசாங்கம், சில கட்டுப்பாடுகளைப் பின்பற்றியாக வேண்டும். எமது கூட்டணிக்கு என்று ஒரு குறைந்தபட்ச செயல் திட்டம் வகுத்துள்ளோம். சச்சரவுக்கு உள்ளாகும் பிரச்சினைகளை இந்த ஏற்பாட்டுக்கு வெளியிலே வைத்துள்ளோம். நமது தேசத்தின் நலனை, (அவரவரின்) சொந்த நலன் மற்றும் கட்சியின் நலனுக்கு அப்பாற்பட்டே வைத்துள்ளோம்.
நமது நாடு மாற்றத்தை சந்தித்து வருகிறது. நமது அரசியல், நிர்வாக அமைப்பு முறை கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ளது. இத்தகைய சூழலில், ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு தலைவரும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். தேசத்தை பாதிக்கும் எந்த ஒரு செயலையும் வரலாறு மன்னிக்காது.
தற்போதுள்ள அரசியல், நிர்வாக அமைப்பு முறை பற்றி சாமான்யனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சில அடிப்படை பிரச்சினைகளை நாம் சந்தித்து வருகிறோம். அடிக்கடி தேர்தல் நடைபெறுவது நாட்டு நலனுக்கு நல்லதா? அடிக்கடி நடைபெறும் தேர்தல்களின் மீது பெருத்த செலவு செய்வது தேச நலனுக்கு உகந்ததா?
ஐந்து மாதங்களாகத்தான் நான் பிரதமராக இருக்கிறேன். மக்களவை எங்களுக்கு மிக மெல்லிய பெரும்பான்மையே இருக்கிறது. கூட்டணி அரசின் வரன்முறைகளை நான் அறிவேன். இன்றைய அமைப்பு முறையில், அதிகாரப் பசி கொண்டவர்களால் ஓர் அப்பாவித் துறவியைக் கூட தூக்கில் இட முடியும். (in today's system, an innocent sage can be hanged by power hungry.)
அதிகாரத்துக்காக நான் ஒருபோதும் கொள்கைகளில் சமரசம் செய்து கொண்டதில்லை. இனியும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். அதிகாரம் இருந்தாலும் இல்லையென்றாலும் எனக்கு இரண்டுமே ஒன்றுதான். நான் பல்லாண்டுகளாக எதிர்க்கட்சியில் இருந்து உள்ளேன்; எனது கடமைகளை நேர்மையாகச் செய்துள்ளேன். எனக்கு எதிரில் உள்ளவர்களும் இதனைப் பாராட்டி இருக்கிறார்கள். டாக்டர் சிவ்மங்கள் சிங் சுமன் எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது - வெற்றி/ தோல்விக்கு நான் அஞ்சவில்லை. எனது கடமைப் பாதையில் எது வந்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்வேன். எனக்கு சாதகமாய் எதுவும் வேண்டும் என்று கேட்க மாட்டேன்.
நான் உறுதி கூற விரும்புகிறேன் - எனது கடைசி மூச்சு வரை, (யாரிடமும்) எந்த ஆதாயமும் கேட்க மாட்டேன்; எனது போராட்டப் பாதையை விட்டு விலகவும் மாட்டேன். எனது தேவை எல்லாம் உங்களது ஆதரவு மட்டுமே. இந்த நாட்டின் நூறு கோடி மக்களின் ஆசிகள் மட்டுமே எனக்குத் தேவை. பாதைகளின் சந்திப்பில் நின்று கொண்டு, தொடர்ந்து எந்தப் பாதையில் செல்லலாம் என்று சிந்திக்கிற தருணம் ஒவ்வொருவர் வாழ்விலும் வரத்தான் செய்யும்.
எளிமை - வெளிப்படையாக சினத்துக்கு உள்ளாக்கப்படுகிறது. (சதுரங்கத்தில்) ஒரு வீரன் அரசியை சாய்க்கிறான். கடைசியாக ஒரு முறை முயற்சிக்கவா.. அல்லது இதிலிருந்து விலகி விடவா..? எந்தப் பாதையை நான் தேர்ந்தெடுக்க வேண்டும்? மாற்றங்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டுத் தனிமையில் கிடக்க முடியாது என்று உணர்கிறேன். போராடத்தான் வேண்டும்.
மீண்டும் ஒருமுறை இந்த செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து உங்கள் முன்னால் மீண்டும் உறுதி மொழிகிறேன். தோல்வியை ஏற்றுக் கொள்ள மாட்டேன். புதிதாக போராட்டத்தை முதலில் இருந்து தொடங்குவேன். எனது விதியை நானே எழுதுவேன்; எழுதியதை நீக்குவேன்; புது ராகம் பாடுவேன். (I will not accept defeat and will start the struggle afresh. I will write and unwrite my own destiny and sing a new tune) மிக்க மகிழ்ச்சி நன்றி. என்னுடன் சேர்ந்து முழங்குங்கள் - ஜெய்ஹிந்த்!
(தொடர்வோம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT