Published : 09 Dec 2023 04:47 PM
Last Updated : 09 Dec 2023 04:47 PM
இந்தியப் பொருளாதாரம் வலுவாக நிலையான வளர்ச்சி கண்டு வந்தது. அதே சமயம் இந்திய அரசியல் அவ்வாறு சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை. பெரும் பொருளாதார புரட்சி (அரசியல் வாக்கியம் அல்ல) நோக்கிய உலக மயமாக்கல், தாராள மயமாக்கல், தனியார் மயமாக்கல் கொள்கைகளை முன்னெடுத்த நரசிம்மராவ் ஆட்சி முடிவுக்கு வந்து தேவகவுடா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்தது.
1996 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரதமர் தேவகவுடா ஆற்றிய உரை - இதோ: சகோதர சகோதரிகளே அன்பான நாட்டு மக்களே, சுதந்திர தின நன்னாளில் உங்களுக்கு எனது நல்வாழ்த்துகள். இதே நாளில் ஒரு மாணவனாக நான், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த செங்கோட்டையில் இருந்து பண்டிதர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய உரையால் கவரப்பட்டது எனக்கு ஞாபகம் இருக்கிறது. இந்திய மக்களின் முதல் சேவகர் என்று தன்னை விவரித்துக் கொண்டார். நானும் இந்த தேசத்தின் பணிவான சேவகனாக உங்கள் முன் நிற்கிறேன்.
நான் ஒரு சிறிய விவசாயக் குடும்பத்தில் இருந்து வருகிறேன். ஒரு பிரதமராக செங்கோட்டையில் இருந்து நாட்டுக்கு உரையாற்றுவேன் என்று எப்போதும் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. நமது சாசனம் மற்றும் நமது ஜனநாயக நடைமுறை ஒரு விவசாயின் மகனாகிய எனக்கு இந்த வாய்ப்பை தந்துள்ளது. அதற்கு நான் தலைவணங்குகிறேன்.
விடுதலைப் போராட்டத்துக்கு மகாத்மா காந்தி விடுத்த அழைப்பு, வெவ்வேறு மதங்கள், அடையாளங்கள், கருத்துகளைக் கொண்டிருந்த நாட்டு மக்களிடம் மிக நல்ல வரவேற்பு பெற்றது. அவர் நமக்கு சுதந்திரத்தை வென்று தந்தார். இந்த நாளில் நாம் விடுதலை இயக்கத்தின் தலைவர்கள், வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.
தேசத் தந்தையின் தியாகத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். விடுதலை இயக்கத்தை காந்திஜி வழி நடத்திய முறை, தேசத்தை ஒன்றிணைத்தது. பூகோள மற்றும் சரித்திர ரீதியான ஒற்றுமை மட்டும் அல்ல; நாட்டின் சமய சார்பற்ற பன்முகத் தன்மை மற்றும் இந்த நாடு எல்லா மக்களுக்கும் உரித்தானது என்கிற உறுதியின் அடிப்படையில் அமைந்த ஒற்றுமை அது. பல நூற்றாண்டுகளாக 'பாரத்' என்கிற சொல், நாம் அனைவரும் ஒன்று என்று என்கிற ஒற்றுமையை வெளிப்படுத்தியது; ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும், ஒவ்வொரு இந்திய மொழியிலும் இருந்த இந்திய அடையாளத்தை வெளிப்படுத்தியது.
"Thamvarsham Bharatham Bharathiya Yatra Santati."
இந்த மாபெரும் நிலத்தில் வாழ்வோர், இந்த இனம் அல்லது நிறமாக இருந்தாலும், அவர்களின் மதம் எதுவாக இருந்தாலும், அனைவரும் இந்த நாட்டுக்கு உரித்தானவர்கள். இவர்கள் அனைவரும் இந்தியர்கள். இதுவே நமது பாரம்பரியம்; இதுவே நமது சரித்திரம்; இதுவே நமது நாகரிகம். (Those who dwell within this great land, whatever be their creed or colour, whatever be thrir religion, all belong to this country. This is our heritage, this is our history, this is our civilization.)
சமயசார்பின்மை மற்றும் பன்முகத்தன்மை என்கிற கோட்பாடுகளை அடிப்படையாய் கொண்ட இந்த ஒற்றுமையை எப்போதெல்லாம் சரண் அடைய செய்கிறோமோ, எப்போதெல்லாம் மதவெறிக்கு உள்ளாகிறோமோ அப்போது எல்லாம் நமது நாடு பாதிப்பை, இறங்கு முகத்தை சந்தித்துள்ளது.
இந்த அரசை நடத்துவதற்கு குறைந்தபட்ச பொது திட்டம் (Common Minimum Programme) ஒன்றை நாங்கள் வகுத்துள்ளோம். இதன்படி, மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த நாட்டு வளத்துக்காக முக்கிய நடவடிக்கைகள் எடுப்போம் என்று தீர்மானித்து உள்ளோம்.
நமது சகோதர சகோதரிகள் அதிகம் வசிக்கும் கிராமப்புற இந்தியாவில் இருந்து வருகிறேன் நான். வறுமையை, (உரிமை) மறுப்பை மிக அருகில் இருந்து பார்த்துள்ளேன். சாமானியனின் பிரச்சினைகளை நான் அறிவேன். இந்த புதிய செயல்முறையை முன்னெடுப்பதை எனக்கு கிடைத்த கவுரவமாக கருதுகிறேன்.
நமது கிராம மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திட சிறப்பு முயற்சிகள் செய்வதில் இந்த அரசு தீர்மானமாக இருக்கிறது. இந்தியாவின் பெருமைமிக்க மரபு மற்றும் பாரம்பரியத்துடன் இந்த அரசு உண்மையாக இணக்கத்துடன் இருக்கிறது. கூட்டு கலாசாரம் மற்றும் கூட்டு அரசியலுக்கு உட்பட்டு நிலையான வலுவான அரசை வழங்குகிற பக்குவம் நமது ஜனநாயகத்துக்கு இருக்கிறது. கூட்டாட்சி, அதிகாரப் பகிர்வு மற்றும் சமூக நீதியின் மீது இந்த அரசு இருக்கிறது.
இந்திய இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும். நமது வளமிக்க பண்பாடு மற்றும் உள்ளடக்கிய கலாச்சாரத்தைப் பேணுவதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும். எல்லா சமூகங்கள், குழுக்கள் இடையே இணக்கமான உறவு இருப்பதை உறுதி செய்யும் எல்லா நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுக்கும். எல்லா மக்களின், குறிப்பாக சிறுபான்மையினர் மற்றும் நலிந்த பிரிவினரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.
சமீபத்தில் பஞ்சாப் சென்று வந்தேன். எத்தனை மன உறுதியுடன் பயங்கரவாதத்தை எதிர்த்து நின்றனர்; மீண்டும் வளர்ச்சிப் பாதையில் சக்கரத்தை சுழல விட்டுள்ளனர் என்பது என்னை மிகவும் கவர்ந்தது. சமீபத்தில் நமது சகோதரர்கள் மற்றும் குழந்தைகளைக் கூட காவு கொண்ட இன வன்முறை மற்றும் சமூகப் பிரிவுகளுக்குள் தேவையற்ற சச்சரவுகள் - என்னை மிகுந்த கவலைக்கு உள்ளாக்கியது. இவர்களின் குடும்பத்துக்காக நான் அனுதாபப்படுகிறேன். இந்த துயரமான இழப்பில், அவர்களுக்கு நாம் எல்லா உதவிகளையும் வழங்குவோம். பயங்கரவாத கிரிமினல் சமூக விரோத நடவடிக்கைகளில் வெளிப்படும் வன்முறைக்கு நமது சமுதாயத்தில் இடமில்லை. இதனை இந்த அரசு மிக உறுதியாகக் கையாளும்.
ஜம்மு காஷ்மீர் இந்தியாவில் ஒருங்கிணைந்த பகுதி; என்றும் அது அப்படித்தான் இருக்கும். காஷ்மீர் பிரச்சினை முழுக்கவும் வெளி சக்திகளால் உருவானது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தியாவின் எல்லைகளை, ஒருமைப்பாட்டைக் காப்பதில் நமக்குள்ள உறுதி குறித்து யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
இரண்டு முறை ஜம்மு காஷ்மீர் சென்று வந்தேன். அங்குள்ள மக்களை சந்தித்தேன். அவர்களின் விருப்பங்களைத் தெரிந்து கொண்டேன். அங்கே நிலைமை மாறி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தியது நமது ஜனநாயக விழுமியங்களுக்குக் கிடைத்த வெற்றி. எல்லை தாண்டிய தீவிரவாதத்தை நிராகரித்ததன் மூலம் ஜம்மு காஷ்மீர் மக்கள், தமது பக்குவத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த நேர்மறையான முன்னேற்றங்கள் மற்றும் மக்களின் மனநிலையைக் கருத்தில் கொண்டு, இந்த மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தலை நடத்த உள்ளோம். ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஆட்சி மூலம் இயல்பு நிலையைக் கொண்டு வருகிற பணியை நிறைவேற்றுவோம்.
இந்தியாவின் வடகிழக்குப் பகுதி, சிறப்பு கவனத்துக்கு உரியது. வன்முறை, இனவாதம் மற்றும் தீவிரவாதத்தைக் கட்டுக்குள் வைத்திட, (தேவையான) ஆதரவு தருவோம். இந்தப் பகுதி மக்களின் வருத்தங்களைப் போக்கிட, மக்களின் நல்வாழ்வுக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். திறமையான நிர்வாகத்தைக் கொண்டு, வெளிநாட்டு ஆயுதங்கள் மற்றும் அகதிகள் நுழைவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுப்போம். நமது பார்வையில், தூய்மையான திறமையான நிர்வாகத்தை தருவதே இப்போதைய தேவை. இதைத் தருவதில் நாம் உறுதியாக உள்ளோம். நேர்மையும் பொறுப்புணர்வும் அரசில், பொது வாழ்க்கையில் முக்கிய அம்சங்கள். இயன்றவரை, தன்னிச்சையாக முடிவெடுக்கும் வாய்ப்பைக் குறைப்பதே நமது பிரதான பணியாகும்.
நமது நடைமுறைகள் இன்னும் எளிமையாக வெளிப்படையாக இருத்தல் வேண்டும். ஊழலற்ற தூய்மையான நிர்வாகத்தை வழங்கும் நமது உறுதி மொழியை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கி உள்ளோம். ஊழலை எதிர்க்கும் நமது இயந்திரம் மற்றும் முகமைகள் மேலும் வலுவாக்கப்பட வேண்டும்; மேலும் திறன் கொண்டதாய் இருக்க வேண்டும்.
ஊழல், குறிப்பாக மேல்மட்டத்தில், மக்கள் மத்தியில் பரவலாக கவலையை ஏற்படுத்துகிறது. ஊழலை கட்டுப்படுத்தும் நிறுவனங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். நமது ஜனநாயக அமைப்பில் சாமானியருக்கு மீண்டும் நம்பிக்கை வரச் செய்ய வேண்டும். லோக்பால் அமைப்பை நிறுவுதல் தொடர்பாக பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் மசோதா அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்த நிறுவனம் உருவாதல், உண்மையாகி உள்ளது.
நமது தேர்தல் முறையில் பெரும் மாற்றங்கள் கொண்டு வருவதில் நாம் உறுதியாக உள்ளோம். தேர்தல் சீர்திருத்தங்களுக்காக முன்வைக்கப்பட்ட எல்லா முக்கிய ஆலோசனைகளையும் நாம் பரிசீலிப்போம். தேர்தலில் பணத்தின் பங்கு, தோள் பலம் உள்ளிட்ட நியாயமற்ற நடைமுறைகளை நீக்கி அரசியல் கட்சிகளின் பொறுப்புணர்வை உறுதி செய்வதே இந்த சீர்திருத்தங்களின் நோக்கம் ஆகும். ஒரு தொடக்கமாக, தேர்தல் சட்டங்களில் சில திருத்தங்கள் செய்துள்ளோம். வாக்குச்சாவடியை கைப்பற்றுதல், தீவிரம் அல்லாத வேட்பாளர்களை ஊக்குவிக்காது இருத்தல், பிரச்சார காலத்தைக் குறைத்தல் ஆகியவற்றுக்கு இது வழி வகுக்கும்.
தனி மாநிலம் என்பது உத்தராகண்ட் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இதனை நிறைவேற்ற நமது அரசாங்கம் ஒரு முக்கிய முடிவு எடுத்து உள்ளது. உத்தராகண்ட் மாநிலம் அமைவதற்கான மசோதாவை விரைவில் அறிமுகப் படுத்துவோம். உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு இந்த மசோதா, சாசன விதிமுறைகளின் படி, மாநில சட்டமன்றத்தின் முன் வைக்கப்படும். பிறகு நாடாளுமன்றத்தின் முன் வைக்கப்படும். இதனால் உத்தராகண்ட் மாநிலம் விரைவில் ஏற்படுத்தப்படும்.
இன்றைய உலகில், பொருளாதார வளர்ச்சிக்கு (இணையான) மாற்று ஏதும் இல்லை. ஒரு நாட்டின் வலிமையும் நிலைத்தன்மையும் அதன் பொருளாதார வளர்ச்சியை சார்ந்தே இருக்கிறது. வறுமை ஒழிப்பு, தற்சார்பு, நவீன மயமாக்கல் போன்ற நாம் விரும்பும் இலக்குகளை எட்டவும் இது மிக அவசியம். சர்வதேச தொழில்நுட்ப, நிதித்துறைகளில் எழும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
காலத்துக்கு ஒவ்வாத கட்டுப்பாடுகள், விடுமுறைகளை விடுத்து, படைப்பாக்க சக்திகளை வெளிப்படுத்துவதே நமக்கு இப்போதைய பணியாகும். ஏழைகளின் நல்வாழ்வில் கவனம் - இதுவே நமது பொருளாதார தத்துவத்தின் மிக முக்கிய அங்கம். வளர்ச்சியின் பலன்கள் ஏழைகளை சென்று சேர்வதையும் வருமானம் மற்றும் வாய்ப்புகளில் சமமின்மை குறைவதையும் உறுதி செய்தல் அவசியம்.
தொழில் வளர்ச்சி மேம்படுத்தும் போது விவசாயத்தை நாம் புறக்கணித்து விட முடியாது. உயர்ந்த வேளாண் முன்னேற்றம் இல்லாமல் விரைந்த பொருளாதார வளர்ச்சியை, வறுமை ஒழிப்பை சாதிக்க இயலாது. உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை முழக்கங்களை எழுப்புவதால் சாதிக்க முடியாது. உறுதியான முயற்சிகளால் மின்சாரம் சாலைகள் புதிய தொழில்நுட்பங்கள் உரங்கள் தேவையான கடன் வசதிகள் வழங்குவதால் மட்டுமே முடியும். விவசாயத்தில் முதலீட்டை அதிகரிக்கும் முயற்சிகளை ஏற்கனவே தொடங்கி விட்டோம். மானியத்தைக் கூட்டியதன் மூலம், பாஸ்பேட் மற்றும் பொட்டாசிக் உரங்களின் விலை கணிசமாகக் குறைக்கப் பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் உற்பத்தி அதிகரிக்கும்; அவர்களின் மேம்பட்ட பொருளாதாரத்துக்கு வழி வகுக்கும்.
விவசாய நிலங்களுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப்படுகிறது. தண்ணீர் பங்கீடு மற்றும் தண்ணீர் மேலாண்மைக்கு தேசியக் கொள்கை வகுப்போம். (We will evolve a National Policy on water sharing and water management) தண்ணீர் பங்கீட்டில், பயன்பாட்டில், நீர்ப்பாசன திட்டங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வில் பல பிரச்சினைகள் உள்ளன. இவையெல்லாம், சிறந்த நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும். சமீபத்தில் குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் ஏற்றுக் கொண்ட சர்தார் சரோவர் திட்டம், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதைக் காட்டுகிறது.
சுதந்திரத்துக்குப் பிறகு இத்தனை ஆண்டுகள் கழித்தும் நமது மக்களுக்கு, குறிப்பாக கிராமப்புற / நகரப் பகுதிகளில் வசிக்கும் ஏழைகளுக்கு இன்னமும் அடிப்படைச் சேவைகளை கூட நம்மால் வழங்க முடியவில்லை என்பதில் வருந்துகிறேன். ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த சேவைகளை வழங்குவதைக் கொண்டே, அரசின் திறன் மீது மக்களின் நம்பிக்கை இருக்கும்.
கடந்த மாதம் டெல்லியில் முதல் அமைச்சர்கள் மாநாடு, கூட்டி இருந்தேன். கிராம, நகர்ப்புறங்களில் வாழும் எல்லாருக்கும் பாதுகாப்பான குடிநீர், எல்லாருக்கும் ஆரம்ப சுகாதார வசதிகள், மேற்கூரை இல்லாத ஏழைகளுக்கு வீட்டு கட்ட நிதியுதவி, கிராமங்களில், எல்லாப் பருவங்களுக்கும் ஏற்ற சாலைகள், தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. 2000 இல் (நான்கு ஆண்டுகளில்) உறுதியான முடிவுகளை சாதிக்கும் விதத்தில் திட்டம் வகுக்க முடிவு செய்யப் பட்டது.
வறட்சி, பாலைப் பகுதிகளின் வளர்ச்சிக்கு மற்றும் பட்டியல் இன மக்கள் சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகளுக்கு, அடிப்படை குறைந்தபட்ச சேவை வழங்க மேலும் அதிக நிதி செலவிடப்படும். நகரின் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்கள், கடந்த காலத்தில் தேவையான ஆதரவு பெற்றனர். இந்த நோக்கத்துக்காக இவ்வாண்டு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். இந்தத் திட்டங்களை செயல்படுத்துவதில் அதிக ஈடுபாடு காட்டப்படும் கிராமப்புற வளர்ச்சிக்கான ஒதுக்கீடு ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தில் கணிசமாக உயர்த்தப்படும்.
பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் அதிகார வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது; மேலும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. திறன் சார்பணி, சுய வேலைவாய்ப்பு ஆகியவற்றில் நமது பொருளாதாரம் புதிய வாய்ப்புகளை வழங்குகிறது. ஏழை குடும்பங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள், இந்த வாய்ப்புகளால் ஏராளமாகப் பயன்பெற முடியும். தற்போது சுய வேலைவாய்ப்பில் பல்வேறு திட்டங்கள் உள்ளன. 1996 - 97 இல், கிராம நகர்ப்புறங்களில் இருக்கும் படித்த வேலையில்லாத 10 லட்சம் இளைஞர்களுக்காக ஒருங்கிணைந்த சுய வேலைவாய்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த எண்ணி உள்ளோம். இந்த இளைஞர்களுக்கு பயிற்சி வசதிகள், கூட்டப்பட்ட மானியம் மற்றும் கடன் வசதி வழங்கப்படும். சாதி மதம் அல்லது வேறு பாகுபாடுகளைத் தாண்டி, பெருத்த எண்ணிக்கையில் இளைஞர்களுக்கு இது பயனளிக்கும்.
கைவினைஞர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் ஆகியோரும் புதிய வாய்ப்புகளால் பயன்பெற வேண்டும் என்று விரும்புகிறேன். தற்போது, வறிய குடும்பங்களில் இருப்போருக்கு ஓராண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்கும் திட்டம் இருக்கிறது. நாட்டில் ஒவ்வொரு பத்து வட்டங்களிலும், ஐந்தில் மட்டும் இது செயல்படுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டில் உள்ள எல்லா வட்டங்களுக்கும் இந்த திட்டம் நீட்டிக்கப்படும்.
பொது விநியோக முறையின் செயல்பாடு பரவலாக விமர்சிக்கப்படுகிறது. பல மாநிலங்களில் அது சேவை செய்வதில் தோற்றுவிட்டது. பொதுவிநியோகத்தை பரவலாக்க முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு மாதமும், வறிய குடும்பங்களுக்கு பாதி விலையில் அரிசி, கோதுமை வழங்க தீர்மானித்துள்ளோம். 1996 அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி நாளில் இருந்து இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும். இது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் போது, 34 கோடி ஏழை மக்கள் பயன் பெறுவார்கள்.
