Published : 20 Oct 2023 06:14 PM
Last Updated : 20 Oct 2023 06:14 PM
இந்திய சுதந்திரத்தின் 28 வது ஆண்டு. 1975 ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் இந்திரா காந்தி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து நாட்டு மக்களிடம் ஆற்றிய உரை - இதோ: சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் நாம் எல்லோரும் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தக் கூடியிருக்கிறோம். ஆனால் இந்த ஆண்டு ஒரு புதுமை - இங்கே இருக்கும் நீங்கள் மட்டுமல்ல; 6 மாநிலங்களில் 2,400 கிராமங்களில் இருந்து மக்கள் (அங்கிருந்தவாறே) நம்மோடு இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்கள். இங்கே என்ன நடக்கிறது என்பதை அவர்களால் கேட்கவும் பார்க்கவும் முடியும்.
இந்திய வரலாற்றில் உலக வரலாற்றில் ஒரு புதுமை நிகழ்கிறது. மாநகரங்களைக் கூட இன்னமும் தொலைக்காட்சி எட்டாத போது, செயற்கைக் கோள் மூலம் கிராமங்களுக்கு நிகழ்ச்சிகள் வழங்குகிறோம். வளர்ச்சியை நோக்கிய இந்த முக்கிய நகர்வுக்கு நாம் நம்முடைய இளைய விஞ்ஞானிகளுக்கு நன்றி. இதேபோன்று இந்த ஆண்டு நமது விஞ்ஞானிகள் விண்வெளியில் செயற்கைக்கோளை செலுத்தி மற்றொரு பெரிய சாதனை நிகழ்த்தி இருக்கிறார்கள். நீங்கள் எல்லோரும்‘ஆர்யபட்டா’ செயற்கைக்கோள் பற்றிக் கேட்டு இருப்பீர்கள். இவையெல்லாம் நமது நாட்டு வளர்ச்சியின் அடையாளங்கள்.
இன்று இங்கே கொடி ஏற்றி இருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் இதைச் செய்கிறோம். சுதந்திரத்துக்கு முன்பு இருந்தே, செங்கோட்டையில் விடுதலை இந்தியாவின் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்பது நம்முடைய வேட்கை. எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் ஒரு முறை சொன்னார்: 'இது என்ன கொடி..? இது ஒரு துண்டுத் துணி'. ஆனால் இதற்காகத்தான் ஆயிரக்கணக்கானோர் உயிர் ஈந்தனர். இந்த துண்டுத் துணிக்காக தான் தீரமிக்க நமது வீரர்கள் இமயத்தைத் தம் ரத்தத்தால் எழுதினார்கள். இந்த துண்டுத் துணி - இந்திய ஒற்றுமையின், வலிமையின் அடையாளம். இதனால்தான் இந்த கொடியை நாம் மதிப்பு மிக்கதாய் கருதுகிறோம். இதனை ஒவ்வொரு இந்தியரும் நினைவில் கொள்ள வேண்டும். இது துண்டுத் துணிதான். ஆனால் நம் உயிரை விடவும் விலை மதிப்பற்றது.
தேசியக்கொடி போலவே நமது சுதந்திரத்தை பற்றியும் தவறான கருத்து உருவாக்கப்பட்டது. உடனடியாக (நினைத்த மாத்திரத்தில்) வறுமையை ஒழிக்க சுதந்திரம் என்பது மேஜிக் அல்ல. பல நூற்றாண்டுகளாக தேங்கிக் கிடப்பதை நீக்கிப் புதிய கதவுகளைத் திறக்கிறது. சுதந்திரத்தின் பொருள் இதுதான். நாம் நினைத்ததை எல்லாம் செய்வதற்கான உரிமம் அல்ல இது. உண்மையில் நமது கடமையைச் செய்வதற்கு இது ஒரு வாய்ப்பு தருகிறது.
சுதந்திரம் என்றால் இந்தியர்களின் அரசு என்று மட்டுமே பொருள் அல்ல. துணிச்சலுடன் தன்னிச்சையாக முடிவு எடுக்கும் ஆற்றல் கொண்டது என்று பொருள். நாட்டு மக்களின் நலனுக்காக உலக அமைதிக்காக சுயமாக சிந்திக்கும் அரசு என்றும் பொருள். இவையெல்லாம் சேர்ந்துதான் சுதந்திரம் என்று பொருள்.
நம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் அழிப்பதற்காக, நம்முடைய உயரிய கொள்கைகளை மீறிச் செயல்படுவதற்காக நாம் விடுதலை பெறவில்லை. பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்தி விடவும், நமது பிற்போக்குத் தனத்துக்குக் காரணமான நிலச்சுவான்தார் முறை, சாதியம், மூடநம்பிக்கைகள் போன்ற தீமைகளை எதிர்த்து அழிக்கவுமே விடுதலை பெற்றோம். இவற்றை நீக்கி நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு உயர்த்தவே நமது உன்னதத் தலைவர்கள் நம்மை வழிநடத்தினார்கள்; சுதந்திரம் பெற்றுத் தந்தார்கள்.
விடுதலை பெற்ற பிறகு, நாட்டில் எவ்வளவோ நடந்து விட்டது. நிறைய வளர்ச்சி கண்டோம். ஆர்யபட்டா மற்றும் பல தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களைக் குறிப்பிடுகிறேன். மேலும், விவசாயம் தொழில்துறை கல்வி சுகாதாரம் உட்பட ஒவ்வொரு திசையிலும் மாபெரும் வளர்ச்சி கண்டோம். இந்த வளர்ச்சியின் பயன்கள் உடனடியாக (இன்னமும்) மக்களைச் சென்று சேரவில்லை. முதலில், வலிமையான அடித்தளம் இட வேண்டும். இதைத்தான் நாம் செய்திருக்கிறோம். நாம் பல இன்னல்களை சந்தித்து இருக்கிறோம். இங்குள்ள நீங்களும் வெகு தூரத்தில் ஏதோ கிராமத்தில் இருந்து பங்கேற்கும், இந்த உரையைக் கேட்கும் பல லட்சம் பேரும் இத்தகைய இன்னல்களைத் துணிச்சலுடன் சந்தித்துள்ளீர்கள்.
நாம் ஜனநாயகப் பாதையைத் தேர்ந்தெடுத்தோம். ஜனநாயகம் என்றால் என்ன பொருள்? சுதந்திரம் என்பது போலவே ஜனநாயகம் - ஒவ்வொருவர் தனக்கான பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். தங்களுடைய கொள்கைகள், சிந்தனைகள், எதிர்ப்புக் குரல் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்துப் பின்பற்றலாம். ஆனால் சில விதிமுறைகள் இருக்க வேண்டும். பிறருக்குத் துன்பம் விளைவிக்கிற, நாட்டை பலவீனப் படுத்துகிற, நமது கொள்கைகளை அயலார் மாற்றி அமைக்க வழி கோலும் பாதையாக அது இருக்க முடியாது. சுயமாக முடிவெடுக்கும் ஆற்றல் பற்றி சற்று முன் கூறினேன். சில ஆண்டுகளாக குறிப்பாக தற்போது சில புரளிகள் வலம் வருகின்றன. நம்முடைய கொள்கைகள் எந்த குறிப்பிட்ட அதிகார மையத்தின் கொள்கையும் அல்ல என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகின் எந்த ஒரு அதிகார மையத்தோடும் நாம் சேரவில்லை. இந்தியா நலனை மட்டுமே முன்வைத்து முன்னேறுகிறோம். நமது உள்நாட்டு நடவடிக்கையில் எந்த ஒரு நாடும் தலையிட நாம் எப்போதும் அனுமதிப்பதில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அப்படி நடக்க விட்டதில்லை; இனியும் நடக்க விடமாட்டோம். மற்ற நாடுகளுடன் நமக்கு நல்லுறவு தேவையில்லை என்று இதற்குப் பொருள் அல்ல. எல்லாரோடும், குறிப்பாக அண்டை நாடுகளுடன் நமக்கு நல்லுறவும் ஒத்துழைப்பும் வேண்டும் என்று விரும்புகிறோம்.
நமது அண்டை நாடுகள் அல்லாத பிறரோடும் நல்லுறவுக்கு முயற்சிக்கிறோம். ஏனெனில் இன்றைய உலகில் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து எல்லோரும் இணைந்து நகர வேண்டும். அவ்வாறு செய்யாததால் உலகில் பதட்டம் அதிகரித்து எதிர்பார்த்த அளவு வளர்ச்சி பெற முடியாமல் போகிறது; புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளின் நன்மைகள் கோடிக்கணக்கான சாமானிய மக்களை சென்று சேர முடியாமல் போகிறது.
இத்தனை பதட்டங்கள் சச்சரவுகள் தவறான புரிதல்களுக்கு நடுவில், நமது கொள்கை மட்டுமே சச்சரவுகள், தவறான புரிதல்களை நீக்கி போர் அல்லாது பேச்சுவார்த்தை மூலம் சமரசம் காண வழி காட்டுகிறது. உள்நாட்டிலும் நாம் இதே கொள்கையைப் பின்பற்றுகிறோம். ஆனால் துரதிஷ்டவசமாக சிலர் வேறு பாதையை விரும்புகின்றனர். இந்தப் பாதை எந்த ஒரு குறிப்பிட்ட கொள்கையையும் காட்டவில்லை. காரணம் வெவ்வேறு கொள்கை உடையவர்கள் ஒன்று சேர்ந்துள்ளார்கள். நாட்டு நலன் அல்லது அயலுறவுக் கொள்கை போன்ற எதிலும் இவர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துப் போவதில்லை. ஆனாலும் இவர்கள் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள். எனவே ஏதோ கொள்கைக்காகத்தான் இவர்கள் இணைந்து போராடத் தொடங்கி இருக்கிறார்கள் என்று கூற முடியாது.
இதுபோன்ற தீமைகள் பரவுவதை நாம் ஏற்கனவே கண்டிருக்கிறோம். இவை குறைவதற்கு பதிலாக அதிகரித்து உள்ளன. இது ஏன் நடந்தது? ஒழுங்கீனம் ஏன் பரவியது? பள்ளிகள் கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் வெளியேறத் தூண்டப்பட்டனர். தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் வேலை செய்யாது இருக்க வேண்டப்பட்டனர். நிர்வாகத்தில் இருந்தாலும் தனியாகத் தொழில் நடத்தினாலும், ஒழுங்கீனம் உள்ளே புக அனுமதிக்கப்பட்டது. ஒவ்வொருவரும் இந்த சூழ்நிலையைத் தனக்கு ஆதாயமாக மாற்றி நலன் பெற முயன்றார்கள். நாட்டை மறந்தார்கள். நாம் செல்ல வேண்டிய திசை, நமது திட்டங்கள், நாம் செல்ல வேண்டிய நீண்ட பயணம், நாம் சந்தித்து வெற்றி கண்ட இன்னல்கள், நம்மை எதிர்நோக்கி அபாயங்கள்... எல்லாவற்றையும் மறந்தார்கள்.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறோம். இதனால், நம்முடைய வளர்ச்சியை மீறி, கடந்த ஆண்டு பொருளாதார இன்னல்கள் ஏற்பட்டன. பணவீக்கம், வேலையின்மை, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஆகியன இருந்தன. இது நமது நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் நிலவியது. நாம் மனம் தளரவில்லை. துணிச்சலுடன் நிலைமையை எதிர்கொண்டோம். பதுக்கல் கருப்புச் சந்தை கடத்தல் ஊழல் ஆகியவற்றுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தோம்.
இந்த நடவடிக்கைகள் நமது எதிரிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. மாறாக அவர்களைக் கோபப்படுத்தியது. ஆகையால் அவர்கள் பிஹார், குஜராத் போன்று நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டங்களைத் தொடங்கி விட்டனர். எதிர்க்கட்சிகள் என்பது பல கட்சிகளை உள்ளடக்கியது. இவர்களில் பலருக்கு ஜனநாயகத்திலும் அஹிம்சையிலும் நம்பிக்கை இல்லை. இத்தகப் போராட்டங்களை தொடங்குவதற்கு அனுமதி அளித்து இருந்தால் நாடு என்னவாகி இருக்கும் என்று உங்களால் யூகிக்க முடியும்.
இது மக்களின் துன்பங்களை மேலும் அதிகரித்து இருக்காதா? நாட்டை பலவீனப்படுத்தி இருக்காதா? மாறிவரும் உலகில் ஆபத்துகள் நிறைந்த சூழலில் தமது வளர்ச்சிக்காக மக்கள் கவலை கொண்டுள்ள நிலையில் மேற்சொன்ன விளைவுகளே ஏற்பட்டிருக்கும். நம்முடைய குழந்தைகள் மீதும், நம் ஒவ்வொருவரும் மீதும் இந்தப் போராட்டங்கள் ஏற்படுத்தி இருக்கக்கூடிய பாதிப்புகளை சிந்தித்துப் பாருங்கள்.
எனவே மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது ஆயிற்று. இவற்றை கனத்த இதயத்துடன் தான் எடுத்தோம். எமக்கு வேறு வழி இல்லை. இது ஒரு அசாதாரண சூழலை ஏற்படுத்தியது. சில மாதங்களாக அல்ல சில ஆண்டுகளாக நிலவிய அசாதாரண சூழலை நாம் கட்டுப்படுத்த வேண்டியதாயிற்று. இந்த நடவடிக்கைகளின் தாக்கத்தை நீங்கள் பார்க்கிறீர்கள். விலைவாசிகள் குறையத் தொடங்கியுள்ளன. எல்லா இடத்திலும் ஓர் ஒழுங்கு பரவி வருகிறது. தேர்வுக்கு வரத் தயாராக இல்லாத மாணவர்கள் எல்லாம் இப்போது தாமாக முன்வந்து தேர்வு எழுதுகிறார்கள். எல்லா மட்டத்திலும் மக்கள் தாமாக ஆர்வத்துடன் தமது பணிகளைச் செய்கிறார்கள்.
சமீபத்தில் சில பொருட்களின் விலை அதிகரித்தது. பருவ மழை காலத்தில் இவ்வாறு உயர்வது இயல்புதான். சில இயற்கைப் பேரிடர்களும் நிகழ்ந்தன. பிஹார், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், அசாம் மற்றும் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது வருத்தங்கள். இயன்றவரை மிக விரைவில் இவர்களுக்கு நிவாரணம் வழங்க எல்லா முயற்சிகளும் எடுக்கப் பட்டுள்ளன.
பொருட்களின் விலையேற்றம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வேலையின்மைப் பெருக்கமும் தடுக்கப்பட்டுள்ளது. இன்னமும் வேலையின்மை இருக்கத்தான் செய்கிறது. ஒழுங்கினம் மறைந்த முழுவதுமாக ஒழுங்கு வேலை நிறுத்தப்பட்டால் உற்பத்தி பெருகும். வேலையின்மையும் நீங்கும். ஆசிரியர்கள் மாணவர்கள் வணிகர்கள் நுகர்வோர் என்று எல்லாரும் தம்மைப் பற்றி மட்டுமே சிந்திப்பதை நிறுத்தினால் எல்லாம் சரியாகிவிடும். மாற்றத்துக்கான கருவியாக தம்மை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டால் நாடு நிச்சயம் வளரும்.
வெளியே இல்லாத எதிர்ப்பாளர்கள் மீது நாம் அக்கறை கொண்டுள்ளோம். எந்த அநீதியோ அதிகார துஷ்பிரயோகமோ இருக்கக் கூடாது என்று தமது அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மாநில முதல்வர்களுக்கு எழுதியிருக்கிறேன். சட்டத்தை மதித்து நடக்கும் எல்லா குடிமகன்களுக்கும் நாம் உதவ வேண்டும். காவல்துறையோ மற்ற அதிகாரிகளோ மக்களின் நண்பர்களாக நடந்து கொள்ள வேண்டும். யாரேனும் ஒருவேளை தவறாக நடந்து கொண்டதாய் உணர்ந்தால் அவர் திருந்துவதற்கு உதவ வேண்டும்.
நமது தேசியக்கொடி முதன் முதலில் இங்கு அல்ல இந்தியா கேட் பகுதியில் ஏற்றப்பட்ட போது இருந்த அதே சூழல் இன்று நிலவுகிறது. ஒரு புதிய வாய்ப்பு நமக்கு வாய்த்தது என்று நினைத்தோம். ஆனால் ஊழல், திறமையின்மை உள்ளிட்ட பல தீமைகளை எதிர்ப்பதிலேயே நமது முயற்சிகளை அதிகம் செலவிட்டோம். அதே நேரம் சில முக்கிய பணிகளில் நாம் ஈடுபட்டிருந்ததால் மேற்சொன்ன தீமைகள் வளர வாய்ப்பு கிடைத்து விட்டது. இன்று இவற்றை அகற்ற, நமது தேசியக் கொள்கைகளைச் சரி செய்ய, ஒரு புதிய இந்தியாவைக் கட்டமைக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எல்லா நாடுகளுமே இக்கைய பிரச்சினைகளை சந்திக்கும். போர்க்காலத்திலோ அமைதி காலத்திலோ, எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை தீர்த்து வைக்க இந்தியா எப்போதும் முயன்று இருக்கிறது.
என் முன்னால் தீரமிக்க வீரர்களை காவல்துறையினரைப் பார்க்கிறேன். சில சமயங்களில் மக்கள் காவல்துறையினரை எதிரிகளாகக் கருதுவது உண்டு. ஆனால் அவர்களும் நமது பிள்ளை, நமது சகோதரர், நமது தந்தை போன்று நம்மில் ஒருவர். சில சமயங்களில் அவர்கள் தவறு செய்தால் திருத்தி, நல்ல பாதைக்கு வரவழைத்து எல்லாரோடும் நல்லுறவும் ஒத்துழைப்பும் ஏற்பட வழி வகுக்க வேண்டும்.
நமது துணிச்சல் மிக்க வீரர்கள் எப்போதும் நம் பெருமைக்கு உரியவர்கள். எல்லையில், தீரத்துடன் நம்மைப் பாதுகாக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும் - எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்துவது நமது கொள்கை அல்ல; நட்புறவுதான் நமது கொள்கை. ஆனாலும் நாம் எப்போதும் எச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும். ஆக்கிரமிப்புக்கு எதிராக மட்டுமே ஆக்ரோஷம் காட்டுவோம்.
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மக்களின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் நமது வளர்ச்சி வேகம் பெறும். மாணவர்கள் உள்ளிட்ட பலர் அரசுக்கு ஒத்துழைப்பு தர முன்வந்துள்ளார்கள். இவர்கள் கல்வியின் மீது கவனம் செலுத்த தொடங்கி இருப்பதை நான் மகிழ்ச்சியுடன் பார்க்கிறேன். அதே வேளையில் சமூக சேவையிலும் ஈடுபடுகிறார்கள். உற்பத்தியைப் பெருக்குவதில் தொழிலாளர்கள் முனைப்புடன் இருக்கிறார்கள். விவசாயிகள் எப்போதும் போல கடுமையாக உழைக்கிறார்கள். இந்த ஆண்டு பருவ மழை நன்கு பெய்திருக்கிறது. எனவே விளைச்சலும் நன்றாக இருக்கும்.
நம் எல்லோருக்கும் ஒரு கடமை இருக்கிறது. நமது சமுதாய வளர்ச்சிக்கு நாம் உழைக்க வேண்டிய கடமை இருக்கிறது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தன்னுடைய சொந்தப் பணி மட்டுமல்லாது சமூகத்தைப் பற்றியும் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். உதாரணத்துக்கு நம்ம வீடு மட்டுமல்ல சாலைகள், சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தூய்மை என்பது நகராட்சி, அரசுக்கு மட்டுமே ஆன கடமை அல்ல. இது எல்லா மக்களின் ஒவ்வொரு குடிமகனின் கடமையும் ஆகும்.
இதேபோன்று வேறு சில கடமைகளும் உள்ளன. எதையும் வீணாக்கக் கூடாது. எது அவசியமாகத் தேவையோ அதை மட்டுமே வாங்க வேண்டும். அதிகமாக வாங்கி பதுக்கக் கூடாது. விலைவாசி அதிகமானால் ஒரு பொருள் இல்லாமல் எவ்வாறு செய்வது என்று யோசிக்க வேண்டும். எங்கெல்லாம் கூட்டு முயற்சி இருந்ததோ அங்கே எல்லாம் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.
நாம் நமது காடுகளைப் பாதுகாக்க வேண்டும். நிறைய மரங்கள் நட வேண்டும். குடும்பக் கட்டுப்பாடு திட்டம் வெற்றி பெறவும் நாம் உறுதி செய்ய வேண்டும். நம்ம நாட்டின் எதிர்காலத்தைக் குறிக்கும் பல திட்டங்கள் அரசால் நிறைவேற்றப்படுகின்றன. இந்த திட்டங்கள் எல்லாம் வெற்றியடைய எல்லாரும் சேர்ந்து உழைக்க வேண்டும். நமது குழந்தைகளுக்கு ஒரு புதிய வழி காட்ட வேண்டும்.
அவசரநிலை பிரகடனத்தில் நமக்கு மகிழ்ச்சி இல்லை. ஆனால் சூழலின் கட்டாயத்தை கடந்தாக வேண்டி உள்ளது. ஒவ்வொரு கருமேகத்திலும் ஒரு வெள்ளிக் கீற்று இருக்கிறது. ("Every dark cloud has a silver lining") ஒரு நோயாளின் நலனுக்காக கசப்பு மருந்துகள் தரப்படுவது போல, கடுமையான நடவடிக்கைகள் எடுத்தோம். ("Stringent measures were taken just as bitter pills administered to a patient in the interest of his health") அரசியல் பொருளாதார அம்சங்களை சுத்தப்படுத்துவதற்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தேசத்தின் வாழ்க்கையில் புத்துணர்ச்சி கொண்டு வர வேண்டும். ("We should use the opportunity to cleanse the political, economic and other aspects of national life and bring some charm and freshness to it")
அறிவியலில் இருந்து நாம் நிறைய கற்றுக் கொண்டோம். இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. பிற நாடுகளை விட நாம் மேலோங்கி இருக்கிறோம் அல்லது பின்தங்கி இருக்கிறோம். ஒவ்வொரு நாட்டுக்கும் சில நல்ல அம்சங்கள் இருக்கின்றன; சில மோசமான அம்சங்கள் இருக்கின்றன. நமக்கும் அது போல்தான்.
தியாகங்களை சேவைகளை கவுரவப்படுத்தும் என்று இந்தியாவுக்கு ஒரு மரபு இருக்கிறது. ஆன்மீக வலிமையை மேம்படுத்துவதில் அதற்கே உரிய குணம் இருக்கிறது. பிற நாடுகளில் இருந்து நான் கற்றுக்கொள்ளும் அதே வேளையில் நமக்கே உரித்தான புதுமைகளுக்கு நாம் கண்களை மூடிக்கொள்கிறோம். நம்ம பண்பாட்டு வேர்களை நாம் மறந்து விடக் கூடாது. புதிய மனித குலம் பரிணமிப்பதில் அறிவியல் விழுமியங்களை நமது கலாச்சாரம் கொண்டுள்ளது. இதுதான் இன்றைய காலத்தின் தேவை; இன்றைய சமுதாயத்தின் தேவை.
பல ஆண்டுகளுக்கு முன்பு ஜவஹர்லால் நேரு கூறினார் - 'சுதந்திரம் அபாயத்தில் இருக்கும்போது முழு வலிமையுடன் அதை காத்துக் கொள்ளுங்கள்'. நானும் என்று இதையே கூறுகிறேன். சிலரைப் பேச அனுமதிக்காததன் மூலம் சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டு விடவில்லை. கட்டுப்பாடுகள் விதிப்பது நல்லதில்லை. அது போக வேண்டும். இதனால் ஏற்கனவே இரண்டு தருணங்களில் வலியுறுத்தி இருக்கிறேன். ஆனால் சுதந்திரத்தின், ஜனநாயகத்தின் உண்மையான பொருளை மறந்து விடுகிற போது, நாட்டு நலன் எதில் அடங்கி இருக்கிறது என்பதை உணராத போது, சுதந்திரம் அபாயத்துக்கு உள்ளாகிறது. நம்ம சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், நாம் அனைவரும் இணைந்து பணியாற்றி உற்பத்தியைப் பெருக்கத் தேவையான ஒற்றுமை விடாமுயற்சி துணிச்சல் ஆகியவற்றை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
வளர்ச்சியை பாதிக்கும் தடைகளை நீக்குவது அரசின் முன் உள்ள கடமையாகும். இந்த தடைகள் எவ்வாறு ஏற்பட்டன என்பதை நாம் பார்க்க வேண்டும். சிலர் சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயற்சித்தார்கள். இவர்கள் இவ்வாறு ஆதாயம் தேட முயற்சிக்காமல் இருந்திருந்தால் சில செயல்களுக்கு நாம் தடை விதிக்க, தேவை இருந்திருக்காது. நாம் எல்லோரும் இந்த பிரச்சினை குறித்து சிந்திக்க வேண்டும்.
வறுமையை ஒழித்தால் மட்டுமே உண்மையான சுதந்திரம் கிடைக்கும். சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மையை முழுவதுமாக நிறைவேற்றும் போதே உண்மையான ஜனநாயகம் கிட்டும். சமீபத்தில் சிலர் ஜனநாயக முழக்கங்களை எழுப்பினர். அவர்களுக்கு சோசலிசத்தில் நம்பிக்கை இல்லை. மதவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த பிரச்சினை மீது புதிதாக நாம் சிந்திக்க வேண்டிய நேரம் இது. அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா அதிகாரங்களையும் நான் என் கையிலேயே வைத்துக் கொண்டு இருப்பதாகச் சிலர் குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால் நான் இடுகிற ஆணைகள், அமைச்சர்கள்.. வெவ்வேறு நிலையில் உள்ள பெரிய, சிறிய அதிகாரிகள்.. வழியாக இறுதியில் கிராமங்களில் உள்ள அதிகாரிகளுக்கு சென்று சேர்கிறது. இந்த நடைமுறையில், எனது ஆணைகள் சில, பின்பற்றப் படுகின்றன; சில - பின்பற்றப்படுவதில்லை. சில சமயங்களில் சிலர் தம்மை அறியாமலே எனது ஆணைகளைத் திருத்தி விடுகிறார்கள். சிலர் வேண்டுமென்றே அதை திரித்து விடுகிறார்கள். சிலர் இந்த ஆணைகளை தமக்கு ஆதாயமாக மாற்றிக் கொள்கிறார்கள். சிலர் இவற்றை அமல்படுத்தக் கூடாது என்பதில் குறியாய் இருக்கிறார்கள். இவையெல்லாம் நிகழ்கின்றன. நமது முக்கியமான திட்டங்கள் நிறைவேறாமல் போவதற்கு இதுவும் ஒரு காரணம்.
ஆயிரத்தில் அல்ல; லட்சக்கணக்கில் மக்களை நான் சந்திக்கிறேன். நாட்டின் எல்லா மூலைகளில் இருந்தும் அவர்கள் வருகிறார்கள். நாள்தோறும் இத்தனை மக்களை சந்திக்கும் வேறு ஒரு நபர் அநேகமாக உலகத்தில் இல்லை. நாள்தோறும் நான் பல புகார்களைப் பெறுகிறேன். நம்முடையது மிகப் பெரிய அகன்ற நாடு. எல்லாத் தகவல்களையும் பெறுவது அத்தனை சாத்தியமல்ல. சில தகவல்கள் தாமதமாக வருகின்றன. சில தகவல்கள் (எனக்கு) வருவதே இல்லை.
ஜனநாயகத்தைப் பாதுகாப்பது நமது கடமை என்று நீங்கள் எல்லோரும் மனதில் கொள்ள வேண்டும். சில சக்திகள் தடையாக இருந்தாலும், வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப் படுவதை உறுதி செய்ய வேண்டும்.
மாநகரங்களின் கிராமங்களின் தெருக்கள் அழகாக சுத்தமாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். நான் 20 அம்ச திட்டத்தை அறிவித்து இருக்கிறேன். பெரிதும் சிறிதுமாக பல பணிகள் நிறைவேற்ற வேண்டி உள்ளன. ஒவ்வொருவரும் தமது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இல்லையேல் இந்த திட்டம் திசை தவறிப் போகலாம்.
இன்று பல புதிய சிந்தனைகள் எழுந்துள்ளன. வெற்று முழக்கங்களில் வழி தவறி, அவற்றை மறந்து போகக் கூடாது. உறுதியுடன் இலக்கை நோக்கி முன்னேற வேண்டும். பலமுறை நான் வலியுறுத்தி உள்ளது போல, இந்தியாவின் முன்னேற்ற நடையை யாராலும் தடுக்க முடியாது. உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ இந்தியாவுக்கு எதிரான யாரும் இந்தியா வலுவான நாடாக மாறுவதைத் தடுக்க முடியாது.
இன்று நாம் கடினமாக உழைக்க, தியாகங்கள் புரிய, உண்மையான விடுதலை, ஜனநாயகத்துக்கு உழைக்க உறுதி எடுத்துக் கொள்ள இங்கே கூடியிருக்கிறோம். நம்முடைய தொன்மையான மரபில் இருந்தும் நவீன அறிவின் பயன்களைக் கொண்டும், இளைஞர்கள் முதியவர்கள் எல்லோரும், புதிய தேசத்தை நிர்மாணிப்போம். ஜெய்ஹிந்த்!
(தொடர்வோம்)
> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 28 - ‘உற்பத்தி பெருகும்... எதிர்காலம் ஒளிரும்’| 1974
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT