Published : 16 Sep 2023 06:09 PM
Last Updated : 16 Sep 2023 06:09 PM
செங்கோட்டையில் இருந்து பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய இறுதி உரை இது. 1947 முதல் 1963 வரை தொடர்ச்சியாக 16 ஆண்டுகள் பிரதமராக இருந்த நேருவால், தான் உண்மையாக நேசித்த 'சகோதரன்' சீனா இழைத்த நம்பிக்கை துரோகம்... ஜீரணிக்கவே முடியவில்லை. மிகுந்த மன வேதனையில் நேரு ஆற்றிய இந்த உரை, அவரது ஆற்றாமையை நன்கு வெளிப்படுத்தியது.
எப்போதும் போல நாட்டு மக்களுக்கு சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்ட நேரு, 16 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாய் செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய தருணத்தை நினைவு கூர்ந்து தொடங்குகிறார். 1963 ஆகஸ்ட் 15 அன்று ஆற்றிய சுதந்திர தின உரை இதோ:
இந்த நாள், மறக்க முடியாதது. நெடுநாள் உழைப்பு, ஒப்பிலா தியாகம் மூலம் சுதந்திரம் பெற்றோம். நமது இன்னல்கள் முடிவுக்கு வந்து விட்டன; சுதந்திரமாய் நமது நாட்டை மறுநிர்மாணம் செய்ய முடியும் என்று மகிழ்ச்சியாய் இருந்தோம். ஆனால், நாட்டின் பிரிவினையைத் தொடர்ந்து அச்சம் ஊட்டிய கலவரங்கள் நம் மீது பயங்கர அடியாய் விழுந்தன. பேரதிர்ச்சியாய் இருந்தது. ஆனாலும் படிப்படியாய் கட்டுக்குள் கொண்டு வந்தோம்.
இதன்பின் உடனடியாக, நமது மாபெரும் தலைவர் மகாத்மா காந்தி, சக இந்தியனால் கொலை செய்யப்பட்டார். இதைவிடவும் பேரிடர் இருக்க இயலாது. அவரது போதனைகளில் இருந்து துணிவு பெற்றோம்; வெறுமனே ஓரிடத்தில் அமர்ந்து புலம்புதல் தகாது; நாட்டை அழிக்கும் தீய போக்குகளை தீய சிந்தனைகளை எதிர்த்துப் போராட வேண்டும். புதிய வளமான இந்தியாவை நிர்மாணிப்பதில் நமது சக்தி முழுதையும் அர்ப்பணிப்பது; ஒவ்வொருவரும் தனது சக்திக்கு ஏற்ப பங்களிப்பது; ஒவ்வொருவரும் வளம் பெறுவது என்று தீர்மானித்தோம்.
இந்த நோக்கத்துடன் பெரிதாக திட்டமிட்டு, அதன்படி உழைத்தோம். நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் - கடந்த 10 - 15 ஆண்டுகளில் இந்தியாவின் வடிவம் மாறி இருக்கிறது; மாறிக் கொண்டு இருக்கிறது. புதிய நகரங்கள் வளர்ந்தன; புதிதாய் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன; நமது கிராமங்களிலும் நகரங்களிலும் எண்ணற்ற திட்டங்கள் தொடங்கப்பட்டன. நமது இலக்கு, வெகு தொலைவில் இருந்தாலும், ஏற்கனவே நாம் கணிசமான அளவுக்கு முன்னேறி இருக்கிறோம்; எல்லா இடங்களிலும் (நம்மை சுற்றி) வளமை கூடி இருப்பதைக் காண முடியும்.
நல்ல வளர்ச்சி பெற்று இருக்கிறோம். ஆனால் சில அடிப்படை உண்மைகளை மறந்து விட்டோம். நமது சுதந்திரம் உறுதியாக பாதுகாப்பாக இருக்கிறது என்று ஓய்வாக இருந்தோம். யாரும் நம்மீது தாக்குதல் நடத்தி நமது சுதந்திரத்திற்கு ஆபத்தாக இருப்பார்கள் என்று நாம் நினைக்கவில்லை. இரவும் பகலும் உன்னிப்பாக காவல் காக்க வேண்டும்; சுதந்திரம் என்றாலே நிரந்தர கண்காணிப்பு என்பதை நாம் கற்கவில்லை. கண்காணிப்பை சற்று தளர்த்தினாலும் சுதந்திரம் நழுவிப் போகும்; நாம் மெத்தனமாக இருந்து விட்டோம்.
நாம் நிரந்தரமாக சமாதானத்தை சுமப்பவர்களாய் இருந்தோம். அமைதியின் மீது நமக்கு இருந்த நாட்டம் காரணமாய் உலகில் நமக்கு நல்ல மரியாதை கிடைத்தது. நாம் சரியான பாதையில்தான் நடந்தோம். ஆனால் பலவீனம், மெத்தனம் இருக்கும் இடத்தில் அமைதி தங்காது. வலிமையாலும் உழைப்பாலும் மட்டுமே அமைதியைப் பாதுகாக்க முடியும்; அப்போதுதான் உலகில் நமது குரலுக்கு அதிகாரம் இருக்கும்.
கடந்த ஆண்டு, திடீரென்று நமது எல்லை ஊடுருவப்பட்டபோது நாம் எல்லோரும் அதிர்ச்சிக்கு உள்ளானோம். நமது நண்பன் என்று நாம் நம்பிய நாடு திடீரென்று மாபெரும் தாக்குதல் நடத்தியது; நமது எல்லைப் பகுதிகளில் பேரழிவு சம்பவங்கள் நடந்தேறின. கடும் இன்னலுக்கு ஆளானோம்.
ஒரு நல்ல விளைவும் ஏற்பட்டது. நாடு முழுதும் ஒரு புதிய காற்று வீசியது. உணர்ச்சி பூர்வமாக ஒன்றுபட்டு, எல்லா தியாகங்களுக்கும் மக்கள் தயாராக முன்வந்தனர். பணம் கொடுத்தார்கள்; தங்கம் கொடுத்தார்கள்; வெள்ளி கொடுத்தார்கள். தேசப் பாதுகாப்புக்காக எல்லாவற்றையும் வழங்க முன்வந்தார்கள். இல்லாதவர்கள்தான் மிகவும் அதிகமாகத் தந்தார்கள். மக்கள் தங்கள் சண்டைகளை மறந்தார்கள். நாட்டின் பாதுகாப்புக்காக ஒன்று சேர வேண்டியது தம்முடைய கடமை என்பதை உணர்ந்தார்கள். எல்லா வேற்றுமைகளையும் எல்லா சச்சரங்களையும் கடந்து ஒற்றுமை ஆழமாய்ப் பரவியது.
ஆபத்தை எதிர்கொள்வதற்குத் தேவையான வலிமையை இது நமக்குத் தந்தது. (போருக்கான) தயாரிப்பு என்பது (மக்களின்) உணர்ச்சி மட்டுமே அல்ல. ராணுவத் தயாரிப்பு வேண்டும்; இன்னும் இது போன்ற ஆயிரம் விஷயங்கள் வேண்டும். ஆயுதத் தொழிற்சாலைகளை நிறுவ வேண்டும்; தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும்; நாட்டில் வயல்களில் அதிகபட்ச உற்பத்தி காண வேண்டும். இதற்கு நாம் ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும்; நமது பொருளாதார அடித்தளத்தை வலுவாக்க வேண்டும். இதில் நாம் முழு கவனம் செலுத்தினோம்; நல்ல வளர்ச்சி அடைந்தோம்.
நமது எல்லையில் சண்டை நின்றது; நாமும் ஒற்றுமையை மறந்தோம். பழைய சண்டைகள் மீண்டும் முளைத்தன; பலவீனம் அடைந்தோம். இதுதான் நமது வழக்கம் ஆயிற்று. நமது எல்லையில் அபாயம் நிரந்தரமாக இருக்கிறது. நமது நாட்டை நாம் பாதுகாக்க வேண்டும். இதற்கு நாம் செய்ய வேண்டிய முதல் கடமை - நமது நாட்டின் வலிமையைப் பெருக்குவது; வறுமையைப் போக்குவது; எல்லாருக்கும் சம வாய்ப்பு வழங்குவது; குழந்தைகளுக்கு நல்ல கல்வி வழங்குவது. நமது நாடு சுதந்திரமாக இருந்தால் தான் இது எல்லாம் செய்ய முடியும். இது விஷயத்தில் எல்லா இந்தியர்களும் ஒரே சிந்தனை உடையவர்களாக இருத்தல் வேண்டும். ஒன்றாக நடந்து, ஒன்றாக இயங்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக நாட்டு ஒற்றுமையை முன்வைக்க வேண்டும்.
ஒற்றுமை உணர்ச்சி கடந்த ஆண்டு முடிவில், இந்த ஆண்டுத் தொடக்கத்தில் நிரம்பி இருந்தது. எல்லையில் சண்டை நின்ற பிறகு, ஒற்றுமை வடிந்து போனது. இது வருத்தத்துக்கு உரியது.
(அரசை) விமர்சிக்க எல்லாருக்கும் உரிமை இருக்கிறது. நம்முடையது சுதந்திர நாடு; யாரையும் நாம் அடக்குவது இல்லை. ஆனால் உரிமை என்பது, கடமையும் சேர்ந்தது. ஒருவர் கடமையை மறந்தால் உரிமையை அதிகாரத்துடன் கோர முடியாது. நாட்டைக் காப்பதும், அதன் ஒற்றுமை ஒருமைப்பாட்டைப் பேணுவதும், அதற்கு வலிமை சேர்ப்பதும் நமது முதல் கடமை.
மகிழ்ச்சியாக வாழ ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிமை இருக்கிறது; வறுமையில் இருந்து விடுபட உரிமை இருக்கிறது; தானும் தனது குழந்தைகளும் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் பெற சமஉரிமை இருக்கிறது. இந்த உரிமையை எல்லாரும் அனுபவிக்கும் நாள் விரைவில் வரும் என்று நம்புகிறோம். ஆனால் இப்போதைக்கு நாம் இதிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறோம். நாம் எல்லோரும் நமது கடமையை ஒழுங்காய் செய்தால் மட்டுமே இந்த இலக்கை எட்ட முடியும் என்பதே உண்மை.
ராணுவப் படைகளும் விமானங்களும் மட்டுமே நமக்கு வேண்டிய பாதுகாப்பை தந்து விடாது. ஒவ்வொரு ஆணும் பெண்ணும் பாதுகாப்புக்கு தங்களால் இயன்றதை உதவ வேண்டும். வயல்களில் தொழிற்சாலைகளில் ஒற்றுமையாய் உழைத்து நாம் காணும் வளர்ச்சியே நமது ராணுவத்துக்கும் வலிமை சேர்க்கும். இதுவே நம்முன் உள்ள மிகப்பெரிய பொறுப்பு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
நமது திட்டங்களும் மிகவும் முக்கியமானவை. ஆபத்துக் காலத்தில் இதனை இன்னும் அதிகரித்தோம். உலகம் அணுசக்தி ஆபத்தை எதிர்நோக்கி இருக்கிறது. இதற்கு எதிராக சில நல்ல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளன. அணு ஆயுதத்திற்கு எதிரான உடன்படிக்கை சமீபத்தில் அமெரிக்காவால் மாஸ்கோவில் கையெழுத்திடப்பட்டுள்ளது. நமது நாடும் இந்த உடன்படிக்கையை ஒப்புக் கொண்டுள்ளது. சமாதானத்துக்கான வழியை நாம் சுட்டிக் காட்டி உள்ளோம். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐநா சபையில் இதுகுறித்துப் பேசினோம். அதுதான் இப்போது உடன்படிக்கை ஆகியிருக்கிறது. இந்தியாதான் முதன் முதலில் இதற்காகக் குரல் எழுப்பியது. உலகம் இதனை ஏற்றுக் கொண்டுள்ளது என்பதில் மகிழ்ச்சி; உலகம் மீதான ஆபத்து தவிர்க்கப் பட்டுள்ளது.
நம்பிக்கைகள் நிறைந்த நாட்டில் நாம் வாழ்கிறோம். அபாயங்களும் நம்பிக்கைகளும் நிறைந்த சூழ்நிலையில் நமது குழந்தைகள் வாழ்கிறார்கள். வசதியான வாழ்க்கை நாட்டுக்கு அவ்வளவு நல்லதல்ல. நமது வலிமையைக் குன்றச் செய்துவிடும். உலகில் சோதனைகளும் தேர்வுகளும் மிகவும் அதிகம். இது ஏதோ பள்ளித் தேர்வு போன்றது அல்ல. இது மிகவும் சவாலானது; அங்கே, புத்தகங்கள் தரும் அறிவு போதுமானது அல்ல. நல்ல ஒழுக்கம், திடமான இதயம் கொண்டுதான் இந்த சவால்களை எதிர் கொள்ள முடியும்.
இந்த (மன)நிலையில் தான் நாம் வளர வேண்டும். இதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. அரசியல் நடவடிக்கைகள் நமது அடிப்படை இலக்குகள், தன்மைகளை இழந்து விடக் கூடாது. கடினமான தருணங்களில் இதனை நாம் மனதில் கொள்ள வேண்டும். ராணுவத்துக்கான நிதியை அதிகரிக்க வேண்டும்; இதற்கு நாம் கூடுதலாக வரி செலுத்த வேண்டும். வரி செலுத்த யாருக்குமே பிடிக்காது. வரி விதிக்கவும் தான் பிடிக்காது. ஆனால் நிதி தேவைப்படுகிறது. நாடு ஆபத்தில் இருக்கும் போது அதை காப்பாற்றுவதை விடுத்து, பணத்தை வைத்துக் கொண்டு என்ன ஆகப் போகிறது?
இன்னல்களை சந்திக்க வேண்டி இருந்தாலும், இந்தியாவை காக்க எதையும் தியாகம் செய்ய நாம் தீவிரமாக இருக்கிறோம். பெரிய போர்களின்போது மக்கள் அதிகம் துன்பப்படுகிறார்கள். பல நாடுகள் அழிந்து போகின்றன. நாம் பெரிய போர் எதையும் இப்போது சந்திக்கவில்லை என்றாலும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. எல்லா சந்தர்ப்பங்களுக்கும் நாம் தயாராக இருத்தல் வேண்டும்.
அமைதி விரும்பும் தேசமாக நாம் உலகில் பெயர் பெற்றுள்ளோம். ஆனால் இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி கொடுத்து ராணுவத்தை பெருக்குவதில் நாம் ஈடுபட வேண்டியதாயிற்று. இதனால், அமைதி நோக்கத்தை நாம் இழந்து விட்டோம் என்று பொருளல்ல. இதனை நாம் எப்போதும் முன்னெடுப்போம். பிற நாடுகளுடன் இருக்கும் சச்சரவுகளில் அமைதித் தீர்வுக்கு வழி காண்போம்.
ஒரு நாட்டை அழிக்கும், நாட்டு மக்களுக்கு துன்பம் விளைவிக்கும் போரை நாம் விரும்புவதில்லை. அமைதி மட்டுமே, பெருமை சேர்க்கும் தீர்வாகும். தீமையிடம் சரணடைவதன் மூலம் அமைதி கொண்டுவர முடியாது. எனவே நாம் முழுதாய் தயாராக இருக்க வேண்டும். என்ன பொருள்? ஒவ்வொரு ஆணும் பெண்ணும் கட்டாயம் ஏதேனும் பங்களித்தல் வேண்டும்.
எல்லோரோடும் சேர்ந்து நடத்தல் என்பது நமது மக்களுக்கு பழக்கம் இல்லாத ஒன்று. மற்றவருக்கு இணையாக நடந்து செல்ல நமது நாட்டில் சிலரால் மட்டுமே முடிகிறது. இணைந்து நடப்பது என்பது - இணைந்து செயலாற்றுவதற்கான ஓர் அடையாளக் குறியீடு; அவ்வளவுதான். இந்த நாடு முழுவதும் ஒருமைப்பாட்டு உணர்வை உட்செலுத்த வேண்டி உள்ளது.
நாம், பிறரின் நட்புறவை, ஒத்துழைப்பை நாடலாம். ஆனால் நாம் நம்மைச் சார்ந்தே இருத்தல் வேண்டும். நமது சொந்த சிந்தனை வழிநடத்த வேண்டும்; நமது கைகளால் உழைக்க வேண்டும்; நமது கால்களில் நிற்க வேண்டும். இதனை ஒரு நாடு மறந்தால், அது யாருக்கும் பயன் அற்ற நாடாகி விடும். நாம் பல நாடுகளில் உதவி கோரி இருக்கிறோம். அவர்களும் உதவி இருக்கிறார்கள். அவர்களின் உதவிக்கு நாம் நன்றி உடையவர்கள். இந்த உதவி நம்முடைய சுமையைக் குறைத்து விடவில்லை.
நம்முடைய இலக்கை நாம் தான் எட்ட வேண்டும்; நமக்காக பிறர் உழைப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. நமது நாடு வளர வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். நமது பொருளாதார பிரச்சினைகளை நாமே தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவருடன் ஒத்துழைத்து நம்முடைய காலில் நாம் நிற்க வேண்டும்.
நமது குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை மகிழ்ச்சியுடன் பார்க்கிறேன். அவர்களுக்கான வளமையான இந்தியாவை என் கண் முன் பார்க்கிறேன். இவர்கள் வளர்ந்து தம்மையும் நாட்டையும் வளமாக்க வாய்ப்பு பெறுவார்கள் என்று நம்புகிறேன். திட்டக் குழுவும் வேறு பல துறைகளும் இதற்காக உழைத்துக் கொண்டுள்ளன. நினைவில் கொள்ள வேண்டும் - திட்டக் குழு, தொடங்கி வைக்கும்; அவ்வளவுதான். நாம்தான் செய்து முடிக்க வேண்டும். நாம் சரியாக செய்யவில்லை என்றால், அரசும் திட்டக் குழுவும் எதுவும் செய்ய இயலாது. கோடிக்கணக்கான மக்களின் பாதுகாப்பை கோடிக் கணக்கான மக்களேதான் செய்ய வேண்டும்.
அலுவலகங்களில் பணிபுரியும் ஒரு சிலரால் திட்டங்களை நிறைவேற்றி விட முடியாது. நமது நாட்டின் 45 கோடி மக்களை சென்றடைய வேண்டும். இதையும் நாம்தான் செய்ய வேண்டும். இத்தனை கோடி பேரையும் நாம்தான் சென்று அடைந்து, அவர்கள் விழிப்படைய செய்து, அவர்களுக்குப் பாதை காட்ட வேண்டும். இந்தப் பாதையில் யார் பயணிக்கிறார்களோ அவர்களே பயனடைவார்கள்.
என்னுடைய கருத்தில், கடந்த ஆண்டு எல்லையில் நடந்த தாக்குதல், நாட்டுக்கு நல்லதாகவே முடிந்துள்ளது. இது நமது நாட்டை வலிமையாக்கும்; எதிர்கால வளர்ச்சிக்கு தயார் ஆக்கும். நம்மிடம் கோழைத்தனம் இல்லை; அச்சப்படத் தேவையில்லை. ஆனால் நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கிறது. இதற்கு நாம் தயாராக வேண்டும்.
மீண்டும் ஒருமுறை, 16-வது சுதந்திர நாளில் உங்களை வாழ்த்துகிறேன். நமது நாடு பழமையானது; ஆனால் இந்தியா இளமையானது. வலிமையிலும் ஒழுக்கத்திலும் இது வளர வேண்டும்; உலக நாடுகள் மத்தியில் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். இதற்கு, சாதி, இனம் ஆகியவற்றை மறந்து சகோதரராய் சகோதரியாய் அனைவரும் இணைந்து வாழ வேண்டும்; உழைக்க வேண்டும். ஜெய்ஹிந்த்.
(தொடர்வோம்)
முந்தைய அத்தியாயம் > செங்கோட்டை முழக்கங்கள் 16 - அறியாமையைக் கைவிடுவோம்... அறிவியலைக் கைப்பிடிப்போம்! | 1962
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT