Published : 07 Sep 2023 03:33 PM
Last Updated : 07 Sep 2023 03:33 PM

செங்கோட்டை முழக்கங்கள் 14 - “சாதி, மொழி, மதத்தின் பெயரால் நஞ்சு விதைக்கப் பார்க்கும் சிலர்...” | 1960

இந்தத் தொடரை வாசித்து வரும் அன்பர்களுக்கு ஒரு செய்தி: 1947 தொடங்கி முதல் 15 ஆண்டுகளுக்கு, அநேகமாக ‘விறுவிறுப்பு’ இல்லாத வழக்கமான சம்பிரதாய உரையாகத்தான் இருக்கும். இந்திய எல்லைகள் மீது சீனா அத்துமீறி, அதனால் இந்தியா - சீனா போர் ஏற்பட்ட பிறகு அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் திட்டமிட்டு நம் மீது திணித்த இந்தியா - பாகிஸ்தான் போர் நிகழ்ந்த பிறகு எல்லாமே மாறிவிட்டது. ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தின உரை விறுவிறுப்பாய் மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாய் மாறி விட்டது. இன்னும் ‘இரண்டு ஆண்டுகள்’ பொறுத்து இருங்கள்! இனி…

சுதந்திரம் கிடைத்து 13 ஆண்டுகள் கழித்து 1960 ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் ஜவஹர்லால் நேரு செங்கோட்டையில் இருந்து ஆற்றிய உரையில் ஒரு முக்கிய அம்சம் தனித்துத் தெரிகிறது. மொழியின் பெயரால் இந்திய ஒற்றுமைக்கு எதிராகக் குரல்கள் எழுந்துள்ளன; இவற்றைக் கடுமையாக எதிர்த்த பிரதமர் நேரு ‘சில்லறைப் பிரச்சினைகள்’ என்று குறிப்பிடுகிறார். இது தவிர்த்து, உலக அமைதிக்கு எதிராக இரண்டு வல்லரசுகளும் செயல்படுவதைக் குறித்த கவலை, ஐந்தாண்டுத் திட்டங்கள் மூலம் சோசலிச இந்தியாவை உருவாக்க இயலும் என்கிற நம்பிக்கை முதலானவை பிரதமர் நேருவின் பேச்சில் இடம் பெறுகிறது. இதோ... பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய 1960 சுதந்திர தின உரை:

“நேற்று நாம் (பகவான் கிருஷ்ணர் பிறந்த நாளான) ஜன்மாஷ்டமி கொண்டாடினோம். இன்று, சுதந்திர இந்தியாவின் பிறந்த நாளைக் கொண்டாடக் கூடி இருக்கிறோம். உங்களுக்கு நினைவிருக்கும் - 13 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கிருந்து நமது நேசத்துக்குரிய தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது. புதிய தேசம் பிறந்துள்ளது; புதிய நட்சத்திரம் உதயம் ஆகி இருக்கிறது என்று உலகத்துக்குப் பிரகடனம் செய்யப்பட்டது.

நாம் எடுத்துக் கொண்ட பழைய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கான நினைவூட்டலாக எண்ணி மகிழ்ந்தோம். புதிய சங்கடங்கள் தோன்றின; புதிய பாதைகளில் போக வேண்டி இருந்தது; நமது முதுகை நேராக்கி, வைராக்கியத்துடன் முன்செல்ல வேண்டி இருந்தது. ஒரு மைல்கல் கடந்தோம். நமது பயணம் முற்றுப் பெற்று விடவில்லை. இன்னமும் பலப்பல மைல்கற்களைக் கடக்க வேண்டி உள்ளது. தொடர்ந்து முன்னேறுகிறோம். சில சமயம் சறுக்கவும் செய்தோம். ஆனாலும் நம்முடைய தொன்மைக் கோட்பாடுகளில் இருந்து, நம்முடைய தலைவர் காந்திஜியிடம் இருந்து நமக்குத் தேவையான வலிமை பெற்றோம்.

இங்கே நாம் ஏதோ கேளிக்கைக்காக ஒன்று கூடவில்லை. பழையனவற்றை நினைவுகூர்ந்து, முன்னே உள்ள பாதையில் கவனம் செலுத்த வந்துள்ளோம். நம்முடைய கடுமுயற்சி, தியாகங்கள் மூலம் விடுதலை பெற்றோம். நம்முடைய கடும்பணி முடிந்து விட்டதாய் எண்ணினால் அது தவறு. சுதந்திரத்துக்கான போராட்டம் என்றுமே முற்றுப் பெறுவதில்லை. இடையறாத கடின உழைப்பை, தியாகத்தைத் தந்து கொண்டே இருத்தல் வேண்டும். அப்போதுதான் சுதந்திரத்தைப் பாதுகாக்க முடியும்.

