Published : 09 Aug 2023 06:33 PM
Last Updated : 09 Aug 2023 06:33 PM

செங்கோட்டை முழக்கங்கள் 4 - விடுதலைக்கு விலங்குகள் உண்டு | 1950

சுதந்திரம் பெற்று மூன்று ஆண்டுகள் நிறைவில் பிரதமர் நேரு, அப்போது இந்தியா எதிர்கொண்ட மூன்று பிரச்சினைகள் குறித்துத் தனது சுதந்திர தின உரையில் குறிப்பிடுகிறார்: உணவுத் தட்டுப்பாடு, பதுக்கல், அகதிகள் வருகை.

இதுகுறித்து விரிவாகப் பேசுவதற்கு முன்னர், ‘சுதந்திரம்’ பற்றியும் பொதுவாகப் பேசுகிறார். 73 ஆண்டுகள் கழித்து இப்போது பார்க்கையில், மூன்று பிரச்சினைகளைக் காட்டிலும், சுதந்திரம்/ உரிமை குறித்து ஜவஹர்லால் நேரு பேசியதே, உரையின் முக்கிய அம்சமாகப் படுகிறது. முதலில் பிரச்சினைகளைப் பார்த்து விடுவோம்.

நேரு கூறுகிறார்: “இன்று நம் முன்னே பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றுள் மிகப் பெரியது - உணவு. கடந்த 2.. 3.. ஆண்டுகளில் இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கக் கடுமையாக முயற்சித்தோம். உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதே நமது முன்னுரிமை. உணவில் நாம் தன்னிறைவு பெற்றாக வேண்டும். இதற்கான வழிமுறைகளை யோசித்து வருகிறோம். இன்னும் இரண்டு ஆண்டுகளில் உணவு தானியங்களில் நாம் தன்னிறைவு பெறுவோம். உணவுப் பொருள் இறக்குமதி செய்வதைத் தடுக்கிறோம். இதனால் பற்றாக்குறை ஏற்பட்டால், அதனையும் சந்திப்போம். இதுதான் நமது கொள்கை. சிரமங்கள் இருந்தாலும் இதில் நாம் உறுதியாக இருப்போம்."

அடுத்ததாக... “மற்றவர்களின் துயரத்தில், சிலர் இன்பம் துய்க்க முனைகிறார்கள். லாபம் சம்பாதிக்க வேண்டி, உணவுப் பொருட்களைப் பதுக்குகிறார்கள். துன்பத்தில் லாபம் பார்க்க நினைக்கும் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதனைத் தடுப்பதற்கு (இதற்கு எதிராக) மசோதா நிறைவேற்றி இருக்கிறோம். விரைவில் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.”

“உணவுப் பற்றாக்குறைக்கு நடுவே, அகதிகளுக்கு மறுவாழ்வு, இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் பெரிய சிக்கலாக இருக்கிறது.” மூன்று பிரச்சினைகள் குறித்தும் மொத்தமே இவ்வளவு தான் பேசினார். சுதந்திர தின உரையில் இது குறித்து அதிகம் பேச வேண்டாம் என்று கருதி இருக்கலாம். அல்லது விரைவில் இதற்குத் தீர்வு எட்டப்பட்டு விடும் என்று உண்மையாகவே நம்பியிருக்கலாம்.

இதன் பிறகு, நடைபெற இருக்கும் முதல் பொதுத் தேர்தல் குறித்துப் பேசுகிறார்: “விரைவில் நாம் பொதுத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். எதுவாக இருந்தாலும், நாமே எந்நாளும் அதிகாரத்தில் இருக்கப் போவதில்லை.” நிறைவுப் பகுதியில் நேரு கூறுகிறார்: “அடிப்படையில், ஒற்றுமையே மிக முக்கியமானது. ஒவ்வொருவருக்கும் (இடையே) முழு சமத்துவம் இருந்தால் மட்டுமே இந்தியா வளரும்; வலிமை பெறும்.”

“எல்லா வாய்ப்புகளும் எல்லாக் கதவுகளும் எல்லாருக்கும் திறந்து இருக்கும்; எல்லாக் குடிமகன்களும் சுதந்திரத்தில் சம பங்குதாரர்கள்.” (All doors of opportunity are open to everyone, and all the citizens of the country are equal shareholders in freedom.)

“அச்சப்படும் மனிதன் எதற்கும் பயன் அற்றவன். பிரச்சினைகள் பெரிதாக இருக்கும்போது, அஞ்சி ஓடுவதோ பீதிக்கு உள்ளாவதோ கூடாது. இன்னும் அதிக உறுதியுடன் அவற்றை எதிர்கொள்ள வேண்டும்.” (A man who is afraid is useless and unfit for anything. When the problems are bigger, we have to face them with greater fortitude in stead of giving in to panic or running away in fear.)

இனி... உரையின் தொடக்கத்தில் உரிமை/ சுதந்திரம் பற்றி, நேரு கூறியதைப் பார்ப்போம்.

“இவ்வாண்டு ஜனவரி 26 அன்று நமது மிகப் பெரிய கனவு ஒன்று நிஜமானது.”

புரிகிறதா..? இந்தியா - குடியரசு நாடு ஆயிற்று.

“விரைவில், பல லட்சக்கணக்கானோர் தேர்தல் மூலம் புதிய அரசைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். நாம் ஏற்றுக் கொண்டுள்ள புதிய அரசமைப்புச் சட்டம் அதன் பயன்களைத் தரத் தொடங்கும்.”

இங்கிருந்து சுதந்திரம் குறித்த ஆரோக்கியமான கருத்துகளைப் பதிவு செய்கிறார். இவை அத்தனையும் இன்றைக்கும் மிகவும் பொருத்தமாக உள்ளன. “சிந்தனை மற்றும் கருத்துச் சுதந்திரம், ஒரு சுதந்திர நாட்டின் அடிப்படைத் தேவை. தமது அரசியல் கருத்துக்களை மக்கள் வெளிப்படுத்துகிற சுதந்திரம் வேண்டும்.” கூடவே, எச்சரிக்கையை முன் வைக்கிறார். நம்மைப் புல்லரிக்க வைக்கிறது இந்தப் பகுதி.

“கருத்துச் சுதந்திரம் என்பது மற்றவர்களைத் தூற்றுவதற்கான சுதந்திரம் என்று பொருள் அல்ல. அது நமது மொத்த வாழ்க்கையை மாசுபடுத்தி விடும். குறிப்பாக, சுதந்திரம் என்பது விடுதலையின் வேர்களைத் தாக்குவதற்கான உரிமை அல்ல.” (Freedom of expression does not mean the freedom to abuse others. Such things will vitiate our entire life. Freedom particularly does not mean a right to strike at the roots of that freedom.)

ஆச்சரியமான, ஆனால் அதிர்ச்சியான ஒரு தகவலையும் உரையில் சேர்த்துத் தருகிறார் நேரு - “சுதந்திரம் என்கிற பெயரில் இன்று பலர் சங்கடங்களை விளைவித்து, மக்களைத் தூண்டி விட்டு நாட்டை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்க மாட்டோம் என்று பிரகடனம் வெளியிட்டுள்ளார்கள். இன்னும் சிலர், இந்தக் கொண்டாட்டங்களைத் தடுப்போம் என்று கூறுகிறார்கள். இது என்ன மாதிரியான மனநிலை என்று நீங்கள் யூகித்துக் கொள்ள முடியும்.

இதற்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் தொடர்பு இல்லை. இது இந்திய சுதந்திரத்தின் மீது கோரத் தாக்குதல். இவர்கள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களை எதிர்க்க வேண்டும்; முற்றிலுமாக வேரறுக்க வேண்டும்.” (Some said they would obstruct the proceedings. You can imagine the kind of mentality which prompts such thinking and emotions. This has nothing to do with freedom of expression or thought. It is an outright onslaught on India's freedom and, no matter who they are or to which party they beling, we have to fight against them and root them out completely.)

இத்தனை கோபப்பட்டு நேரு பேச வேண்டிய அவசியம் என்ன இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் ‘சுதந்திர நாள் கொண்டாட்டப் புறக்கணிப்பு’ சிலரால் விடுக்கப்பட்டிருந்ததுது என்பது மட்டும் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மதவாதம், மதவாதிகளை எதிர்த்துப் பேசும் நேரு, “மதவாதம் நாட்டை வலுப்படுத்துமா? பலவீனப்படுத்துமா? நீங்களே யூகித்துக் கொள்ளலாம்” என்கிறார்.

இதனைத் தொடர்ந்து நேரு கூறும் சொற்கள் - ஓர் உண்மையான ஜனநாயகவாதியின் - ஓர் உன்னதத் தலைவனின் - 'உரத்த' சிந்தனை. மிக அழகாகக் கூறுகிறார்: “மக்கள் வெவ்வேறு கருத்துகள் கொண்டிருப்பதை, வெளிப்படுத்துவதை வரவேற்கிறோம். சுயமாக சிந்திக்க ஆற்றல் இல்லாது, இந்தியாவில் உள்ள எல்லாரும் கிளிப்பிள்ளைகளைப் போல சொன்னதையே சொல்ல வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நம்முடைய கருத்துகளை வெளிப்படுத்த நமக்கு எல்லா உரிமையும் இருக்கிறது.” (People are welcome to hold different views and to give free expression to them. I do not want everyone in India to repeat the same like parrots as though they had no power to think for themselves. We have every right to express our views.)

மக்கள் அனைவரும் சுயமாக சிந்திக்க வேண்டும்; சுயமாக செயல்பட வேண்டும். நேருவின் விருப்பம் என்றும் இதுதான். சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட நேரு போன்ற மக்கள் தலைவரின் சிந்தனை வேறு எப்படி இருக்க முடியும்?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x