Last Updated : 01 Nov, 2023 10:25 AM

1  

Published : 01 Nov 2023 10:25 AM
Last Updated : 01 Nov 2023 10:25 AM

Bigg Boss 7 Analysis: பிரதீப் கையிலெடுத்த மலினமான உத்தி- உணர்வுகளுடன் விளையாடுவதுதான் ஸ்ட்ராட்டஜியா?

கடந்த சில நாட்களாக பெரிய சலனங்கள் ஏதுமின்றி ‘லவ் ட்ராக்’கில் சென்றுகொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக ஐந்து வைல்டு கார்டு போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டனர். ஆட்டத்தின் போக்கை இவர்கள் மாற்றியமைப்பார்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பழைய போட்டியாளர்களான கூல் சுரேஷ் - பிரதீப் நட்பில் பூகம்பம் வெடித்தது.

பிக்பாஸ் வீட்டில் ரவீனா - மணி இருவரின் லவ் டிராக் ஒருபுறம் ஓடிக் கொண்டிருந்த நிலையில், கடந்த சில தினங்களாக அவர்களுடன் ஐஷுவும் நிக்சனும் புதிதாக சேர்ந்து கொண்டனர். சண்டை சச்சரவுகள் ஏதுமின்றி அமைதியாக சென்றுகொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓரளவு கண்டெண்ட் கொடுத்து தேற்றியவர்கள் இவர்கள் இருவரும்தான். ஆட்டத்தின் போக்கை மாற்றியமைக்கும் நோக்கத்தோடு புதிதாக வைல்டு கார்டு எண்ட்ரியாக தினேஷ், விஜே அர்ச்சனா, ஆர்ஜே ப்ராவோ, அன்னபாரதி, கானா பாலா ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளிலேயே தலைவர் பூர்ணிமாவின் ’ஸ்ட்ராட்டஜி’யின்படி ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.

பழைய போட்டியாளர்களுக்கும் வைல்டு கார்டு போட்டியாளர்களுக்கும் ஆரம்பம் முதலே நடந்த ‘ராகிங்’ மோதல் 30ஆம் நாளிலும் தொடர்ந்தது. மாயா, பிரதீப் குழுவினர் கொடுத்த அலப்பறை தாங்கமுடியாமல் அழுது கொண்டிருந்த அர்ச்சனா தன்னை கன்ஃபெஷன் ரூமுக்குள் அழைக்குமாறு பிக்பாஸிடம் மன்றாடிக் கொண்டிருந்தார். தான் மிகவும் சென்சிடிவ் என்றும், கொஞ்சம் மனிதத்தன்மையுடன் ஆடுங்கள் என்று தன் பக்க நியாயத்தை நிறுவ முயன்ற அர்ச்சனாவிடம் ’மற்ற போட்டியாளர்களை அழிப்பதுதான் இந்த கேம். மனிதத்தன்மையுடன் விளையாண்டால் வாரவாரம் எவிக்சனே இருக்காது’ என்று பதிலளித்தார் பிரதீப். பிரதீப்பின் இந்த வாதம் முற்றிலும் சரியே. உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் பண்புகளை 30 நாட்கள் வெளியே இருந்து பார்த்துவிட்டு வந்தும், அர்ச்சனா முதல்நாளிலேயே தாக்குபிடிக்க முடியாமல் கண்ணீர் வடிப்பதை ஏற்றுகொள்ளமுடியவில்லை. உள்ளே இருப்பவர்களை கதிகலங்க வைக்க பிக்பாஸால் அனுப்பப்பட்ட போட்டியாளர் ஒருவர், பழைய போட்டியாளர்களின் உத்தியை கையாள முடியாமல் திணறுவது நகைமுரண்.

வீட்டுப்பணிக்கான டாஸ்க்கிலும் கூட பிக்பாஸ் வீட்டாரை ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் புதிய போட்டியாளர்களால் சமாளிக்க முடியவில்லை. இரண்டு டாஸ்க்கிலுமே பிக்பாஸ் வீடே வெற்றிபெற்றது. இந்த டாஸ்க்கை அடுத்து ஸ்ட்ராட்டஜி என்ற பெயரில் அக்‌ஷயாவிடம் மலினமான அட்வைஸ் ஒன்றை செய்து கொண்டிருந்தார் பிரதீப். அதாவது புதிதாக வந்த ஆர்ஜே ப்ராவோவிடம் அக்‌ஷயா வலியச் சென்று பேசி காதல் வலையில் விழச் செய்து டார்கெட் செய்ய வேண்டுமாம். அதை அப்படியே செவிமடுத்த அக்‌ஷயாவும் ப்ராவோவிடம் சென்று பேசிவிட்டு அதைப்பற்றி பிரதீப்பிடம் சொல்லியது ரசிக்கத்தக்கதாக இல்லை. உண்மையில் போட்டி என்ற பெயரில் இதுபோன்ற ‘சீப்’ ஆன நடவடிக்கையில் இதற்கு முந்தைய சீசன் போட்டியாளர்கள் ஈடுபட்டதில்லை என்றே தோன்றுகிறது. தன்னுடைய ஒவ்வொரு அசைவையும் ஸ்ட்ராட்டஜி என்றும், கன்டென்ட் என்றும் யோசித்து யோசித்து செய்வது வரை சரிதான். ஆனால் மற்ற போட்டியாளர்களை தூண்டிவிட்டு அவர்களின் உணர்வுகளோடு விளையாடும் மோசமான செயலில் பிரதீப் ஈடுபடுவது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து விஷ்ணு பிற போட்டியாளர்களை தனியாக அழைத்து எச்சரித்தார்.

பிக்பாஸால் அடுத்து கொடுக்கப்பட்ட பெல் டாஸ்க் இதுவரையிலான போட்டிகளில் சற்று சுவாரஸ்யமாக இருந்தது. தலையில் மாட்டியிருக்கும் மணியிலிருந்து சத்தம் வந்தால் அந்த போட்டியாளர் டாஸ்க்கிலிருந்து வெளியேற்றப்படுவார். அதன்படி முதலில் மாயா போட்டியலிருந்து வெளியேறி மற்றவர்களின் ஆட்டத்தை கலைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அடுத்தடுத்து நிக்சன், கூல் சுரேஷ் என்று ஒவ்வொருவராக வெளியேறிய நிலையில், அடுத்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களாக பூர்ணிமா, மணி, ரவீனா, விஷ்ணு, பிரதீப், கானா பாலா என்று வரிசையாக பெயர்களை கூல் சுரேஷ் கூறினார். இதில் பிரதீப் தன்னுடைய தலையில் மணி ஆடவே இல்லை என்று வாதிடவே அது வாக்குவாதமாக மாறியது. இதனால் ஆவேசமான பிரதீப் தகாத வார்த்தை ஒன்றை சொல்லி கூல் சுரேஷை திட்டினார்.

வழக்கமாக அடுத்தவர்கள் எவ்வளவு கலாய்த்தாலும் திட்டினாலும் கண்டுகொள்ளாமல் சென்றுகொண்டிருந்த கூல் சுரேஷ், தன்னை பிரதீப் அப்படி திட்டியதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆரம்பத்தில் காமெடியாக வீட்டை விட்டு வெளியேறப்போவதாக கூறி தனது மூட்டை முடிச்சுகளை எடுக்கச் சென்றவர், சிறிது நேரத்தில் உண்மையிலேயே பயங்கர சூடாகி சத்தம் போடத் தொடங்கிவிட்டார். ஆனாலும் தன் மீதான தவறை உணராத பிரதீப் மீண்டும் மீண்டும் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி கூல் சுரேஷை சாடுவதிலேயே குறியாக இருந்தார். தட்டிக்கேட்ட நிக்சனையும் நெஞ்சில் கைவைத்து தள்ளினார். வாரக் கடைசியில் தான் எழுந்தாலே ஆடியன்ஸ் போடும் காட்டுக் கூச்சல்தான் அவரை இப்படியான விஷயங்களை செய்யத் தூண்டுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. தான் என்ன செய்தாலும், என்ன பேசினாலும் வெளியே ஆதரவு இருக்கிறது என்ற எண்ணம் பிரதீப்பின் மனதில் வலுவாக ஊடுருவியுள்ளது. இதற்கு முந்தைய சீசன்களில் உண்மையிலேயே பார்வையாளர்களின் ஆதரவை பெற்ற போட்டியாளர்களுக்கு கூட வாரக் கடைசியில் இப்படியான கைதட்டல்களும், ஆரவாரங்களும் எழாத நிலையில், எந்தவித விதிமுறைகளுக்கும் கட்டுப்படாமல், சக போட்டியாளர்களின் உணர்வுகளுடன் விளையாடும் பிரதீப் போன்றவருக்கும் ஒவ்வொரு வாரமும் கிடைக்கும் வரவேற்பு ஆச்சர்யத்துடன் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x