எப்பொழுதெல்லாம் ஒரு தேசம், பலவீனம் அடைகிறதோ, அதனுடைய உயரிய அடிப்படைக் கோட்பாடுகளில் இருந்து விலகிச் செல்கிறதோ, அப்போதெல்லாம் அதன் சுதந்திரம் அபாயத்துக்கு உள்ளாகிறது. எனவே நாம் இன்று நம்முடைய உறுதிமொழிகளைப் புதிப்பித்துக் கொள்ள வேண்டும்; நம்முடைய கடமையைச் சரியாக நிறைவேற்றி வருகிறோமா என்று நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டின் தலையாய கடமை – தன்னுடைய சுதந்திரத்தைக் காத்துக் கொள்வதுதான். மற்ற எல்லா செயல்களுக்கும் இதுதான் அளவுகோல். நமது மாநிலம், நமது குழு, நமது, மொழி, நமது சாதி.. என்று பிற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தந்தால், நமது நாட்டை மறந்தால், நாம் அழிந்து போவோம். இவற்றுக்கெல்லாம் ஓர் இடம் இருக்கலாம். நமது மாவட்டத்தை நமது ஊரை நமது குடும்பத்தை நாம் நேசிக்கலாம். ஆனால் நமது மாநிலம், நமது மொழி, நமது குழுவை நாட்டுக்கு மேலானதாய் நிறுத்தினால், நமது நாடு அழிந்து போகும்.

இதை நான் சொல்ல வேண்டி உள்ளது. நாம் செய்த தியாகங்களை மறந்து விடலாகாது. காந்திஜி இந்த நாட்டை அஹிம்சை வழியில் நடத்திச் சென்று சுயராஜ்யம் பெற்றுத் தந்தார். நாம் சரியான பாதையில் சரியாக நடந்து சென்றால் அச்சப்படத் தேவையில்லை. நமக்கு ஆபத்து வெளியில் இருந்து வரவில்லை; நமக்குள்ளே பலவீனமாக நமக்குள்ளான சண்டைகளாக உருவெடுத்துள்ளது. இத்தகைய உள்சண்டைகளால்தான் வெளி நாட்டினர் இங்கே வந்து நம்மை வென்று ஆட்சி அமைக்க முடிந்தது. இதற்கான அறிகுறிகள் இப்போது சில பகுதிகளில் (மீண்டும்) தலைதூக்குவதைக் காண முடிகிறது.

நாட்டை மறந்து ஒற்றுமையை மறந்து மொழி அடிப்படையில் சண்டை இட்டுக் கொள்கிறார்கள். யாரெல்லாம் நாட்டு நலனை மறந்து விட்டார்களோ அவர்கள், என்ன பேசினாலும், நாட்டுக்குத் தீங்கையே விளைவிக்கிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தனது மனசாட்சியைத் தேடிப் பார்க்க வேண்டிய நேரம் இது. ஒரு அடியும் தவறாக எடுத்து வைத்து விடக் கூடாது. நாம் வளைந்து விடவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஒருகணம்... உலகைச் சுற்றிப் பாருங்கள். இரண்டு வல்லரசுகளும் போருக்குத் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். வலுவான ஆயுதங்களை வடிவமைத்துக் கொண்டுள்ளார்கள். இந்த நேரத்தில், நாட்டை மறந்து அற்ப சண்டைகளில் ஈடுபடுவது மிகத் தவறாகும்.

எதிர்காலத்தில் சரித்திர ஆசிரியர்கள் என்ன கூறுவார்கள்? காந்திஜி என்கிற மாபெரும் தலைவரை இந்தியா தந்தது; ஒன்றாக சேர்ந்து உழைத்து வாழ்வது எப்படி என்று அவர் சொல்லிக் கொடுத்தார். வெவ்வேறு மனிதர்கள் தங்களுக்குள் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாய் வாழக் கற்றுக் கொடுத்தார். ஒவ்வொரு மனிதனும், எந்த மதம் சாதி இனம் மண்டலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சம உரிமையுடன் சுதந்திரமாக வாழலாம் என்று கற்பித்தார்.

சுதந்திரம் பெற்றது – ஒரு சிலருக்காக மட்டுமா..? சிறிது காலத்துக்கு பிரதமராக செயல்பட நீங்கள் அனுமதித்த ஜவஹர்லால் நேருவுக்கு மட்டும் ஆனதா சுதந்திரம்? ஜவஹர்லால் போய் விடுவார்; வேறு யாரேனும் வருவார். ஆனால் இந்தியா நிலையாய் இருக்கும்.

இந்த நாட்டின் 40 கோடி மக்களும், அதன் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அவர்களின் குழந்தைகளும் சுதந்திரத்தின் வாரிசுகள் ஆவர். இந்த நாட்டுவாசி ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் கிடைத்தால் மட்டுமே சுதந்திரம் முழுமை அடையும். இதை நோக்கியே பணி புரிகிறோம். இது முழுமையாக நிறைவேறும் வரை தொடர்ந்து பணிபுரிவோம். இதுவே ஐந்தாண்டுத் திட்டத்தின் இலக்கு ஆகும். அதனால்தான், எல்லாரும் சுதந்திரத்தை அனுபவிக்க வழிகோலும் சோசலிச சமுதாயமே நமது இலக்கு என்கிறோம்.

இதனை ஒரே நாளில் நிறைவேற்றிட முடியாது. பெரும் பிரச்சினைகளும் தடைகளும் நாட்டின் முன் உள்ளன. 40 கோடி மக்களை உடனடியாக திடீரென்று மாற்றி விட முடியாது. ஆனால் சோசலிச சமுதாயத்துக்கு நாம் உழைக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவர் மனதிலும் பதிய வைக்க வேண்டும். கிராமங்களில் வாழ்ந்தாலும் நகரங்களில் வாழ்ந்தாலும் ஒவ்வொருவரும் சம உரிமை சம வாய்ப்பு கொண்டு இருப்பார்கள். கடின முயற்சி, கடின உழைப்பினால் மட்டுமே இந்த இலக்கை எட்ட முடியும் என்பதில் ஐயமில்லை. (வேறு) மேஜிக் எதுவும் இல்லை.

இமயம் முதல் குமரி வரை இந்தியர்கள் ஒன்றாய் எழுந்தார்கள் என்று சரித்திரம் பேசும். தமது முதுகின் மீதிருந்த சுமைகளை எறிந்து விட்டு காந்திஜி காட்டிய வழியில் ஒன்றாய் இணைந்தனர், சுதந்திரம் பெற்றனர். சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு உலக வானில் இந்தியா என்கிற நட்சத்திரம் (மீண்டும்) தோன்றியது. இந்தியாவின் குரலை உலகம் கேட்கிறது. துணிச்சல், விடாமுயற்சியைக் காண்பித்த இதே இந்திய மக்கள் அஜாக்கிரதையால் தங்கள் கனவை மறந்து சண்டையிட்டுக் கொண்டார்கள்; மதம், சாதி, மொழி, மாநிலம் ஆகியவற்றின் பெயரால் சண்டையிட்டுக் கொண்டார்கள்; நாம் ஒருவேளை இந்தியாவைத் தவறாகக் கணித்து விட்டோமோ என்று உலகம் பேசும்.

அதனால்தான் நம்மை நாம் மனதாரத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறேன். கவலைக்குரிய சம்பவங்கள் நடைபெற்றதால், சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் பங்கு பெற மாட்டோம் என்று சிலர் கூறுகிறார்கள். அவர்களின் கவலைக்கு நியாயமான காரணம் இருக்கலாம். இது குறித்து இப்போது விரிவாகப் பேசப் போவதில்லை. ஆனால் சில்லறை விவகாரங்களில் சுதந்திர தினத்துக்கு உரிய மகத்துவத்தை அவர்கள் மறந்து போனார்கள். நமது மாநிலமோ மொழியோ, மகிழ்ச்சியோ துயரமோ, ஒப்பீட்டளவில் அத்தனை முக்கியம் ஆனதல்ல.

அசாம் மாநிலத்தில் வருந்தத்தக்க போக்கு நிலவுகிறது. இது சில பிரச்சினைகளை அசாம் மற்றும் வங்கத்தில் சில துயரம், பிரச்சினைகளைக் கொண்டு வந்துள்ளது. இந்த பிரச்சினைகள் அகற்றப்பட வேண்டும்; அகற்றப்படும் என்பதில் ஐயமில்லை. ஆனால் தம்முடைய வெறுப்பு மற்றும் அச்சம் காரணமாக இந்தப் பிரச்சினை தீர்க்கப்படுவதை சிலர் அனுமதிக்க மறுக்கிறார்கள். உலகில் பல தீமைகள் உள்ளன. இவற்றில் மிகப் பெரிய தீமை - அச்சம். அச்சத்தை விடவும் மோசமானது எதுவும் இல்லை. ஒரு நாடோ அதன் மக்களோ அச்சத்தால் பீடிக்கப்பட்டால் அவர்களால் தலையை உயர்த்த முடியாது. அசாம் மற்றும் வங்கம் என்பதை விடவும் இந்தியா பெரியது என்பதை இந்த மாநில மக்கள் மறந்து விட்டனர். இந்தியாவை மறந்தவர்கள் அசாமுக்கும் நல்லது செய்யவில்லை; வங்கத்துக்கும் நல்லது செய்யவில்லை. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இனி சற்றே நெருக்கமாகப் பார்ப்போம். சில நாட்களாக பஞ்சாப் மாநிலத்தில் மொழியின் பெயரால் விநோத சம்பவங்கள் நடைபெறுகின்றன. இது நல்லதா அல்லது தீயதா என்று சொல்ல வேண்டியது நானில்லை. ஆனால் பஞ்சாபில் என்ன நடைபெறுகிறது… எந்த வழியில் நடைபெறுகிறது என்பது தவறுதான். இது சுதந்திரத்துக்கு எதிரானது.

ஒவ்வொரு பஞ்சாபியரும் பஞ்சாப் மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும்; பஞ்சாப் மொழியை ஒருவர் கற்றுக் கொள்ளவில்லை எனில் அரிய பொக்கிஷத்தைத் தவற விட்டவர் ஆவார். ஹிந்தி, பஞ்சாபி, பெங்காலி, அசாம் ஆகிய மொழிகளைச் சுற்றி நடைபெறும் சச்சரவுகளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இவை எல்லாமே இந்திய நாகரிகத்தின் சொத்து ஆகும். பண்படாத, சிறுமதி கொண்டோர் மொழிகள் மீதான சர்ச்சையைக் கிளப்புகிறார்கள்.

நாம் என்ன தவறான திசையில் போய்விட்டோம்? சண்டையிட்டுக் கொள்கிற அளவுக்கு என்ன பிரச்சினை தோற்றுவித்து விட்டோம்? ஆயிரமாயிரம் ஆண்டு வரலாறு நமக்கு உள்ளது. ஒரு புதிய யுகத்தில் கடுமுயற்சியுடன் முன்னேறப் பார்க்கிறோம்; ஆனால் சிலர் சாதி, மொழி, மதத்தின் பெயரால் மக்கள் மனங்களில் நஞ்சு விதைக்கப் பார்க்கிறார்கள். இவை முன்னேற்றத்துக்கான காரணியாக இருக்க வேண்டும்; பிரிவுகளை வளர்க்கக் கூடாது. இதுதான் நாட்டுக்கு சேவை செய்கிற வழியா..? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நாம் ஒரு சுதந்திர நாடு. வேறு எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்த நமக்கு விருப்பம் இல்லை. அதேசமயம் நம் நாட்டுப் பகுதிகளை யாரும் ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டோம். நமது எல்லைகளுக்கு ஏதும் ஆபத்து நேரிட்டால் அந்த சவாலை நாம் சந்திக்கத் தயாராக உள்ளோம். எந்த நாட்டின் ஓர் அங்குல நிலம் மீதும் நமக்கு ஆசை இல்லை. யாருடைய நிலத்திலும் குறுக்கிட விரும்பவில்லை. இதுவே நமது அடிப்படைக் கோட்பாடு.

கிராமங்களுக்கும் சுதந்திரம் சென்று சேர வேண்டும்; தங்களைத் தாங்களே ஆட்சி புரிய வேண்டும் என்பதற்காகவே பஞ்சாயத்து ராஜ்யத்தைத் தொடங்கி உள்ளோம்.

இன்னமும் நமது சுதந்திரத்தில் ஒரு குறைபாடு உள்ளது. அதனை நாம் மறந்து விட்டோம் என்கிற உணர்வு இருக்கிறது. இது நமது நினைவில் இருக்கிறது; அது சரி செய்யப்படும். நான் கோவாவைக் குறிப்பிடுகிறேன். மறந்து விடவில்லை; நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு நமது வலிமையே காரணம்; பலவீனத்தின் அறிகுறி அல்ல. அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்வு காண்பதில்லை என்கிற கொள்கையில் உறுதியாய் இருக்கிறோம். (விரைவில்) தீர்வு காணப்படும். கோவாவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நாடு இதனைக் கருத்தில் கொள்ளும். இதன் மீது யாருக்கும் தவறான புரிதல் வேண்டாம்.

உலகில் என்ன நடக்கிறது என்று சுற்றிலும் பாருங்கள். உலகில் இப்போது சாதகமான காற்று வீசிக் கொண்டு இருக்கிறது. ஆனாலும் சூழலில் நஞ்சு கலந்து இருக்கிறது. பெரிய நாடுகள் போர் ஆயுதங்களுடன் சண்டையிடத் தயாராய் இருக்கிறார்கள். இன்றைய உலகம் அபாயகரம் ஆனது. அச்சுறுத்தும் நிலையில் இருக்கிறது. இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நமக்கு வலிமை தந்த நமது ஒற்றுமையை நிலை நிறுத்திய மாமனிதர் காந்திஜியின் வழிமுறையில் நம்பிக்கை வைப்போம். அவரது கொள்கைகளை, அவர் கற்றுத் தந்த பாடங்களை மறந்து விட்டு மற்றதை நினைவு வைத்துக் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை.

நமது நாடு தொடர்ந்து முன்னேற வேண்டும். நம்முடையது சிறிய நாடு அல்ல. தலை நிமிர்ந்து முன்னேற இருக்கிறோமா அல்லது வீழ்ச்சி அடைய இருக்கிறோமா என்கிற இரண்டு வழிகள் நம் முன் உள்ளன. நமது நாடு வீழ்ச்சி அடைய அனுமதிக்க மாட்டோம். நம் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். வைராக்கியத்துடன் தொடர்ந்து முன்னேறுவதைத் தவிர்த்து வேறு பாதை இல்லை. நமது வளர்ச்சிப் பாதையில் உள்ள தடைகளை அகற்றுவோம். நமது எதிர்காலம் தடம் புரள அனுமதிக்க மாட்டோம். இந்தியாவின் உண்மையான வலிமை, உங்களைப் போன்ற கோடிக்கணக்கான இந்தியர்களிடம் உள்ளது.

நாட்டை முன்னேற்றுகிற பொறுப்பு, ஆயிரக்கனக்கான கிராமங்களில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களிடம் உள்ளது. இதனால்தான் பஞ்சாயத்து ராஜ்யத்துக்கு முக்கியத்துவம் தருகிறோம். நமது வீரர்கள் வலிமையாக இருத்தல் வேண்டும்; அவர்கள்தாம் நமது சுதந்திரத்தைப் பாதுகாக்கிறவர்கள். சில குறைபாடுகள் இருந்தாலும், உங்கள் அனைவரின் ஒத்துழைப்பாலும் நாம் தொடர்ந்து முன்னேறி வருகிறோம் என்பதை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.

நமது ஐந்தாண்டுத் திட்டங்களைப் பாருங்கள். நமது நாடு வளமான நாட்களை நோக்கி நகர்கிற காட்சியைப் பார்க்கலாம். கடின உழைப்பு மற்றும் தளரா முயற்சி மூலமே இது சாத்தியமாகும். நம்முடைய புரிதல், முயற்சிகளின் மூலம் இதனை சாதிப்போம் என்பதில் ஐயமில்லை. யாரேனும் நமது கவனத்தைத் திசை திருப்ப முயற்சித்தால் அவர்களைக் குற்றம் சொல்லாமல் போக இயலுமா..?

மீண்டும் ஒருமுறை நினைவு கூர்கிறேன் – இந்திய சுதந்திரத்தை வலிமை ஆக்குவது, அதனைப் போற்றிப் பாதுகாப்பது - நம் ஒவ்வொருவரின் கடமை. ஜெய் ஹிந்த்.

(தொடர்வோம்)

முந்தைய அத்தியாயம் > செங்கோட்டை முழக்கங்கள் - 13: அளவுக்கு அதிகமான விடுமுறையால் பலவீனம் | 1959

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x