Published : 26 Oct 2023 04:24 PM
Last Updated : 26 Oct 2023 04:24 PM
இரண்டாவது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்த பிரதமர் மொரார்ஜி தேசாய், 'நாட்டின் பொருளாதார நிலைமை ஊக்கம் தருவதாய் இருக்கிறது; வெளிநாடுகளுடன் உறவு மேம்பட்டு இருக்கிறது; தனிநபரின் சுதந்திரம் பாதுகாக்கப் பட்டுள்ளது' என்று நேர்மறைச் செய்திகளாய் வழங்கினார். ஓர் உண்மையான அப்பழுக்கற்ற காந்தியவாதி கூறியதால் இதற்கு, தனி நம்பகத்தன்மை கிட்டியது. உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உயர்ந்து நிற்கிற இந்தத் தருணத்தில் மொரார்ஜி தேசாய் என்ற தன்னலமற்ற தலைவரின் தீர்க்க தரிசனம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
1978 ஆகஸ்ட் 15 - டெல்லி செங்கோட்டையில் இருந்து பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் ஆற்றிய சுதந்திர தின உரை இதோ: “ஆட்சி நடத்தும்படி ஜனதா கட்சிக்கு மக்கள் வாக்களித்து 16 மாதங்கள் ஆயிற்று. கடந்த ஆண்டு இதே நாளில், நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்துப் பேசினேன். கடந்த ஓராண்டில் உள்நாட்டிலும் வெளியிலும் நிறைய நடந்துள்ளன. தனிநபரின், அச்சு ஊடகத்தின், நீதித் துறையின் சுதந்திரத்தை மீட்டெடுப்பது முதல் பணியாக இருந்தது. இதைச் செய்து விட்டோம். இந்த சுதந்திரம் மீட்டெடுக்கப்பட்டது. இனியொரு முறை இந்த சுதந்திரம் பறிக்கப்படாது என்று நம்புகிறேன். நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு மக்கள், அச்சமின்மை வலிமை அர்ப்பணிப்பு உணர்வுடன் திகழ வேண்டும்.
பழங்காலத் தீமைகளை அழிக்க நாம் கடுமையாக உழைக்க வேண்டும்; கடந்த காலப் பெருமையை, ஆனந்தத்தை மீண்டும் பெற வேண்டும்; உலக அரங்கில் இந்தியாவுக்கான பெருமையைத் தக்க வைக்க வேண்டும். பலவீனம் உள்ளே நுழைய அதிக நேரம் ஆவதில்லை, ஆனால் அதனை நீக்குவதற்கு நீண்ட காலம் பிடிக்கிறது. இது எனது அனுபவம். தீமைகளை எத்தனை விரைவாக இயலுமோ அத்தனை விரைவாகக் களைய வேண்டும். நாம் விரும்பும் இந்த இலக்கை அடையும் வரை நாம் ஓய்வு கொள்ளல் ஆகாது. நாம் அனைவரும் இணைந்து நடைபோட வேண்டும். அப்போதுதான் நமது பணியை நிறைவேற்ற முடியும்.
பல வகைகளில் நாம் முன்னேறி இருக்கிறோம். ஆனாலும், விலைவாசி ஏறி வருகிறது, வேலை கிடைக்கவில்லை, சட்டம் ஒழுங்கு மோசமாகி இருக்கிறது, அமைதியின்மை பரவுகிறது போன்ற புகார்கள் சத்தமாக ஒலிக்கின்றன. எனது அனுபவத்தில் சொல்கிறேன் - இந்தப் புகார் குரல்களை எழுப்புவோர், நிலைமையை மேம்படுத்த எதுவும் செய்வதில்லை; மாறாக நிலைமையை மேலும் மோசமாக்கவே உதவுகின்றனர். இதுகுறித்து சர்ச்சை எழுப்ப நான் விரும்பவில்லை. அது நமது பணியை மேலும் கடினமாக்கி விடும். ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. விலைவாசி நிலைமை மோசமாகி விடவில்லை. தொடர்ந்து பத்து ஆண்டுகளாக விலைவாசி ஏறிக் கொண்டிருந்தது. இப்போது இல்லை. சில பொருட்களின் விலை குறைந்து இருக்கிறது என்பதும் தெளிவாகத் தெரிகிறது. விலைவாசி இன்னமும் குறைய வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், எல்லாப் பொருட்களின் விலையும் குறைந்தால் அன்றி, விளைவிப்போருக்கு, (ஓரளவுக்கு மேல்) விலைக் குறைப்பு பயன் தராது. எல்லாப் பொருட்களின் விலைகளும் குறைய வேண்டும் என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும். இந்தப் பணியில் நாம் முனைந்து ஈடுபட்டுள்ளோம்.
கடந்த 10 ஆண்டுகளில் நமது பொருளாதாரம் வளர்ச்சி இரண்டரை சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு இது 5 சதவீதம். இந்த வளர்ச்சி எல்லாருக்கும் நன்மை தராத வரை, இந்த வளர்ச்சியைப் பற்றிப் பெருமைப்படுவதற்கு இல்லை. தடைகளை மீறி, வளர்ச்சி பெற்று வருகிறோம் என்பது உண்மை. இரண்டு ஆண்டுகளாக மக்களின் சிந்தனை அடைபட்டுக் கிடந்தது. இப்போது சுதந்திரம் கிடைத்ததும் அசாதாரண செயலில் சிலர் ஈடுபட முனைவது இயற்கையே. சில தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தங்கள் நடைபெறுகின்றன. இவற்றுக்கு ஒரு தீர்வு காண வேண்டும். எந்தத் தீர்வு காண்பதாக இருந்தாலும், நாட்டு நலனை முன்னிறுத்தியதாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட சிலரின் நன்மைக்கு, மற்ற பிறர் விலை கொடுப்பதாய் இருக்கக் கூடாது. இது குறித்து மக்களிடையே புரிதல் ஏற்பட வேண்டும். இந்த வழியில் தான் நான் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும்.
சில இடங்களில் மக்கள் ரவுடித்தனத்தில் ஈடுபட்டு, அரசின் மீது குற்றம் சுமத்துகிறார்கள். இதன் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உண்மைதான். அரசு இதைச் செய்ய முயல்கிறது. நாம் எது செய்தாலும் அது சட்டப்படி இருக்க வேண்டும். அதிகாரத்தைக் காட்டுவதாக இருக்கக் கூடாது. இது நல்ல விளைவுகளைத் தந்து வருகிறது. பல துறைகளிலும் வளர்ச்சி பெற்று வருகிறோம். ஆனால் இதன் பயன்களை மக்கள், தாமே உணரும் வரை மனநிறைவு கொள்ள மாட்டார்கள்.
இப்போதும் பழைய தீமைகள் அவ்வப்போது தலை தூக்குகின்றன, பிரச்சினைகள் ஏற்படுத்துகின்றன. தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்பது நமக்கெல்லாம் மிகப்பெரிய அவமானம். இது இந்த நாட்டுக்கே இகழ்ச்சி. நாம் அனைவரும் இணைந்து உழைத்தால் மட்டுமே நூற்றாண்டுகளாக இந்த சமுதாயத்தில் நிலவும் அறியாமையை அகற்ற முடியும். இந்த விஷயத்தில் தவறான செயல்களில் ஈடுபடுவோர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். நேற்றைக்கு முதல்நாள் என் வீட்டின் முன்னால் நடந்த சம்பவம் பற்றி கேட்டிருப்பீர்கள். இதைப் பற்றி சரியான புரிதல் இல்லாதவரை தாக்குதல்கள் தொடரத்தான் செய்யும். அவர்கள் என்னைக் காண வந்தார்கள். அமைதியுடன் நடந்து கொள்வோம் என்று காவல்துறைக்கு உறுதி அளித்தார்கள்.
தொடக்கத்தில் அவர்கள் ஓரளவுக்கு அமைதியாகவே இருந்தார்கள். ஆறு - ஏழு பேர் வந்திருந்தார்கள். அவர்கள் சொன்னார்கள் - தலித்துகளுக்கு வழங்கப்பட்ட நிலம், மேய்ச்சல் நிலம் ஆகும். அதை திரும்ப பெற்று மீண்டும் மேய்ச்சல் நிலமாக மாற்ற வேண்டும். இதற்கு நான் உடன்படவில்லை. நிலம் வழங்கியதால் யாருக்கும் எந்த இன்னலும் ஏற்படவில்லை. ஆனால் வந்திருந்த விவசாயிகள் அந்த இடம் அவர்களுக்கு வழங்கக் கூடாது என்று வலியுறுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து சில நாட்களில் பக்கத்து கிராமங்களில் இருந்து சில ஆயிரம் பேர் சேர்ந்து வந்து தொல்லை கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். அந்தத் தொல்லைதான் நேற்று முதல் நாள் நிகழ்ந்தது.