பட்டியலின மக்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு அதிகாரம் வழங்குவதை இந்த அரசாங்கம் அடையாளமாய்க் கொண்டுள்ளது. இவர்களின் கண்ணியம் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்க விரும்புகிறோம். இவர்களின் கல்வி, வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார விடுதலைக்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் எடுக்க வேண்டும். இந்தப் பிரிவை சேர்ந்தவர்களில் பெரும்பாலோர் நிலம் அற்றோர் அல்லது சிறு விவசாயிகள். நிலமேம்பாடு மற்றும் நீர்ப்பாசனம் இல்லாததால் இவர்களின் நிலம், உற்பத்தித்திறன் இன்றிக் கிடக்கிறது. இதை நாம் கவனிக்க வேண்டும். பட்டியல் இனம் மட்டும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஏழை விவசாயிகளுக்கு உதவி வழங்க கங்கா கல்யாண் என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளோம். நில மேம்பாடு, தோட்டக்கலை, நீர்ப்பாசன வசதிகளுக்காக ஒரு ஹெக்டருக்கு ரூ.50,000 வழங்கப்படும்.
நமது மக்கள் தொகையில் பாதி இருக்கும் பெண்கள் தொடர்ந்து நமது சமுதாயத்தில் பலவீனமாக உள்ளனர். நாட்டை ஆளுவதில் அவர்களுக்கான பங்கைப் பெறுகிற உரிமையை நாம் புறக்கணிக்கக் கூடாது. நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்காக மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கீடு செய்யும் திட்டத்தை ஏற்கனவே அறிவித்துள்ளோம். இதேபோன்று அரசாங்கப் பணிகளிலும் மூன்றில் ஒரு பங்கு இடம் பெண்களுக்கு வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.
நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்ட பிறகும் மாற்றுத் திறனாளிகளுக்கான வாய்ப்புகள் ஒரே சீராக இல்லை. மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தை திறன்பட செயல்படுத்த உறுதி பூண்டு உள்ளோம். ஒவ்வொரு மாநிலத்திலும் பயிற்சி தர, அடிப்படை சேவைகளை வழங்க ஒரு தலைமை அமைப்பு வேண்டும். இதேபோன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சி வசதிகள் செய்து தரப்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு ஒதுக்கீடு சீராக செயல்படுத்தப்படுவதை, நல்வாழ்வுத் திட்டங்கள் மேம்படுத்தப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். கிராமங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளைக் கொண்டு 'சங்கம்' என்றொரு குழு அமைக்கப்படும். பொருத்தமான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒவ்வொரு சங்கத்துக்கும் ரூ.15,000 வழங்கப்படும். (Groups of disabled persons living in the villages will be organised into 'Sangams' and a sum of Rs 15,000 will be made available to each such Sangam for suitable economic activities.)
உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்கிற தனித்துவம் நமக்கு இருக்கிறது. இது குறித்து நாம் பெருமை கொள்கிறோம். கட்டுப்பாடற்ற மக்கள் தொகைப் பெருக்கத்தால் வளர்ச்சிக்கான முயற்சிகள் தோற்றுப் போகின்றன. கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் பாராட்டத்தக்க சாதனைகளை செய்துள்ளன. மற்ற பிற மாநிலங்களிலும் அரசும் மக்களும் இணைந்து பணியாற்றி நல்ல விளைவுகளை ஏற்படுத்த வேண்டும். சிறிய குடும்பம் என்கிற முறையை வலுப்படுத்தினால் வளர்ச்சியின் பயன்கள் ஒவ்வொருவரையும் சென்றடையும்.
இந்த தருணத்தில் நான் பாதுகாப்பு படையினரை பாராட்டுகிறேன். நாட்டின் பல பகுதிகளில், மிகக் கடினமான சூழலில் துணிச்சலுடன் தமது கடமையைச் செய்து வருகின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சாதனைகளில் நான் பெருமை கொள்கிறேன். பாதுகாப்புப் படைகளின் உற்சாகம், தயார் நிலையை தொடர்ந்து உச்சத்தில் வைத்திருப்போம். இந்த நாட்டுக்காக தியாகம் செய்த பாதுகாப்பு வீரர்களுக்கு இந்த நேரத்தில் அஞ்சலி செலுத்துகிறேன்.
நம்மைச் சுற்றி நவீன ஆயுதங்கள் குவிக்கப்பட்டு வருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பாதுகாப்புத் தேவைகளை நிறைவேற்றுவதே எமது முன்னுரிமை என்பதை நாட்டு மக்களுக்கு உறுதிப்படுத்துகிறேன். தேசத்தின் பாதுகாப்பில் நாம் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். நமது உள்நாட்டுத் திறன் வலுப்படுத்தப்படும். இராணுவ டாங்கி, போர் விமானம், அக்னி, ப்ருத்வி போன்ற ஏவுகணை தயாரிப்பில் நாம் முன்னேற்றம் கண்டுள்ளோம். ஏற்கனவே அமைக்கப்பட்ட நடைமுறைகளின் படி இந்தத் திட்டங்கள் தொடரும்.
நமது விஞ்ஞானிகளின் சிறந்த பணி குறித்து சொல்ல வேண்டும். நமது பாதுகாப்புத் திறனில் பங்களித்தது மட்டுமல்ல; உள்நாட்டு திட்டங்களிலும் திறம்பட பங்காற்றி உள்ளார்கள்.
விண்வெளி ஆராய்ச்சியில் நமது சாதனைகளில் குறித்து நியாயமாக பெருமைப்படலாம். இந்த ஆண்டு மார்ச் மாதம், PSLV இரண்டாவது முறையும் வெற்றிகரமாக ஏவினோம். இது விண்வெளியில் ரிமோட் சென்சிங் (remote sensing) செயற்கைக்கோளை நிலை நிறுத்தியது. இந்தத் திறன் கொண்ட ஒரு சில நாடுகளில் நாமும் ஒருவர்.
நமது அயலுறவுக் கொள்கை, தேச நலனை அடிப்படையாய்க் கொண்டது. இது பரந்துபட்டது. வெளிச்சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது. நமது அண்டை நாடுகளுடன் மேம்பட்ட உறவுக்கே முன்னுரிமை தருகிறோம். 'சார்க்' வழிகாட்டு முறைகளுக்கு உட்பட்டு இருதரப்பு ஒத்துழைப்பு மேம்பட பணியாற்றுகிறோம். எல்லா பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க அண்டை நாடுகளை அழைக்கிறோம். 'ASEAN' அமைப்பில் இந்தியா, Full Dialogue Partner ஆக இருப்பது மிகுந்த மன நிறைவு தருகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் நாம் செயல்படும் உறுப்பினராக இருக்கிறோம். ஐ.நா.வின் அமைதி முயற்சிகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்கிறோம். ஐ.நா.வின் சமூக பொருளாதார திட்டங்களை தீவிரமாய் முன்னெடுக்கிறோம். விரிவுபடுத்தப்படும் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக சேவை செய்ய நமக்கு நியாயமான உரிமை இருப்பதாக நம்புகிறோம். பாதுகாப்பு சபை, விஸ்தரிக்கப்பட்ட உறுப்பினர்களை உண்மையாய் பிரதிபலிக்க வேண்டும். வளரும் நாடுகளுக்கு பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.
உலக பாதுகாப்பு, ஆயுதக் குறைப்பை வலியுறுத்துகிறது. ரசாயன, உயிரி ஆயுதங்களை அழிக்கும் உடன்படிக்கைகளை நிறைவு செய்துள்ளோம். பெரும் சேதத்தை விளைவிக்கும் அணு ஆயுதப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பிட்ட காலத்துக்குள் அணு ஆயுதங்கள் அனைத்தையும் அழிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அணு ஆயுத நாடுகள் இதனை ஏற்க மறுக்கின்றன. அணு ஆயுதங்கள் மீது தமது எதேச்சாதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். இதற்கு நாம் உடன்பட முடியாது. நமக்கு மிக அருகில், வெளிப்படையான மறைமுகமான அணு ஆயுத திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே, ஏற்றுக் கொள்ள முடியாத நிபந்தனைகளை நம் மீது விதிக்கும் அணு சோதனை தடை ஒப்பந்தத்தை இந்தியா எதிர்க்கும் என்பதைத் தெளிவுபடுத்தி விட்டோம். எமது நிலைப்பாட்டை இந்த நாடு ஆதரிக்கிறது. தேசப்பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.
நாட்டு மக்களே.. இன்று நாம் சுதந்திரத்தின் 50 ஆவது ஆண்டில் நுழைகிறோம். நமது வெற்றி தோல்விகளை மதிப்பீடு செய்யும் நேரம் இது. சுதந்திரத்தில் இருந்து நாம் ஆற்றிய சாதனைகள் நம்மை ஊக்குவிக்கும்; இந்த நாட்டை முன்னேற்றிக் கொண்டு செல்ல வழிகாட்டும். கடந்த காலத்தில் நாம் இழைத்த தவறுகள், எங்கே நாம் தவறு செய்தோம் என்று கேள்வி கேட்க வைக்கும். நமது வெற்றி நமது தலைக்கு ஏறி விடக்கூடாது. நாம் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய உள்ளது. தவறுகள், தோல்விகளில் நாம் துவண்டு விடவும் கூடாது.
உலகம் வேகமாக மாறி வருகிறது. அதற்கேற்ப நாம் மாறுவதற்காக அது காத்துக் கொண்டிருக்காது. நமது மெத்தனத்தை நாம் கைவிட வேண்டும். உலகத்தில் தனக்கான இடத்தை இந்தியா காண வேண்டும். நமது சரித்திரத்தில் இது மிக முக்கிய தருணம். அடுத்த சில ஆண்டுகளில் வலுவான பொருளாதாரமாக எழ இருக்கிறோம்.
மக்கள் விழிப்புடன் இருந்து நாட்டின் பெருமை மற்றும் கண்ணியத்தைக் காக்க வேண்டும். நமது முன்னோர்கள் நமக்கு தற்சார்பு மந்திரம் கற்றுத்தந்துள்ளனர். நமது வளங்களைக் கொண்டு வாழ கற்றுக் கொண்டுள்ளோம். சில வெளி அழுத்தங்கள், உள்நாட்டுப் பிரச்சினைகள் உள்ளன. தேவைப்பட்டால், நாட்டு மக்கள் ஒன்றாக எழுந்து நின்று நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டும். ஒரு நூற்றாண்டு கால விடுதலைப் போராட்டம், விடுதலைக்குப் பிறகு அனுபவம் ஒளிமயமான வளமான எதிர்காலத்தை நம்மால் நிர்மாணிக்க முடியும் என்கிற நம்பிக்கையைத் தருகிறது.
நமது மிகப்பெரும் வலிமை - 95 கோடி மக்கள். உணவுப் பொருள் விளைவிப்போர், தொழிற்சாலைகளில் திறன்சார் தொழிலாளர்கள், ஆய்வுக்கூடங்களில் விஞ்ஞானிகள், எல்லையைக் காக்கும் வீரர்கள், இளைஞர்கள் வடிவமைக்க இந்தியாவை கட்டமைப்பதில் அனைவரும் தத்தம் பங்களிப்பைத் தருகிறார்கள். ஒரு மாபெரும் தேசம் விழித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தால் அதன் பாதையில் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த நாடு விழிப்புணர்வு கொண்டதை கண்ட இந்த நூற்றாண்டு, அதன் நிறைவுப் பகுதியில் உள்ளது. இப்போது நாம் 21-ம் நூற்றாண்டுக்குத் தயாராகி வருகிறோம்.
இந்த அரிய தருணத்தைப் பயன்படுத்தி ஒரு புதிய இந்தியாவை நிர்மாணிப்பது - அரசாங்கத்தின், ஒவ்வொரு அரசியல் கட்சியின், அறிவாளிகளின், இந்த மண்ணில் எல்லாக் குடிமகன்களின் கடமையும் ஆகும். இந்திய மக்களிடம் நான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். நல்ல எதிர்பார்ப்பு துணிச்சல், தன்னம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்க வேண்டும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாளில், சாதி, இனம் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு குடிமகனும் தலைநிமிர்ந்து நிற்கும் இந்தியாவுக்காக உழைக்கத் தீர்மானிக்குமாறு நாட்டு மக்கள் அனைவரையும் வேண்டுகிறேன்.
இனி.. தேசிய முழக்கத்தில் என்னுடன் இணைந்து கொள்ள அழைக்கிறேன். ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!
(தொடர்வோம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT