Published : 18 Oct 2023 05:22 PM
Last Updated : 18 Oct 2023 05:22 PM

செங்கோட்டை முழக்கங்கள்  27 - “வளர்ச்சிக்கு வழி... உற்பத்தியை நிறுத்துவதா, பெருக்குவதா?” | 1973

27-ஆம் சுதந்திர தினக் கொண்டாட்டம். இந்திய பிரதமர் இந்திரா காந்தி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். சமூக விரோத சக்திகளுக்கு இடம் தரலாகாது. எந்தச் சூழ்நிலையிலும் நமது திட்டங்களை கைவிடுதல் கூடாது. தொடர்ந்து பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தினார்.

1973 ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் இந்திரா காந்தி ஆற்றிய உரை - இதோ: நமது தேசியக் கொடியை பாதுகாக்கவும் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற நம்மை அர்ப்பணிக்கவும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க இடத்தில் மீண்டும் ஒரு முறை கூடி இருக்கிறோம். பருவமழைக் காலத்தின் போது நமது சுதந்திர தினம் வருகிறது. சூரியனும் மேகங்களும் சந்தித்துக் கொள்கிற பருவம் இது. தனி மனிதனின், தேசத்தின் வாழ்க்கையில் துயரமும் மகிழ்ச்சியும் இணைந்தே இருக்கும் என்பதற்கான குறியீடு இது. நம்முடைய நாடு விவசாயிகளின் நாடு. விவசாயமும் மொத்த நாடும் மழை சார்ந்தே இருக்கிறது. மழையை வரவேற்கிறோம். நம்முடைய பாசன திட்டங்களும் விசை உற்பத்தி திட்டங்களும் மழை சார்ந்தே உள்ளன.

இன்று நம்மை இன்னல் (எனும்) மேகங்கள் சூழ்ந்துள்ளன. சிலவற்றில் பற்றாக்குறை. விலைவாசி ஏகத்துக்கும் உயர்ந்து இருக்கிறது. இந்த உண்மையை நாம் மறைக்க விரும்பவில்லை. ஆனால் இந்த பற்றாக்குறை எவ்வாறு நேர்ந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள முயல வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் மகாராஷ்டிரா குஜராத் ராஜஸ்தான் மைசூர் (கர்நாடகா) உள்ளிட்ட மாநிலங்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு, கடந்த சுமார் 50 ஆண்டுகளில் காணாத வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளன. ஆனால் நமது மக்கள் மனம் சோர்ந்து விடவில்லை.

இந்தப் பகுதிகளை நான் பார்வையிட்டேன். இங்குள்ள மக்களின் துணிச்சல் மனஉறுதியை நேரில் கண்டேன். அயல் நாட்டவர் சிலர் இந்தப் பகுதிகளுக்கு சென்று மக்களின் மனஉறுதியைக் கண்டு வியந்து போய் விட்டனர். இம்மக்கள், நிலத்தைத் தோண்டுகிகிறார்கள், கல் உடைக்கிறார்கள், அணைகளைக் கட்டுகிறார்கள். வேலை செய்தபடியே பாடுகிறார்கள். மக்களில் யாரும் புகார் தெரிவிக்கவில்லை. குறைகூறவில்லை. அவர்கள் (என்னிடம்) ஏதேனும் கேட்டிருந்தால் அது தங்களின் மறுவாழ்வுக்காக மட்டுமே இருந்தன. இந்த வைராக்கிய உணர்வை நாடு முழுவதும் நாம் பரப்ப வேண்டும்.

இந்த வறட்சியால் குறிப்பாக பருப்பு, தானியம், நிலக்கடலை உற்பத்திப் பகுதிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாயின. இதனால் பற்றாக்குறை ஏற்பட்டது. விலைவாசி உயர்ந்தது. தொடர்வினையாக, தேவை அதிகரித்தது. விலைவாசி மேலும் அதிகரித்தது. இவ்வாறு சில பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு காரணம் இருந்தது. ஆனால் சில பொருட்களின் விலை உயர்வை நியாயப்படுத்த முடியாது. நம்முடைய நாடு மட்டுமல்ல ஆசியா, ஆப்பிரிக்க கண்டங்களின் பெரும் பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டன. உணவுப் பொருட்களை பெரும் அளவில் இறக்குமதி செய்ய வேண்டி இருந்தது.

இதனால் பிற நாடுகளிலும் நமது நாட்டிலும் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்தது. இந்த நாடுகளில் மட்டுமல்ல செல்வ செழிப்பு மிக்க நாடுகளிலும் விலைவாசி அதிகரித்தது. ஆனால் அங்கெல்லாம் விலைவாசி உயர்வுக்கான காரணம், இந்தியாவில் இருப்பது போன்று இல்லை. அது முற்றிலும் வேறானது. ஆனால் தேசிய எல்லைகள் பொருளாதாரக் காற்றை தடுத்து விடாது. இவை நம்முடைய விலைவாசி நிலைமையை பாதிக்கவே செய்யும். இறக்குமதி பொருள்களின் விலை கூடத்தான் செய்யும். இதன் விளைவாக நமது நாட்டில் விலைவாசி கூடுகிறது. இவ்வாறு விலைவாசி உயர்வை அகன்ற கண் கொண்டு பார்க்க வேண்டும்.

அளவுக்கு அதிகமாய் செலவு செய்வதாய் சிலர் அரசின் மீது குற்றம் சாட்டுகின்றனர். இந்தப் பணம் எல்லாம் எங்கே போகிறது என்று கேட்கிறார்கள். இந்தப் பணம் எங்கே போயிற்று? வறட்சியால் பாதிக்கப்பட்ட ஒரு கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு நிவாரணமாக பெரும் பணம் சென்று சேர்ந்தது. வங்கதேச அகதிகளை பராமரிக்க பெரும் தொகை செலவிட்டோம். அமோக விளைச்சல் இருந்திருந்தால் இவற்றையெல்லாம் நாம் ஈடுகட்டி இருப்போம். ஆனால் அதற்கு எதிர்மாறாக அமைந்து விட்டது. கடும் வறட்சியால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. ஆறுகள் ஏரிகள் குளங்கள் எல்லாம் வறண்டு போயின. பணவீக்கம் அதிகரித்து விட்டது.

செலவுகளை குறைக்க அரசாங்கம் எல்லா முயற்சிகளும் எடுத்து வருகிறது. ஏற்கனவே திட்டமிட்ட செலவுகளில் ரூபாய் 400 கோடி வரை குறைத்து விட்டோம். அவசியமற்ற செலவுகளை தவிர்க்குமாறு அமைச்சகங்களை மாநில அரசுகளைக் கேட்டுள்ளோம். இதனால் சில பொது சேவைகள் பாதிக்கப்படலாம். எதுவும் செய்வதற்கில்லை. இது கடினமான நேரம். நமது குடும்பத்தைப் போன்றே நாட்டிலும் சில முன்னுரிமைகளை நாம் பார்க்க வேண்டும். இந்தியா என்பதே ஒரு மிகப்பெரிய குடும்பம் தான். நமது வளங்களை நாம் மிகவும் சாமர்த்தியத்துடன் கையாள வேண்டும். இது அரசின் மிக முக்கிய பொறுப்பு. மக்களும் இயன்றவரை தம்முடைய செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

மக்கள் எதிர்கொள்ளும் பதுக்கல் மற்றும் பற்றாக்குறை நமக்கு கவலை தருகிறது. இதே பொருட்கள் கடைகளில் பின்வாசல் வழியாக அதிக விலைக்கு விற்கப்படுகிறது. பதுக்கல் செய்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்போர் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இவர்கள் யாரோ எங்கிருந்தோ வந்தவர்கள் அல்லர். மக்கள் வாங்குவதற்குத் தயாராக இருப்பதால்தான் கள்ளச் சந்தையில் விற்கிறார்கள். கள்ளச்சந்தையில் வாங்க மாட்டோம் என்று மக்கள் தீர்மானித்து விட்டால் வணிகர்கள் இவ்வாறு விற்க மாட்டார்கள்.

உணவுப் பொருள்கள் கொள்முதல் செய்வதை சிலர் தடுக்கிறார்கள். ஒரு இடம் தீப்பிடித்து எரிகிறபோது தீயை எப்படி அணைக்கலாம் என்றுதான் பார்க்க வேண்டும். எங்கிருந்து எவ்வாறு தண்ணீர் வந்தது என்று கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. உணவுக் கொள்கை எதுவாக இருந்தாலும், யாரும் விரும்பினாலும் விரும்பா விட்டாலும், உணவு பொருட்களைக் கொள்முதல் செய்ய வேண்டும்; மிக முக்கியமாய் தேவைப்படுவோருக்கு விநியோகிக்க வேண்டும். பட்டினியால் யாரும் பாதிக்கப்படக்கூடாது. சரிதானே..? இது ஒட்டுமொத்த சமுதாயத்தின் பொறுப்பாகும். கோதுமையில் மொத்த சந்தையை நாம் எடுத்துக் கொண்டு விட்டோம் என்று சிலர் குற்றம் கூறுகிறார்கள். இதனால்தான் பற்றாக்குறை ஏற்பட்டது என்கிறார்கள். ஆனால் இந்த நடவடிக்கையை நாம் எடுத்து இருக்கா விட்டால், கடைகளுக்கு இந்தப் பொருள் போய்ச் சேரும் என்பதை யாராலும் நிரூபிக்க (உறுதிப்படுத்த) முடியாது.

நமக்கு வரும் தகவல்களின்படி, கோதுமை ஒத்த கொள்முதலை நாம் எடுத்து இருக்காவிட்டால் அது மொத்தமும் கள்ளச் சந்தைக்குப் போய் இருக்கும். மக்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி இருப்பார்கள். யாரால் அதிக விலை கொடுத்து வாங்க முடியுமோ அவர்கள் மட்டுமே பயன்பெற்று இருப்பார்கள். நகர மக்கள் நடுத்தர மக்கள் சில இன்னல்கள் அனுபவித்தார்கள். உண்மைதான். ஆனால் யாருக்கு மிகவும் அதிகமாக தேவைப்பட்டதோ அவர்களுக்கு நாம் தந்திருக்கிறோம். ஆகையால் நமது கொள்கையில் எதுவும் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

அடுத்து ஒரு கேள்வி - நாம் ஏன் விவசாயிகளுக்கு அதிக விலை தருவதில்லை? இப்போது நாம் கோதுமைக்கு அதிக விலை கொடுத்தால் அது மற்ற பொருட்களின் விலையையும் அதிகரிக்கும். விவசாயிக்கு நிச்சயம் அதிக விலை கிடைத்திருக்கும். சந்தேகம் இல்லை. ஆனால் இது மற்ற மக்களை இன்னமும் மோசமாக பாதித்து இருக்கும். சிலர் பயன்பெறுவார்கள், சிலர் துன்பமுறுவார்கள். நாம் எல்லோரும் சேர்ந்தே நீந்த வேண்டும்.

வங்கதேச விடுதலையின் போது மக்கள் மிகுந்த மனமகிழ்ச்சியில் இருந்தபோதே நான் எச்சரித்தேன் - இதற்கு நாம், பொருளாதார சமூக நிலைமையில் மிகுந்த விலை தர வேண்டி இருக்கும். அப்படியே நிகழ்ந்தது. இந்தச் சவாலை எதிர்கொள்ள அரசும் தயாராக இருக்கிறது. இந்த தருணத்தில் நான் உங்களுக்கு உறுதி கூறுகிறேன் - பற்றாக்குறை விலைவாசி உயர்வு மற்றும் சமூக விரோத சக்திகளுக்கு எதிராக இந்த அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். சில நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. சில திட்டங்கள் தீட்டப் பட்டுள்ளன. இன்னும் சில, விரைவில் நடைமுறைக்கு வரும். நாம் ஜனநாயக குடியரசில் வாழ்கிறோம். நாம் அனைவரும் சில பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அப்போதுதான் நிலைமை சீரடையும். நான் சொன்னது போல, சிலர் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்றால், அதையும் சிலர் வாங்குவதற்குத் தயாராக இருந்தால், இந்தப் பிரச்சினை தீராது. நாம் குறைந்ததைக் கொண்டு மனநிறைவு பெற வேண்டும்.

நல்ல வேளையாக இந்த ஆண்டு நல்ல மழை பெய்து வருகிறது. இதன் விளைச்சல் சந்தைக்கு வர சில நாட்கள் ஆகும். அதுவரை சில ஏற்பாடுகள் இருந்தாக வேண்டும். கையில் உள்ள இருப்பு, இறக்குமதி செய்யும் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு வாழ மக்களின் ஒத்துழைப்பு தேவை. எல்லா இல்லதரசிகளும் மற்றவர்களும் பொருட்கள் வீணாவதை கவனத்துடன் தவிர்க்க வேண்டும். இதனால் கடினமான நேரங்களில் இருந்து நம்மால் வெளியில் வர முடியும். பதுக்கள்காரர்கள் கள்ளச் சந்தை காரர்களுக்கு எதிராக மக்கள் தாங்களே சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துங்கள். பதுக்கலுக்கு எதிரான சூழலை நாம் ஏற்படுத்த வேண்டும். போராட்டத்தின் மூலம் தான் தமது கோரிக்கையை முன்வைக்க முடியும் என்று சிலர் கருதுகிறார்கள். இது நம்ம எங்கே இட்டுச் செல்லும்? வன்முறையே மிஞ்சி நிற்கும். வேலை நிறுத்தங்கள் நடைபெறும். பணிகள் நின்று விடும். நமது பற்றாக்குறை இன்னும் அதிகமாகும். விலைவாசி உயரும். பொருட்களை கொள்ளை அடித்தால், சரியான பகிர்மானம் இருக்காது. விலைவாசி மேலும் உயரும். தில்லியிலும் பிற பகுதிகளிலும் மக்கள் படும் இன்னல்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

நமக்கு உணவு அளிப்பவர் விவசாயி. அவர்தான் நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பு. அவர் உற்பத்தியை பெருக்கித் தந்தால்தான் அரசாங்கம், சமமான பகிர்வை உறுதி செய்ய முடியும். முதலில் உற்பத்தியைப் பெருக்க வேண்டும்; பிறகு கொள்முதல் செய்ய வேண்டும். அதன் பிறகு நியாயமாகப் பகிர்ந்து அளிக்க வேண்டும். இதில் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. விவசாய உற்பத்தி, விசை உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. நிலைமை சீரடைந்து வருகிறது.
தனிமனித சுதந்திரம் இருக்கிறது. அதே சமயம், வன்முறை இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்; சட்டம் ஒழுங்கை, அமைதியைப் பராமரிக்க வேண்டும். சண்டைகளால் சாமானிய மக்களே அதிகம் பாதிக்கப் படுகிறார்கள்.

தொழிலாளர்கள் சமுதாயத்தின் முக்கிய அங்கம் ஆவர். நமது வளர்ச்சி குறிப்பாக தொழில் வளர்ச்சி இவர்களைச் சார்ந்தே இருக்கிறது. இவர்களுக்கும் தேவைகள் இருக்கின்றன. இந்தத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேலைநிறுத்தம் ஓர் ஆயுதம் என்பதை நான் உணர்கிறேன். ஆனால் ஒரு தேசத்தின் வாழ்க்கையில் சில சமயங்களில் தேசத்தின் சமுதாயத்தின் நலனை முன்னிறுத்தி கடையநல்லூர் தேவர்களை பின்னுக்கு தள்ள வேண்டி இருக்கிறது. ஆலை அதிபர்களும் தொழிலதிபர்களும் இவற்றைப் பொறுத்துக் கொண்டு இவை தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதேபோன்று தொழிலாளர்களும் பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். எந்த சூழ்நிலையிலும் உற்பத்தி பாதிக்கப்படக் கூடாது. இந்த முடிவு எடுத்து, பொறுப்புடன் செயல்பட வேண்டிய காலம் இது.

இதேபோன்று சாமானியனும் தனது கடமைகளை பொறுப்புகளை உணர்ந்து கொள்ள வேண்டும். நாம் சிலவற்ற சொல்லுகிறோம். மற்றவர்களும் சொல்லலாம். வாக்களிப்பது மட்டுமே ஜனநாயகம் அல்ல. நாட்டு மக்கள் எங்களுக்கு வாக்களித்து இருக்கிறார்கள். இந்தியாவின் கவுரவத்தை உயர்த்த எளிய வணக்கம் தன்னம்பிக்கை வர நடவடிக்கை எடுப்போம். இது நிகழ்ந்து வருகிறது. ஆனாலும், இத்தனைக்கு பிறகும்... நம்முடைய பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டு இருக்கிறோமா..?

இன்னல் சமயங்களில் பதட்டம் கொள்ளாது சஞ்சலம் இல்லாத சமநிலையான மனதைப் பெறுவதை, இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவிப்பதை, நமது பண்டைய சாஸ்திரங்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளன. ஆனால் உண்மையில் நல்ல முன்னேற்றத்தில் அதிக மகிழ்ச்சி கொள்வதும் சோதனை காலங்களில் துயரம் அடைவதும் நிகழத்தான் செய்கிறது. நம் முன் உள்ள கேள்வி - இன்னலின் போது அழுது புகார் செய்து வெளியேறப் போகிறோமா..? அல்லது, துணிச்சலுடன் இடர்களை எதிர்கொள்ளப் போகிறோமா? இந்தக் கேள்விக்கு இளைஞர்களும் முதியவர்களும் ஒரு சேர விடையளிக்க வேண்டும்.

இன்று இங்கே எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் இருக்கிறீர்கள். இவர்கள் வயதால் மூத்தவர்கள் ஆனால் உள்ளத்தால் இளைஞர்கள். இவர்களின் ஆர்வமும் உற்சாகமும் இளைஞர்களைப் போன்றே உள்ளது. இந்த மூத்தோரின் துணிவு வைராக்கியம் வழிகாட்டுதல் நமக்கு வேண்டும்.

மழையோ வெயிலோ, எல்லாப் பருவங்களிலும் நமது நாடு முன்னேறிச் செல்ல வேண்டும். போரிலும் அமைதியிலும் நம்முடைய வளர்ச்சியின் வேகம் குறைந்து விடக் கூடாது. சிலர், 'திட்ட விடுமுறை' வேண்டும் என்று ஆலோசனை சொல்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், இன்றைய வசதிகளுக்காக, நாட்டில் உள்ள வறியோரை உதாசீனப்படுத்தி இந்தியாவின் எதிர்காலத்தை அடகு வைக்க முடியாது. திட்ட விடுமுறை - விடக்கூடாது. விட முடியாது. விடமாட்டோம்.

கடந்த முறை நான் இங்கே பேசும் போது சர்வதேச அரங்கில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் குறித்து சொன்னேன். இந்த மாற்றங்கள் தொடர்கின்றன. புதிய நட்புகள் புதிய அர்த்தங்களை கொடுத்து வருகின்றன. இந்த (ஆசியா) கண்டம், தனக்கு வேண்டிய அமைதியை இன்னும் எட்டவில்லை. மக்கள் நம்மை குறை சொல்கிறார்கள். போர்க் கைதிகளின் கதைகளைப் பற்றி இப்போது நான் திரும்பச் சொல்ல வேண்டியது இல்லை. நாமும் வங்க அரசும் சில பெருந்தன்மையான திட்டங்களை முன்மொழிந்துள்ளோம். பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவை இந்திய பாகிஸ்தான் மக்களின் மூலம் வரவேண்டும். இதற்கு இந்திய அரசையோ வங்கதேசச அரசையோ யாரும் குறை சொல்ல முடியாது. போர்க் கைதிகள் வெளியில் வந்து தம்முடைய ஊருக்கு போகவிடாமல் தடுப்பது யார் என்பது மக்களுக்குத் தெரியும். சிறைவாசிகள் தத்தம் நாட்டுக்கு செல்ல விடாமல் தடுப்பவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும்.

நாம் எல்லோரும் இணைந்து பல சவால்களை சந்தித்துள்ளோம். சில சமயங்களில் வெற்றி கொண்டிருக்கிறோம் சில சமயங்களில் தோல்வியும் சந்தித்துள்ளோம். ஒரு தேசமாக இப்போது நாம், அமில சோதனைக்குத் தயாராகிறோம். இதனை நாம் துணிச்சலுடன் மன உறுதியுடன் எதிர் கொண்டால் ஒளிமயமான எதிர்காலம், தீயிலிட்ட தங்கம் போல் ஒளிரும். நம் மக்களும் ஒளிர்வார்கள்.

இன்று எனது வினாவை மீண்டும் கேட்கிறேன் - எது மாதிரியான எதிர்காலம் நமக்கு வேண்டும்? தங்களுடைய நம்பிக்கைகளில் தளர்ந்து போகாத மக்கள் வேண்டும். நமது மக்களின் குரல், அமைதி நட்புறவுக்கான குரல், உலகில் எல்லா மூலைகளிலும் எதிரொலிக்க வேண்டும். நம்முடைய மாபெரும் தலைவர்கள், புதிய உலகம் புதிய தொலைநோக்குப் பார்வையுடன் கொண்டிருந்த உயர்ந்த லட்சியங்களை நாம் நிறைவேற்றியாக வேண்டும். இதுவும் கூட போதாது. ஒரு புதிய தலைமுறை எழுந்துள்ளது. இவர்கள் புது வெளிச்சத்தை வரவேற்பவர்கள். இவர்கள் ஒழுங்கு, துணிச்சல் மிக்கவர்கள். யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர். இவர்கள் புதிய இந்தியாவை நிர்மாணிப்பார்கள்.

நீங்கள் இங்கே இருந்தாலும், வீட்டில் ரேடியோ, தொலைக்காட்சி முன் அமர்ந்திருந்தாலும் நான் எழுப்பும் ஜெய்ஹிந்த் முழக்கத்தில் என்னோடு சேருங்கள். இது இந்தியாவின் விடுதலை ஒற்றுமை வலிமை மற்றும் ஒளிமயமான எதிர்காலத்தின் குறியீடு. ஜெய்ஹிந்த்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x