நான் அவர்களிடம் மீண்டும் சொன்னேன் - அந்த நிலம் தலித்துகளுக்கு வழங்கப்பட்டு விட்டது. அது அவர்களிடமே இருக்கும். அதை யாராலும் திரும்பப் பெற முடியாது. இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். தலித்களுக்கு மட்டும் என்ன தனிச்சிறப்பு என்று என்னிடம் கேட்டார்கள். தலித்துகள் அந்தணர்கள் ராஜபுத்திரர்கள் மற்றும் பிற சமூகத்தில் உள்ள ஏழைகளுக்கும் இந்தச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்றார்கள். ஒரு பாவமும் செய்யாத இவர்கள், பல நூற்றாண்டுகளாக இன்னல் அனுபவித்தவர்கள். அவர்களுக்கு என்று அரசியல் சட்டம் சிறப்பு வசதிகள் செய்து தந்துள்ளது. இவர்களை மேம்படுத்துவது சமுதாயத்தின் பொறுப்பு. நம் அனைவரின் பொறுப்பு. பலருடன் சமமாக வாழ்வதற்கு இத்தகைய சிறப்பு வசதிகள் தேவை என்பதால் சாசனம் இதனை வலியுறுத்துகிறது என்றேன்.
அப்படியானால் சாசனம், திருத்தப்பட வேண்டும் என்றார்கள். 'நீங்கள் எப்படி இதைச் சொல்லலாம்?' என்று கேட்டேன். அவர்கள் மிகுந்த கோபம் கொண்டார்கள். இதை நாங்கள் செய்தே தீருவோம் என்றார்கள். 'இதுதான் உங்கள் முடிவு என்றால், தொல்லை உண்டாக்கவே செய்வோம் என்று நீங்கள் தீர்மானித்தால், உங்களிடம் நான் பேசப்போவதில்லை' என்று கூறினேன். அவர் வெளியே சென்று விட்டனர். என்ன செய்தனர்..? அராஜகமாக செயல்படத் தொடங்கினார்.
அவர்கள் கையில் தடிகள் இருந்தன. கற்களை வீசினார்கள். தெருவிளக்குகளை உடைத்தார்கள். வன்முறையில் ஈடுபட்டார்கள். யார் பேச்சையும் கேட்க மாட்டோம், மற்றவர்களுக்கு தொல்லை தருவோம் என்று கூறி தவறான செயல்களில் ஈடுபடும் கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்துவதைத் தவிர வேறு வழி இல்லாமல் போய்விட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். துப்பாக்கி சூடு நடத்துவதில் யாருக்கும் மகிழ்ச்சி இல்லை. இது எல்லாருக்கும் வலியைத் தருகிறது. வருத்தம் தருகிறது. ஆனால் இத்தகைய தகாத செயல்கள் ஈடுபடுகிற தீய சக்திகளுக்குக் கண்டனம் தெரிவிப்போம்; கடுமையான நடவடிக்கை எடுக்கும் அரசுக்கு ஆதரவாக நிற்போம் என்று மக்கள் கூற வேண்டும். மக்கள் தெளிவாகத் தம்மை வெளிக்காட்டிக் கொள்ளாத வரை இத்தகைய தீய செயல்கள் தொடரவே செய்யும். இந்தச் சூழலை நாம் எதிர் கொள்ள வேண்டும். மக்கள் எங்களை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். மக்கள் எங்களை ஆதரிக்கிறார்கள். நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு அச்சமின்றி ஒழுங்குடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.
நாம் இப்போது மிக முக்கியமான செயலில் ஈடுபட்டுள்ளோம். இதை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்பதும் முக்கியம். ஆகையால், (அரசின்) நிர்வாகத் திறமையை மேம்படுத்துவதில் முனைந்து இருக்கிறோம். நம்முடைய நிர்வாகத்தைப் போல வழி தவறிய நிர்வாகத்துக்கு உலகில் வேறு எங்கும் உதாரணம் இல்லை. இதற்கு நான் ஏன் நிர்வாகத்தில் குற்றம் காண வேண்டும்? நிர்வாகத்தை நடத்தியவர்களின் குற்றம் அது. அதிகாரத்தில் இருந்தவர்கள் ஆணையிட்டார்கள். பணியில் இருந்தவர்கள் தவறு செய்யாமல் இருக்கவோ, பதவியை ராஜினாமா செய்யவோ (வலிமையும்) வசதியும் துணிச்சலும் அற்றவர்களாக இருந்தனர். இந்த நாட்டில் வேலையைத் துறத்தல், அத்தனை சாதாரண காரியம் அல்ல. ஒரு வேலையை விட்டால் உடனே அடுத்த வேலையில் சேர்ந்து கொள்ளலாம் என்கிற நிலைக்கு நாம் இன்னும் வரவில்லை.
நிர்வாக இயந்திரம் தவறாக பயன்படுத்தப்படுவதை எதிர்க்கும் சக்தியை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அச்சமின்றி பணிபுரிகிற வல்லமை கொண்ட நிர்வாகம், நமக்கு வேண்டும். இதனை நாம் இப்போது செய்து கொண்டிருக்கிறோம். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. நமது முயற்சிகளுக்கு நல்ல பலன் வந்து கொண்டிருக்கிறது. இந்த திசையில் இன்னும் நாம் நிறைய செய்ய வேண்டி உள்ளது. முழுத் திறமை பெற்ற நிர்வாகம், ஆணை இடுவதை விடவும், மக்களுக்கு சேவையாற்றுகிற நிர்வாகம் இருப்பதாய் மக்கள் மனநிறைவு பெறுகிற வரை இந்த நடவடிக்கை தொடரும். இதனை நிறைவேற்றுவதில் எல்லோரின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.
இந்த நாட்டில் பல இடையூறுகள் ஏற்படுகின்றன. சில இடங்களில் இந்துக்களும் முஸ்லிம்களும் சண்டை இட்டுக் கொள்கிறார்கள். இதுபோன்று நிகழவே நிகழாது என்பதை உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற நாட்டில் எங்கும் நடவாமல் இருந்தால் மட்டுமே நாம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். பல நூற்றாண்டுகளாக மதச்சார்பின்மை கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரே நாடு நம்முடையது. பிரிட்டிஷார் காலத்தில் இந்தக் கருத்துரு குறுகிப் போனது. தவறான பழக்கங்களை மேற்கொள்ள நாம் தூண்டப் பட்டோம். அவை இன்றும் தொடர்கின்றன.
இந்த வழக்கங்களை அகற்ற நாம் கூட்டாக ஒத்துழைத்து உழைக்க வேண்டும். சிலர் இந்த நாட்டில் வன்முறைச் சூழலை உருவாக்க நினைக்கிறார்கள். இந்த சூழலை மாற்றும் வழியைக் காண, நான் எதிர்க்கட்சித் தலைவர்களோடு அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்துகிறேன். எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த பிரச்சினை குறித்து ஆழமாக சிந்திக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் அவர்களும் அரசியல் நிர்பந்தம் காரணமாக வேறு வழி தெரியாதவர்களாக இருக்கிறார்கள். இதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் நாம் நமது பணியில் முன்னேற வேண்டும். ஜனநாயக நடைமுறை சிறப்பாகச் செயல்பட, ஆளும் கட்சியைப் போன்றே எதிர்க்கட்சியும் மிக முக்கியம். அதனால்தான் நாம் எதிர்க்கட்சி பலவீனம் ஆகக் கூடாது என்று நினைக்கிறோம். எதிர்க்கட்சிகள் வலுவாக இருக்க வேண்டும். நாட்டு நலனை முன்னிறுத்தி செயல்பட வேண்டும். அவர்களுக்கும் இந்த நினைவு இருக்கும். பழைய பழக்கங்களை விடுவது சற்று கடினமாக இருக்கும். உடனே நடைபெறாது. நாம் எடுத்துள்ள நடவடிக்கைகள் வெற்றி பெறும் என்று திடமாக நம்புகிறேன். இதற்கு எதிர்க்கட்சிகள் அழித்து வரும் ஒத்துழைப்புக்கு நான் நன்றியுடையவன் ஆகிறேன்.
வெளிநாடுகளில், அண்டை நாடுகளில். நம்மைப் பற்றிய நல்ல அபிப்ராயம் இருக்கிறது. நம்மைப் பற்றிய அபிப்பிராயம் உயர்ந்து வருகிறது. ஆனால் சிலர் இதற்கு மாறாகப் பேசுகிறார்கள். இதற்கு அவர்கள் வெட்கப்படவில்லை. இந்த அரசாங்கம், ஜனதா அரசாங்கம், வெளிநாட்டுக்கு இந்த நாட்டை விற்கிறார்கள் என்று எப்படி சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. ஏற்கனவே அதைச் செய்தவர்கள் தான் இன்று நம்மை இப்படிச் சொல்கிறார்கள். எந்த முகத்துடன் அவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. சமத்துவத்தின் அடிப்படையில், நமது நாடு பற்றிய அபிப்பிராயம் எல்லா இடங்களிலும் உயர்ந்து இருக்கிறது. எந்த நாட்டிடமும் உதவி கேட்டு நான் செல்லவில்லை. ராஜ்ய உறவுகளை வலுப்படுத்தவே செல்கிறேன்.
நான் சென்ற எந்த நாட்டிலும் எந்த உதவியும் நான் கோரவில்லை. நான் ஏன் யாருடைய உதவியும் கேட்க வேண்டும்? நம்முடைய காலில் நாம் நின்றால் மட்டுமே நம்மைப் பற்றிய அபிப்பிராயம், நமது கவுரவம் உயரும். ஏதேனும் ஒரு நட்பு நாடு, உதவி செய்ய முன் வந்தால் ஏற்றுக் கொள்வோம். ஆனால் நாமாக சென்று உதவி கேட்கும் நிலை நிச்சயம் ஏற்படாது. நாம் பிற நாடுகளிடம் இருந்து உதவி பெறுகிற போதே, பிற நாடுகளுக்கு உதவ நாமும் தயாராக இருக்க வேண்டும். அதனால்தான் மலேசியா நாடுகளுக்கு ஒத்துழைப்பு தருகிறோம். இதனால் தான், வங்காள தேசம், நேபாளம், பூட்டான், ஸ்ரீலங்கா, பர்மா, ஆப்கானிஸ்தான், ஈரான் உள்ளிட்ட அணிசாரா நாடுகளுடன் நமது நட்பு வலுவாக இருக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளில் நமது நட்புறவு நன்கு மேம்பட்டு இருக்கிறது. இதனை மேலும் வலுவாக்கி முழு நட்பு நாடுகளாக நிலைக்கச் செய்ய வேண்டும். இதை நம்மால் நிறைவேற்ற முடியும் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு எந்தத் தடையும் இல்லாமல் சுதந்திரமாக சென்று வரலாம்; சுதந்திரமாக வணிகம் செய்யலாம் என்கிற நிலை ஏற்படுத்தப்படும். இதை செய்ய வேண்டியது நமது கடமை. இந்த திசையில் உலக நாடுகள் நமக்குத் தரும் ஒத்துழைப்பு, நமக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. பாகிஸ்தான் உடன் நமது நட்புறவு மேம்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சீனாவுடன் நட்புறவு மேம்படவும் முயன்று வருகிறோம். அவர்களும் இதற்கு விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இதை நாம் வரவேற்கிறோம். அந்த நாட்டுடன் நமது உறவு நன்கு மேம்படும் என்று நம்புகிறோம்.
இந்த உறுதியை நாம் பகிர்ந்து கொள்வோம். நம்பிக்கையுடன் முன்னேறுவோம். அசவுகர்யம் எது இருந்தாலும் அதனை அகற்றி விடுவோம். நாம் செல்லும் வழியில் உள்ள ஒழுங்கு, தூய்மையில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இதைத்தான் காந்திஜி நமக்குக் கற்றுத் தந்தார். இது விஷயத்தில் நான் யாருடனும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். இதற்காக நான் எந்த விலையும் கொடுக்கத் தயார்.
ஒழுங்கு முறையில் தூய்மையான பாதையில் நகர்ந்தால் மட்டுமே இந்த நாடு வலிமை பெறும். இதைத்தான் ஜனதா கட்சி செய்து வருகிறது. ஜனதா கட்சி வலு இழந்து வருவதாகச் சிலர் சொல்கிறார்கள். அது தவறு. இப்படி சொல்பவர்கள் நாம் பலவீனமானவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இவற்றில் இருந்து ஜல்சா கட்சி மேலும் வலிமையுடன் வெளிப்படும் என்று நம்புகிறேன். இந்தப் பணியில் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் ஆசிகளையும் வேண்டுகிறேன். ஜெய்ஹிந்த்”!
(தொடர்வோம்)
> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 31 - ‘அச்சம் விலகட்டும்... தீண்டாமை ஒழியட்டும்’ | 1977
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT