Last Updated : 16 Nov, 2023 12:03 PM

 

Published : 16 Nov 2023 12:03 PM
Last Updated : 16 Nov 2023 12:03 PM

Bigg Boss 7 Analysis: நரி vs அமுல்பேபி... சீரியசாக மாறிய சீக்ரெட் டாஸ்க்!

வார இறுதி களேபரங்களுக்குப் பிறகு மாயா பூர்ணிமா கூட்டணி கொஞ்சம் அடக்கி வாசிப்பதாகத் தெரிகிறது. அதற்குக் காரணம் ஆடியன்ஸின் மனநிலையை புரிந்து கொண்டதா அல்லது இந்த வாரம் பிக்பாஸ், ஸ்மால் பாஸ் பிரிவுகள் இல்லை என்ற அறிவிப்பா என்று தெரியவில்லை. ஆனால் சமீபநாட்களாக ஆட்டத்தின் போக்கை புரிந்து அமைதி காத்து வந்த விஷ்ணு, தினேஷுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தினேஷை தனியாக அழைத்து பிக்பாஸ் கொடுத்த சீக்ரெட் டாஸ்க் கொஞ்சம் சீரியசாகிப் போனது.

45ஆம் நாள் எபிசோடின் தொடக்கத்தில், மாயாவும் பூர்ணிமாவும் விசித்ராவின் நடவடிக்கைகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர். தேவையில்லாமல் விசித்ராவுக்கு ‘ஹைப்’ கொடுக்க வேண்டாம் என்று பூர்ணிமாவுக்கு மாயா அட்வைஸ் செய்தார். அதுவரை அவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மணியும், ரவீனாவும் விசித்ரா குறித்த பேச்சு வந்ததும் நைஸாக அங்கிருந்து நழுவினர். இதைப் பார்த்த பூர்ணிமா மாயாவிடம், ”இவனும் சொந்தமாக கருத்தை முன்வைக்க மாட்டான். அவளையும் சொல்ல விடமாட்டான்’. அவன் ஒரு கோழை’ என்று முகத்தை கொடூரமாக வைத்து ஹஸ்கி வாய்ஸில் சொல்லிக் கொண்டிருந்தார். வார இறுதியில் வாங்கிய டோஸ் காரணமாக இருவரும் அடக்கி வாசிப்பது நன்றாகவே தெரிகிறது. இதே கடந்த வாரமாக இருந்திருந்தால் அங்கு நடந்திருப்பதே வேறுவிதமாக இருந்திருக்கும். ஆனால் தற்போது எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் இருவரும் தங்களுக்குள்ளேயே அதைப் பேசி முடித்துக் கொள்கின்றனர்.

முன்தினம் மணியும், ரவீனாவும் விளையாட்டாக கூல் சுரேஷ் கெட்-அப்பில் மாறியதை பிக்பாஸ் சீரியசாக எடுத்துக் கொண்டார் போலும். அதுவே ஒரு டாஸ்க்காக போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. அந்த அளவுக்கு நிகழ்ச்சியில் கன்டென்ட் வறட்சி நிலவுகிறதா என்று தெரியவில்லை. இதில் விசித்ராவுக்கு கூல் சுரேஷ், மாயாவுக்கு விஷ்ணு, அர்ச்சனாவுக்கு கானா பாலா, கூல் சுரேஷுக்கு அர்ச்சனா, விஷ்ணுவுக்கு மாயா, மணிக்கு பூர்ணிமா என கெட்-அப்கள் கொடுக்கப்பட்டது. இதில் சுவாரஸ்யமில்லாத ஒருவரை பெண் போட்டியாளர்கள் தேர்வு செய்து சொல்ல வேண்டும் என்று பிக்பாஸ் கூறியிருந்தார். அவருக்கு எந்த கெட்-அப்பும் கொடுக்கப்படாது.

அதன்படி பெண் போட்டியாளர்கள் பேசி, தினேஷை தேர்வு செய்து கூறினர். ஆனால் சும்மா விடுவாரா பிக்பாஸ். வாரம் தொடங்கி மூன்று நாட்கள் ஆகியும், சண்டை எதுவும் நடக்கவில்லையே என்று மூக்கு வியர்த்து விட்டது போலும். கன்ஃபெஷன் அறைக்கு தினேஷை தனியே அழைத்த பிக்பாஸ் அவருக்கு ஒரு சீக்ரெட் டாஸ்க் கொடுத்தார். அதாவது மற்ற போட்டியாளர்கள் அவரவர் டாஸ்க்குகளை சரியாக செய்யவில்லை என்று ட்ரிக்கர் செய்யவேண்டும். அதாவது சிம்பிள் ஆக சொல்ல வேண்டும் என்றால் வீட்டில் சண்டை மூட்ட வேண்டும். வீடு அமைதியாக சென்றுகொண்டிருப்பதால் இப்படி ஒரு டாஸ்க் வேண்டுமென்றே கொடுக்கப்பட்டிருக்கிறது. கொஞ்ச நேரத்திலேயே பிக்பாஸின் நோக்கம் நிறைவேறியது.

கானா பாலாவின் கெட்டப் குறித்து தினேஷ் தொடர்ந்து ஓவர் டோஸ் ஆக குறை சொல்லிக் கொண்டே இருக்க, ‘குறுக்கே இந்த கவுஷிக் வந்தா’ என்பது போல குறுக்கே புகுந்து டேபிளை தன் பக்கம் திருப்பிக் கொண்டார் விஷ்ணு. ‘இவருக்கு யாராவது ஒரு கெட்-அப் கொடுங்கப்பா’ என்று அவர் சொன்னதைத் தொடர்ந்து தினேஷுக்கும் விஷ்ணுவுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. என்ன பேசிக் கொள்கிறார்கள் என்றே தெரியாத அளவுக்கு காட்டுக் கூச்சல் நிலவியது. சீசனின் தொடக்கத்தில் தயவுதாட்சண்யம் பார்க்காமல் போவோர் வருவோரிடம் எல்லாம் வம்பிழுத்து வந்த விஷ்ணு, கடந்த சில நாட்களாக ஆட்டத்தின் போக்கை அறிந்து அமைதிகாத்து வந்தார். ஆனால் இன்று அடக்கி வைத்ததை எல்லாம் திறந்துவிட்டது போல ஒரேடியா கொட்டித் தீர்த்து விட்டார். விஷ்ணு தினேஷை ‘நரி’ என்று சொல்ல, பதிலுக்கு அவர் இவரை ‘அமுல் பேபி’ என்று சொல்ல, ஒரே ரணகளமாகிப் போனது. பிக்பாஸ் கொடுத்த சீக்ரெட் டாஸ்க்கிற்காக கொஞ்சம் அமைதியாக முனைந்த விஷ்ணுவை தேவையற்ற வார்த்தைகளைக் கூறி மீண்டும் மீண்டும் சீண்டிக் கொண்டே இருந்தார் தினேஷ். இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு என்னவென்றால், விஷ்ணு கேரக்டரில் இருந்த மாயா, அவ்வளவு சீரியஸான சண்டையின் நடுவே, விஷ்ணுவை இமிடேட் செய்தது தான்.

ஒவ்வொருவரிடமும் அவரவர் கேரக்டர்களுக்கு உண்டாக கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார் பிக்பாஸ். அர்ச்சனா கேரக்டரில் இருந்த கூல் சுரேஷிடம் பிக்பாஸ் பேசியபோது, அர்ச்சனாவைப் போலவே அழுது காட்டினார் கூல். இதனை அங்கிருக்கும்போது கைதட்டி சிரித்த அர்ச்சனா, உள்ளே சென்றதும் விசித்ராவிடம் கூல் சுரேஷின் செய்கையை விமர்சித்தார். என்னை பக்கத்தில் இருந்து பார்த்த மனுஷன் இப்படி செய்திருக்கக் கூடாது என்று புலம்பினார். கடந்த வாரங்களில் பிரச்சினைகளை நேருக்கு நேர் விவாதித்த அர்ச்சனா இந்த விஷயத்தில் ஏன் செய்யவில்லை என்பது ஆச்சர்யம். இதை அவர் கூல் சுரேஷிடமே சொல்லியிருக்கலாமே. இதன்பிறகு தனியாக நடந்த டாஸ்க்கின் போதும், கூல் சுரேஷ் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆக அர்ச்சனா போல அழுது காட்டினார். அப்போதும் கூட அர்ச்சனா அதனை கண்டிக்காமல் சிரித்து ரசித்தார்.

இறுதியில் சிறந்த போட்டியாளராக விசித்ரா கேரக்டரில் இருந்த நிக்சனுக்கு ஸ்டார் வழங்கப்பட்டது. பின்னர் இந்த டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்பட்டபிறகு, போட்டியாளர்களுக்கு முன்னால் வந்து நின்ற விசித்ரா, தன்னை பேர் சொல்லி அழைப்பதை தான் விரும்பவில்லை என்றும், இனி தன்னை அனைவரும் விசித்ரா ‘மேம்’ என்று அழைக்க வேண்டும் என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியை பார்க்கும் குழந்தைகளுக்கு இது தவறான முன்னுதாரணமாக ஆகி விடும் என்று கூறினார். மீறி தன்னை யாராவது விசித்ரா என்று அழைத்தால் மைக்கை கழட்டிவிட்டு போட்டியை விட்டு வெளியேறுவேன் என்றும் எச்சரித்தார். இதன்பிறகு பேச எழுந்த மாயா, வீட்டில் இருப்பவர்கள் விசித்ரா என்று கூப்பிட்டாலும் உங்களிடம் மரியாதையாகவே இருக்கிறோம் என்று தன் கருத்தை முன்வைத்தார். மீண்டும் பேச எழுந்த விசித்ரா தன்னுடைய கருத்தை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக பதியவைத்தார். இந்த இடத்தில் மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் அப்படியென்றால் நீங்களும் எங்களை மரியாதையுடன் பேசுங்கள் என்று கூறினர் (ஆனால் இது ப்ரோமோவில் வேறுவிதமாக காட்டப்பட்டது).

மீண்டும் மீண்டும் பேசியதையே பேசிக் கொண்டிருந்த விசித்ராவை மாயா கட்டிப்பிடித்து சமாதானப்படுத்தியது பாராட்டத்தக்கது. ஸ்மால் பாஸ் வீட்டின் அறையில், தன்னுடைய சுயமரியாதை பாதிக்கப்படுவதாக கண்ணீர் விட்டு அழுத விசித்ராவை அர்ச்சனாவும், கூல் சுரேஷும் செய்ய முயற்சித்தனர். ஓரிரு நாட்கள் சண்டையில்லாமல் சென்று கொண்டிருந்ததை அறிந்த பிக்பாஸ், இப்படியே விட்டால் முதலுக்கே மோசமாகிவிடும் என்று உணர்ந்து இப்படி ஒரு டாஸ்க்கை கொடுத்துள்ளார். ஆனால் பெரிய அளவில் சுவாரஸ்யம் இல்லையென்றாலும், அவர் கொடுத்த சீக்ரெட் டாஸ்க் சீரியஸ் ஆனதில், தினேஷ் - விஷ்ணு இருவரும் முட்டிக் கொண்டு கன்டென்ட் கொடுத்தனர். இருவரது மோதலும் இத்துடன் முடியுமா? அல்லது இந்த வாரம் முழுவதும் நீடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x