Published : 06 Jul 2014 02:48 PM
Last Updated : 06 Jul 2014 02:48 PM
தமிழக அரசின் சுயவேலைவாய்ப்பு திட்டங்களான UYEGP, NEEDS மற்றும் மத்திய அரசின் PMEGP ஆகியவை குறித்தும், அவற்றுக்கு எங்கு விண்ணப்பம் பெறுவது, எவ்வாறு விண்ணப்பம் செய்வது, கடன் உதவி, மானியம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விளக்கமாக பார்த்தோம். தற்போது மேற்குறிப்பிட்ட மத்திய, மாநில அரசுகளின் கீ்ழ் சுய வேலைவாய்ப்புக்கு அளிக்கப்படும் பயிற்சி, பயிற்சி காலத்தில் அளிக்கப்படும் உதவித்தொகை குறித்து விளக்கம் அளிக்கிறார் நாமக்கல் மாவட்ட தொழில் மைய மேலாளர் க.ராசு.
UYEGP திட்டத்தின் கீழ் என்னென்ன பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன?
வங்கியாளர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றன. இதில் 6 நாட்கள் தொழில் சார்ந்த பயிற்சியும் ஒருநாள் மார்க்கெட் சர்வே பயிற்சியும் அளிக்கப்படும்.
வியாபாரம், சேவை, உற்பத்தி ஆகியவற்றின் கீழ் வரும் தொழில்கள் என்னென்ன?
மளிகை கடை, மருந்துப் பொருள், அரிசி என ஏராளமானவற்றை கூறலாம். இவை வியாபாரம் சார்ந்த தொழில்களாகும். கணினி சரி செய்தல், ஜெராக்ஸ் போன்றவை சேவை சார்ந்த தொழில்களாகும். பாக்குமட்டை தயாரிப்பு, ஹாலோ பிரிக்ஸ் தயாரிப்பு போன்றவை உற்பத்தி சார்ந்த தொழில் பிரிவில் வருபவை.
தொழில் முனைவோருக்கான பயிற்சி யார் மூலம் அளிக்கப்படுகிறது?
சென்னையில் உள்ள தமிழ்நாடு தொழில் முனைவோர் பயிற்சி நிறுவனம் சார்பில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி நிறைவு செய்த பின் பயிற்சி பெற்றவர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயற்சி நிறுவனம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
பயிற்சி பெறுபவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறதா?
UYEGP திட்டத்தின் கீ்ழ் பயிற்சி பெறுபவர்களை ஊக்கும் விக்கும் வகையில் நாளொன்றுக்கு தலா 600 ரூபாய் வீதம் பயிற்சிக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு தலா ஒரு நபருக்கு 900 ரூபாய் வீதம் கட்டணம் அளிக்கப்படுகிறது. வங்கியில் கடன் அளிப்பதாக ஒப்புதல் அளிக்கப்படும் நபர்களுக்கு மட்டுமே தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி அளிக்கப்படும்.
வங்கிக் கடனில் தள்ளுபடி செய்யப்படும் மானியம் பயனாளிகளுக்கு வழங்கப்படுமா?
நிச்சயம் வழங்கப்படும். நேரடியாக இல்லாமல் வங்கிக் கடனில் தள்ளுபடி செய்யப்படும் மானியத்தொகை தொடர்புடையவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இது மத்திய, மாநில அரசுகளின் 3 சுய வேலைவாய்ப்பு திட்டங்களுக்கும் பொருந்தும்.
NEEDS திட்டத்தில் அளிக்கப்படும் பயிற்சி என்ன?
UYGEP திட்டம் போல் வங்கியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் சேவை, வியாபாரம், உற்பத்தி ஆகியன குறித்து பயிற்சி அளிக்கப்படுகின்றன. ஒரு மாத காலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இரு வாரம் தியரி (கற்பித்தல்) பயிற்சி, ஒரு வாரம் மார்க்கெட் சர்வே அதாவது உற்பத்தி செய்த பொருளை சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்) குறித்த பயிற்சியும், ஒரு வார காலம் அவரது திட்டம் ( புராஜெக்ட்) குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT